படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரம் அல்ல. சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பல உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த குற்றச் செயல்கள் தொடர்பான ஆவணங்களும் பொலிஸ் காவலிலிருந்து காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது. தற்போது இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனவே, நாட்டில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்கும்.
எதிர்வரும் காலங்களில் நாட்டில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றார்.