on Friday, December 13, 2024
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொத்துவில் பிரதேசத்துக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை வக்ப் சபை இணைந்து முஸ்லிம் தர்ம நிதியில் (MCF) இருந்து நேற்று முன்தினம் (12) வியாழக்கிழமை 10 லட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரும் வெள்ள அனர்த்தம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதனை நாம் அறிவோம். அந்தவகையில் பொத்துவில் பிரதேச மக்களுக்கான நிவாரண உதவி வழங்கும் முகமாக கொள்ளுபிட்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம் இலங்கை வக்ப் சபைக்கு அனுப்பியிருந்த விண்ணப்பம் தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு இந்நிதி ஒதுக்கப்பட்டது.
ஒதுக்கப்பட்ட இந்நிதியானது காசோலையாக திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களால் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் றிஸான் ஹுசைன் அவர்களிடம் (12) திணைக்களத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட், திணைக்கள வக்ப் பிரிவு பொறுப்பாளர் ஏ.எஸ்.எம். ஜாவித், வக்ப் நியாய சபை செயலாளர் எம்.என். எம். ரோஷன் மற்றும் கொள்ளுப்பிட்டி சம்மேளனத் தலைவர் றிஸான் ஆகியோர் கலந்து கொண்டனர்.