இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

கிக் பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் கிக் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருகிறது
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் சுரேஷ்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மாதத்திற்கு 60,000 ரூபாய் சம்பாதித்து வந்தார், இது அவரது குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள ஒரு நிலையான வருமானமாக இருந்தது.

ஆனால் ஏழு ஆண்டுகள் கழித்து, அவர் கடினமாகவும் நீண்ட நேரமும் உழைத்தபோதிலும் அவரது வருமானம் பாதியாகக் குறைந்திருக்கிறது. “முன்பு வீட்டில் ஏதாவது அவசரம் என்றால், இந்த வேலையை நம்பி கடன் வாங்குவேன். ஆனால் இப்போது அந்த உறுதி என்னிடம் இல்லை,” என்கிறார் அவர்.

சுரேஷ் குமாரின் சவால்கள் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான கிக் தொழிலாளர்களின் அவலநிலையை பிரதிபலிக்கின்றன. குறைந்த ஊதியம், கணிக்க முடியாத வேலை நிலைமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு இல்லாமை ஆகியவை கிக் பொருளாதாரத்தின் விதிமுறையாக உள்ளன.

அவரது கதை ஓர் உலகளாவிய பிரச்னையின் ஒரு பகுதி. இது கிக் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துவது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ஏன் அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

இதுகுறித்து கிக் பொருளாதாரத்தின் மையமாக இருக்கும் செயலி-சார் நிறுவனங்கள் சிலவற்றைத் தொடர்புகொள்ள பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், நிறுவனங்களின் தரப்பிலிருந்து பதில் கிடைக்கவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவில் கிக் பொருளாதாரம்

இந்தியாவின் கிக் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருகிறது, இது உபெர், ஓலா, ஸ்விக்கி, ஜொமாட்டோ, அர்பன் கம்பனி போன்ற தளங்களை மையமாகக் கொண்டு இயங்குகிறது.

நிரந்தர, முழுநேர வேலைகளுக்குப் பதிலாக, குறுகிய கால அளவில், நேர நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் வேலைவாய்ப்புகளைக் கொண்ட சந்தையே கிக் பொருளாதாரம் என அறியப்படுகிறது. இவை பெரும்பாலும், ஓலா, உபெர், ஸ்விக்கி, ஜொமாட்டோ, அர்பன் கம்பெனி போன்ற செயலி-சார் பணிகளாகச் சமீப காலங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றன.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு , 2020-21ஆம் ஆண்டில் 77 லட்சம் தொழிலாளர்கள் கிக் பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ளதாக மதிப்பிடுகிறது. இது நாட்டில் விவசாயம் அல்லாத தொழிலாளர்களில் 2.6%. இந்த எண்ணிக்கை 2029-30ஆம் ஆண்டில் 2.35 கோடியாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விகிதம், விவசாயம் அல்லாத தொழிலாளர்களில் 6.7% அல்லது மொத்த தொழிலாளர்களில் 4.1%.

இந்த வளர்ச்சி நிலையான வேலைவாய்ப்பு இல்லாததால் உருவாகிறது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) எடுத்துக்காட்டுவது போல்: “நிலையான மற்றும் மாதாந்திர ஊதியம் கொடுக்கும் வேலை வாய்ப்புகள் இல்லாததன் விளைவாக பொருளாதாரத்தில் சுய வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.”

“இதன் காரணமாகவே பிளாட்ஃபார்ம் (ஒரு தளத்தை மையமாகக் கொண்டு வேலைகளை உருவாகுவது, சேவைகளை வழங்குவது) சார்ந்த வேலை முன்பைவிட மிக வேகமாக வளர்ந்துள்ளது.”

கடந்த 2021ஆம் ஆண்டில், சுயதொழில் செய்யும் தொழில்முனைவோர் இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்முனைவோர்களில் 80 சதவீதமாக உள்ளனர், இது 2016இல் 62 சதவீதமாக இருந்தது.

கிக் பணிகளில் சேருவதற்குத் தேவையான தகுதிகள் மிகக் குறைவு. அதோடு, அதில் உடனடி வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இருப்பினும் ஊழியர்கள் தங்கள் நிலை மேம்படவில்லை என்கின்றனர்.

செயலி அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்களின் இந்திய கூட்டமைப்பின் தேசிய துணைத் தலைவர் முஹம்மது இனியத் அலி கூறுகையில், “ஆரம்ப நாட்களில் வழங்கப்படும் அதிக ஊக்கத்தொகை மூலம் தொழிலாளர்கள் வேலைக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.

அவர்களில், 5-10% ஓட்டுநர்கள், பட்டப்படிப்பு சான்றிதழ் வைத்திருக்கலாம், மீதமுள்ளவர்கள் பின்தங்கியவர்கள். அவர்களிடம் எந்தத் தொழிலிலும் முதலீடு செய்ய பணம் இல்லை. ஒரு பைக் வைத்திருந்தால் போதும், சம்பாதிக்கத் தொடங்கலாம் என்று நினைக்கும்போது எளிதாக உள்ளது. ஆனால் அவர்களின் வாழ்க்கை பிறகு கடினமாகிவிடுகிறது” என்கிறார்.

கிக் பணியாளர்களின் நிலை என்ன?

கிக் பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2020-21ஆம் ஆண்டில் 7.7 மில்லியன் தொழிலாளர்கள் கிக் பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்தியாவில், கிக் ஊழியர்களுக்கு ‘பணியாளர்’ என்ற சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை. அவர்கள் ‘கூட்டாளர்கள்’ என வகைப்படுத்தப்படுகிறார்கள்.

“அவர்கள் தொழிலாளர்களாகவோ, ஊழியர்களாகவோ அங்கீகரிக்கப்படாத காரணத்தால், ஓய்வூதியம், சுகாதாரக் காப்பீடு போன்ற ஊழியர்களின் எந்தச் சலுகைகளையும் அவர்கள் அனுபவிப்பதில்லை. அவர்களின் குறைந்தபட்ச ஊதியமும், வேலை நேரமும் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லை” என்று கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் ஒர்க்கர்ஸ் யூனியனின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஐஸ்வர்யா கூறுகிறார்.

மத்திய அரசின் 2020ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு குறியீடு, கிக் தொழிலாளர்களை பாரம்பரிய முதலாளி-பணியாளர் கட்டமைப்புகளுக்கு வெளியே வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களாக வரையறுக்கிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கைப்படி, “சமூகப் பாதுகாப்பு இல்லாதது, அதிகரித்து வரும் பிளாட்ஃபார்ம் கமிஷன்கள், வருமானம் குறைந்து வருவது மற்றும் அத்தொழில்களை சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை பல கிக் தொழிலாளர்களுக்கு வாழ்க்கையைக் கடினமாக்கியுள்ளது.”

“நான் ஒரு நாளில் 20 ஆர்டர்களை டெலிவரி செய்தால், எனக்கு ரூ .400 ஊக்கத்தொகை கிடைக்கும். ஆனால் தாமதம் ஏற்பட்டாலோ, வாடிக்கையாளர் புகார் அளித்தாலோ, எனது ஐடியை செயலிழக்கச் செய்வார்கள்,” என்கிறார் சுரேஷ்குமார்.

அதன் பிறகு, “எனக்கு எந்த ஆர்டர்களும் கிடைக்காது, அல்லது எனது ஐடி மாற்றி அமைக்கப்படும். எனக்கு 20 ஆர்டர்களுக்கு ரூ.400 க்கு பதிலாக ரூ.200 மட்டுமே ஊக்கத்தொகையாகக் கிடைக்கும்,” என்று அவர் விளக்குகிறார்.

கிக் பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில், கிக் ஊழியர்களுக்கு ‘பணியாளர்’ என்ற சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை. அவர்கள் ‘கூட்டாளர்கள்’ என வகைப்படுத்தப்படுகிறார்கள்.

தெலங்கானாவில் செயலி அடிப்படையிலான தளத்தின் மூலம் அழகுக்கலை நிபுணராகப் பணிபுரியும் ஃபாத்திமா, கடந்த ஒரு மாதமாகத் தனது ஐந்து மற்றும் எட்டு வயது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாததால் அவர்களை அனுப்ப முடியவில்லை என்று அவர் கூறுகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது ஐடி ஐந்து மாதங்களாக முடக்கப்பட்டுள்ளது, அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.

“திடீரென ஒரு நாள், அவர்கள் ஐடியை முடக்கினர். காரணம் சொல்லப்படவில்லை. மாதம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை சம்பாதித்து வந்தேன். திடீரென அந்த வருமானம் காணாமல் போய்விட்டது. இந்த வேலைக்காக இ.எம்.ஐ.யில் இரு சக்கர வாகனம் வாங்கினேன். அந்தக் கடனை செலுத்த முடியவில்லை.

வங்கியில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன. குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வந்தனர். கட்டணம் செலுத்துமாறு பள்ளியில் இருந்து தொடர்ந்து கேட்டதால், கடந்த ஒரு மாதமாக அவர்களைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. அருகிலுள்ள பார்லரில் வேலை உண்டு, ஆனால் மாதம் ரூ.10,000 மட்டுமே கிடைக்கும்,” என்கிறார் அவர்.

கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் ஒர்க்கர்ஸ் யூனியனின் (GIPSWU) தேசிய ஒருங்கிணைப்பாளர் ஐஸ்வர்யா, ஐடி முடக்கம் ஒரு பரவலான பிரச்னை என்று சுட்டிக்காட்டுகிறார்.

“குறை தீர்க்கும் வழிமுறை இந்த நிறுவனங்களில் இல்லை. சில நிறுவனங்கள் ஹெல்ப்லைன்களை வழங்குகின்றன, ஆனால் அவை 24 மணிநேரமும் வேலை செய்வதில்லை. குறிப்பிட்ட அலுவலகங்கள் அல்லது புகார்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் என்று பெரும்பாலான நேரங்களில் உரிய கட்டமைப்பு இல்லை,” என்று அவர் விளக்குகிறார்.

தொழிலாளர்கள் மீதுள்ள கட்டுப்பாடுகள்

கிக் பொருளாதாரம்

பட மூலாதாரம், Ashish Singh Arora

படக்குறிப்பு, கிக் பொருளாதாரத்தில் நிபுணரான ஆஷிஷ் சிங் அரோரா

ராஜஸ்தானை சேர்ந்த கிக் பொருளாதாரத்தில் நிபுணரான ஆஷிஷ் சிங் அரோரா, தொழிலாளர்கள் மீது இந்தத் தளங்கள் கொண்டுள்ள கட்டுப்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறார்.

“இந்தியாவின் கிக் பொருளாதாரம் கடந்த ஆண்டு ரூ .445 பில்லியனாக இருந்தது. வேலைகளை வழங்கும் தளங்கள் மட்டுமே வளர்ந்து வருகின்றன, அவற்றில் வேலை செய்பவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இந்த வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதுவும் இல்லை” என்கிறார்.

கிக் ஊழியர்கள் ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமல்ல என்று கூறும் அவர், “உதாரணமாக, ஒரு மருத்துவர், பிராக்டோ என்ற இணையதளத்தில் ஒரு நோயாளியைத் தொடர்புகொண்டால், வலைதளம் நோயாளியின் கட்டணத்தில் 20% எடுத்துக்கொண்டால், அவர் கிக் தொழிலின் அங்கமாக மாறுகிறார். வழக்கறிஞர்கள், பொறியாளர்களுக்கும் இதுபோன்ற இணையதளங்கள் உருவாகி வருகின்றன. எதிர்காலத்தில், அனைத்துத் துறைகளும் இதில் இருக்கும்” என்கிறார் ஆஷிஷ் சிங் அரோரா.

“அல்காரிதம். அதுதான் எல்லாம், மீம்ஸ்களை வெளியிடும் இன்ஸ்டாகிராம் பக்கம் சமீபத்தில் ரூ.750 கோடி ஈட்டியது. இது எப்படி சாத்தியமாயிற்று? நீங்கள் எத்தனை ஆர்டர்களை பெறுகிறீர்கள் மற்றும் எந்த உணவகங்களை வாடிக்கையாளருக்கு முன்னிலைப்படுத்த முடியும் என்பதை ஒரு பிளாட்ஃபார்ம் கட்டுப்படுத்துகிறது” என்கிறார் அவர்.

குறிப்பிட்ட பணிநேரம் என்பதில்லை

கிக் பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

கிக் வேலைகளில் பணியாளர் தனது வேலை நேரத்தை தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், அசாம் டாக்ஸி டிரைவர்கள் யூனியனின் தலைவரும், டாக்ஸி ஓட்டுநருமான துருவா ராஜ் ஆக்சம் இதை மறுக்கிறார்.

“நான் என் குழந்தையின் பள்ளிக்கு அருகில் ஒரு சவாரி முடித்து, அவனை அழைத்துச் செல்ல நினைத்தால், எனக்கு அடுத்த சவாரி 30 கி.மீ தொலைவில் வழங்கப்படுகிறது. என்னால் அந்த செயலியை அணைக்கவும் முடியாது, ஏனென்றால் குறைந்தபட்ச பயணங்களின் எண்ணிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நான் ஒரு நாளில் பத்து சவாரிகளை முடிக்கவில்லை என்றால், நான் ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும்.”

அவர் இப்போது எட்டு ஆண்டுகளாக ஒரு செயலி அடிப்படையிலான நிறுவனத்தில் டாக்ஸி ஓட்டுநராக உள்ளார். 7 கி.மீ தூரத்திற்கு ரூ.80 வழங்குவதாகத் தனது பில்லின் நகலை அனுப்பிய அவர், “2016ஆம் ஆண்டில் செடான் கார்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20-25 செலுத்தப்பட்டது, இப்போது அது ரூ.10-12 ஆகக் குறைந்துள்ளது” என்று கூறுகிறார். போக்குவரத்துத் துறை தங்கள் தொழிலை ஒழுங்குபடுத்தக் கோரி மாநிலத்தில் செயலி அடிப்படையிலான போக்குவரத்து ஊழியர்கள் சமீபத்தில் நடத்திய 48 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தார்.

கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் பிபிசி அணுகிய பிற கிக் தொழிலாளர்கள் இதேபோன்ற கதைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

செயலி அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்களின் இந்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் இணை நிறுவனருமான ஷேக் சலாவுதீன், மற்றொரு முக்கியமான பிரச்னையை எடுத்துக்காட்டுகிறார்: “சமூகப் பாதுகாப்புக்கு அப்பால், கிக் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் குறைதீர்ப்பு வழிமுறைகள் இருக்க வேண்டியது அவசியம். விசாரணை அல்லது விளக்கம் இல்லாமல் தொழிலாளர்களின் கணக்குகள் முடக்கப்படுகின்றன.”

இதற்குத் தீர்வு என்ன?

கிக் பொருளாதாரம்

பட மூலாதாரம், Dhruva Raj Axom

படக்குறிப்பு, கிக் வேலைகளில் பணியாளர் தனது வேலை நேரத்தை தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரம் இருக்கும் என்பதை மறுக்கிறார் துருவா ராஜ் ஆக்சம்

கிக் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. கிக் தொழிலாளர்களைப் பதிவு செய்வதற்கும், அரசாங்கத்திற்கு தரவுகளை வழங்குவதற்கும், தொழிலாளர் நலன்களுக்கு நிதியளிக்க செஸ் வசூலிப்பதற்கும் தளங்களைக் கட்டாயப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது.

நிலுவைத் தொகை தாமதமானால் தொழிலாளர்களுக்கு 12% வட்டியுடன் இழப்பீடு பெற உரிமை உண்டு. “கிக் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மாநிலத்தில் ரூ .5,000 வழங்கப்படுகிறது. மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்,” என்கிறார் ஆஷிஷ் சிங் அரோரா. ஆனால், சட்டம் இயற்றப்பட்டு ஓராண்டாகியும், “அது இன்னும் அமல்படுத்தப்படவில்லை” என்றும், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களே இதற்குக் காரணம் என்றும், அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்களின் நிலைமைகள் ஒழுங்குமுறை) சட்டம், 1982இன் கீழ் தள அடிப்படையிலான கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தை தமிழ்நாடு நிறுவியுள்ளது. இது கிக் தொழிலாளர்களுக்கு நிதி உதவி, முன்மொழியப்பட்ட மருத்துவ காப்பீடு மற்றும் பிற சமூகப் பாதுகாப்பு நன்மைகளுக்கான வழிவகையைச் செய்கிறது.

இருப்பினும், போதிய விழிப்புணர்வுப் பிரசாரங்கள் இல்லாததால் உறுப்பினர் சேர்க்கை குறைவாக உள்ளது. இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில கிளையின் கோபிகுமார் போன்ற தொழிலாளர் தலைவர்கள், கிக் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கான ஒரு “முதல் படியாக” வாரியத்தைப் பார்க்கிறார்கள். எனினும் வெளிப்படைத்தன்மையையும் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத்தையும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிக் பொருளாதாரம்

பட மூலாதாரம், Shaik Salauddin

படக்குறிப்பு, செயலி அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்களின் இந்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் இணை நிறுவனருமான ஷேக் சலாவுதீன்

தேசிய அளவில், சமூகப் பாதுகாப்பு குறியீடு 2020, கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களை அங்கீகரித்து அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் முதல் சட்டமாகும். இது கிக் தொழிலாளர்களை பாரம்பரிய முதலாளி-பணியாளர் கட்டமைப்புகளுக்கு வெளியே, குறிப்பாக டிஜிட்டல் தளங்கள் மூலம் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்களாக வரையறுக்கிறது.

சுகாதாரம் மற்றும் விபத்துக் காப்பீடு, ஓய்வூதியங்கள், மகப்பேறு நலன்களை உள்ளடக்கிய கிக் தொழிலாளர்களுக்கான திட்டங்களை வடிவமைக்க இது அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த நன்மைகளை அணுக தொழிலாளர்கள் ஒரு பிரத்யேக தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கிக் தொழிலாளர்களை அங்கீகரிப்பதில் இந்தச் சட்டம் முதல் படியானாலும், இதை அமலுக்குக் கொண்டு வருவதில் சுணக்கம் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன, இதுவரை தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் சென்றடையவில்லை. மேலும், நிலையான ஊதியம் மற்றும் தகராறுகளுக்கான தீர்வு போன்ற தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் இந்த விதிகள் போதுமானதாக இல்லை ” என்று முஹம்மது இனியத் அலி கூறுகிறார்.

மற்ற நாடுகளில் நிலை என்ன?

கிக் பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிக் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு பல்வேறு நாடுகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

கிக் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்குப் பல்வேறு நாடுகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2021ஆம் ஆண்டில், பிரிட்டன் உச்சநீதிமன்றம் உபெர் ஓட்டுநர்கள் “தொழிலாளர்கள்” என்று தீர்ப்பளித்தது, இதன் மூலம் குறைந்தபட்ச ஊதியம், ஊதிய விடுப்பு மற்றும் பிற சலுகைகளுக்கு உரிமை உண்டு.

ஸ்பெயினின் “ரைடர் சட்டம்” நிறுவனங்கள் டெலிவரி ரைடர்களை ஊழியர்களாக வகைப்படுத்த வேண்டும் என்கிறது. அதே நேரத்தில் கலிபோர்னியாவின் ‘ப்ரோபோசிசன் 22’ என்ற சட்டம் சுகாதார மானியங்கள் போன்ற வரையறுக்கப்பட்ட நன்மைகளை வழங்குகிறது, ஆனால் கிக் தொழிலாளர்களுக்கு ‘பணியாளர்’ என்ற அந்தஸ்து வழங்கவில்லை.

நியாயமான ஊதியங்கள், வேலை பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்காக, உலகெங்கிலும் உள்ள கிக் தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கிக் பொருளாதாரம் வேலையின் தன்மையை மாற்றியுள்ளது, வேலை உருவாக்கம் மற்றும் புதுமைகளுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. “அரசுகள் புதுமையை வளர்ப்பதையும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் சமமாகக் கையாள வேண்டும். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான கிக் தொழிலாளர்களுக்கு, ஒழுங்குமுறை ஒரு ஆடம்பரம் அல்ல – அது ஒரு தேவை” என்று ஆஷிஷ் சிங் அரோரா கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.