பஷர் அல் அசத்தின் திடீர் வீழ்ச்சி – சிரியா மக்களின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?

சிரியா, பஷர் அல் அசத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிரியா மக்கள் அசத்தின் வீழ்ச்சியைக் கொண்டாடினாலும் நாட்டின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கிறது
  • எழுதியவர், ஜெரேமி போவன்
  • பதவி, சர்வதேச ஆசிரியர்

பதினைந்து நாட்களுக்குள் சரிந்த பஷர் அல் அசத்தின் ஆட்சி மிகவும் வெறுமையானதாகவும் ஊழல் நிறைந்தததாகவும் மோசமானதாகவும் இருந்தது.

நான் பேசிய அனைவருமே ஆட்சி எவ்வளவு சீக்கிரம் வீழ்ந்தது குறித்து வியப்படைகிறார்கள்.

2011-ஆம் ஆண்டு ‘அரபு வசந்தம்’ எழுச்சி கண்டது, அப்போது நிலை வேறு. துனிசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் அதிபர்களை பதவியில் இருந்து அகற்றிய இந்த புரட்சியில் தாங்களும் ஈடுபட சிரியா மக்கள் முயன்றனர்.

2000-ஆம் ஆண்டு தனது தந்தை ஹபீஸ் அல் அசத் இறந்தபிறகு, பஷர் அதிபரானார். 2011-ஆம் ஆண்டு அளவில் பஷரின் ஆட்சி முற்றிலும் ஊழல் நிறைந்த, சீரற்றதாக மாறியது.

ஹபீஸ் அல் அசத் கட்டியெழுப்பிய அமைப்பு மிருகத்தனமான, இரக்கமற்ற தன்மையை கொண்டிருந்தது. அவை சிரியாவை கட்டுப்படுத்த தேவை என்று அவர் கருதினார்.

ஆட்சிக்கவிழ்ப்புகள் நடப்பதற்கு அதிக சாத்தியமுள்ள சிரியாவில் ஹபீஸ் அல் அசத் ஆட்சிக்கு வந்தார். மேலும் அவர் மிகப்பெரிய சவால்கள் ஏதுமின்றி தன் மாகனிடமும் அதிபர் பதவியை ஒப்படைத்தார்.

பஷர் 2011 ஆம் ஆண்டில் தனது தந்தையின் உத்திகளை கையில் எடுத்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இப்போது கற்பனை செய்து பார்க்க முடியாது, ஆனால் ஆரம்பத்தில் மற்ற சர்வாதிகார தலைவர்களை விட சிரியாவின் ஒரு சில மக்கள் மத்தியில் அசத் செல்வாக்கு மிக்கவராக இருந்தார்.

பஷர் அல் அசத் பாலத்தீன ஆதரவாளர். 2006 லெபனான் போரின்போது இஸ்ரேலுக்கு எதிரா வெற்றிகரமாக சண்டையிட்ட ஹெஸ்பொலாவுக்கு ஆதரவாக இருந்தார். அவர் முன்னாள் மற்றும் பொறுப்பேற்க இருந்த அரபு தலைவர்களைவிட இளையவர்.

தனது தந்தை இறந்ததில் இருந்து, சிரியாவில் சீர்திருத்தங்களை கொண்டு வருவேன் என பஷர் வாக்குறுதி அளித்து வந்தார்.

2011 ஆம் ஆண்டு அரபு உலகிலும் குழப்பம் ஏற்பட்டபோதும், சில சிரியர்கள் இன்னும் அவரை நம்ப விரும்பினர். தெருக்களில் ஆர்பாட்டங்கள் நடத்தினால் பஷர் சொன்னது போல சீர்திருத்தங்கள் நடைபெறும் என்று மக்கள் நினைத்தார்கள்.

ஆனால், அமைதியான போராட்டக்காரர்களை சுடுவதற்கு பஷர் அல் அசத் உத்தரவு பிறப்பிக்கும் வரை மட்டுமே அவர்களின் நம்பிக்கை நீடித்தது.

அசத் ஆட்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் ‘தி காட்பாதர்’ போன்ற மாஃபியா படங்களைப் பார்க்க வேண்டியது இருக்கும் என்றும் அதில் உத்தரவுகளுக்கு அடிபணிபவர்களுக்கே வெகுமதி அளிக்கப்படும் என்றும் சிரியாவிற்கான பிரிட்டன் தூதர் ஒருமுறை என்னிடம் கூறினார்.

குடும்பத் தலைவர் அல்லது அவரது நெருங்கிய லெப்டினன்ட்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கொல்லப்படுவர். சிரியாவைப் பொறுத்தவரை அது தூக்கு மேடை, துப்பாக்கிச் சூடு, சில நிலத்தடி சிறையில் காலவரையற்ற சிறைவாசம் என்று எப்படி வேண்டுமானாலும் நிகழலாம்.

இதுபோன்ற நிலத்தடி சிறையில் இருந்து ஆயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மெலிந்து, தோல் வெளுத்துபோய், வெளிச்சத்தை கண்டு கண் சிமிட்டும் நிலையில் இருக்கின்றனர். அவர்கள் பல ஆண்டு சிறை வாசத்திற்கு பிறகு சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறார்கள்.

சிரியா, பஷர் அல் அசத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது தந்தை இறந்ததில் இருந்து, சிரியாவில் சீர்திருத்தங்களை கொண்டு வருவேன் என பஷர் வாக்குறுதி அளித்து வந்தார்.

இரான் தொடர்பை உடைக்க முயற்சி

பஷர் அல் அசத் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை, அவரது ஆட்சியின் பலவீனம் அச்சம் மற்றும் வதை முகாம்களுக்கு பின்னால் மறைந்திருந்தது.

பஷர் அல் அசத் ஒரு பலவீனமானவர், அவர் ரஷ்யா மற்றும் இரானைச் சார்ந்து இருக்கிறார் என்று உலக அளவில் ஒருமித்த கருத்து இருந்தது.

மேலும் அவர் தனது குடும்பத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக, பல பிரிவுகளாக உடைத்த ஒரு நாட்டிற்குத் தலைமை தாங்குகிறார் என்றும் கருத்தப்பட்டது.

ஆனால் அவர் மத்திய கிழக்கை பொறுத்தவரை ஒரு வலிமையான பயனுள்ள தலைவராக கருதப்பட்டார்.

இட்லிப்பில் இருந்து கிளர்ச்சியாளர்கள் கிளம்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் சிரியாவை இரானிடம் இருந்து பிரிக்க முயற்சிப்பதாக பரவலாக தகவல் வெளியானது.

லெபனானில் உள்ள ஹெஸ்பொலா படைகளுக்கு ஆயுதங்கள் வழங்க இரான் பயன்படுத்தும் விநியோகச் சங்கிலியில் சிரியா இருக்கிறது எனக்கூறி, சிரியாவில் உள்ள இலக்குகள் மீது கடும் வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஹெஸ்பொலாவுக்கு பலத்த அடியாக இருந்தது. ஹெஸ்பொலா மீண்டும் வளர்வதை தடுப்பதே இந்த தாக்குதலின் நோக்கமாக இருந்தது.

அதே நேரத்தில், இரானுடனான தனது கூட்டணியை அசத் முறித்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் சில விஷயங்களை ஐக்கிய அரபு அமீரகமும் அமெரிக்காவும் செய்தன.

பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் அசத் ஆட்சியின் வீழ்ச்சிக்கு உரிமைக் கோரியுள்ளனர். இதற்கு ஏதோ காரணம் இருக்கிறது.

அமெரிக்கா ஆயுதம் மற்றும் அந்நாட்டின் தொடர்ச்சியான ஆதரவுடன் ஹெஸ்பொலா மற்றும் இரானுக்கு இஸ்ரேல் சேதம் ஏற்படுத்தியது. பைடன் யுக்ரேனுக்கு தொடர்ச்சியாக ஆயுத உதவிகளை வழங்கினார். இந்த இரண்டும் அசத்தின் நெருங்கிய நட்பு நாடுகளான ரஷ்யாவும், இரானும் அவரை காப்பாற்றுவதற்கு சாத்தியமற்று போனது.

அசத் வீழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பு வரை, இரானை கட்டுப்படுத்தவும் சேதப்படுத்தவும் தங்கள் உத்தியின் ஒரு பகுதியாக அவரை அமெரிக்காவும், இஸ்ரேலும் பார்த்தனர்.

ஆனால், நள்ளிரவில் திடீரென அசத் விமானத்தில் ஏறி ரஷ்யாவுக்கு தப்பிச் செல்வார் என்று அவர்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

சிரியா, பஷர் அல் அசத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அந்நாட்டு சிறைகளில் இருந்து பலர் விடுவிக்கப்பட்டனர்

இரானுக்கு அடி

சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வது இரானுடனான ஒப்பந்தம் செய்துகொள்வதை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முடிவு செய்தால், சிரியாவில் இரானின் ஆயுத விநியோக சங்கிலி முடிவிற்கு வந்துவிடும்.

அடுத்து என்ன நடக்கும் என அனைத்து தரப்பினரும் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

தற்போது சிரியா மக்கள், அதன் அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகள் மற்றோரு புவிசார் அரசியல் பூகம்பத்தை எதிர்கொள்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட தொடர் நிகழ்வுகளை விட இது பெரியதாக இருக்கும். இது கடைசியானதாக இருக்காது.

இரான் தனது ‘எதிர்ப்பு அச்சு’-வின் இறுதி வீழ்ச்சியை காண்கிறது. ஹெஸ்பொலா மோசமாக சேதமடைந்துள்ளது. அசத்தின் ஆட்சி வீழ்ச்சி அடைந்துவிட்டது.

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, இரானின் ஆட்சியாளர்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

தற்போது சிரியா மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

2011-ஆம் ஆண்டிற்கு பிறகு, அசத் ஆட்சியில் நடந்த அனைத்து அடக்குமுறைகள் மற்றும் மிருகத்தனமான செயல்பாடுகளை எதிர்த்து குரல் எழுப்பும் நபர்களை காண முடிந்தது.

ஐ.எஸ் குழுவின் ஜிஹாதி தீவிரவாதிகளை விட அசத் மேலானவர் என்று நான் முன் வரிசையில் சந்தித்த பல வீரர்கள் என்னிடம் கூறினார்கள்.

2024 ஆம் ஆண்டில், சிரியா ராணுவம் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கிளர்ச்சிப் படையை எதிர்கொண்டது.

கிளர்ச்சியாளர்கள் தங்களை தேசியவாதிகள், இஸ்லாமியர்கள் என்றும் தாங்கள் ஜிஹாதிகள் அல்ல என்றும் அடையாளப்படுத்திக்கொண்டனர்.

பல சிரியா ராணுவ வீரர்கள் அவர்களுடன் சண்டையிட மறுத்து, தங்கள் சீருடைகளை களைந்துவிட்டு வீட்டிற்குச் சென்றனர்.

சிரியா, பஷர் அல் அசத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிரியா படைகள் டாங்கிகள் உட்பட ராணுவ ஆயுதங்களை கைவிட்டன

இராக், லிபியா போன்ற நிலை வருமா?

பல ஆண்டுகளாக உள்நாட்டுபோர் நடந்து வரும் சூழலில், அதனால் ஏற்பட்ட வடுக்களை குணப்படுத்த சிரியாவில் ‘தேசிய நல்லிணக்கம் கொண்ட சூழலை உருவாக்குவதே அந்நாட்டிற்கு உகந்தது.

கொள்ளை மற்றும் பழிவாங்கும் மனநிலையால் சிரியாவில் புதிதாக மீண்டும் போர் சூழல் ஏற்படும்.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக் குழுவின் தலைவரான அபு முகமது அல் ஜொலானி சிரியாவின் அனைத்துப் பிரிவினருக்கும் ஒருவரையொருவர் மதிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜொலானியின் குழுவினர் இணைந்து அசத்தின் ஆட்சியை கவிழ்த்துவிட்டனர். மேலும் தற்போது அவர் சிரியாவின் தலைவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இருப்பினும், சிரியாவில் உள்ள பல ஆயுதக் குழுக்கள் ஜொலானியுடன் உடன்படவில்லை. அவரிடம் இருந்து தங்கள் பகுதிகளை கைப்பற்ற விரும்புகின்றன.

தெற்கு சிரியாவில், பழங்குடி போராளிகள் அசத்தின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை. சிரியாவில் புதிய ஆட்சியாளர்கள் வந்தால்கூட தங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சிரியாவின் கிழக்குப் பாலைவனத்தில்,எஞ்சியிருக்கும் ஐ.எஸ் குழுவை அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கிறது.

தங்கள் நாட்டின் எல்லைகளில் ஐ.எஸ் குழு வருவதற்கான சாத்தியம் குறித்து கவலை கொண்ட இஸ்ரேல், சிரியா ராணுவத்தின் ராணுவ உள்கட்டமைப்புகளை குறி வைத்து தாக்கி வருகிறது.

அதிக சட்டம் ஒழுங்கு இல்லாத ஒரு நாட்டில், சிரியா ராணுவத்தை கலைப்பதை விட சீர்திருத்தம் செய்வதே முக்கியமானதாக இருக்கும்.

2003-ஆம் ஆண்டு இராக் ராணுவத்தை கலைக்க அமெரிக்கா எடுத்த அலட்சியமான முடிவு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தியது.

கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு லிபியாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது, சதாம் ஹுசைனின் வீழ்ச்சிக்குப் பிறகு இராக்கில் குழப்பம் ஏற்பட்டது.

எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்யாமல் அந்த இரு சர்வாதிகாரிகளும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடம் கொள்ளை, பழிவாங்கல், அதிகார அபகரிப்பு மற்றும் உள்நாட்டுப் போர் போன்ற அலைகளால் நிரப்பப்பட்டன.

லிபியா அல்லது இராக் ஆகிய நாடுகளைப் போல் நிலை மாறினால், அது சிரியா மக்களுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும்.

சிரியா மக்கள் தலைமுறைகளாக தங்கள் சொந்த விதிகளின்படி செயல்படவில்லை. இந்த உரிமையை அவர்களிடமிருந்து அசத் குடும்பம் பறித்து விட்டது.

போர் நாட்டை மிகவும் பலவீனப்படுத்தியதால் பெரிய வெளிநாட்டு சக்திகள் சிரியா மீது தங்கள் சொந்த அதிகாரத்தை அதிகரிக்க வழிவகுத்தது.

சிரியா மக்களுக்கு இன்னும் தங்கள் வாழ்க்கையை வாழ சுதந்திரம் இல்லை. அது அவர்களுக்கு இருந்தால் அவர்கள் புதிய மற்றும் சிறந்த நாட்டை உருவாக்கும் வாய்ப்பு இருக்கலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.