அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்: என்ன வழக்கு? பெண் பலியான விவகாரத்தில் என்ன நடந்தது?

அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்: என்ன வழக்கு? பெண் பலியான விவகாரத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, அல்லு அர்ஜுன்
  • எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா
  • பதவி, பிபிசி நிருபர்

கடந்த டிசம்பர் 4ஆம் தேதியன்று புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி கூட்டத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனை நம்பள்ளி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

“அல்லு அர்ஜுன் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கியுள்ளது” என்று ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து அல்லு அர்ஜுன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன நடந்தது?

வெள்ளிக்கிழமை காலை அல்லு அர்ஜுன் வீட்டிற்கு வந்த சிக்கடப்பள்ளி ஏசிபி ரமேஷ் குமார் தலைமையிலான போலீஸ் குழு, அல்லு அர்ஜுனை காவலில் எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.

அல்லு அர்ஜுனை போலீசார் அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியானது.

அதில் அல்லு அர்ஜுன், “உடையை மாற்றிக் கொண்டு வருகிறேன், கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்” என்று கேட்பது பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் அல்லு அர்ஜுன் வீட்டின் படுக்கையறைக்குள் வந்து தன்னை அழைத்துச் செல்வது அவமானகரமானது என்று கூறுவதும் பதிவாகியுள்ளது.

அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா அழுவதும் அவருக்கு அர்ஜுன் ஆறுதல் கூறுவதும் தெரிகிறது. அதன் பின்னர், அவர் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அல்லு அர்ஜுன் உடன் அவரது தந்தை அல்லு அரவிந்த், சகோதரர் அல்லு சிரிஷ் ஆகியோரும் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு வந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக டிசம்பர் 8ஆம் தேதி சிக்கடப்பள்ளி போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

அல்லு அர்ஜுன்

பட மூலாதாரம், UGC

சந்தியா தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான எம்.சந்தீப், தியேட்டர் மேலாளர் எம்.நாகராஜூ, பால்கனி பொறுப்பாளர் ஜி.விஜய சந்தர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி சந்தியா தியேட்டர் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அது ஒரு `பெனிஃபிட் ஷோ’ (Benefit show – ரசிகர்கள் மற்றும் விஐபிகளுக்காக படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஒருங்கிணைக்கப்படும் காட்சி) என்பதால், திரைப்படக் குழுவினர் தியேட்டருடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக தியேட்டர் நிர்வாகம் மனுவில் கூறியுள்ளது.

அல்லு அர்ஜுன்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, அல்லு அர்ஜுன் வீட்டில் போலீசார் இருக்கும் காட்சிகள்

அல்லு அர்ஜுன் வியாழக்கிழமை அன்று டெல்லியில் “புஷ்பா 2 – தி ரூல்” படத்தின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியை நடத்தினார்.

காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்குப் பதிலளித்த பிஆர்எஸ் தலைவர் கேடிஆர், இது அரசாங்கம் எவ்வளவு நிலையற்றது என்பதைக் காட்டுவதாகக் கூறினார்.

சமீபத்தில் சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

கடந்த 4ஆம் தேதி சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒரு சிறுவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அல்லு அர்ஜுன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அல்லு அர்ஜுன், தான் தியேட்டருக்கு வருவதாக காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவித்ததாகவும், பெண்ணின் மரணத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் ஏற்கெனவே வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்தச் சம்பவத்தால் தான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர்களது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது?

அல்லு அர்ஜுன்

பட மூலாதாரம், allu arjun/facebook

அல்லு அர்ஜுன், சந்தியா தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜுனின் பாதுகாவலர்கள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சமீபத்தில் அறிவித்தது. பி.என்.எஸ் சட்டத்தின் 105,118(1) மற்றும் 3(5) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரேவதியின் (உயிரிழந்த பெண்) கணவர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

“தியேட்டரின் கீழ் பால்கனியில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 30-40 பேர் திடீரென தியேட்டருக்குள் நுழைந்தனர்.”

“அப்போது, ​​ஏராளமான ரசிகர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் திடீரென அங்கு வந்ததால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் ரேவதியும், அவரது மகனும் மூச்சுவிட முடியாமல் சுயநினைவை இழந்திருந்தனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று டிசிபி அக்ஷன்ஷ் யாதவ் முன்பு கூறியிருந்தார்.

“சம்பவம் நடந்தபோது அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், இந்தச் சம்பவத்தில் போலீஸ் மீது தவறில்லை” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யார்?

புஷ்பா 2: தி ரூல்

பட மூலாதாரம், Mythri Movie Makes

‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. அதற்கு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 4ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இரவு 9.30 மணிக்கு ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டது.

சந்தியா திரையரங்கில் `benefit show’ நிகழ்ச்சியும் நடைபெற்றது. அங்கு தில்சுக்நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது மனைவி ரேவதி (35), மகன் ஸ்ரீதேஜா (9), மகள் சான்விகா ஆகியோருடன் வந்திருந்தார்.

அன்று அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுனும் படம் பார்க்க வந்தார். அப்போது அவரைக் காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடியும் நடத்தினர்.

“இதில் ரேவதியும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் கீழே விழுந்தனர். கூட்ட நெரிசலில் அவர்களால் சுவாசிக்க முடியாமல் மயக்கமடைந்தனர். உடனே ரேவதியையும் ஸ்ரீதேஜாவையும் ஒருபுறம் அழைத்துச் சென்று சிபிஆர் செய்தோம். அதன் பிறகு, வித்யாநகரில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ரேவதி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்று சிக்கடப்பள்ளி போலீசார் கூறினர்.

ரேவதியின் மகன் ஸ்ரீதேஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.