இன்ஸ்டாகிராம் காதல்: திருமணத்திற்காக துபாயிலிருந்து வந்த மணமகன்- மணமகளும், மண்டபமும் இல்லாததால் அதிர்ச்சி
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நாளில், தான் காதலித்த மணப்பெண் காணாமல் போனதால், அவர் இணைய வழி காதலால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
திருமணத்திற்காக குறிக்கப்பட்ட நாளில், தனது காரை பூக்களால் அலங்கரித்துச் சென்ற மணமகன், பின்னர் வெறுங்கையுடன் வீட்டிற்கு திரும்ப வேண்டியிருந்தது.
டிசம்பர் 6-ஆம் தேதி, மணமகன், தனது திருமணத்திற்காக நேர்த்தியாக அலங்கரித்து, பஞ்சாபில் உள்ள மோகா நகரத்திற்கு வந்தார்.
ஆனால், மணப்பெண்ணையோ அல்லது திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்ட மண்டபத்தையோ அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் கடந்த மூன்று வருடங்களாக தீபக் கொண்டிருந்த கனவு கலைந்தது.
இந்நிலையில் உணர்வு ரீதியாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் தான் ஏமாற்றப்பட்டதை மணமகன் உணர்ந்துள்ளார்.
திருமணத்திற்காக முடிவான தேதியில் மணமகளுக்காக நாள் முழுவதும் காத்திருந்தேன் என ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள மரியாலா கிராமத்தைச் சேர்ந்த தீபக் கூறினார்.
அன்று மணப்பெண்ணை போனில் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றுள்ளார். மணப்பெண், முதலில் தீபக்கின் அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை. பின்னர் செல்போனை முழுவதுமாக ‘சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்’.
மணப்பெண்ணின் பெயர் மன்பிரீத் கவுர் என்றும் அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என தெரிவித்தார் என்றும் தீபக் கூறினார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக துபாயில் வசித்து வந்த தீபக், திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் வந்துள்ளார்.
திருமண நாள் அன்று என்ன நடந்தது?
திருமணத்திற்காக ரோஸ் கார்டன் என்ற மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளதாக அவரது காதலி கூறினார் என தீபக் தெரிவித்தார்.
திருமண நாளன்று, சுமார் 100 விருந்தினர்களுடன் , தீபக் நேர்த்தியாக உடை அணிந்து, அலங்கரிக்கப்பட்ட கார்களுடன் மோகா நகருக்கு வந்தார்.
மோகாவை அடைந்ததும் தான் குறிப்பிட்டிருந்த இடத்தை அடைய வேண்டும் என்று மணப்பெண் கூறியதாக தீபக் கூறினார்.
மேலும், “நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, அங்கு மணப்பெண்ணோ அல்லது மணப்பெண்ணின் குடும்பத்தினரோ இல்லை. அதன்பிறகு நாங்கள் அந்த இடத்திலேயே காவல்துறையை அழைத்தோம்.” என்றார் அவர்.
“மோகாவை அடைந்த பிறகு, நான் என் காதலிக்கு போன் செய்தேன். முதலில் அவர் அழைப்பை துண்டித்துவிட்டு, பின்னர் அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.” என்றும் தீபக் கூறினார்.
“டிசம்பர் 5 வரை நாங்கள் நன்றாக உரையாடிக் கொண்டிருந்தோம். கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் எல்லா நாளும் தொடர்பில் இருந்தோம். எங்களுக்குள் வேறு எந்த பிரச்னையும் இருந்தது இல்லை. நான் இப்படி ஏமாந்துவிடுவேன் என எப்போதும் சந்தேகப்பட்டதில்லை.” என்று தீபக் தெரிவித்தார்.
காதல் மலர்ந்தது எப்படி?
தீபக்கின் கூற்றுப்படி, மோகா மாவட்டத்தைச் சேர்ந்த மன்பிரீத் கவுருடன் அவரது உறவு இணையத்தில் தொடங்கியது.
மன்பிரீத் கவுர், இன்ஸ்டாகிராமில் தீபக்கைப் பின்தொடர்ந்தபோது இருவரும் தொடர்பில் இணைந்தனர்.
இதைத் தொடர்ந்து, இருவரும் இன்ஸ்டாகிராமில் உரையாடத் தொடங்கினர். பின்னர் தங்களது தொலைபேசி எண்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
தீபக்கும், மன்பிரீத்தும் பல மணி நேரம் உரையாடினர். அவர்களது நட்பு படிப்படியாக காதலாக மாறியது.
அப்போது தீபக் துபாயில் வசித்து வந்தார், அங்கு அவர் கட்டட தொழிலாளியாக வேலை செய்தார்.
உறவு எவ்வளவு காலம் நீடித்தது?
தீபக்கின் கூற்றுப்படி, இருவருக்கும் இடையிலான உறவு மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து, திருமண நாளான டிசம்பர் 6 அன்று முடிந்தது.
ஆனால் அவர்கள் இருவரும் ஒரு முறை கூட நேருக்கு நேர் சந்தித்ததில்லை என்று தீபக் கூறுகின்றார்.
தீபக் மற்றும் அவரது குடும்பத்தினருடன், அப்பெண்ணின் குடும்பத்தினரும் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் மற்றும் போன் மூலம் மட்டுமே இருவருக்கும் இடையேயான உறவு இருந்தது.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகும் இரு வீட்டாரும் சந்திக்கவில்லை.
“நான் துபாயில் இருந்ததால் இதுவரை மன்பிரீத்தை சந்திக்க முடியவில்லை. இப்போது நான் பஞ்சாப் திரும்பியபோதும் இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியவில்லை.” என்கிறார் தீபக்.
பணமோசடி குற்றச்சாட்டு
கடந்த மூன்று வருட உறவில் மன்பிரீத் கவுர் பல காரணங்களுக்காக 50 முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை வாங்கியுள்ளதாக தீபக் கூறினார்.
காதலிக்கத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகுதான், மன்பிரீத் கவுர் பணம் கேட்க ஆரம்பித்ததாகவும் தீபக் கூறினார்.
சில சமயங்களில் வீட்டுத் தேவைகளுக்காக, குடும்ப உறுப்பினர்களின் மருத்துவத் தேவைகளுக்காக அல்லது பிற குடும்பப் பொறுப்புகள் போன்ற காரணங்களுக்காக, மன்பிரீத் பணம் வாங்கியுள்ளதாக அவர் கூறுகிறார்
“வெஸ்டர்ன் யூனியன் மூலம் இந்த பணத்தை மன்பிரீத்துக்கு அனுப்பினேன். இந்த தொகையை ஒரே நேரத்தில் கொடுக்கவில்லை. இந்த மூன்று ஆண்டுகளில் வெவ்வேறு நேரங்களில் கொடுத்தேன்” என்று தீபக் கூறினார்.
“ஏமாற்றும் நோக்கத்தோடு மட்டுமே இந்த காதல் தொடங்கியது என்பதை நான் இப்போது உணர்கிறேன். அவர்களின் ஒரே நோக்கம் ஏமாற்றுவதாக இருந்தது, அது தற்போது நிறைவேறியுள்ளது.” என தீபக் குற்றம் சாட்டினார்.
ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த தீபக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
மன்பிரீத் கவுர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, தன்னையும், தனது குடும்பத்தினரையும் துன்புறுத்தியதாகவும், குடும்ப மரியாதையை காயப்படுத்தியதாகவும் தீபக் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மெஹத்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சுக்தேவ் சிங், “புகாரின் பேரில் விசாரணையை தொடங்கியுள்ளோம். அனைத்து உண்மைகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. விசாரணையில் எது வெளிவந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.