ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – மாநிலங்களவை தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறை என்ன?
- எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
- பதவி, பிபிசி
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளன.
மாநிலங்களவையை பாரபட்சமான முறையில் நடத்துவதாக, ஜெகதீப் தன்கர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
“மாநிலங்களவை தலைவர் அவையை மிகவும் பாரபட்சமான முறையில் நடத்துவதால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதைத் தவிர, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு வேறு வாய்ப்பில்லை” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இது, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு மிகவும் வலிமிகுந்த முடிவாக உள்ளது. ஆனால், நாடாளுமன்ற ஜனநாயக நலன்களை காப்பதற்கு, முன்னெப்போதும் எடுக்காத இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது. இதற்கான முன்மொழிவு, மாநிலங்களவை பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடந்தது?
ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், “கடந்த திங்கட்கிழமை மாநிலங்களவை தலைவர் முன்னிலையிலேயே, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘நீங்கள் அதானி விவகாரத்தை மக்களவையில் தொடர்ந்து எழுப்பினால், மாநிலங்களவையை நடத்த விட மாட்டோம்,’ என கூறினார்” என தெரிவித்தார்.
நடப்பு கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான விவாதங்களால் நாடாளுமன்றம் முடங்கியது.
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பாக, கௌதம் அதானி மீது அமெரிக்காவில் மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அப்போதிலிருந்து, மத்திய அரசை காங்கிரஸ் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறது. இவ்விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
மாநிலங்களவை நிறுவப்பட்டு 72 ஆண்டுகள் கடந்த நிலையில், அவையின் தலைவருக்கு எதிராக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், நிலைமை எந்தளவுக்கு மோசமாகியுள்ளது என்பதை இது காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறும் போது, காங்கிரஸ் ஏன் இந்த நாடகத்தை தொடங்கியது? வாசகங்கள் எழுதப்பட்ட முகக்கவசம் மற்றும் மேலாடையுடன் ஏன் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், “நாட்டுக்கு சேவை செய்யவே நாங்கள் வந்துள்ளோம், இந்த நாடகத்தைப் பார்க்க அல்ல. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளால் வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ் நிச்சயமாக நிராகரிக்கப்படும்” என தெரிவித்தார்.
மாநிலங்களவை தலைவராகவும் குடியரசு துணைத் தலைவராகவும் உள்ளவரை நீக்குவதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் என்ன நடைமுறை உள்ளது என்பது குறித்து அறிய அரசியலமைப்பு நிபுணர்களிடம் பிபிசி பேசியது.
இதற்கான நடைமுறை எப்படித் தொடங்கும்?
மக்களவை முன்னாள் செயலாளரும் அரசியலமைப்பு நிபுணருமான பிடிடி ஆச்சார்யா கூறுகையில், குடியரசு துணைத் தலைவரை நீக்கும் நடைமுறையை தொடங்குவதற்கு, 14 நாட்கள் முன்பாகவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ் வழங்குவது அவசியம் என தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவரை நீக்குவதற்கான நடைமுறையை மாநிலங்களவையில்தான் தொடங்க வேண்டும். ஏனெனில், அவர் மாநிலங்களவை தலைவராகவும் உள்ளார்.
“இதற்கென தனிப்பட்ட விதிமுறை உருவாக்கப்படவில்லை. இதே நடைமுறை, மக்களவை சபாநாயகரை நீக்குவதற்கும் பொருந்தும்” என்கிறார் பிடிடி ஆச்சார்யா.
“நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு மாநிலங்களவை தலைவருக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும். நோட்டீஸ் வழங்கப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகே, மாநிலங்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர முடியும். மாநிலங்களவையில் அப்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில், பெரும்பான்மையுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் அதேபோன்று, மக்களவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றார் அவர்.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிறைவேறுமா?
குடியரசு துணைத் தலைவரை மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நடைமுறையை தொடங்கியது இதுவே முதன்முறை.
அரசியலமைப்பு மற்றும் சட்ட நிபுணர் ஃபைஸன் முஸ்தஃபா, இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்பதால், இந்த முயற்சியிலிருந்து எதிர்க்கட்சிகள் எந்த ஆதாயத்தையும் பெறாது என்று தெரிவித்தார்.
“விவாதங்கள் நடக்க மாநிலங்களவை தலைவர் அனுமதிக்க வேண்டும். மற்ற கட்சிகளும் அதில் பங்கெடுக்க வைக்க வேண்டும். குடியரசு துணைத் தலைவருக்கு எதிராக இத்தகைய முன்மொழிவை கொண்டு வருவது சரியல்ல. மாநிலங்களவை தலைவரை நீக்குவதற்கு 14 நாட்கள் முன்னதாக நோட்டீஸ் வழங்குவது அவசியம். ஆனால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் டிச 20 அன்று முடிவடைய உள்ளது” என தெரிவித்தார்.
“அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்தாலே, குடியரசுத் தலைவருக்கான பதவி நீக்க நடவடிக்கையை தொடங்க முடியும். ஆனால், குடியரசு துணைத் தலைவருக்கு அப்படி எதுவும் இல்லை. அவையின் நம்பிக்கையை இழந்தால் மட்டுமே அவரை பதவி நீக்கம் செய்ய முடியும்” என அவர் தெரிவித்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு