அசத் ஆட்சிக் கவிழ்ப்பு: சிரியாவில் அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி என்ன செய்கின்றன?
அசத் ஆட்சிக் கவிழ்ப்பு: சிரியாவில் அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி என்ன செய்கின்றன?
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸ்ஸை கைப்பற்றியதன் மூலம் பஷர் அல்-அசத்தின் 24 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
13 ஆண்டுகால உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பஷர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு இருக்கிறார். இந்த சண்டையில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், பல லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.
அசத் குடும்பத்தின் அரை நூற்றாண்டு ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில் சிரியாவின் அரசியல் எப்படி இருக்கும் என்பதை உலகம் தற்போது கவனித்து வருகிறது. நீண்ட நெடிய சிரியா விவகாரத்தில் மற்ற நாடுகளின் பங்கு என்ன என்பதை இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
துருக்கியின் பங்கு என்ன ?
சிரியாவின் உள்நாட்டுப் போரில் துருக்கி, கிளர்ச்சிப் குழுக்களை ஆதரித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தற்போது சிரிய தேசிய ராணுவத்தின் (SNA) கீழ் போராடுகின்றன. அந்தக் குழுக்களுக்கு ஆயுதங்கள், ராணுவ மற்றும் அரசியல் ஆதரவை துருக்கி வழங்கியது.
சிரியாவின் வடக்கு அண்டை நாடான துருக்கி, குர்து YPG குழுக்களை கிளர்ச்சியாளர்கள் மூலம் கட்டுப்படுத்த முனைகிறது. இந்த குழுவை தடை செய்யப்பட்ட குர்து கிளர்ச்சி குழுவான பி.கே.கே.வின் நீட்சி என துருக்கி குற்றம்சாட்டுகிறது. மேலும், தனது நாட்டில் இருக்கும் 30 லட்சம் சிரியா அகதிகள் அவர்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என துருக்கி விரும்புகிறது.
அரசியல் ரீதியாகவும் துருக்கியின் தலையீடு இருந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில், வடமேற்கில் கிளர்ச்சியாளர்களின் கோட்டையான இட்லிப்பை அரசு மீட்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக துருக்கியும் ரஷ்யாவும் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தின.
இட்லிப்பில் இஸ்லாமிய கிளர்ச்சி குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆதிக்கம் செலுத்தியது, கிளர்ச்சியாளர்களை வழிநடத்திய இந்தக் குழுவே இறுதியில் அசத் அரசை வீழ்த்தியது.
துருக்கியின் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்காது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமை ஆதரிப்பதாக கூறப்படுவதை துருக்கி மறுத்துள்ளது.
ரஷ்யாவின் பங்கு என்ன?
ரஷ்யா ஏற்கனவே அசத் அரசாங்கத்துடன் பல ஆண்டுகள் நீண்ட உறவைக் கொண்டிருந்தது. உள்நாட்டுப் போருக்கு முன்பே அங்கு ரஷ்யாவின் ராணுவ தளங்கள் இருந்தன.
சிரியாவில் தங்களுக்கு உள்ள இருப்பையும் அசத்தின் ஆதரவையும் அந்த பிராந்தியத்தில் மேற்கு நாடுகளின் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்திற்கு சவால் விடுக்க ரஷ்ய அதிபர் பூட்டின் பயன்படுத்தினார்.
அசத் அரசுக்கு ஆதரவாக 2015-ல் வான் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா தனது ஆயிரக்கணக்கான வீரர்களையும் சிரியாவுக்கு அனுப்பியது.
இதற்கு கைமாறாக, ரஷ்யா ஒரு விமானத் தளம் மற்றும் கடற்படைத் தளத்தின் மீது 49 ஆண்டு கால குத்தகையைப் பெற்றது. இது ஆப்ரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் ராணுவ படைகளை அனுப்ப மத்திய தரைக்கடலில் முக்கிய மையங்களை வழங்கியது.
தன்னை உலகளாவிய சக்தியாக நிலைநிறுத்திக்கொள்ளும் ரஷ்யாவின் முயற்சியில் ஒரு முக்கிய முயற்சியாக இது இருந்தது.
தற்போது கிளர்ச்சி காரணமாக டமாஸ்கஸை விட்டு வெளியேறிய பின்னர் அசத் மற்றும் அவரது குடும்பத்தினர் மாஸ்கோவில் தஞ்சம் அடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் பங்கு என்ன?
2011இல் சிரியாவின் ஜனநாயக ஆதரவு போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அசத்தின் ஆட்சிக்கு எதிரானவர்களை ஆதரித்தார்.
2014இல் ஐ.எஸ். குழுவை எதிர்த்துப் போரிட மிதவாத கிளர்ச்சி குழுக்களாகக் தாங்கள் கருதியவர்களுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியது.
அசத் அரசாங்கம் வீழ்ந்த பிறகு, மத்திய சிரியாவில் உள்ள IS முகாம்கள் மீது டஜன் கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா கூறியது. நாட்டில் நிலவும் நிலையற்ற சூழலை ஐ.எஸ். குழுக்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா கூறியது.
ஜனவரி மாதம் பதவியேற்க உள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், சிரியா ஒரு குழப்பம், அமெரிக்கா அதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றார். 2019ல் டிரம்ப் அதிபராக இருந்தபோது, சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற உத்தரவிட்டிருந்தார். சிரியாவில் தற்போது சுமார் 900 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர்.
இரான் பங்கு என்ன?
1979ல் ஏற்பட்ட இரானின் இஸ்லாமியப் புரட்சி முதலே இரானும் சிரியாவும் நட்பு நாடுகளாக உள்ளன. 1980 களில் இரான்-இராக் போரின் போது சிரியா இரானுக்கு ஆதரவளித்தது.
சிரியா உள்நாட்டுப் போரின் போது, இரான் நூற்றுக்கணக்கான துருப்புகளை அனுப்பியதாகவும், அசாத்துக்கு உதவுவதற்காக பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்ததாகவும் நம்பப்படுகிறது.
இரானிடம் இருந்து ஆயுதம், பயிற்சி மற்றும் நிதியுதவி பெற்ற ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் சிரிய ராணுவத்துடன் இணைந்து போரிட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொலா குழு மற்றும் இராக், ஆப்கானிஸ்தான் மற்றும் யேமனை சேர்ந்தவர்கள்.
யுக்ரேன் ரஷ்யா விவகாரம் போலவே இஸ்ரேல் உடனான மோதலில் ஹெஸ்பொலா பலவீனமடைந்தது சிரிய ரானுவத்தின் விரைவான வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
இஸ்ரேல் பங்கு என்ன?
1967-ல் ஆறு நாட்கள் நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் இஸ்ரேல் சிரியாவிடமிருந்து கோலானைக் கைப்பற்றியது. பின்னர் 1981இல் அதை தன்னுடன் இணைத்தது.
போரின் போது சிரியாவில் இரானுடன் தொடர்புடைய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. எனினும் இத்தகைய தாக்குதல்களை அரிதாகவே இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் அசத்தை வீழ்த்தியதில் இருந்து, சிரியா முழுவதும் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இதில் சிரியாவின் ராணுவ உட்கட்டமைப்பு, கடற்படை மற்றும் ஆயுத உற்பத்தி தளங்கள் ஆகியவை அடங்கும்.
தீவிரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் செல்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேலிய படைகள் கோலன் குன்றுகளில் ராணுவமற்ற பகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. சிரியாவுடனான 1974 ஒப்பந்தம், கிளர்ச்சியாளர்கள் நாட்டைக் கைப்பற்றியதன் மூலம் முடிவுக்கு வந்துவிட்டது என இஸ்ரேல் கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு