வட மாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. அதேபோல வடக்கிலும் அவ்வாறான குழுவொன்று செயற்பட்டு வந்தது.
அந்த குழுவால் வவுனியா நகரப் பகுதியிலிருந்து சிவப்பு நிற முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே விழுத்திவிட்டு, இந்த முச்சக்கரவண்டியை கடத்திச் சென்ற சம்பவமொன்று பதிவாகியிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த முச்சக்கரவண்டிக்கு நீல நிற வர்ணப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றப்பட்டு, விற்பனை செய்திருந்தமை தெரிய வந்ததையடுத்து இந்த முச்சக்கரவண்டி மீட்கப்பட்டது.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வடக்கில் இடம்பெற்ற மேலும் சில குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டமை தெரிய வந்துள்ளது.
வவுனியா, உளுக்குளம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அவரது ஒன்றே கால் பவுண் மோதிரத்தை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது.
மேலும், மன்னார், அடம்பன் பகுதியில் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒன்றேகால் பவுண் மோதிரத்தை திருடச் சென்றமை மற்றும் மல்லாவி பகுதியில் டிப்பர் சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து 2 பவுண் சங்கிலியை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்ட இடத்தில் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த இரு நபர்களிடமிருந்தும் முச்சக்கரவண்டி மற்றும் 4 அரை பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரும், மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.