அல்லு அர்ஜூன் ஜாமீன்: சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் கூறியது என்ன?
- எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா
- பதவி, பிபிசி நிருபர்
-
நடிகர் அல்லு அர்ஜூன் சஞ்சல்குடா சிறையில் இருந்து இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியளர்களிடம் பேசிய அல்லு அர்ஜூன், “நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் முதலில் எனது நன்றி. நான் பாதுகாப்பாக உள்ளேன், எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அதனால் விசாரணைக்கு கண்டிப்பாக ஒத்துழைப்பேன்”, என்று கூறினார்.
மேலும் அவர், “உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மீண்டும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை 30 முறைக்கும் மேல் அந்த திரையரங்கிற்கு பல படங்களை பார்க்க சென்றுள்ளேன். அங்கு நடந்தது முற்றிலும் ஒரு விபத்து, எனது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை. அவரது குடும்பத்தினருக்கு என்னால் முடிந்த வரை எல்லா உதவியும் செய்வேன். சட்டத்தின் வழியே நடப்பேன்”, என்று குறிப்பிட்டார்.
புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் ஹைதராபாத் காவல்துறையினரால் நேற்று (டிசம்பர் 13) அவர் கைது செய்யப்பட்டார்.
முதலில் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை காவல் துறையினர் சஞ்சல்குடா சிறைக்கு மாற்றினர்.
பின்னர் அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கிய போதிலும், சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்ற ஆவணங்கள் இரவு வரை கிடைக்கவில்லை. அதனால் அல்லு அர்ஜூன் நேற்று இரவு முழுவதும் சிறையில் இருந்தார்.
சஞ்சல்குடா சிறையில் உள்ள மஞ்சிரா செல்லில் அடைக்கப்பட்டிருந்த அல்லு அர்ஜூன் இன்று (டிசம்பர் 14) காலை விடுவிக்கப்பட்டார்.
“நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆவணத்தை பெற்ற போதிலும், காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரை (அல்லு அர்ஜுன்) விடுவிக்கவில்லை. ஆவணத்தை பெற்ற உடனே காவல்துறை அவரை விடுவிக்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டிருந்தது.
இருப்பினும் காவல்துறை அவ்வாறு செய்யவில்லை. இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இது சட்டவிரோதக் காவல். அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்”, என்று அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர் அசோக் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. அதற்கு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 4ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இரவு 9.30 மணிக்கு ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டது.
சந்தியா திரையரங்கில் `benefit show’ நிகழ்ச்சியும் நடைபெற்றது. அங்கு தில்சுக்நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது மனைவி ரேவதி (35), மகன் ஸ்ரீதேஜா (9), மகள் சான்விகா ஆகியோருடன் வந்திருந்தார்.
அன்று அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுனும் படம் பார்க்க வந்தார். அப்போது அவரைக் காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடியும் நடத்தினர்.
“இதில் ரேவதியும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் கீழே விழுந்தனர். கூட்ட நெரிசலில் அவர்களால் சுவாசிக்க முடியாமல் மயக்கமடைந்தனர். உடனே ரேவதியையும் ஸ்ரீதேஜாவையும் ஒருபுறம் அழைத்துச் சென்று சிபிஆர் செய்தோம். அதன் பிறகு, வித்யாநகரில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ரேவதி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்று சிக்கடப்பள்ளி போலீசார் கூறினர்.
ரேவதியின் மகன் ஸ்ரீதேஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது?
இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன், சந்தியா தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜுனின் பாதுகாவலர்கள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சமீபத்தில் அறிவித்தது. பி.என்.எஸ் சட்டத்தின் 105,118(1) மற்றும் 3(5) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரேவதியின் (உயிரிழந்த பெண்) கணவர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
“தியேட்டரின் கீழ் பால்கனியில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 30-40 பேர் திடீரென தியேட்டருக்குள் நுழைந்தனர்.”
“அப்போது, ஏராளமான ரசிகர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் திடீரென அங்கு வந்ததால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் ரேவதியும், அவரது மகனும் மூச்சுவிட முடியாமல் சுயநினைவை இழந்திருந்தனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று டிசிபி அக்ஷன்ஷ் யாதவ் முன்பு கூறியிருந்தார்.
“சம்பவம் நடந்தபோது அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், இந்தச் சம்பவத்தில் போலீஸ் மீது தவறில்லை” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அல்லு அர்ஜுன் வீட்டில் போலீஸ்
வெள்ளிக்கிழமை காலையில் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு வந்த சிக்கடப்பள்ளி காவல் உதவி ஆணையர் ரமேஷ் குமார் தலைமையிலான போலீஸ் குழு, அல்லு அர்ஜுனை காவலில் எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.
அல்லு அர்ஜுனை போலீசார் அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியானது.
அதில் அல்லு அர்ஜுன், “உடையை மாற்றிக் கொண்டு வருகிறேன், கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்” என்று கேட்பது பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் அல்லு அர்ஜுன் “வீட்டின் படுக்கையறைக்குள் வந்து தன்னை அழைத்துச் செல்வது அவமானகரமானது” என்று கூறுவதும் பதிவாகியுள்ளது.
அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா அழுவதும் அவருக்கு அர்ஜுன் ஆறுதல் கூறுவதும் தெரிகிறது. அதன் பின்னர், அவர் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அல்லு அர்ஜுன் உடன் அவரது தந்தை அல்லு அரவிந்த், சகோதரர் அல்லு சிரிஷ் ஆகியோரும் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு வந்தனர்.
மேலும் மூன்று பேர் கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக டிசம்பர் 8ஆம் தேதி சிக்கடப்பள்ளி போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
சந்தியா தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான எம்.சந்தீப், தியேட்டர் மேலாளர் எம்.நாகராஜூ, பால்கனி பொறுப்பாளர் ஜி.விஜய சந்தர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி சந்தியா தியேட்டர் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதுவொரு `பெனிஃபிட் ஷோ’ (Benefit show – ரசிகர்கள் மற்றும் விஐபிகளுக்காக படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஒருங்கிணைக்கப்படும் காட்சி) என்பதால், திரைப்படக் குழுவினர் தியேட்டருடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக தியேட்டர் நிர்வாகம் மனுவில் கூறியுள்ளது.
தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அல்லு அர்ஜுன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அல்லு அர்ஜுன், தான் தியேட்டருக்கு வருவதாக காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவித்ததாகவும், பெண்ணின் மரணத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் ஏற்கெனவே வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்தச் சம்பவத்தால் தான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர்களது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
எந்தெந்த சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது?
அல்லு அர்ஜுன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சிந்தப்பள்ளி லட்சுமிநாராயணன் பிபிசியிடம் தெரிவித்தார்.
அல்லு அர்ஜுன் மீது பதியப்பட்ட முதல் வழக்கு பி.என்.எஸ் சட்டம் 105. இந்தப் பிரிவு குறித்துப் பேசிய சிந்தப்பள்ளி லட்சுமி நாராயணன், ஒரு நபரின் மரணத்திற்கு ஒரு நபர் மறைமுகமாகப் பொறுப்பேற்றால் இந்தப் பிரிவின் கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்யலாம் என்று கூறினார்.
“குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் அலட்சியத்தின் மூலம் ஒரு நபரின் மரணத்திற்குக் காரணமானால் இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம். இதுவொரு கொலைக் குற்றமாகக் கருதப்படுவதில்லை. ஆனால், இது தீவிரமான குற்றமாகக் கருதப்படுகிறது” என்றார்.
“இந்தச் சட்டப் பிரிவின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு, 5 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை, அபராதம் அல்லது அதிகபட்சமாக ஆயுள் தண்டனைகூட விதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
- இது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு, ஆனால் நியாயமான காரணங்கள் இருந்தால், குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் ஒருவர் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்யலாம் என்று இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.
- ஒருவர் வேண்டுமென்றே மரணத்தை ஏற்படுத்தி இருந்தால், அவருக்குக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம்.
- யாராவது தெரிந்தே, வேண்டுமென்றே மரணத்தை ஏற்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்திய தண்டனை சட்டம், 105, 118(1) மற்றும் பி.என்.எஸ் சட்டத்தின் பிரிவு 3(5) ஆகியவற்றை விவரித்த அவர், “இந்தப் பிரிவு, ஒருவர் மற்றவரைக் காயப்படுத்துவது அல்லது தீவிரமாகக் காயப்படுத்துவதைப் பற்றிப் பேசுகிறது” என்றார்.
பாதிக்கப்பட்ட நபர் ஆயுதத்தால் காயமடையும்போது இந்தப் பிரிவு பொருந்தும். அதாவது, ஆயுதம் என்பது துப்பாக்கியால் சுடுவது, கத்தியால் குத்துவது, நெருப்பு அல்லது எரியக்கூடிய பொருளைப் பயன்படுத்துவது, அல்லது வெடிக்கும் பொருளைப் பயன்படுத்துவது, மூச்சுத் திணறல் ஏற்பட வைப்பது அல்லது ஒரு விலங்கைப் பயன்படுத்தி காயப்படுத்துவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்தப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் என இந்திய தண்டனைச் சட்டம் கூறுகிறது.
“பாதிக்கப்பட்ட நபருக்கு பலத்த காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது” என்றார் லட்சுமிநாராயணன்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் விளக்கம்
கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதி என்பவரின் கணவர் பாஸ்கர், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை தொலைபேசி வாயிலாக அறிந்து கொண்டதாகக் கூறியுள்ளார்.
“படம் பார்ப்பதற்காக என் குடும்பத்தை சந்தியா தியேட்டருக்கு அழைத்துச் சென்றேன். அல்லு அர்ஜுன் அங்கு வந்தது அவருடைய தவறு அல்ல” என்று பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை தொலைபேசி மூலமாக அறிந்தேன். இதுபற்றி போலீசார் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. தேவைப்பட்டால் வழக்கைத் திரும்பப் பெற நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.
அல்லு அர்ஜுன் கைதுக்கு எழுந்த எதிர்ப்பு
நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, எதிர்க்கட்சியான பிஆர்எஸ் தலைவர்கள் கே.டி. ஆர் மற்றும் ஹரிஷ் ராவ், ஆந்திர எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவர் ஜெகன் ஆகியோர் அல்லு அர்ஜுனின் கைது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ-வும் நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை நியாயமற்றது என்றும் அவர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக நிற்பதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை அவர் டேக் செய்துள்ளார்.
தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் நடத்திய விதம் அவமரியாதைக்குரியது என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை இணை அமைச்சருமான பண்டி சஞ்சய் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஆடைகளை மாற்றுவதற்குக்கூட நேரம் கொடுக்காமல் அவரை படுக்கையறையில் இருந்து நேராக அழைத்துச் செல்வது ஒரு கொடூரமான செயல்” என்று அவர் விமர்சித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.