மட்டக்களப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி!

by wp_shnn

மட்டக்களப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி! on Friday, December 13, 2024

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன்பிடிப் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் மற்றொருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (13) காலையில் இடம்பெற்றுள்ளது.

திராய்மடு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 34 வயதுடையவரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியிலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் கடலுக்கு மீன் பிடிக்க நேற்று (12) இரவு இருவர் சென்றுள்ளனர்.

மீன்பிடித்துவிட்டு மீண்டும் இன்று அதிகாலை முகத்துவாரம் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்ததையடுத்து, ஒருவர் காப்பாற்றப்பட்டதுடன் மற்றொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் உடலை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொக்குவில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்