முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயற்பாடு விந்தையானது- அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு ! on Wednesday, December 11, 2024
சுமார் 300க்கும் மேற்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியது மட்டுமன்றி, அனுமதிப்பத்திரங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானத்துக்கு மக்கள் வழங்கும் வரியை திரட்டுவதற்கும் முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விந்தையானதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
உதாரணமாக அலோசியஸுக்கு சொந்தமான மூன்று நிறுவனங்களில் அந்த நிறுவனங்களிடமிருந்து 2018 ஆம் ஆண்டு முதல் வரி அறவிடப்படவில்லை.
மதுபான அனுமதிப் பத்திரத்தை வழங்கும் போது நிலுவையிலிருந்த வரியை அறவிடுவதற்கேனும் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருக்கலாமென்றும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். மதுபான விற்பனை நிறுவனங்களிடமிருந்து 07பில்லியன் ரூபாவை வரியாக அறவிட வேண்டியுள்ளதால், அதனை அறவிடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நிலுவை வரிக்குப் பதிலாக அவர்களது சொத்துக்களை சுவீகரிப்பதற்கு சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால், அரசாங்கம் அதனை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கலால் வரி சட்டத்துக்கு முரணாக மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்கவில்லையென அவரது அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருடாந்தம் 250 இலிருந்து 300 வரை மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்கி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அரசாங்கத்தின் ஏனைய திட்டங்களை பலப்படுத்த எதிர்பார்த்ததாக தெரிவித்திருந்தார்.
நாட்டு மக்களின் வரிப் பணத்தின் மூலம் தமது ஓய்வு காலத்தை கழிக்கும் நபர் ஒருவர், இவ்வாறான வினோதமான கருத்தை தெரிவிப்பது சற்றும் பொருத்தமாக இல்லையென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நான், அவருக்கு தெரிவிக்க விரும்புவது நாட்டில் பார்களை உருவாக்கும் நேரத்தில் தென்னை மரங்களை நட்டிருந்தால் அல்லது நெல் களஞ்சிய சாலைகளை உருவாக்கியிருந்தால் இப்போது அவற்றுக்கு தட்டுப்பாடு இருந்திருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.