உலக எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு LEED Gold சான்றிதழைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் 50ஆவது கட்டிடமாக மாறிய கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம்.
கொழும்பு, இலங்கை, டிசெம்பர் 12, 2024 – Leadership in Energy and Environmental Design (LEED®) எனும் அமைப்பிடமிருந்து Gold சான்றிதழைப் பெற்றுக்கொண்ட சாதனையை அறிவிப்பதில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையடைகிறது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், நிலைபேறான தன்மை எனும் சாதனைக்கான உலகளவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்த அடையாளத்தைப் பெறும் இலங்கையின் 50ஆவது கட்டிடமாகும். அமெரிக்க பசுமைக் கட்டிட சபையின் LEED பசுமைக் கட்டிடம் எனும் நிகழ்ச்சித் திட்டமானது, ஆற்றல் வினைத்திறன், நீர் முகாமைத்துவம், வெளியேற்றப்படும் கழிவுகளைக் குறைத்தல் மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழலில் உட்புற சுற்றுச்சூழல் தரத்தை பேணுதல் போன்ற விடயங்களை அங்கீகரிக்கிறது.
நடைமுறையில் நிலைபேறானதன்மை மற்றும் காலநிலை மாற்றங்களின் போதான மீண்டெழும் தன்மை ஆகியவற்றிற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு, சுற்றுச்சூழல் தொடர்பாக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதற்கான தூதரகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் சூழலியல், வரலாறு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மதித்தல் ஆகியவற்றிற்கான ஒரு எடுத்துக்காட்டாக இந்த அடைவு விளங்குகிறது.
இச்சாதனையினை நினைவுகூரும் வகையிலும், டிசம்பர் 14ஆம் தேதி வரவிருக்கும் உலக எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும், தூதரகத்தின் அதிநவீன வசதிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி ஆகியோரை அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அண்மையில் சந்தித்தார். கட்டிடத்தின் ஆற்றல் திறன் கொண்ட புத்தாக்க வடிவமைப்பு, உள்ளூர் கூறுகளை உள்ளடக்குதல் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் நிலைபேறான செயற்பாடுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை இதன்போது தூதுவர் வலியுறுத்தினார்.
“LEED Gold சான்றிதழைப் பெறுவதானது, நிலைபேறான தன்மையினை அடைவதற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்” என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். “இக்கட்டிடம் ஒரு தூதரகம் என்பதையும் தாண்டி, இலங்கையின் கலாச்சார மற்றும் இயற்கை மரபுரிமைகளை கௌரவிக்கும் அதே வேளை, சிந்தனைமிக்க வடிவமைப்பு மற்றும் பசுமையான நடைமுறைகள் எவ்வாறு எமது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் என்பதற்கான ஒரு அடையாளமாக விளங்குகிறது. இலங்கையின் பசுமையான எதிர்காலத்திற்குப் பங்களிப்புச் செய்யும் வகையில், நாட்டில் 50ஆவது LEED Gold சான்றிதழ் பெற்ற கட்டிடமாக நிமிர்ந்து நிற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
“அமெரிக்கத் தூதரகம் LEED Gold சான்றிதழைப் பெற்றமையானது, நிலைபேறான உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். புத்தாக்க வடிவமைப்பு, எரிசக்தி வினைத்திறன் மற்றும் உள்ளூர் தாவரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உள்ளூர் கலைத்திறனை உள்ளடக்குதல் ஆகியவற்றினூடாக எமது உள்ளூர் சூழலை மதித்தல் போன்றவற்றிற்கான ஒரு எடுத்துக்காட்டாக இக்கட்டிடம் விளங்குகிறது. இது எதிர்கால செயற் திட்டங்களுக்கான ஒரு அளவுகோலை நிறுவுவதுடன் இலங்கையில் நிலைபேறான இலக்குகளை முன்னேற்றுவதில் சர்வதேச ஒத்துழைப்பு ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கத்தையும் அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான வலுவான பங்காண்மையினை இது பிரதிபலிப்பதுடன் சிந்தனைமிக்க வடிவமைப்பானது சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் எவ்வாறு பயனளிக்கும் என்பதையும் நிரூபிக்கிறது.” என அமைச்சர் பட்டபெந்தி கூறினார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வெளிநாட்டு கட்டிட நடவடிக்கைகள் பணியகத்தினால் (OBO) முகாமை செய்யப்படும், அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான வெளிநாட்டு இராஜதந்திர மற்றும் தூதரக சொத்துக்கள் தொடர்பான துறையானது, புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் LEED Silver சான்றிதழைப் பெறுவதைக் கட்டாயமாக்குகிறது.
LEED சான்றிதழைப் பெற்றுள்ள உலகெங்கிலுமுள்ள 63 அமெரிக்க தூதரகங்களுடன் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் இணைகிறது. அவற்றுள் 23 Gold சான்றிதழ்களைப் பெற்றவை. Gold சான்றிதழ்களைப் பெற்றவற்றுள் 17 கட்டிடங்கள் அந்தந்த நாடுகளில் முதன் முதலாக LEED சான்றிதழ் பெற்றவையாகும்.