சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் திகதியான இன்று வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தாயகமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர்
உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லாத நிலையில் ஐ.நா அனைத்துலக சாசனத்துக்கு அமைய ஐக்கிய நாடுகளின் அவையின் கீழ், சர்வதேச நீதிப் பொறிமுறையை நாடி நிற்கின்றோம்.
எங்கள் உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களே! அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அல்ல. இன்று குழந்தைகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வரிசையில் இலங்கை சர்வதேச ரீதியில் முதலாம் இடத்தில் இருக்கிறது.
இன்றைய தினம் அன்னையர் தினமோ, ஆசிரியர் தினமோ அல்ல, அவ்வாறுக்கூறி கடந்து செல்ல முடியாது. இன்றைய தினம் மனித உரிமைகள் தினம். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். எம் உயிருக்கும் மேலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கும் எம்மையும் மதிக்க வேண்டும். மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
எப்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி கிடைத்து எம்மைப் போல் அழுபவர்களின் குரல் ஓய்கிறதோ, அன்று தான் எமக்கு மனித உரிமைகள் தினம் என வலியுறுத்தி நிற்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கப்பட்டிருந்தது.