திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினதுறையினர்

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, ஆறு வயது சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல்லில் சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற தனியார் மருத்துவமனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு தளங்கள் கொண்ட அந்த மருத்துவமனையின் நேற்றிரவு (டிச. 12) தரைத்தளத்தில் தீப்பற்றியதாகவும் அந்த தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி, மருத்துவமனையின் லிஃப்ட்டில் உள்ளே இருந்தவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட உடனேயே தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த மருத்துவமனையில் சுமார் 42 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், உள்ளே சிக்கியிருந்தவர்களையும் தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஆட்சியர் விளக்கம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எம்.என். பூங்கொடி, நேற்றிரவு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “மருத்துவமனையில் சிக்கியிருந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். மீட்கப்பட்டவர்களுள் ஒரு சிலர் மயக்க நிலையில் இருந்தனர். மருத்துவமனைக்குள் தற்போது யாரும் இல்லை” என தெரிவித்தார்.

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மருத்துவமனைக்குள் யாரும் தற்போது சிக்கியிருக்கவில்லை என ஆட்சியர் தெரிவித்தார்

லிப்டில் சிக்கி ஆறு பேர் உயிரிழப்பு

தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு, மூன்றாம் தளம் வரை பரவியுள்ளது. 32 பேரை நாங்கள் உயிருடன் காப்பாற்றியுள்ளோம். மீட்புப் பணிகளுக்கு நடுவே ஒரு மருத்துவர் வந்து, லிப்டில் சிலர் சிக்கியுள்ளதாக தெரிவித்தார். லிப்டை உபகரணங்கள் மூலம் திறந்து பார்த்தபோது அதில் 8 பேர் சிக்கியிருந்தனர். 3 ஆண்கள், 2 பெண்கள்,ஆறு வயது சிறுமி என ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் மீட்கப்பட்டு வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்” என தெரிவித்தார்.

லிப்டில் ஆட்கள் உள்ளே இருந்தது முன்பே தெரியவில்லை எனவும், கடைசியாகத்தான் அதுகுறித்து தெரிவிக்கப்பட்டதாகவும், அதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனை என்பதால், நோயாளிகளால் நகர முடியாத சூழல் நிலவியதாகவும் அவர் கூறினார்.

“இனி தான் தீ விபத்திற்கான காரணம் தெரியவரும்” என்று அவர் தெரிவித்தார்.

திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, லிப்டில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர்

எம்எல்ஏ கூறுவது என்ன?

இந்த விபத்து குறித்து பழநி தொகுதி திமுக எம்.எல்.ஏ, ஐ.பி. செந்தில்குமார் ஊடகங்களிடம் அளித்த பேட்டியில், “நேற்று (டிச. 12) இரவு 9-9.45 மணியளவில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நிகழ்ந்த உடனே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தீயணைப்பு துறை, மின் துறை என அனைத்துத் தரப்பு அதிகாரிகளும் நிகழ்விடத்திற்கு வந்துவிட்டனர்.” என தெரிவித்தார்.

நேற்றிரவு அவர் அளித்த பேட்டியில், மருத்துவமனையிலிருந்து 32 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். மருத்துவமனையின் உள்ளே முழுவதும் புகை மூட்டமாக இருந்த நிலையில், தீயணைப்பு துறையினர் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டதாக தெரிவித்தார். “எனினும், இது எதிர்பாராத ஒரு விபத்து” என தெரிவித்தார்.

மின்சார துறை அதிகாரிகள் மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக ஐ.பி. செந்தில்குமார் தெரிவித்தார். “முழுமையான அறிக்கை வழங்கப்படும் போதுதான் உண்மையான காரணம் தெரியவரும்” என்றும் அவர் கூறினார்.

தீ ஆரம்பத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே பரவியதாகவும் அதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தினாலேயே பாதிப்புகள் அதிகமானதாகவும் அவர் தெரிவித்தார். “உயிரை காப்பாற்றிக் கொண்டு ஓடியபோது அதனாலும் சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன” என்றார் ஐ.பி. செந்தில்குமார்.

தப்பித்தவர்கள் கூறுவது என்ன?

அந்த மருத்துவமனையின் தரைதளம் முழுக்கவே எரிந்து போயுள்ளதாக, சம்பவ இடத்திலிருந்து செய்தி சேகரித்துவரும் பிபிசி செய்தியாளர் விஜயானந்த் தெரிவித்தார்.

அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரின் உறவினர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இரவு சுமார் 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. நாங்கள் பதறியடித்து தப்பித்தோம். புகை மூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியேற முடியாத நிலை இருந்தது. பதற்றத்துடன் வெளியேறினோம்.” என்றார்.

இதன் பின் மீட்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் மனைவியால் நடக்க முடியாது என்பதால், மற்றொருவரின் துணையுடனேயே வெளியேற முடிந்ததாக அவர் கூறினார்.

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து

படக்குறிப்பு, மனைவியை தூக்கிக்கொண்டு தான் அங்கிருந்து வெளியேற முடிந்ததாக மருத்துவமனையிலிருந்து தப்பித்தவர் தெரிவித்தார்

மற்றொரு உறவினர் ஒருவர் கூறுகையில், தன்னுடைய மனைவியால் நடக்க முடியாது என்பதால் அவரை தூக்கிக்கொண்டு தான் அங்கிருந்து தப்பிக்க முடிந்ததாக கூறினார்.

“நேற்று தான் என் மனைவிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் அவரால் நடக்க முடியாது. நான் தான் அவரை தூக்கிக்கொண்டு வெளியேறினேன்.” என்றார் அவர்.

இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு