அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள், அதானி க்ரீன் எனெர்ஜி,

பட மூலாதாரம், Reuters

  • எழுதியவர், நிகில் இனாம்தார், அர்ச்சனா சுக்லா
  • பதவி, பிபிசி செய்திகள், மும்பை

அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக வைக்கப்பட்டுள்ள லஞ்ச குற்றச்சாட்டுகள் இந்தியாவின் புதுப்பித்தக்க ஆற்றல் இலக்குகளைப் பாதிக்கும் என்று பிபிசியிடம் கூறுகின்றனர் துறைசார் வல்லுநர்கள்.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய முன்னெடுப்புகளில் இந்தியாவும் தன்னுடைய பங்களிப்பை வழங்கி வருகிறது. 2032ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிசக்தி தேவையின் பாதி அளவை அல்லது 500 ஜிகாவாட்ஸ் மின்சாரத்தைப் புதுப்பித்தக்க ஆற்றல் மூலம் பெற இந்தியா முடிவெடுத்துள்ளது.

அதானி குழுமம் அதில் பத்தில் ஒரு பங்கு ஆற்றலை உருவாக்க ஆர்வம் காட்டி வருகிறது.

அதானி குழுமத்தின் மீதான சட்டரீதியான பிரச்னைகள் அந்தக் குழுமத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு இடைக்கால தடையாக இருக்கலாம் என்று கூறும் துறைசார் வல்லுநர்கள், இது அரசின் ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறுகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த பத்து ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் உள்கட்டுமான வசதிகளை உருவாக்குவதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA), இந்தியா அதனுடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அதிகரித்து வருகிறது. இதன் மூலம், பெரிய பொருளாதார நாடுகள் மத்தியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவில் இதுவரை நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் திறன் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது, நாட்டின் மின் உற்பத்தித் திறனில் சுமார் 45% – கிட்டத்தட்ட 200 ஜிகாவாட் – தூய எரிபொருள் மூலங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.

அதானி குழுமத்தின் போட்டி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் இயக்குநர் இதுகுறித்து பிபிசியிடம் பேசினார். பெயர் கூற விரும்பாத அவர், “அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவின் புதுப்பிக்கத்த ஆற்றல் இலக்குகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் இது சிறிய சறுக்கலே அன்றி, இது அர்த்தமுள்ள தாக்கங்களை ஏற்படுத்தாது,” என்றார்.

இந்தியாவின் பசுமை இலக்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்?

பட மூலாதாரம், Getty Images

அதானி குழுமத்தின் இலக்கு

கௌதம் அதானி இந்தியாவின் எரிசக்தி ஆற்றல் மாற்றத்திற்கான முயற்சியில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை (10 ஆயிரம் கோடி டாலர்களை) முதலீடு செய்ய உறுதிபூண்டுள்ளார்.

அதானி குழுமத்தின் பசுமை ஆற்றல் பிரிவு, நாட்டின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கும் நிறுவனமாகும். காற்று மற்றும் சூரிய ஒளி போன்ற பல்வேறு மூலங்கள் வாயிலாக ஆண்டுக்கு 11 ஜிகாவாட்ஸ் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்குகிறது.

கடந்த 2030ஆம் ஆண்டுக்குள் இந்த அளவை 50 ஜிகாவாட்ஸாக அதிகரிக்க அதானி குழுமம் முடிவெடுத்துள்ளது. இது இந்தியாவில் நிறுவப்பட்டிருக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உருவாக்க நிலையங்களின் மொத்த திறன்களில் 10 சதவிகிதமாக இருக்கும்.

இந்த 50 ஜிகாவாட்ஸில், 30 ஜிகாவாட்ஸ் கவ்தாவில் உருவாக்கப்படும். இது இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. உலகிலேயே புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மிகப்பெரிய அளவில் உருவாக்கும் ஆலை அமைந்துள்ளது. இது பாரிஸ் நகரைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் மதிப்புமிக்க திட்டமாகக் கருதப்படுகிறது.

ஆனால், தற்போது அமெரிக்காவில் அதானி குழுமத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் கவ்தா மற்றும் அதானியின் இதர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மையங்களும் இடம் பெற்றுள்ளன.

அமெரிக்கா, இந்த ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை மாநில மின்வாரியங்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆனாலும், நிறுவனத்தில் அதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது.

தாக்கத்தை ஏற்படுத்துமா அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள்?

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள், அதானி க்ரீன் எனெர்ஜி,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாட்டின் மின் உற்பத்தித் திறனில் சுமார் 45% தூய எரிபொருள் மூலங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.

இந்த விவகாரம் பொதுவெளியில் வந்த பிறகு, அமெரிக்காவில் ஏற்படுத்த இருந்த, அதானி க்ரீன் எனெர்ஜி நிறுவனம் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பத்திர ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்தது அதானி குழுமம்.

அதானி க்ரீன் எனெர்ஜி நிறுவனத்தின் 20% பங்குகளைக் கொண்டிருக்கிறது ஃப்ரான்ஸின் டோட்டல் எனெர்ஜிஸ் நிறுவனம். அதானி குழுமத்துடன் இணைந்து பல்வேறு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அதானி குழுமத்தில் புதிதாக முதலீடு செய்வதை நிறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.

அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, சர்வதேச அளவில் அதானியின் க்ரீன் எனெர்ஜி நிறுவனத்திற்குக் கடன் வழங்கிய நிறுவனங்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதானி நிறுவனம் வாங்கியுள்ள கடனை எப்படி திருப்பிச் செலுத்தும் என்ற கவலைகள் தற்போது எழுந்துள்ளதாக பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜெஃபெரீஸ், பார்க்லேஸ் போன்ற சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்கள் அதானி குழுமத்துடனான அதன் உறவுகளை பரிசீலனை செய்து வருகிறது. ப்ரென்ஸ்டெய்ன் என்ற நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அதானி குழுமம் தங்களின் நீண்ட கால கடனுக்கு சர்வதேச வங்கிகள், சர்வதேச மற்றும் உள்ளூர் பத்திரங்களை அதிகமாக நம்பியுள்ளதாகவும், 2016 நிதியாண்டில் 14% ஆக இருந்த அதன் மதிப்பு, தற்போது 60% ஆக அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜப்பானின் தரகு நிறுவனமான நோமுரா, “குறுகிய கால கடன் பெறும் வசதிகள் மோசமாகக்கூடும். ஆனால் நீண்ட கால கடன் பெறும் வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மீளும்,” என்று கூறுகிறது.

அதே நேரத்தில் ஜப்பானிய வங்கிகளான எம்.யூ.எஃப்.ஜி, எஸ்.எம்.பி.சி., மிசுஹோ போன்ற வங்கிகள் அதானி குழுமத்துடனான தங்களின் உறவைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“திடமான, மூலோபாய சொத்துகளையும், நீண்ட கால மதிப்புகளையும் அதானி உருவாக்கி வருவதால் நிறுவனத்தின் மதிப்பு மற்றும் புகழுக்கு ஏற்பட்ட இழுக்கு சில மாதங்களில் மறைந்துவிடும்,” என்று பெயர் கூற விரும்பாத தலைமை செயல் இயக்குநர் ஒருவர் கூறியுள்ளார்.

அதானியின் போட்டியாளர்களுக்கு சாதகமாக அமையும் சூழல்

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள், அதானி க்ரீன் எனெர்ஜி,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜப்பானிய வங்கிகளான எம்.யூ.எஃப்.ஜி, எஸ்.எம்.பி.சி., மிசுஹோ போன்ற வங்கிகள் அதானி குழுமத்துடனான தங்களின் உறவைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வரவுள்ள 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருப்பதாகவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அந்த ஆண்டில் 50 ஜிகாவாட்ஸாக உயர்த்தும் நம்பிக்கை இருப்பதாகவும் பிபிசியிடம் பேசிய அதானி குழுமத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அதானியின் பங்குகளில் ஏற்பட்ட சரிவுகளில் இருந்து தற்போது அந்த நிறுவனம் மீண்டுவிட்டது.

அதானி குழுமத்திற்கு நிதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் அதன் போட்டியாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் மாறிவிடும் என்று சில பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதானியின் நிதி தொடர்பான செல்வாக்கு, இந்தத் துறையில் அதானி நிறுவனம் விரிவாக்கம் செய்ய வழிவகை செய்தது. அதே நேரத்தில் அதன் போட்டியாளர்களான டாட்டா பவர், கோல்ட்மென் சாக்ஸ் ஆதரவு நிறுவனமான ரிநியூ பவர், க்ரீன்கோ மற்றும் அரசு நிறுவனமான என்.டி.பி.சி. போன்ற நிறுவனங்களும் தங்களின் மின் உற்பத்தித் திறனை அதிகரித்து வருகிறது.

“அதானி குழுமம் ஒன்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்குவதில் சாம்பியன் இல்லை. அது, ஒரு தெருவின் இரண்டு பக்கங்களிலும் நடக்கும் ஒரு பெரிய நிறுவனத்தைப் போன்றது. அதாவது, உலகிலேயே மிகப்பெரிய நிலக்கரி ஆலையை உருவாக்கும் தனியார் நிறுவனமும் அதானியுடையதுதான்,” என்று கூறுகிறார் க்ளைமேட் எனெர்ஜி ஃபைனான்ஸின் இயக்குநர் டிம் பக்லே.

ஊழலில் ஈடுபடும் மிகப்பெரிய நிறுவனமாகக் கருதப்படுவதால், அதன் விரிவாக்கத்தின் வேகம் குறையும். அதனால் மற்ற நிறுவனங்களில் அதிக நிதி புழங்கும் என்றும் டிம் கூறினார்.

இன்ஸ்டிட்யூட் ஃபார் எனெர்ஜி எக்கானாமிக்ஸ் அண்ட் ஃபினான்சியல் அனலைசிஸ் (IEEFA) நிறுவனத்தின் தெற்காசிய இயக்குநர் விபூதி கார்க், இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் தேவை அதிகரித்து வருவதால் சந்தைகளின் அடிப்படையும் வலிமையுடன் இருக்கும். அது பெரிய முதலீட்டிற்கான பசியைத் தூண்டிய வண்ணமே இருக்கும்.

உண்மையில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உருவாக்கப்படும் எரிசக்தி இலக்குகளின் வேகத்தைக் குறைப்பது அதன் சொந்த அதிகாரப் படிநிலைதான்.

“நாங்கள் பின்தொடரும் நிறுவனங்கள் உற்சாகத்துடனேயே இருக்கின்றன. நிதி அவர்களுக்குப் பிரச்னை இல்லை. அப்படி ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது அரசுத் தரப்பில் இருந்து அறிமுகம் செய்யப்படும் விதிமுறைகள்தான்,” என்கிறார் கார்க்.

விதிகளில் இருக்கும் சிக்கல்கள் என்ன?

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள், அதானி க்ரீன் எனெர்ஜி,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஊழலில் ஈடுபடும் மிகப்பெரிய நிறுவனமாகக் கருதப்படுவதால், அதானி நிறுவனத்தின் விரிவாக்க வேகம் குறையும்.

அரசு நடத்தும் மின் விநியோக நிறுவனங்கள் தொடர்ச்சியாக நிதி பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. மலிவு விலை புதைபடிம எரிபொருள்களை வாங்குகின்றன. மேலும் எரிபொருள் வாங்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடத் தயங்குகின்றன.

ராய்ட்டர்ஸ் செய்திப்படி, உத்தரவாதம் அளிக்கும் வகையிலான விநியோகஸ்தர்களின் ஒப்பந்தமின்றி, அரசு நிறுவனமான சோலார் எனெர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) அதானியுடன் ஏற்படுத்திக் கொண்ட முதல் பெரிய ஒப்பந்தம்தான் தற்போது சர்ச்சைக்குள்ளான ஒப்பந்தம்.

அந்த நிறுவனத்தின் தலைவர் ராய்ட்டர்ஸிடம் பேசும்போது, 30 ஜிகாவாட்ஸ் மின்சாரத்தை உருவாக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள், சந்தையில் வாங்க யாருமின்றி இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

அதானி மீதான அமெரிக்க குற்றச்சாட்டின் மையத்தில் உள்ள 8 ஜிகாவாட் சோலார் ஒப்பந்தம் குழப்பமான டெண்டரிங் செயல் முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சோலார் பேனல்களையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் ஏலதாரர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி அதிக மின் உற்பத்தி செலவுக்கு வழிவகுக்கும்.

மேலும், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகள் ஒப்பந்தம் மற்றும் ஏல விதிகளைக் கடுமையாக்கும் என்கிறார் கார்க்.

தெளிவான டெண்டர் செயல்பாடுகள் உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டர்களுக்கு ஆபத்துகளைக் குறைக்கும் என்றும் இது இரு தரப்பினரும் முன்னேறிச் செல்வதற்கு முக்கியமானது என்றும் பக்லே கூறுகிறார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு