on Tuesday, December 10, 2024
கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 08 சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம மேல் நீதிமன்ற நீதவான் மொஹமட் இர்ஷாதீன் இன்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார்.
எட்டு சந்தேக நபர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் இரு சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள எட்டு சந்தேக நபர்களுக்கும் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.