புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?
- எழுதியவர், நோர்மன் மில்லர்
- பதவி, ,
-
நமது நிலத்தடியில் அதிகளவு ஆற்றல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக, சில இடங்களில், பூமியின் மேற்பரப்புக்கு அருகில் புவிவெப்ப ஆற்றல் கிடைக்கும்.
ஆனால், உலகின் மற்ற பகுதிகளில் ஆழமாக தோண்ட வேண்டியிருக்கும். புவிவெப்ப ஆற்றலைப் பெற போதுமான ஆழத்தை எவ்வாறு அடைவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
உலகெங்கிலும் உள்ள சில இடங்களில், புவிவெப்ப ஆற்றல் நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும். ஐஸ்லாந்தில், 200க்கும் மேற்பட்ட எரிமலைகள் மற்றும் இயற்கையாக அமைந்த பல வெப்ப நீரூற்றுகள் உள்ளன. அங்கு அந்த ஆற்றலைப் பெறுவது கடினம் அல்ல.
அந்த நாடு முழுவதும் நீராவி குளங்கள் உள்ளன. அவை, பூமியின் கீழே எரியும் புவிவெப்ப நெருப்பால் சூடாகின்றன. சூடான நீர் மற்றும் நீராவி அழுத்தத்தை உருவாக்கி, பின்னர் தரையில் இருந்து வெளியேறி, கொதிக்கும் நீர் மற்றும் நீராவியை வெந்நீருற்று உருவாக்குகிறது.
ஐஸ்லாந்து புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்துகிறது. அதாவது, பூமியின் உள்ளே புவிவெப்ப ஆற்றல், அங்குள்ள 85% வீடுகளுக்கு வெப்பம் அளிக்க பயன்படுகிறது. நாட்டின் மின்சார உற்பத்தில் 25% இதில் இருந்து கிடைக்கிறது.
புதுப்பிக்கத்தக்க வளத்தைப் பயன்படுத்துவதற்கு, இது ஒரு அருமையான வழியாகும்.
வற்றாத பசுமை ஆற்றல் மூலமான, புவிவெப்ப ஆற்றலை பூமி வழங்குகிறது. பூமியின் மையத்திலிருந்து வெப்பம் தொடர்ந்து உமிழப்படுவதாலும், நமது பூமியின் மேலோட்டத்தில் இயற்கையாக நிகழும் கதிரியக்கத் தனிமங்களின் சிதைவாலும், காற்று அல்லது சூரிய சக்தியைப் போலல்லாமல், புவிவெப்ப ஆற்றல் “எப்போதும் இயங்கும்”.
புவிவெப்ப ஆற்றல், ஒரு நம்பிக்கைக்குரிய ஆற்றல் மூலமாகும். இது ஒரு நல்ல தீர்வாக இருந்தாலும், இந்த பரந்த ஆற்றல் மூலத்தை திறம்பட பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை நாம் உருவாக்க வேண்டும்.
பூமி தொடர்ந்து அதிகளவு வெப்பத்தை வெளியிட்டு வருகிறது.
பூமியில் பல மடங்காக உள்ள தேவைகளைச் சமாளிக்க இந்த வெப்பம் போதுமானது.
இருப்பினும், இந்த வெப்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடிப்பது சவாலானது .
உலகெங்கிலும் உள்ள புவிவெப்ப மின் நிலையங்கள்
தற்போது உலகில் 32 நாடுகளில் மட்டுமே புவிவெப்ப மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
உலகம் முழுவதும் 700க்கும் குறைவான மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 2023 இல் சுமார் 97 டெராவாட் மணிநேர மின்சாரம்(TWh) உற்பத்தி செய்யப்பட்டது.
இது அமெரிக்காவில் மட்டும் சூரிய சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவில் பாதிக்கும் குறைவானது.
மேலும் உலகளாவிய ஆற்றல் தொகுதியில், புவிவெப்ப ஆற்றலின் சாத்தியமான பங்களிப்புக்கான மதிப்பீடுகளை விட இந்த அளவு மிகவும் குறைவு.
ஏனென்றால், புவிவெப்ப ஆற்றல் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆண்டுக்கு 800 – 1400TWh மின்சாரத்தை மேலும் 3,300-3800TWh வெப்பத்தையும் வழங்க முடியும் என்று சிலர் மதிப்பிடுகின்றனர் .
புவிவெப்ப ஆற்றல் நிபுணரான அமண்டா கோல்கர், அமெரிக்காவில் உள்ள தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தில் (NREL) புவிவெப்ப திட்ட மேலாளராக உள்ளார்.
“பூமியின் இயற்கையான வெப்ப ஆற்றல், தூய்மையான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல உதவும்” என்று அமண்டா கோல்கர் நம்புகிறார்.
2023 ஆம் ஆண்டு அறிக்கையில், தூய்மையான ஆற்றலுக்கான மாற்றத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள புவிவெப்ப ஆற்றலின் திறனை அவர் எடுத்துரைத்தார்.
பத்து மடங்கு அதிக ஆற்றலை வழங்கும் ‘சூப்பர்ஹாட்’ கிணறுகள்
ஆனால் ஒவ்வொரு நாடும் ஐஸ்லாந்தைப் போல் அதிர்ஷ்டசாலிகள் அல்ல, அங்கு சுமார் 120-240C (248-464F) வெப்பநிலையில் சூடான நீரின் நீர்த்தேக்கங்களை பூமியின் மேற்பரப்பிற்கு அருகில் எளிதாக அணுக முடியும் .
நாட்டின் பிற பகுதிகளில், 1.5 மைல் (2.5 கிமீ) ஆழம் வரை தோண்டப்பட்ட கிணறுகள் 350C (662F) வரையிலான வெப்பநிலைக்கு அணுகலை வழங்குகின்றன.
உதாரணமாக, ரெய்க்ஜேன்ஸில் உள்ள ஐஸ்லாந்தின் முக்கிய புவிவெப்பத் தளம், 600C (1112F) அளவுக்கு அதிக வெப்பமடையும் திரவங்களை அணுகுவதற்கு 2.9 மைல்கள் (4.6 கிமீ) சோதனைக் கிணறுகளைத் தோண்டியுள்ளது.
ஏற்கனவே, ஆண்டுக்கு 720 ஜிகாவாட் மணிநேரம் (GWh) மின்சாரத்தை உற்பத்தி செய்ய 320C (608F) வெப்பநிலையில் ஆழமற்ற கிணறுகளைப் பயன்படுத்தி தினசரி வெப்பப் பிரித்தெடுத்தல் நடைபெறுகிறது.
புவிவெப்ப ஆற்றல் பரவலாக இல்லாததற்கு ஒரு காரணம், அந்த ஆற்றலைப் பிரித்தெடுக்கத் தேவையான அதிக முன் முதலீடு ஆகும்.
ஆனால் தொழிநுட்ப உதவியின்றி அதைச் செய்வதும் கடினமாகும். புவிவெப்ப ஆற்றலின் பலன்களை உலகின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல, பூமியின் உள்ளே ஆழமாக தோண்டி எடுக்க வேண்டும்.
மின்சாரம் உற்பத்தி செய்ய அல்லது வீடுகளுக்குத் தேவையான அளவு வெப்பநிலை அதிகமாக கிடைக்கும் பகுதிகளை நாம் அடைய வேண்டும்.
இதில் இருக்கும் சவால்கள் என்ன?
பூமியின் பெரும்பகுதி முழுவதிலும், பூமியின் வெளிப்புற அடுக்கின் வழியாக நீங்கள் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் சராசரியாக 25-30C (77-86F) வெப்பநிலை அதிகரிக்கிறது .
எடுத்துக்காட்டாக, பிரிட்டனில், பூமியின் வெளிப்புற அடுக்கின் உள்ளே 5 கிமீ தூரத்திற்கு, சுமார் 140C (284F) ஆக மேற்பரப்பு வெப்பநிலை உள்ளது என்று பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு கூறுகிறது.
220பார்களுக்கு (கடல் மட்டத்தில் பூமியின் மேற்பரப்பில் உள்ள சராசரி அழுத்தம் ஒரு பார் எனப்படும்) மேலான அழுத்தத்தில் நீர் வெப்பநிலை 374C (705F) ஐத் தாண்டிய ஒரு புள்ளியை அடைய முடியும்.
இங்குதான் நீர், அதன் தீவிர ஆற்றலை அடைகின்றது. இது ‘சூப்பர் கிரிட்டிக்கல் நிலை’ என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் , நீர் திரவமாகவோ அல்லது வாயுவாகவோ இல்லாத வடிவத்தில் உள்ளது . அது வெப்பமாகவும் அதிக அழுத்தத்தோடும் இருந்தால், அங்கு புவி வெப்ப ஆற்றல் அதிகமாக கிடைக்கும்.
உண்மையில், அதி சூடான புவி வெப்பக்கிணறு ஒன்று, வணிக புவிவெப்ப கிணறுகள் உற்பத்தி செய்யும் ஆற்றலை விட ஐந்து முதல் 10 மடங்கு ஆற்றலை உற்பத்தி செய்யும் என்று அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகம் கூறுகிறது.
புவிவெப்ப ஆற்றலில் உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், வெப்பமான பகுதிகளை அடைய பூமியில் போதுமான ஆழத்தில் துளையிடுவது கடினம்.
பாரம்பரிய கருவிகள், வைர நுனிகளைப் போல் கூர்மையான கருவிகள் கூட, மிகவும் வெப்பமான பகுதிகளை அடைந்து பூமியில் ஆழமாக துளையிடும் அளவுக்கு வலுவாக இல்லை.
நிலத்தடியில் உள்ள அதீத வெப்பம் மற்றும் அழுத்தம் துளையை எளிதில் சேதப்படுத்தும்.
மேலும் குப்பைகள் இல்லாமல் துளையை வைத்திருப்பதும் கடினம்.
எடுத்துக்காட்டாக, 2009-ஆம் ஆண்டில், ஐஸ்லாந்தின் துளையிடல் திட்டத்தில் பணிபுரியும் ஒரு குழு , பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1.2 மைல் (2 கிமீ) கீழே உள்ள கிராஃப்லா எரிமலையில் உள்ள மாக்மா அறைக்குள் (பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள திரவ பாறையின் உட்பகுதி) துளையிட்டபோது கவனக்குறைவாக ‘சூப்பர் கிரிட்டிகல்’ பகுதியை அடைந்தது.
அந்தத் துளையிலிருந்து வெளிப்படும் சூடான நீராவி, அதிக அமிலத்தன்மை கொண்டது. இதனைப் பயன்படுத்துவதும் கடினமாக இருந்தது . அங்கு உயர் அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலை அதிகமாக இருந்ததால், அதனை கட்டுப்படுத்துவதும் கடினமாக இருந்தது. மேலும் வால்வு செயலிழந்து துளைக்கு சீல் வைக்கப்படுவதற்கு முன்பு அதை இரண்டு ஆண்டுகளுக்கு இடைவிடாமல் வெளியேற்ற வேண்டியிருந்தது .
ஆழமான துளையிடுதல் முறை, விலையுயர்ந்தது. மேலும் துளையிடுவதற்கு நீண்ட நேரம் ஆகலாம்.
மனிதர்களால் தோண்டப்பட்ட ஆழமான துளை, பனிப்போருக்கு முந்தையது.
இருப்பினும், பூமியின் மேலோட்டத்தில் முடிந்தவரை துளையிடுவதற்கு வல்லரசுகளுக்கு இடையே ஒரு போட்டி இருந்தபோது.
சோவியத்தால் 7.6 மைல் (12.2 கிமீ) வரை பாறை வழியாக ஊடுருவ முடிந்தது. கோலா தீபகற்பத்தில், ஆர்க்டிக் வட்டத்தில் ‘கோலா சூப்பர் டீப்’ போர்ஹோலை (மிக ஆழமான துளை ) சோவியத் உருவாக்கியது.
அந்த ஆழத்தை அடைய அவர்களுக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தேவைப்பட்டன.
தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் (NREL) மதிப்பீட்டின்படி , 1 கிமீ ஆழத்தில் கிணறு தோண்டுவதற்கான செலவு சுமார் 2 மில்லியன் டாலர் செலவாகும். அதே நேரத்தில் இதே அளவில் நான்கு மடங்கு ஆழம் தோண்டுவதற்கு 6 மில்லியன் டாலர் முதல் 10 மில்லியன் டாலர் வரை செலவாகும்.
ஆராய்ச்சியில் எம்.ஐ.டி
ஆழமான புவிவெப்ப ஆற்றலை அணுகுவது சவாலானதாக இருந்தாலும், அது குறிப்பிடத்தக்க பலன்களையும் வழங்குகிறது.
பூமியின் மிக வெப்பமான பகுதிகளை நாம் அடைந்தவுடன், மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
எரிவாயு போன்ற பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துவதை விட இது மலிவானது, மேலும் புவி வெப்ப ஆற்றல், குறைவான பசுமை இல்ல வாயுக்களை உற்பத்தி செய்வதால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் சிறந்தது.
இந்த சவால்களை சமாளிக்க, விஞ்ஞானிகளும் நிறுவனங்களும் பூமியில் ஆழமாக துளையிடுவதற்கு புதிய நுட்பங்களையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கி வருகின்றன.
அவ்வாறு செய்வதன் மூலம், முன்னர் பொருத்தமற்றதாகக் கருதப்பட்ட பகுதிகளில் புவிவெப்ப ஆற்றலின் திறனைக் கண்டறிய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
உதாரணமாக, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (Massachusetts Institute of Technology- MIT) விஞ்ஞானிகளால் தொடங்கப்பட்ட குவைஸ் எனர்ஜி என்ற நிறுவனம், 500C (932F) அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையை அணுகுவதற்கு 12 மைல்கள் (20km) வரை ஆழமான பகுதிகளில் துளைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“மற்றவர்கள் தரையில் மண்வெட்டிகளை வைக்கும்போது, நாங்கள் முதல் முறையாக மைக்ரோவேவ்களைத் தரையில் வைக்கிறோம்,” என்று நிறுவனத்தின் இணை நிறுவனர் மாட் ஹவுட் கூறுகிறார்.
அவரும் அவரது நண்பர்களும் மில்லிமீட்டர் அலை ஆற்றல் கற்றைகளைப் பரிசோதித்து வருகின்றனர். அதன் மூலம் கடினமான பாறையும் கூட ஆவியாகின்றன.
இது நுண் அலைகளைப் போன்ற உயர் ஆற்றல் கொண்ட கதிர்வீச்சை மையப்படுத்துகிறது. பாறையின் ஒரு பகுதியின் மீது, அதை 3,000C (5,432F) வரை சூடாக்குகிறது. இதனால் அது உருகி ஆவியாகிறது.
கதிர்வீச்சை இயக்குவதன் மூலம் அது பாறை வழியாக துளையிடும். இதன் மூலம், பாரம்பரிய துளையிடும் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட தூசி மற்றும் உராய்வு இல்லாமல் துளைகளை உருவாக்க முடியும். இது பூமியின் ஆழமான, வெப்பமான பகுதிகளில் துளையிட அனுமதிக்கிறது.
“மில்லிமீட்டர்-அலை துளையிடுதல் என்பது ஆழத்தில் இருந்து சுயாதீனமாக செயல்படக்கூடிய ஒரு செயல்முறையாகும். மேலும் அழுக்கு, தூசி நிறைந்த சூழல்கள் மூலமாகவும் மில்லிமீட்டர்-அலை ஆற்றலை கடத்த முடியும்.” என்று ஹவுட் கூறுகிறார்.
மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ‘பிளாஸ்மா சயின்ஸ் அண்ட் ஃப்யூஷன் சென்டரின் பொறியியலாளர் பால் வோஸ்கோவ்’ நடத்திய அணுக்கரு இணைவு பிளாஸ்மா சோதனைகளிலிருந்து இத்தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
தொழில்நுட்பத்தில் உருவான மாற்றங்கள்
1970 களில் இருந்து அணுக்கரு இணைவு உலைகளில் பிளாஸ்மாவை சூடாக்குவதற்கான ஒரு வழியாக, மில்லிமீட்டர்-அலை ஆற்றல் ஆராயப்பட்டது.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வோஸ்கோவ் இத்தொழில்நுட்பத்திற்கான மற்றொரு பயனும் இருப்பதாக வெளிப்படுத்தினார்.
பாறை உருகுவதற்கு ‘கைரோட்ரான்'(கைரோட்ரான் என்பது வெற்றிட மின்னணு சாதனம் (VED) அதிக சக்தியும், உயர் அதிர்வெண் மின்காந்த அலைகளையும் உருவாக்குகிறது) எனப்படும் சாதனத்தால் உருவாக்கப்பட்ட மில்லிமீட்டர்-அலை கற்றைகளைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
ஆனால் இதுவரை இந்த தொழில்நுட்பத்தை ஆய்வகத்தில், சிறிய பாறை மாதிரிகளில் மட்டுமே சோதித்துள்ளனர்.
இருப்பினும், இந்த முறையைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3.5 மீ (11.5 அடி) வரை பாறை வழியாக துளையிட முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது .
மேலும் மைக்ரோவேவ் பீம், பாரம்பரிய முறையைப் போல தேய்ந்து போகாது அல்லது அதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதால் மற்ற நன்மைகள் உள்ளன.
குவைஸ் ஆற்றலானது, 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் களச் சோதனைகளைத் தொடங்குவதற்கு முன், மில்லிமீட்டர்-அலை தொழில்நுட்பம் ஆய்வக சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளது.
ஆனால் மில்லிமீட்டர்-அலை துளையிடும் தொழில்நுட்பத்தை ஆய்வகத்திலிருந்து, துளையிடும் செயல்பாட்டிற்கு எடுத்துச் செல்வது இன்னும் சவாலாக இருக்கும்.
“ஆழமான உயர் அழுத்த மேற்பரப்பு சூழலில் அவை இதற்கு முன் பயன்படுத்தப்படவில்லை” என்று வோஸ்கோ கூறுகிறார்.
“துளையிடுதலில் பயன்படுத்தப்படும் தீவிர ஆற்றல்- பொருள் இரண்டின் தொடர்பு காரணமாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ள ஒரு புதிய கற்றல் முறை தேவைப்படுகிறது.” என்கிறார் வோஸ்கோ.
இதற்கிடையில், ஸ்லோவாக்கியாவை தளமாகக் கொண்ட ‘ஜிஏ டிரில்லிங்’, பூமியின் மேலோட்டத்தில் துளையிடுவதற்கு உயர் ஆற்றல் துளையிடும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது.
இந்த முறை, பிசுபிசுப்பான உருகிய பாறை உருவாகுவதைத் தவிர்க்கிறது. உருகிய பாறைகளை அகற்றுவது கடினம்.
“பாறையை நொறுங்கும் அளவு அதிர்வுடன் இந்தச் செயல்முறை மிக விரைவாக நடப்பதால், பாறை உருகுவதற்கு நேரம் இல்லை” என்கிறார் ஜிஏ டிரில்லிங்கின் தலைமை நிர்வாகியும் தலைவருமான இகோர் கோசிஸ்.
“ஐந்து முதல் எட்டு கிலோமீட்டர்கள் (3-5 மைல்கள்) வரை செல்வது, நமது தற்போதைய மேம்பாட்டுத் திட்டத்திற்கான இலக்காகும். பின்னர் 10 கிமீக்கு அதிகமாக துளையிடுவது” என்று அவர் மேலும் கூறுகிறார்.
நகரங்களிலும் இந்த வேலை நடைபெறலாம்
புவிவெப்ப துளையிடுதலுக்கான மற்றொரு நம்பிக்கைக்குரிய அணுகுமுறை, Geothermal energy and Geofluids (GEG) குழுவின் தலைமையிலான ஐரோப்பிய கூட்டமைப்பால் ஆராயப்படுகிறது.
அவர்கள் பாறையை உடைக்க 6,000 டிகிரி செல்சியஸில் நம்பமுடியாத அளவிற்கு அயனியாக்கம் (ionised gas ) செய்யப்பட்ட வாயுவின் மூலம் சக்திவாய்ந்த வெடிப்புகளைப் உருவாக்க ஆராய்ச்சி செய்கிறார்கள்.
இந்த முறை, பாறை உருகுவதைத் தவிர்க்கிறது, மேலும் ஆழமாக துளையிடுவதை எளிதாக்குகிறது மற்றும் பூமியின் வெப்பத்தை மிகவும் திறமையாக அணுகுகிறது.
GA டிரில்லிங், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கான்ஸ்டான்டினா வோகியாட்சாகியுடன் இணைந்து, மேம்பட்ட கணிதத்தைப் பயன்படுத்தி சூப்பர் கிரிட்டிகல் திரவங்களைப் புரிந்துகொண்டு கட்டுப்படுத்துகிறது.
பிளாஸ்மா துளையிடல் மூலம் அணுகப்பட்ட பூமி மூலங்களிலிருந்து ஆற்றலைப் பிரித்தெடுக்க இந்த திரவங்களைப் பயன்படுத்தலாம்.
சில நிறுவனங்கள் புவிவெப்ப துளையிடல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த விண்வெளி ஆய்வுகளை எதிர்பார்க்கின்றன. 475C (887F) வெப்பநிலையை எட்டக்கூடிய வீனஸின் மேற்பரப்பில் கிரக ஆய்வுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம், புவிவெப்ப துளையிடும் நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
உதாரணமாக, Ozark Integrated Circuits என்ற நிறுவனம், மிக அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடிய மின்னணு பாகங்களை உருவாக்கி வருகிறது.
குறிப்பாக, இந்த மின்னணு பாகங்கள் புவிவெப்ப ஆற்றலுக்காக துளையிடும் கருவிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அதிக வெப்பநிலை கொண்ட இடங்களை அடையலாம்.
தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகம், அதன் சொந்த பங்கிற்கு, சிக்கலான நிலத்தடி சூழல்களை பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு பக்கம் திரும்பியுள்ளது.
இது, சூப்பர் கிரிட்டிகல் நீருக்கான சிறந்த இடங்களைக் கண்டறிய முயற்சிக்கிறது. அதே போல், அவற்றைக் கண்டறியும் முயற்சிகள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு முன்பு அவற்றின் தவறுகளைக் கணிக்கவும் , கண்டறியவும் உதவுகின்றன.
மேலும் சில நிறுவனங்கள் ஏற்கனவே பூமியில் ஆழமாக ஊடுருவி வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பவேரியாவில் உள்ள ஜெரெஸ்ட்ரீடில் உள்ள ஒரு தளத்தில் இரண்டு செங்குத்து கிணறுகளுடன் மூன்று மைல் (5 கிமீ) ஆழத்தை அடைந்ததாக புவிவெப்ப ஆற்றல் நிறுவனமான ஈவர், பிபிசியிடம் கூறிகிறது.
ஈவர் லூப் என அழைக்கப்படும் மூடிய லூப் வடிவமைப்பிற்குள் நீரை சுற்றுவதன் மூலம் புவிவெப்ப வெப்பத்தை மேற்பரப்பிற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த ஆலை பூமியின் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும்.
மேலும் இம்முறை மூலம், அவர்கள் குளிர்ந்த நீரைச் சுழற்ற திட்டமிட்டுள்ளனர். அதை ஆழமான நிலத்தடியில் சூடாக்குகிறார்கள்.
பின்னர் இந்த சூடான நீரை மீண்டும் மேற்பரப்புக்கு கொண்டு வந்து மின்சாரம் தயாரிக்கவும், அப்பகுதியில் உள்ள வீடுகளின் பயன்பாட்டிற்கு அனுப்பவும் முடியும்.
ஈவர், 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த அமைப்பிலிருந்து புவி வெப்ப ஆற்றலை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் ரெட்ஃர்ன் கூறுகிறார்
“எங்கள் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் 11 கிமீ (6.8 மைல்கள்) வரை துளையிட விரும்புகிறது” என்று புவியியலாளரும் ஈவர் இணை நிறுவனருமான ஜீனைன் வானி கூறுகிறார்.
“அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் அதி வெப்ப பாறைகளை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.
ஆழமான புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான உந்துதல், பழைய படிம எரிபொருள் மின் நிலையங்களுக்கு புதிய பரிமாணத்தை கொண்டு வரக்கூடும்.
ஏனெனில் நாடுகள் தங்களின் பாரம்பரிய கார்பன்-உமிழும் ஆற்றல் மூலங்களை கைவிட விரும்புகின்றன .
நியூயார்க்கின் அப்ஸ்டேட்டில் கைவிடப்பட்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை அடையாளம் கண்டுள்ளார், வோஸ்கோவ்.
அடுத்த பத்தாண்டுகள் முடிவதற்குள் நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் ஆழமான வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க, இந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மீண்டும் திறக்கப்படலாம் என்று அவர் நம்புகிறார்.
ஒரு காலத்தில் படிம எரிபொருட்களை நம்பியிருந்த நிலக்கரி மின் நிலையத்தை கற்பனை செய்து பாருங்கள், இப்போது அது சுத்தமான ஆற்றல் மையமாக மாற்றப்படும் என்பது புவிவெப்ப ஆற்றல் குறித்து எதிர்காலத்திற்கான பார்வை.
பூமியின் வெப்பத்தை நிலத்தடியின் ஆழத்தில் இருந்து எடுப்பதன் மூலம், சுத்தமான மின்சாரத்தை உருவாக்க முடியும்.
இருப்பினும், உயர் வெப்பநிலை ஆற்றல் மூலங்களை அணுகும் அளவுக்கு ஆழமாக துளையிடுவதில் சவால் உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு