ஆனந்த் டெல்டும்படேவை ‘அர்பன் நக்சல்’ என விமர்சித்த அண்ணாமலை – யார் இவர்?
பேராசிரியர் ஆனந்த் டெல்டும்படே சமீபத்தில் சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழவில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனந்த் டெல்டும்படே (73), ‘இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை’ பி ஆர் அம்பேத்கரின் பேத்தி ரமாவின் கணவர் ஆவார்.
இந்தநிலையில், ”ஆனந்த் டெல்டும்படேவை ஏன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சென்னைக்கு அழைத்து வந்து, மேடையேற்றி பங்கேற்க வைத்தனர். அவர் ஒரு அர்பன் நக்சல்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அவரது வருகை சட்டப்படியானதே, பாஜக செய்யும் இந்த அநாகரிகமான அரசியலை வடக்கே செய்யட்டும், இங்கே செய்ய வேண்டாம் என்று திருமாவளவன் எதிர்வினையாற்றியுள்ளார்.
நிகழ்வில் என்ன பேசினர்?
அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6ம் தேதி, ‘அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நூலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட கே.சந்துரு, ஆனந்த் டெல்டும்படே ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நூல் வெளியீட்டு விழாவில் ஆனந்த் டெல்டும்படே, அம்பேத்கரின் தற்கால அவசியத்தை வலியுறுத்தி பேசியிருந்தார்.
“அம்பேத்கரிடம் அனைவருக்குமான பார்வை இருந்தது. மனிதகுலத்தின் விடுதலைக்காகதான் அவர் போராடினார். அவரது உலகப் பார்வைகளை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அதுதான் ஜனநாயகம்” என்றார்.
“ஆனந்த் டெல்டும்படே ஒரு அர்பன் நக்சல். 2018-ல் நடைபெற்ற பீமா – கொரேகான் வன்முறையில் பலர் உயிரிழந்தனர். நக்சல்கள் ஆதரவளித்த அந்த வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய நபர் ஆனந்த் டெல்டும்படே. தேசிய புலனாய்வு அமைப்பு அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. பின்பு உச்சநீதிமன்றம் சென்று ஜாமீன் பெற்றார்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார் அண்ணாமலை.
மேலும், ”அவர்கள் நடத்தும் பத்திரிகையில், சுரண்டல் இருந்தால் கிளர்ச்சி ஏற்பட வேண்டும். கிளர்ச்சி ஏற்படவில்லை என்றால், சூரியன் உதிப்பதற்கு நகரம் சாம்பலாகி போவதே மேல் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது” என அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் வாசித்து காண்பித்தார்.
ஆனந்த் டெல்டும்படேவின் சகோதரர் மிலிந்த் டெல்டும்படேவும் ஒரு நக்சல்வாதி என்று அண்ணாமலை பேசியிருந்தார்.
”2021-ஆம் ஆண்டு காத்சிரோலியில் (மத்திய பிரதேசத்தில் உள்ள மாவட்டம் ) சுட்டுக்கொல்லப்பட்ட 22 நக்சல்களில் ஒருவர் மிலிந்த் டெல்டும்படே. மிலிந்த் தனது வாக்குமூலத்தில், என் அண்ணனை பார்த்து தான் நான் நக்சல்வாதி ஆனேன் என்று கூறியுள்ளார். ஆனந்த் டெல்டும்படே யார், எதற்காக சிறையில் இருந்தார் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும், அவரது தம்பி யார் என்பதும் மக்களுக்கு தெரிய வேண்டும்” என்று அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார்.
இந்த கருத்துகளுக்கு எதிர்வினையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக செய்வது அநாகரிகமான அரசியல் என்று விமர்சித்திருந்தார்.
அவர் மீதான குற்றச்சாட்டு ஆதரமற்றது என்று குறிப்பிட்ட திருமாவளவன், “அவரது உடன்பிறப்பு ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்தது தேசிய புலனாய்வு அமைப்பு. அவர் வெளிப்படையாக பல உயர் பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர். ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய பேராசிரியர். ஆனால் இடதுசாரி சிந்தனையாளர்” என்றார்
மேலும்,” அவர் நீதிமன்ற அனுமதியுடன் தான் தமிழ்நாட்டுக்கு வந்தார். சட்டப்பூர்வமாக தான் அனுமதி பெற்றிருக்கிறார்.
அவரை மகாராஷ்டிராவில் பல நிகழ்ச்சிகளுக்கு பலரும் அழைக்கின்றனர். அவருக்கு தீவிரவாத முத்திரை குத்தி அந்நியப்படுத்த முயல்வது அநாகரிகமான அரசியல். இது போன்ற அரசியலை பாஜக தமிழ்நாட்டுக்கு வடக்கே வைத்துக்கொள்ள வேண்டும், தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது” என்று பதிலளித்திருந்தார்.
ஆனந்த் டெல்டும்படே தான் எழுதிய, அம்பேத்கரின் கருத்துகள் குறித்த, “Iconoclast: A Reflective Biography of Dr Babasaheb Ambedkar” என்ற நூல் குறித்த நிகழ்விலும் சென்னை வந்தபோது பங்கேற்றிருந்தார்.
ஆனந்த் டெல்டும்படே யார்?
தலித் இயக்கங்களுடன் தொடர்புடைய முன்னணி அறிவுஜீவி ஆனந்த் டெல்டும்படே. மகாராஷ்டிராவில் யவட்மால் மாவட்டம் ரஜூர் கிராமத்தில் பிறந்தவர். நாக்பூரில் உள்ள விஸ்வேரய்யா தேசிய தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் பொறியியல் படித்தவர்.
சில இடங்களில் பணியாற்றிய பிறகு அவர், அகமதாபாத் ஐ.ஐ.டி.யில் சேர்ந்தார். அங்கு பல தலைப்புகளில் அவர் ஆராய்ச்சி மேற்கொண்டார். கார்ப்பரேட் துறையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட்டில் செயல் தலைவராகவும், பெட்ரோநெட் இந்தியாவின் நிர்வாக இயக்குநராகவும் இருந்துள்ளார்.
காரக்பூர் ஐ.ஐ.டி.யில் கல்வி கற்பித்துள்ளார். இப்போது கோவா மேலாண்மைக் கல்வி நிலையத்தில் பணியாற்றுகிறார். அவர் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
பல செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். பெருநிறுவனங்கள் தவிர, சமூக இயக்கங்களிலும் அவர் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார்.
வகுப்புவாரி பகுப்பாய்வு மற்றும் பொதுக் கொள்கையில் நிபுணராகவும் அவர் கருதப்படுகிறார். ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கமிட்டியின் (சி.பி.டி.ஆர்.) பொதுச் செயலாளராக அவர் இருக்கிறார். கல்விக்கான உரிமை குறித்த அகில இந்திய அமைப்பின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
பீமா-கொரேகான் வழக்கு என்ன?
புனே அருகே பீமா-கொரேகானில் 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வன்முறை நிகழ்ந்தது. அன்றையதினம் லட்சக்கணக்கான தலித்துகள் அங்கு கூடினர். அந்த வன்முறை நாடு முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த வன்முறைக்கு முந்தைய நாள், 2017 டிசம்பர் 31- ஆம் தேதி, புனேவில் எல்கார் பரிஷத் நிகழ்வு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் ஆற்றிய உரைகள் காரணமாகத்தான், மறுநாள் நடந்த வன்முறை தூண்டப்பட்டது என்று கூறி ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில் புனே காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
எல்கார் பரிஷத் நிகழ்வை நடத்தியதில் மாவோயிஸ்ட் பின்னணி உள்ளது என்ற சந்தேகத்தில், நாடு முழுக்க இடதுசாரி ஆதரவு செயற்பாட்டாளர்கள் பலரை புனே காவல் துறை கைது செய்தது.
ஆனந்த் டெல்டும்படே மீதான குற்றச்சாட்டு என்ன?
2017 டிசம்பர் 31 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட எல்கார் பரிஷத் மற்றும் ஒரு நாள் கழித்து பீமா கொரேகானில் நடந்த வன்முறைகள் தொடர்பாக, 2018 ஆகஸ்ட் 28-ம் தேதி சில அறிவுஜீவிகளும், எழுத்தாளர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் ஆனந்த் டெல்டும்படே வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
தாம் இல்லாதபோது வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தியதாகவும், காவல் அதிகாரிகளிடம் வாரண்ட் எதுவும் இல்லை என்றும் ஆனந்த் டெல்டும்படே கூறினார். அப்போது ஆனந்த் டெல்டும்படே மும்பையில் இருந்தார். இதுபற்றி தகவல் அறிந்து, அவருடைய மனைவி கோவா சென்று காவல் துறையில் புகார் அளித்தார்.
2018 ஆகஸ்ட் 31-ஆம் தேதி, அப்போதைய காவல் துறை அதிகாரி பரம்வீர் சிங் புனேவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
ஆனந்த் டெல்டும்படேவும், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பீமா-கொரேகான் வழக்கில் தொடர்புடையவர்கள் என்று காவல் துறையினர் கூறியதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தை அப்போது அவர் காட்டினார். ஒரு `தோழரால்’ அந்தக் கடிதம் எழுதப்பட்டது என்று காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், தனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆனந்த் டெல்டும்படே மனு தாக்கல் செய்தார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு காவல் துறையை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. காவல் துறையினரும் சமர்ப்பித்தனர்.
எல்கார் பரிஷத் வழக்கில் விசாரணை
டெல்டும்படே மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்ததும், அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அவருடைய மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
தேசிய புலனாய்வு முகமையிடம் அவர் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தனது பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் கூறியது.
நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதி எம்.ஆர். ஷா ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார்களைக் கொண்ட இந்த வழக்கை விசாரித்தது.
அந்தச் சட்டத்தின் பிரிவு 43D (4)-ன் கீழ், இதுபோன்ற வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று அந்த அமர்வு கூறியது.
ஜாமீனில் வெளிவந்த ஆனந்த் டெல்டும்படே
உச்சநீதிமன்றத்தின் மூலம் ஜாமீன் கிடைக்காததால் 2020-ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஆனந்த் டெல்டும்படே சரண் அடைந்தார்.
இரண்டு ஆண்டு காலம் சிறையில் கழித்த அவருக்கு , 2022ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து தேசிய புலனாய்வு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன் பின் அவர் மும்பை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டுக்கு உரிய பகுதிகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் வெளிவந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு