நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு – முழு பின்னணி
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட திட்டத்தில், அவற்றைக் கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியின்போது பெண் வரையாடு ஒன்று உயிரிந்துள்ளது. ஏற்கெனவே காலர் ஐடி பொருத்தப்பட்ட ஒரு வரையாடு இறந்துபோனதால் இந்தத் திட்டத்தில் ரேடியோ காலர் பொருத்தும் முயற்சி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரையாடுகளைப் பொறுத்தவரை உலகளவில், இமயமலை வரையாடுகள் (Himalayan tahr), அரேபிய வரையாடுகள் (Arabian tahr), தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மேற்குத் மலைத் தொடரில் மட்டுமே வாழும் அரிய வகை நீலகிரி வரையாடுகள் (Nilgiri tahr) என மூன்று வகைகள் இருக்கின்றன.
மலைவாழ் குளம்பினங்களில், நீலகிரி வரையாடுகள் அரிய வகை உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. வரை என்றால் செங்குத்தான பாறை என்றும், அத்தகைய பாறைப் பகுதிகளில் வாழ்வதால் இவை நீலகிரி வரையாடு எனப் பெயர் பெற்றதாகவும் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் உலக காட்டுயிர் நிதிய இந்தியா பிரிவின் (WWF-INDIA) மூத்த ஆய்வாளரான எம்.ஏ.பிரடிட்.
இவர் உலக காட்டுயிர் நிதியத்தின் வரையாடு பாதுகாப்புத் திட்ட இணை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீலகிரி வரையாடு குறித்துப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இவர், அவற்றுக்கான பாதுகாப்பு ஆய்வுகளிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
சங்க இலக்கியத்தில் நீலகிரி வரையாடு
பொதுவாக 300 மீட்டர் முதல் 2600 மீட்டர் வரை செங்குத்தான பாறைகள் நிறைந்த மலை புல்வெளிகளே நீலகிரி வரையாடுகளின் வாழ்விடம் என்று விளக்கினார் பிரெடிட்.
”ஆண் வரையாடுகள் 100 செ.மீ உயரமும், 100 கிலோ வரையிலான எடையுடனும் இருக்கும்; பெண் வரையாடு 80 செ.மீ. உயரமும், 50 கிலோ எடையுடனும் இருக்கும். இவை ஆறு மாத கர்ப்பத்துக்குப் பின் ஒரே ஒரு குட்டியை ஈனக்கூடியவை. ஒரு பிரசவத்தில் இரண்டு குட்டிகளைப் பெறுவதே மிக அரிது” என்கிறார்.
”வரையாடுகளில் குட்டிகளின் இறப்பு விகிதம் அதிகம். இவை சராசரியாக மூன்றரை ஆண்டுகளும் அதிகபட்சமாக 9 ஆண்டுகள் வரையிலும் வாழக்கூடும். சிறுத்தை, செந்நாய், புலி ஆகிய வேட்டையாடிகளின் இரையாக இவை இருப்பதாகவும்” அவர் விவரித்தார்.
தமிழ்நாட்டின் மாநில விலங்காக வரையாடு தேர்வு செய்யப்படுவதற்கு, சங்க இலக்கியங்களில் இந்தக் காட்டுயிர் பற்றிக் குறிப்பிடப்பட்டு இருப்பதே முக்கியக் காரணம் என்று தெரிவித்தார் பிரெடிட்.
“ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டான சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பதினெண் மேற்கணக்கு நூல்களின் தொகுப்பில் உள்ள எட்டுத்தொகை நூல்களான நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து மற்றும் பத்துப்பாட்டு நூலான பட்டினப்பாலை, திரிகூடராசப்பக் கவிராயர் கி.பி. 1600-1700 காலகட்டங்களில் இயற்றிய குற்றால குறவஞ்சியில் குறத்தி மலைவளங்கூறல் பாட்டு” ஆகியவற்றில் வரையாடு குறித்த குறிப்புகள் இருப்பதாகவும் அவர் விவரித்தார்.
ஆறுகளைப் பாதுகாப்பதில் வரையாடுகளின் பங்கு
வரையாட்டைப் பாதுகாப்பதன் மூலம் மேற்கு மலைத்தொடரின் ஆறுகளைப் பாதுகாக்க முடியும் என அழுத்தமாகக் கூறுகிறார் பிரெடிட். ”தமிழகத்தில் 80 சதவீதம், வானம் பார்த்த பூமிதான். மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள சோலைக் காடுகளும், புல்வெளிகளும்தான் இங்குள்ள ஆறுகளின் தாய்மடி.
அவற்றில் உருவாகும் நீரோடைகள், சிற்றாறுகளாகி, பின்னர் ஆறுகளாக சமவெளிகளில் பாய்கின்றன. சோலைக் காடுகளைவிட, புல்வெளிகள்தான், மழைநீரை அதிகமாகத் தேக்கி வைத்து, 90 சதவீத தண்ணீரை நீரோடைகள் மூலமாக ஆறுகளுக்குக் கொடுக்கின்றன. எனவே புல்வெளியைப் பாதுகாப்பது மிக முக்கியம்” என்கிறார்.
அத்தகைய புல்வெளிகளைப் பாதுகாப்பத்தில் நீலகிரி வரையாடுகளின் பங்கு குறித்து விளக்கிய பிரெடிட், “புல்வெளிகளை மேய்ந்து, அவற்றின் மறுசுழற்சி சரியான முறையில் அமைவதற்கு வரையாடுகள் உதவுகின்றன. அவை இல்லாமல் போனால், மற்ற தாவரங்கள் புல்வெளிகளை ஆக்கிரமித்துவிடும். அதன் விளைவாக, புல்வெளிகளின் மழைநீரைத் தேக்கும் திறன் பாதிக்கப்படும்.
இது ஓடைகளை அழித்து, சிற்றாறுகளின் உற்பத்தியைக் குறைக்கும். இதன் தாக்கம் ஆறுகளின் மீது இருக்கும். ஆகையால், வரையாட்டைப் பாதுகாப்பதை, தமிழ்நாட்டின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகப் பார்க்க வேண்டும்” என்கிறார் பிரெடிட்.
நீலகிரி முக்கூர்த்தி தேசிய பூங்கா, கேரளாவின் மூணாறு இரவிக்குளம் தேசிய பூங்கா ஆகிய பகுதிகளில் வரையாடுகள் அதிகமாகக் காணப்படுவதாக பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார், உலக காட்டுயிர் நிதியத்துடைய மேற்குத் தொடர்ச்சி மலை – நீலகிரி நிலவமைப்பு ஆய்வுக் குழுவின் தலைவரான நிகிலேஷ் நாராயணன்.
”அதற்குக் காரணம் அங்கு வளமையுடன் உள்ள புல்வெளிகள்தான். நீலகிரி, திருநெல்வேலி, மாஞ்சோலை, கேரளா, மூணாறு உள்ளிட்ட பல்வேறு மலைகளில் உள்ள புல்வெளிகளை. ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டங்களாக மாற்றிவிட்டதாலும், மற்ற புல்வெளிகளில் அந்நிய தாவரங்கள் பெருகியதாலும், குறிப்பாக ஒற்றை மர வளர்ப்பால், இந்தப் பகுதிகளில் அதிகளவில் பல்லுயிரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக” குறிப்பிட்டார் நிகிலேஷ் நாராயணன்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, வரையாடுகள் அருகியதற்கு இதுவொரு முக்கியக் காரணம்.
‘கடந்த 2015ஆம் ஆண்டில், வரையாட்டின் முக்கிய வாழ்விடங்களான கேரளா, தமிழ்நாட்டில் வடக்கே உள்ள நீலகிரி மலை முதல் தெற்கே உள்ள குமரி மலை வரை உள்ள பெரும்பான்மையான இடங்களில் ஒரு முழுமையான ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வுப்படி, வரையாடுகளின் எண்ணிக்கை 3,122 என்று கணக்கிடப்பட்டது. அந்த ஆய்வில் 17 புதிய வரையாடு வாழ்விடங்களும் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், அவற்றின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்பதை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தப்படுவது ஏன்?
கடந்த ஏப்ரல் மாதம், தமிழ்நாடு, கேரளா வனத்துறை இணைந்து, நீலகிரி வரையாடு கணக்கெடுப்பைத் துவக்கினர். அதன் முடிவுகள் குறித்து தமிழக வனத்துறையின் தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ் டோக்ராவிடம் கேட்டபோது, ”அதுகுறித்த முடிவுகள் தொகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அதன் முடிவு வெளியிடப்படும். இப்போது தோராயமாகக் கூற முடியாது” என்றார்.
தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை உணர்ந்தே, நீலகிரி வரையாடுகள் பாதுகாப்புத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்திட்டத்துக்கு ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், வரையாடுகளின் வாழ்விடங்களைக் கண்காணிக்க அவற்றுக்கு ரேடியோ காலர் பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரேடியோ காலர் பொருத்துவதன் அவசியம் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய ஆய்வாளர் பிரடிட், ”அப்போதுதான் அவற்றின் வாழ்விடம் எங்கெல்லாம் உள்ளன, அவை எங்கெங்கு செல்கின்றன, அவை எங்கு அதிக நாட்கள் வாழ்கின்றன, எந்தப் பகுதியில் அவற்றின் பாதை தடைபடுகிறது என்பதை அறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். அதற்குத்தான் வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது,” என்றார்.
இவ்வாறு ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியின்போதுதான் ஒரு வரையாடு உயிரிழந்துள்ளது. நீலகிரியிலுள்ள முக்கூர்த்தி வனச்சரகப் பகுதியில் நீலகிரி வரையாடு பாதுகாப்புத் திட்ட இயக்குநர் கணேசன் தலைமையிலான குழு, கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று காலை 10.45 மணியளவில் ஆண் நீலகிரி வரையாடு ஒன்றுக்கு, வன கால்நடை மருத்துவர்கள் குழுவைக் கொண்டு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் கருவி அதன் கழுத்துப்பட்டையில் பொருத்தப்பட்டு மீண்டும் காட்டில் விடப்பட்டது.
அதன்பிறகு, மதியம் 12.00 மணியளவில் பெண் நீலகிரி வரையாடு ஒன்றுக்கு மயக்க மருந்து செலுத்தி ரேடியோ காலர் கருவி பொருத்துவதற்கு முன் அதன் மயக்கநிலையைத் தெளிய வைக்கும்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது. அன்று மாலை 4:30 மணியளவில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி வன உயிரியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ஸ்ரீகுமார், வன கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன் மற்றும் ராஜேஷ் குமார் குழுவினர் அங்கு சென்று பிரேத பரிசோதனை நடத்தினர்.
பிரேத பரிசோதனையின் முதற்கட்ட ஆய்வில் “இறந்த நீலகிரி வரையாட்டின் இருதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உள்ளுறுப்புகள் பலவீனம் அடைந்திருந்ததால் இறப்பு நேர்ந்தது” என்று வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தது கர்ப்பிணி வரையாடா?
இறந்த வரையாடு கர்ப்பிணியாக இருந்ததும் அதன் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. காட்டுயிர் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனர் சாதிக் பிபிசி தமிழிடம் பேசியபோது, ”மான் இனத்தைச் சேர்ந்த வரையாடு, அதீத உணர்ச்சி மிக்க உயிரினம். அதற்கு அருகில் மனிதர்கள் செல்வதே தவறு. அதை மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பது தேவையற்றது.”
“கர்ப்பிணியாக இருந்ததையும் அறியாமல் அதற்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். வரையாட்டைக் காப்பதற்கு காட்டைக் காத்தால் போதும். அதைச் செய்வதற்குத் தேவையான ஊழியர்களை நியமித்தாலே போதுமானது” என்றார்.
முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் கிருபா சங்கரிடம் பிபிசி தமிழ் இதுகுறித்துக் கேட்டபோது, ”பெண் வரையாட்டின் வயிற்றில் 3 மாதக் குட்டி இருந்தது. ஆனால் இறப்புக்கு அது காரணமில்லை. அதன் உள்ளுறுப்புகளில் இருந்த சில பாதிப்புகளே காரணம். மூன்று மாதமே ஆகியிருந்ததால் வெளியிலிருந்து பார்ப்பதற்குத் தெரியவில்லை,” என்று விளக்கமளித்தார்.
இதற்கு முன்பே ரேடியோ காலர் பொருத்தப்பட்ட வரையாடு ஒன்று சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளது. இதனால் இத்திட்டம் தோல்வி அடையுமா என்ற கேள்வி, காட்டுயிர் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து நீலகிரி வரையாடு பாதுகாப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர் கணேசனிடம் கேட்டபோது, ”மொத்தம் 12 வரையாடுகளுக்கு இவற்றைப் பொருத்த திட்டமிடப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இந்தப் பணி துவங்கியது. முதலில் நல்ல திடகாத்திரமான ஆண் வரையாடுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. ஆனால் மூன்றரை மாதங்களில் அந்த வரையாட்டை புலி வேட்டையாடிவிட்டது.
அதன்பிறகு, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஒரு வரையாடுக்கு பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. டிசம்பர் 6ஆம் தேதியன்று காலையில் ஆண் வரையாட்டிற்குப் பொருத்தியதில் பிரச்னையில்லை. ஆனால் பெண் வரையாடிற்குப் பொருத்த மயக்க ஊசி செலுத்தியபோது அது உயிரிழந்துவிட்டது” என்றார்.
மயக்க ஊசி செலுத்தும்போது விலங்குகள் இறப்பது ஏன்?
இதைப் பற்றி மேலும் விளக்கிய அவர், ”வரையாடு ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிந்ததால்தான் அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பாதியளவு டோஸ், அதுவும் தரமான மயக்க மருந்தே செலுத்தப்பட்டது. ஆனால் உடலுக்குள் இருந்த பாதிப்பை நம்மால் அறிய முடியாது என்பதால், காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.
பிரேத பரிசோதனை கூறுகள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அது வந்தால்தான் உண்மைக் காரணம் தெரியும்” என்றார்.
வரையாடு ஆய்வாளர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூறும் தகவல்களின்படி, ஒரு வரையாடுக்கு பொருத்தப்படும் ரேடியோ காலர் 6 லட்சம் ரூபாய் மதிப்புடையது. உயிரினத்தின் எடையில் 5 சதவீதம் வரை பொருத்தப்படும் காலரின் எடை இருக்கலாம் என்று கூறினார் திட்ட இயக்குநர் கணேசன்.
”இந்த ரேடியோ காலரின் மொத்த எடையே 700–750 கிராம் மட்டுமே. அதாவது விலங்கின் எடையில் அது வெறும் இரண்டரை சதவீதம்தான். அதன் கழுத்தில் அணிவிக்கப்பட்ட பெல்ட்டும் மிகவும் மென்மையாகத்தான் உள்ளது” என்றார்.
வரையாடு இறந்ததற்கு அதற்குச் செலுத்திய மயக்க ஊசி மருந்து காரணமா என்ற விவாதம் எழுந்துள்ளது. இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய காட்டுயிர் மருத்துவர் கலைவாணன், ”நான் இதுவரை புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட 300 காட்டுயிர்களுக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளேன். அவற்றில் 3 அல்லது 4 விலங்குகள்தான் இறந்துள்ளன. இது மொத்தத்தில் ஒரு சதவீதம்தான். ஆனால் மயக்க மருந்தை உயிர்க்கொல்லி மருந்தைச் செலுத்துவது போலப் பலரும் கருத்து தெரிவிப்பது தவறானது” என்றார்.
”பொதுவாக மனிதர்களுக்கு ஒரு ஆபரேஷன் செய்யும் முன்பாக, நிறைய அளவுகோல்களைப் பரிசோதித்தே மயக்க மருந்து செலுத்தப்படுகிறது. நோயாளியின் உறவினரிடம் கையெழுத்து பெறப்படுகிறது. சகல வசதிகள் கொண்ட மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடக்கும்போது, மயக்கவியல் நிபுணர், தொழில்நுட்ப உதவியாளர் எனப் பலரும் அருகில் இருக்கும்போதே சிலருக்கு உயிரிழப்பு நடக்கிறது. அது உடலுக்குள் நடக்கும் மாற்றத்தின் விளைவு. இது காட்டுயிர்களுக்கும் பொருந்தும்” என்றார்.
ரேடியோ காலர் பொருத்தும்போது, வரையாடு உயிரிழந்ததால் இந்த கண்காணிப்புத் திட்டம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய திட்ட இயக்குநர் கணேசன், ”இந்த இறப்பின் காரணமாக, இப்போதைக்கு இந்த நடைமுறையை நிறுத்தி வைத்துள்ளோம், தலைமை காட்டுயிர் காப்பாளரிடம் இருந்து வரும் அறிவுறுத்தலின்படி, அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளருமான ராகேஷ் டோக்ராவிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் கேட்டபோது, ”இந்தியாவிலேயே இதுதான் முன்மாதிரியான திட்டம். இதற்கு முன் வேறு எங்கும் இது நடந்ததில்லை. தமிழகத்தில் 13 இடங்களில் வரையாடு வாழ்விடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இந்த நடைமுறையைத் தொடர்வது குறித்து அறிவியல்பூர்வமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்பின் முடிவெடுக்கப்படும். திட்டத்தின் மற்ற பணிகள் தொடரும்” என்றார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு