குகேஷ்: பொழுதுபோக்காக செஸ் ஆடத் தொடங்கி உலக சாம்பியன்ஷிப் போட்டி வரை சென்ற இவர் யார்?

சென்னை செஸ் வீரர் குகேஷ்

பட மூலாதாரம், FIDE

  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

“அனைவருக்கும் இருப்பது போல எனக்கும் பதட்டம் உண்டு. ஆனால், நான் மிகவும் பதட்டமானதில்லை. பொதுவாக ஆடும்போது என் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை.”

இது சதுரங்க விளையாட்டில் மிகப்பெரும் வரலாற்றை படைக்கும் முயற்சியில் இருக்கும் ஒருவருடைய வார்த்தைகள்.

அவர்தான், 18 வயது குகேஷ் டி எனப்படும் குகேஷ் தொம்மராஜு. உலகின் இளைய செஸ் சாம்பியன் ஆகும் வாய்ப்பை நழுவ விடாமல் இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறார்.

சென்னையை சேர்ந்த அவர், சிங்கப்பூரில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரேனை எதிர்த்து ஆடி வருகிறார்.

இருவருக்கும் இடையிலான 14 சுற்றுகளில் முதலில் 7.5 புள்ளிகள் எடுக்கும் நபர், உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார். இதுவரை 12 சுற்றுகள் முடிந்துள்ளன. தற்போது, 6 புள்ளிகள் பெற்று இருவரும் சமநிலையில் உள்ளனர்.

பத்தாவது சுற்றின் இறுதியில் சமநிலையில் இருந்த போது, 11வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றிருந்தார். அது, இந்திய செஸ் ரசிகர்களுக்கு பெரும் ஊக்கமாக இருந்தது. ஆனால், 12வது சுற்றில் அவர் டிங் லிரேனிடம் தோற்றுப் போனார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

“இந்த சுற்றின் இரண்டாவது பாதியில் எனக்கு வாய்ப்புகள் இருந்தும், நான் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை” என்று குகேஷ் கூறியிருந்தார்.

மேலும், இரண்டு சுற்றுகள் இருக்கும் நிலையில், இரண்டு வீரர்களுக்குமே உலக செஸ் சாம்பியன் பட்டம் மற்றும் 2.5 மில்லியன் டாலர் பெறுவதற்கான சமமான வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

குகேஷ், சாம்பியன்ஷிப் போட்டியின் இளம் போட்டியாளராக தேர்வாகியிருந்தார்.

சென்னை செஸ் வீரர் குகேஷ்

பட மூலாதாரம், FIDE

படக்குறிப்பு, உலகின் இளைய செஸ் சாம்பியன் ஆகும் வாய்ப்பை நழுவ விடாமல் இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறார், 18 வயது குகேஷ்

மிகவும் சவாலான ஆட்டங்கள்

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவை சேர்ந்த 32 வயதான டிங் லிரேனை எதிர்த்து ஆடி வருகிறார். மிக நெருக்கமான, கடுமையான போட்டி இருவருக்கும் இடையில் நிலவி வருகிறது. ஒவ்வொரு சுற்றையும் பல மணி நேரங்கள் இருவரும் சளைக்காமல் ஆடுகின்றனர். உலகம் முழுக்க இருக்கும் செஸ் ரசிகர்கள் இருவரின் ஒவ்வொரு நகர்வையும் நேரலையில் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து வருகின்றனர்.

முதல் முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் குகேஷின் ஆட்டம் குறித்து, பல விதமான கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. தனது 22வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன், குகேஷ் இந்தப் போட்டியில் இனி அனைவருக்கும் விருப்பமான வீரர் அல்ல என்று ஒன்பதாம் சுற்றின் முடிவில் குறிப்பிட்டிருந்தார். குகேஷ் இன்னும் சிறப்பாக ஆடியிருக்க முடியும், குறைவான நேரமே கொண்ட டிங் லிரேனுக்கு ஆட்டத்தை எளிமையாக்கிவிட்டார் அவர் என்றும் கூறியிருந்தார்.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக சிங்கப்பூரில் பேட்டி அளித்திருந்த குகேஷ், “2013ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற, விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மேக்னஸ் கார்ல்சன் இடையேயான உலக சாம்பியன்ஷிப் போட்டியை கண்ணாடி திரைக்கு வெளியில், கூட்ட நெரிசலில் நின்றுக் கொண்டு பார்த்தது எனக்கு நினைவு இருக்கிறது” என்றார். பதினொரு ஆண்டுகளுக்கு பிறகு அதே போட்டியில் தான் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சென்னை செஸ் வீரர் குகேஷ்

பட மூலாதாரம், FIDE

படக்குறிப்பு, சீன வீரர் டிங் லிரேனுடனான ஆட்டத்தின் போது குகேஷ்

கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஏழாவது சுற்றில் குகேஷ் மிக கடுமையாக விளையாடினார் என்று ஊடகப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். மிகவும் சிக்கலான, கடினமான நகர்வுகள் கொண்ட ஆட்டமாக அது இருந்ததாகவும் எனினும் குகேஷ் அபார ஆற்றலை வெளிப்படுத்தி மிக கடினமான நகர்வுகளையும் எதிர்கொண்டார் என்று அவர் கூறியிருந்தார்.

“அவரது 23வது நகர்வு முதல் 36வது நகர்வு வரையிலான ஆட்டம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. அவர்கள் இருவரும் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தனர், அதுவே குகேஷுக்கு வெற்றி தான். எனினும், டிங் தொடர்ந்து கடுமையாக ஆடினார்” என்று பேசியிருந்தார் விஸ்வநாதன்.

உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றால் என்ன செய்வீர்கள் என்று சிங்கப்பூரில் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, “எனக்கு தெரியாது, நான் முதலில் மகிழ்ச்சியாக இருப்பேன்” என்றார்.

பள்ளி நாட்களில் தொடங்கிய ஆர்வம்

இந்திய சதுரங்க அரங்கில் ஒலிக்கும் முக்கிய பெயர்களில் ஒன்று குகேஷ். சென்னையை சேர்ந்த அவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சதுரங்கம் ஆடி வருகிறார்.

குடும்பத்தில் சதுரங்கம் சொல்லித் தரவோ, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவோ சதுரங்க வீரர்கள் யாரும் இல்லை. சதுரங்கத்தின் மீது இயல்பாக உருவான தனது ஆர்வத்தின் காரணமாக, தற்போது சர்வதேச அரங்குகளை எட்டியுள்ளார்.

பள்ளி மாணவராக இருந்த போதே, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் குகேஷ்.

சென்னை செஸ் வீரர் குகேஷ்

படக்குறிப்பு, கடந்த 2017ஆம் ஆண்டு, குகேஷுக்கு சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் முதல்முறையாகக் கிடைத்தது.

வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ். சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை நகர்வுகள், விதிகளை இப்படித்தான் அவர் கற்றுக் கொண்டார்.

தந்தை தன் அன்றாடப் பணியை முடித்து வரும் வரை பள்ளியில் தனியாக அமர்ந்திருக்க வேண்டாம் என்பதற்காக சதுரங்கப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஓரிரு மாதங்களிலேயே அவருக்கு இருக்கும் சதுரங்க ஆர்வத்தை அவரது பயிற்சியாளர் அறிந்து கொண்டார். குகேஷை சிறப்புப் பயிற்சிகளுக்கு அனுப்ப பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார் அந்த பயிற்சியாளர்.

அவரது ஆர்வம் சதுரங்கத்தில் அதிகரிக்கவே, அதிக நேரத்தை சதுரங்கம் ஆடுவதில் செலவழித்தார். அவரது பெற்றோர்களும் பள்ளியும் குகேஷின் ஆர்வத்தை அங்கீகரித்து அதற்கான ஒத்துழைப்பை வழங்கினர்.

வார இறுதி நாட்களில் நகரில் எங்கு சதுரங்கப் போட்டி நடைபெற்றாலும் அதில் பங்கேற்று வெற்றி பெற்று, பரிசுடன் பள்ளிக்கு திரும்புவது குகேஷின் பொழுதுபோக்காகவே ஆனது.

சென்னை செஸ் வீரர் குகேஷ்

படக்குறிப்பு, குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை (இஎன்டி) அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார்

மகனின் சதுரங்கத்துக்காக மருத்துவத்தை கைவிட்ட தந்தை

குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை (இஎன்டி) அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார். சதுரங்கத்தில் குகேஷின் ஆர்வம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, கடந்த 2017ஆம் ஆண்டு தனது மருத்துவர் பணியைக் கைவிட்டார். எல்லா நாடுகளுக்கும் குகேஷை அழைத்துச் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்கிறார் குகேஷின் தந்தை. இதற்காக தனது பணியைக்கூட கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் நிறுத்திவிட்டார்.

குகேஷின் தாய் பத்மகுமாரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

சென்னை செஸ் வீரர் குகேஷ்

படக்குறிப்பு, வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ்

ஹாட்ரிக் வெற்றி

கடந்த 2015ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நேஷனல் ஸ்கூல்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ். 2015ஆம் ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து அந்தப் பட்டத்தை வென்றார்.

கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் அவருக்கு முதல்முறையாக கிடைத்தது. அது குகேஷை மிகவும் ஊக்கப்படுத்தியது.

FIDE தரவரிசையில் குகேஷ் தற்போது இந்தியாவில் இரண்டாவது இடத்திலும் உலகத்தில் ஐந்தாவது இடத்திலும் உள்ளார். இலோ (ELO) தரவரிசையில் 2750 புள்ளிகளை கடந்த இளம் சதுரங்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவ்வளவு போட்டிகளை எதிர்கொண்டு, பதக்கங்களை பெற்று வரும் சென்னையைச் சேர்ந்த குகேஷின் குடும்பத்தில் இவரே முதல் சதுரங்க வீரர்.

சென்னை செஸ் வீரர் குகேஷ்

படக்குறிப்பு, சதுரங்கத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதலிடத்தில் இருந்தவர் குகேஷ்

இளம் இந்திய கிராண்ட் மாஸ்டர்

சதுரங்க வீரர்கள் அனைவருக்கும் இருக்கும் கனவு கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது. குகேஷுக்கு இந்த கனவு, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேறியது.

அவர், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அது மட்டுமல்லாமல், சதுரங்க வரலாற்றில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார்.

சதுரங்கத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதலிடத்தில் இருந்தவர் குகேஷ். ஆனால், சதுரங்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தால், தற்போது தினசரி பாடங்களைக் கற்பதில் இருந்து சற்று விலக்கு பெற்றுள்ளார்.

சென்னை செஸ் வீரர் குகேஷ்

படக்குறிப்பு, கடந்த 2023ஆம் ஆண்டு எலைட் நார்வே போட்டிகள் உட்பட 10 ஓபன் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார்

குகேஷ் குவித்துள்ள பதக்கங்கள்

முதலில் உள்ளூர், வெளிமாநிலங்களில், தேசிய அளவில் என போட்டிகளில் பங்கேற்று வந்த குகேஷ், வெகு சீக்கிரமே சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற ஆரம்பித்தார்.

ஸ்பெயினில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அவர் உலக சாம்பியன் பட்டம் வென்றது, அவரது சதுரங்க பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல். அதற்கு முன்பாக, 2016ஆம் ஆண்டில் காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

ஐரோப்பிய கிளப் கோப்பை எனப்படும் சதுரங்க வீரர்கள் முக்கியமாக கருதும் போட்டிகளில் 2021ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் போட்டிகளின் போது, மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டுள்ளார்.

குகேஷ் தனது வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் போட்டிகளில் மட்டுமல்லாமல், அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் ஓபன் போட்டிகளிலும் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.

பிரான்ஸில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் ஓபன் போட்டிகள், 2021ஆம் ஆண்டு நார்வே மாஸ்டர்ஸ் போட்டிகள், 2022ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற சாம்பியன் மெனார்கா போட்டிகள், 2023ஆம் ஆண்டு எலைட் நார்வே போட்டிகள் உட்பட 10 ஓபன் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார்.

போட்டிகளின் போதும் பேட்டிகளின் போதும் காணப்படும் குகேஷ் மிகவும் சாந்தமானவர். ஆடும் போது முகத்தில் எந்தவொரு பதட்டத்தையும் காட்டாதவர். “அனைவருக்கும் இருப்பது போல எனக்கும் பதட்டம் உண்டு. ஆனால், நான் மிகவும் பதட்டமானதில்லை. பொதுவாக ஆடும்போது என் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை” என்று சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு இடையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

பொதுவெளியில் காணப்படும் குகேஷுக்கு மற்றொரு முகம் இருக்கிறது என, குகேஷை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு குகேஷ் தேர்வான போது அவரது தந்தை ரஜினிகாந்த் பிபிசி தமிழிடம், பகிர்ந்திருந்தார்.

“வெளியில் காணப்படுவது மிகவும் சாதுவான, அமைதியான குகேஷ். ஆனால், உண்மையில் அவன் மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புத் தனம் செய்து கொண்டு, விளையாட்டாக வீட்டில் இருப்பவர்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் சிறுவன்,” என்று கூறிய அவரது தந்தை, “சதுரங்கப் போட்டிகளுக்குத் தயாராகும் நேரத்தில், குகேஷ் யாரிடமும் பேசமாட்டார்,” என்றும் தெரிவித்தார்.

போட்டிகளுக்குத் தயாராகும்போது தனது பயிற்சியாளரிடம் மட்டுமே குகேஷ் பேசுவார். “அவர் அருகில் அமர்ந்து நான் செல்ஃபோனில்கூட யாரிடமும் பேசமாட்டேன். அதுகூட அவரது கவனத்தை சிதறடிக்கும். அவரும் அதை விரும்ப மாட்டார்.

“எனக்கு சதுரங்கம் தெரியாது. மிக அடிப்படையாக அதைப் பற்றி சில விஷயங்கள் தெரியும். இப்போதும்கூட எனக்கு அதைப் பற்றி தெரியாது. அவை எல்லாம் குகேஷும் அவரது பயிற்சியாளரும்தான் பேசிக் கொள்வார்கள். நான் அவரை போட்டிகளுக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பேன்,” என்றார் அவர்.

மேலும், “போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும்போது, போட்டிக்கு முன், சில வார்த்தைகள் தொலைபேசியில் தன் தாயிடம் பேசுவார். நான் கூடவே இருப்பதால் எனக்கு அதுகூட கிடைக்காது,” என பெருமையும் சிரிப்பும் கலந்து தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் குகேஷுன் தந்தை.

போட்டிகளில் பங்கேற்கும்போது சக போட்டியாளர்கள் இடையே மிகவும் ஆரோக்கியமான போட்டி நிலவும் எனக் குறிப்பிடுகிறார் அவரது தந்தை ரஜினிகாந்த்.

“போட்டிகளில் பங்கேற்கும் முன் அவ்வளவாகப் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், போட்டிகள் முடிந்த பிறகு, அனைத்து பிள்ளைகளும் ஒரே அறையில் குழுமி இரவெல்லாம் ஆட்டம் போடுவார்கள். எனினும், போட்டியின்போது நண்பரின் மீது கருணையே காட்டமாட்டார்கள்,” என்று புன்னகைக்கிறார் அவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு