கிளிநொச்சி மாவட்டத்தில் நாளைய தினம் (12.12.2024) நடைபெறவிருந்த அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிராக ஒழுங்கு செய்யப்பட்ட கண்டன ஆர்ப்பாட்ட பேரணியானது நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைப்பட்டுள்ளதாகவும் இந்த போராட்டமானது பிறிதொரு நாளில் நடைபெறும் எனவும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த இடை நிறுத்தமானது சற்றுமுன் அமைப்பின் அங்கத்தவர்கள் கூடி எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்படிருக்கின்றது எனவும் மது போதைக்கு எதிரான இயக்கத்தின் தலைவர் ச.சுகிர்தன் சற்றுமுன் கூறியுள்ளார்.
முன்னைய செய்தி
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும் நாளை வியாழக்கிழமை (12.12.2024) காலை 9.30 மணி தொடக்கம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து மாவட்ட செயலகம் வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (09.12.2024) கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்ட மது போதைக்கு எதிரான இயக்கத்தின் தலைவர் ச.சுகிர்தன் இப் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பின் போது எதிர்வரும் 12 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்திலே குறிப்பாக கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலே
அதிகரித்த சாலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கின்றோம்.
இந்த பகுதியில் சமீப காலமாக மக்களின் விகிதாசார எண்ணிக்கைக்கு அதிகமான மதுபான சாலைகள் இருக்கின்றன. அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தை செய்ய இருக்கின்ற சூழ்நிலையில் பல பொது அமைப்புகளுக்கு மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த காலங்களில் முழங்காவில் பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு மதுபானசாலையை மக்கள் போராட்டம் மூலம் நிறுத்தியுள்ளோம். அதே சமயம் உடுப்பிட்டி பிரதேசத்திலும் மதுபானசாலை ஒன்றிற்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு நாம் மதுபோதைக்கு எதிராக செயற்படுக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே கிளிநொச்சியிலே குறிப்பாக பாடசாலைகள், ஆலயங்களுக்கு மத்தியிலே சட்டதிட்டங்களை மீறி இயங்கும் மதுபான சாலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். மக்களின் இயல்பான வாழ்க்கைக்கு அது இடையூறாக இருக்க கூடாது என்ற அடிப்படையில் நாம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு படுத்தி இருக்கின்றோம்”. இவ்வாறு மது போதைக்கு எதிரான இயக்கத்தின் தலைவர் ச.சுகிர்தன் கூறியுள்ளார்