‘உலக சாம்பியன்ஷிப் போட்டி போல இல்லை’ மேக்னஸ் கார்ல்சனின் விமர்சனத்திற்கு குகேஷின் பதில் என்ன?

‘உலக சாம்பியன்ஷிப் போட்டி போல இல்லை’ மேக்னஸ் கார்ல்சனின் விமர்சனத்திற்கு குகேஷின் பதில் என்ன?

தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். அதோடு மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார் குகேஷ். அவர் பிபிசிக்கு பேட்டி அளித்த நேர்காணலின் ஒரு பகுதி இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: வாழ்த்துகள் குகேஷ். எப்படி உணர்கிறீர்கள்?

“நன்றி, நான் சிறப்பாக உணர்கிறேன். போட்டியில் வென்ற போது சற்று உணர்ச்சிவயப்பட்டேன். என்னை அமைதிப்படுத்திக் கொள்ள நேரம் கிடைத்தது. தற்போது சிறப்பாக உணர்கிறேன்”.

கேள்வி: இறுதி நகர்வின் போது நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டீர்கள், அந்த தருணத்தில் எப்படி உணர்ந்தீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள்?

“போட்டி முழுவதுமே வெற்றி பெற பல வாய்ப்புகள் கிடைத்தன. பல தருணங்கள் என்னை உண்மையிலேயே முன்னணிக்கு கொண்டு சென்றன. ஆனால் நெருங்கி வந்தவுடன் பதற்றமடைந்தேன், அவரை (டிங்) வீழ்த்த முடியவில்லை. உண்மையில் இந்தப் போட்டியில் நான் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை, ஏனெனில் போட்டி டிராவில் முடியும் நிலை இருந்தது. பின்னர் திடீரென வெற்றி நெருங்கிக் கொண்டிப்பதை உணர்ந்தேன். இந்த திடீர் மாற்றங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”.

கேள்வி: இறுதி நகர்வுக்கு முன்பாக எத்தனையாவது நகர்வில் நீங்கள் வெல்லப் போகிறீர்கள் என்பதை உணர்ந்தீர்கள்?

“இரண்டு நகர்வுகளுக்கு முன்புதான். அவர்(டிங்) அதிகம் பதற்றம் அடைவதையும், எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என்பதையும் உணர்ந்தேன், ஆனால் கடைசி நகர்வுக்கு முந்தைய இரண்டாவது நகர்வை விளையாடியவுடன் எனக்கு தெரிந்துவிட்டது.”

கேள்வி: இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னையில் இருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். இந்த செஸ் பயணத்தில் உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள், உங்கள் பெற்றோர், பயிற்சியாளர் பற்றி கூறுங்கள்

“எனது பெற்றோர், எனது குழு, குடும்ப நண்பர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் என அனைவரிடமிருந்தும் எனக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது. அவர்கள் அனைவரும் தொடக்கத்தில் இருந்தே எனக்கு எல்லா வழிகளிலும் ஆதரவளித்துள்ளனர். அவர்கள் எனக்காக நிறைய தியாகம் செய்துள்ளனர். நான் விரும்பும் விளையாட்டை விளையாடுவதால், வாழ்க்கையில் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயத்தை செய்வதால் இது எனக்கு எளிதானது”.

கேள்வி: உங்களுக்கு வெறும் 18 வயதுதான். பெரிய வெற்றியை பெற்றுள்ளீர்கள். செஸ் எப்போது விளையாட ஆரம்பித்தீர்கள். இந்த விளையாட்டை தேர்வு செய்ய உங்களுக்கு உத்வேகம் அளித்தது எது?

“ஆரம்பத்தில், என் குடும்ப உறுப்பினர்கள் பொழுதுபோக்காக வீட்டில் செஸ் விளையாடுவதைப் பார்ப்பேன், பின்னர் எனக்கு அதில் ஆர்வம் ஏற்பட்டது. சென்னையில் என் பள்ளியில் கோடைக்கால செஸ் முகாமில் சேர்ந்தேன். அங்கு ஒரு பயிற்சியாளர் எனக்கு இந்த விளையாட்டில் நல்ல திறமை இருப்பதைக் கண்டார். செஸ்ஸை தொடர உத்வேகம் அளித்த முதல் விஷயம், எனது ரோல்மாடல் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மேக்னஸ் கார்ல்சன் இடையே நடந்த 2013 உலக சாம்பியன்ஷிப் போட்டிதான்”.

கேள்வி: இரு உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டி போல இது இல்லை என மேக்னஸ் கார்ல்சனின் கருத்து பற்றி உங்கள் கருத்து என்ன? அது உங்களை காயப்படுத்தியதா?

“இல்லை. நிச்சயமாக இல்லை. சில போட்டிகளின் தரம் சிறப்பாக இல்லாமல் இருந்திருக்கலாம் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் செஸ் திறமைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. யாருக்கு சிறந்த குணம் இருக்கிறது, யாருக்கு சிறந்த மன உறுதி இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என நினைக்கிறேன். அந்த குணங்களை நான் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். போட்டி ரீதியாக பார்த்தால் நான் விரும்பிய அளவுக்கு உயர்வாக இல்லை. ஏனெனில் இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. போட்டியில் ஏற்பட்ட அழுத்தம் வேறாக இருந்தது. எனவே நான் சற்று சிறப்பாக வெளிப்படுத்தவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் முக்கிய தருணங்களில் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது. அது எனக்கு மகிழ்ச்சியே.”

கேள்வி: செஸ்ஸிற்காக எவ்வாறு மனதளவில் தயாராவீர்கள்?மனதளவில் உங்களை எப்படி அமைதியாக வைத்துக் கொள்கிறீர்கள்?

“போட்டிக்காக என்னை தயார்படுத்துவதற்காக நான் செய்த முக்கிய விஷயங்களில் மன ரீதியானதும் ஒன்று. பேடி ஆப்டன் நிறைய உதவினார். அவருடன் இணைந்து வேலை செய்ய ஆரம்பித்தேன்; போட்டிக்காக தயார் ஆகினேன். போட்டியில் என்ன எதிர்பார்க்கலாம், எதிராளியிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாம், பல சூழல்களை எவ்வாறு கையாள்வது என நிறைய விவாதித்தோம். இயல்பாகவே, நான் மிக அமைதியான நபராக இருப்பதும் எனக்கு உதவுகிறது. ஏனெனில் நான் நிறைய தியானம், யோகா போன்ற விஷயங்களைச் செய்கிறேன். இது உண்மையில் மிக சவாலானது. இந்த அனுபவம் மன அழுத்தமாக இருந்தது. ஆனால் இதை என்னால் கையாள முடியும் என்று எனக்கு எப்போதும் தெரியும்.”

கேள்வி: வெற்றியை எப்படி கொண்டாட போகிறீர்கள்? பெரிய பரிசுத் தொகை உங்களுக்கு கிடைத்திருக்கிறது?

“சில மணி நேரங்களுக்கு முன் என் அம்மாவும், குடும்பத்தினரும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ளனர். எனது அம்மாவை சந்தித்துவிட்டேன். குடும்பத்தினரை இன்னும் சந்திக்கவில்லை. அவர்களுடன் சில நேரம் செலவழிக்க விரும்புகிறேன். பரிசுத்தொகை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக என்னுடைய குடும்பத்திற்கு இது மிகப்பெரிய விஷயம்”.

முழு விவரங்கள் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.