வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? – ஓர் ஆய்வு
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்தி
1782-ஆம் ஆண்டு டிசம்பர் 6-7 ஆம் தேதி இரவில், மைசூர் சுல்தானான ஹைதர் அலி உயிரிழந்தார். அவரது முதுகில் ஒரு பெரிய கட்டி இருந்தது. அதை வைத்தியத்தால் குணப்படுத்த முடியவில்லை.
இதனை அடுத்து உடனடியாக அவரது மகன் திப்பு சுல்தான் மைசூரின் சுல்தானாக்கப்பட்டார்.
தனது ‘டைகர் ஆஃப் மைசூர், தி லைஃப் அண்ட் டெத் ஆஃப் திப்பு சுல்தான்’ என்ற புத்தகத்தில் டென்னிஸ் பாரஸ்ட், பிரிட்டிஷ் வர்ணனையாளர் ஒருவரை மேற்கோள் காட்டி, “அப்போது திப்பு சுலதானுக்கு 33 வயது. அவரது உயரம் 5 அடி 7 அங்குலம்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
“அவருக்கு சிறிய கழுத்து இருக்கும். அவரது கைகள் பெரியதாகவும் தசை மிக்கதாகவும் இருந்தன. அது அவருக்கு ஒரு வலிமையான தோற்றத்தைக் கொடுத்தது. ஆனால் அவரது கைகள் மிகவும் மென்மையானவை. அவரது கண்கள் மிகவும் தனிச்சிறப்பாக இருந்தன”.
மரணப்படுக்கையில் இருந்த ஹைதர் அலி, நல்ல முறையில் ஆட்சி நடத்துவது குறித்து தனது மகனுக்கு அறிவுரை கூறினார்.
”ஆங்கிலேயர்களின் பொறாமைதான் உனது பாதையில் மிகப்பெரிய தடையாக இருக்கும். இன்றைக்கு இந்தியாவில் சக்தி வாய்ந்தவர்களாக ஆங்கிலேயர்கள் இருக்கின்றனர். அவர்களைப் போராடி பலவீனப்படுத்துவதே இன்றைய மிகப்பெரிய தேவை. அவர்களுக்குள் பிளவை உருவாக்குவதன் மூலம்தான் அவர்களை பலவீனப்படுத்த முடியும்”.
“பிரெஞ்சு மக்களின் உதவியால் ஆங்கிலேய படைகளை நாம் வெல்ல முடியும். போர் வியூகத்தில் நம்மை விட ஐரோப்பியர்கள் சிறந்தவர்கள்”, என்று தனது நீண்ட கடிதத்தில் ஹைதர் அலி திப்பு சுல்தானுக்கு விளக்கினார்.
“எப்போதும் அவர்களுக்கு எதிராக சண்டையில் அவர்களின் சொந்த ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும். நீ எனது அருகில் சண்டையிடுவதை நான் பார்த்திருக்கிறேன்”.
“நீ எனது பெருமைக்கான வாரிசு. எப்போதும் நினைவில் வைத்துக்கொள், வீரத்தால் மட்டுமே அரியணையை வெல்ல முடியும், ஆனால் அந்த வீரத்தை மட்டும் வைத்து அதனை பாதுகாக்க முடியாது”, என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
வெற்றிகரமான ராணுவ தளபதி
திப்பு சுல்தான் ஆட்சிக்கு வந்த நேரத்தில், அவர் இந்தியாவின் மிகவும் திறமையான மற்றும் துணிச்சலான ராணுவத் தளபதிகளுள் ஒருவராக கருதப்பட்டார்.
போர்க்களத்தில் தனது திறமையை நிரூபித்த அவர், பொள்ளிலூர் போரில் ஆங்கிலேயர்களை தோற்கடித்தது மட்டுமல்லாமல், 1782-ஆம் ஆண்டு தஞ்சாவூருக்கு அருகே கர்னல் ஜான் பிராத்வெயிட் தலைமையிலான கிழக்கு இந்திய கம்பெனியின் படைகளையும் தோற்கடித்தார்.
ஆட்சிக்கு வருவதற்கு ஒரு ஒரு வருடத்திற்கு முன்பு, அவர் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதிகளில் தாக்குதல் தொடுத்து, கம்பெனியின் படைகளை தோல்வியை ஏற்கும்படி கட்டாயப்படுத்தினார்.
“திப்பு சுல்தான் பிரெஞ்சு பொறியாளர்களின் உதவியுடன் தொழில்துறை தொழில்நுட்பங்களை கற்றுத்தேர்ந்து நீர் சக்தியால் இயங்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்”, என்று வில்லியம் டால்ரிம்பிள் தனது ‘தி அனார்க்கி’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“தனது ஆட்சியில் அவர் தனது தூதர்களை தெற்கு சீனாவிற்கு அனுப்பி பட்டுப்புழுக்கள் இடும் முட்டைகளை வாங்கி மைசூரில் பட்டுத் தொழிலை தொடங்கினார். அணைகளை கட்டி நீர்ப்பாசனம் செய்ய ஏற்பாடு செய்தார்”.
“அவரது ஆட்சியில் விவசாயமும் வர்த்தகமும் மிகவும் முன்னேறிய நிலையில் இருந்ததை அவரது பிரிட்டிஷ் எதிரிகள் கூட ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.”
இர்பான் ஹபீப் தனது ‘Resistance and Modernization under Haider Ali and Tipu Sultan’, என்ற புத்தகத்தில், திப்புவின் லட்சியம் இந்தியாவையும் தாண்டி பார்க்கக்கூடியதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
“திப்பு இஸ்தான்புல்லில் உள்ள தனது தூதரிடம் ஈராக்கில் ‘இஜாரா’ ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார், இதனால் அவரும் ஐரோப்பியர்களைப் போல புலம்பெயர்ந்த குடியேற்றத்தை நிறுவ முடியும். அது கப்பல்களுக்கான தளமாக மாறக் கூடும்”, என்று அவர் எழுதியுள்ளார்.
இஜாரா என்பது ஏலம் மூலம் நிலத்தை வாடகைக்கு வாங்கும் முறையாகும், இது அக்காலத்தில் பரவலாக காணப்பட்டது.
திப்புவின் மதக் கொள்கைகள்
திப்பு சுல்தானின் மதக் கொள்கை பற்றி வரலாற்றாசிரியர்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
இர்பான் ஹபீப் தனது புத்தகத்தில் சுப்பராய செட்டி என்பவரை மேற்கோள்காட்டி, “1784-ஆம் ஆண்டில், வெங்கடாசல சாஸ்திரி என்பவருக்கும் மற்றும் சில பிராமணர்களுக்கு நிலத்தை தானமாக அளித்து, திப்பு சுல்தான் தனது நீண்ட ஆயுளுக்காகவும் செழிப்பிற்காகவும் பிரார்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டார்”, என்று எழுதியுள்ளார்.
“இதற்கு ஒரு வருடத்திற்கு பிறகு, திப்பு 12 யானைகளை மேலுகோட் கோவிலுக்கு தானம் செய்தார். ஸ்ரீங்கேரி கோவிலுக்கும் திப்பு சுல்தானிடமிருந்து மிகப்பெரிய அளவில் மானியம் கிடைத்துள்ளது”.
“மராத்தியர்கள் படையெடுப்பின் போது அந்த கோவில் சேதப்படுத்தப்பட்டதற்கு திப்பு சுல்தான் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் உண்மையில் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர் என்றாலும், தனது காலத்தின் கலப்பு கலாசாரத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.”
இந்துக் கடவுள்களின் மீது அவருக்கு முழு நம்பிக்கை இருந்ததாகத் தெரிகிறது.
“திப்பு சுல்தான், தனது பிராமண ஆலோசகர்களின் ஆலோசனைகளை பின்பற்றினார். தனது படைகளில் இருந்த ஹிந்து அல்லது இஸ்லாமியர் என அனைத்து வீரர்களையும் புனித நதிகளில் நீராட உத்தரவிட்டார் என்பதற்கான சான்றுகளும் இருக்கின்றன. இதனால் அவர்களின் பயம் நீங்கி, மராட்டியர்களை விட சிறந்த போர்வீரர்களாக இருப்பதை அவர்கள் நிரூபிக்க முடியும் என்று அவர் நம்பினார்”.
லண்டனில் உள்ள ‘கிறிஸ்டிஸ்’ என்ற ஏல நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு 150 கோடி ரூபாய்க்கு திப்பு சுல்தானின் மோதிரத்தை பெயர் தெரியாத ஒருவருக்கு விற்றது.
42 கிராம் தூய தங்கத்தால் ஆன இந்த மோதிரத்தின் சிறப்பு என்னவென்றால், அதில் தேவநாகரி எழுத்தில் ‘ராம்’ என்று எழுதப்பட்டிருக்கும்.
திப்புவின் மரணத்திற்குப் பிறகு அவரது விரலில் இருந்த இந்த மோதிரத்தை பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் எடுத்து சென்றதாக நம்பப்படுகிறது.
கொடூரமான மன்னர்?
திப்பு சுல்தான் ஒரு சகிப்புத்தன்மையற்ற, கொடூரமான மன்னர் என்று நிரூபிக்கும் பல வரலாற்றாசிரியர்கள் இருக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான ‘Tipu Sultan, The Saga of Mysore’s Intregnum’ என்ற புத்தகத்தில் விக்ரம் சம்பத், “திப்புவின் கடிதங்கள், நூலகத்தில் உள்ள புத்தகங்களின் தொகுப்பு மற்றும் அவரது கனவுகள் பற்றிய குறிப்புகள் ஆகியவை முஸ்லிம் அல்லாதவர்களிடம் திப்புவுக்கு மிகுந்த வெறுப்பு இருந்தது என்பதை வெளிப்படுத்துகின்றன”, என்று குறிப்பிட்டுள்ளார்.
“அவர்களுக்கு எதிராக ஜிஹாத் செய்வது தனது மதக் கடமை என்று திப்பு சுல்தான் நம்பினார். அவருடைய வாளின் முனையில், “எனது வெற்றி வாள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மின்னலாக மாறும்” என்று எழுதப்பட்டிருந்தது.
திப்பு தனது அரசாங்கத்திற்கு ‘சர்கார்-இ-குதாதாத்’ என்று பெயரிட்டதாகவும், தனது அரசவையில் பாரசீக மொழியைப் பயன்படுத்தத் தொடங்கியதாகவும் விக்ரம் சம்பத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தவிர, அவர் பல நகரங்களின் பழைய பெயர்களை இஸ்லாமிய பெயர்களாக மாற்றி வைத்தார்.
‘Mysore a Gazetteer Compiled for the Government’ என்ற தனது புத்தகத்தில் லூயிஸ் ரைஸ், “திப்பு வேண்டுமென்றே மைசூரின் பழைய இந்து மன்னர்களின் நினைவை அழிக்க முயற்சி செய்தார்”, என்று எழுதியுள்ளார்.
“இதற்காக அவர் பல நூற்றாண்டுகள் பழமையான நீர்ப்பாசன முறையை அழித்து, தனது சொந்த பெயரில் புதிய நீர்ப்பாசன முறையைத் தொடங்கினார்.”
ஆனால், “திப்பு சுல்தான் ஒரு மதவெறி கொண்டவர் அல்ல. அவர் சிலரை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தாலும், அவரது நோக்கம் மதம் சார்ந்தது அல்ல, அரசியல் சார்ந்தது”, என்று வரலாற்றாசிரியர் சுரேந்திரநாத் சென் நம்புகிறார்.
முஸ்லிம்களுக்கு முன்னுரிமை
பிற மதத்தை சேர்ந்தவர்களிடம் திப்புவின் நடத்தை குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டன.
‘Tipu Sultan’s Mysore: An Economic Study’ என்ற தனது புத்தகத்தில் எம்.எச்.கோபால், “திப்புவுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் மீது கடும் எதிர்ப்பு இருந்தது” என்று எழுதியுள்ளார்.
“1792 ஆம் ஆண்டிற்கு பிறகு, அவர் தீவிரமான முஸ்லிம்களை மட்டுமே முக்கியமான பதவிகளில் நியமிக்கத் தொடங்கினார். அவரது அரசில் வருவாய்த் துறையை கவனிக்க ஒரே ஒரு ஹிந்து திவான் பதவியில் இருந்தார்.”
“முஸ்லிம்களுக்கு வீட்டு வரி, தானியங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் தலைநகரில் குடியமர்த்தப்பட்டனர். இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டது. முஸ்லிம் மாணவர்களின் கல்விக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. “
தீவிர வன்முறை மீது நம்பிக்கை
திப்பு சுல்தான் தனது எதிரிகள் மீதும், தான் தோற்கடித்தவர்கள் மீதும் அக்காலகட்டத்தில் அதிக அளவில் வன்முறையை பயன்படுத்தியதற்கு பிரபலமானவர்.
“கிளர்ச்சியாளர்களை தூக்கிலிடுவதற்கு முன்பு, எவ்வாறு அவர்களின் கைகள், கால்கள், மூக்கு மற்றும் காதுகளை திப்பு சுல்தான் வெட்டினார் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன”, என்று வில்லியம் டால்ரிம்பிள் குறிப்பிட்டுள்ளார்.
“அவர் பலமுறை ஈவிரக்கமின்றி கைப்பற்றப்பட்ட எதிரிகளான ஹிந்து மற்றும் கிறிஸ்தவர்களை மதம் மாற்றினார். சில சமயங்களில் தோற்கடிக்கப்பட்ட மக்களின் கோவில்கள் மற்றும் தேவாலயங்களையும் அழித்தார்.”
“தோல்விக்குப் பிறகு, பல மக்களுக்கு தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திப்பு சுல்தான் கிறிஸ்தவர்களையும் ஹிந்துக்களையும் நிர்வாணமாக்கி, அவர்களை யானைகளின் கால்களில் கட்டி, அவர்களின் உடல்கள் துண்டு துண்டாகும் வரை யானையை சுற்றித் திரிய வைத்தார்”.
அவருக்கு ராஜ்ஜீய திறமையும் இல்லை. 1786-ஆம் ஆண்டு கார்ன்வாலிஸ் கல்கத்தாவை அடைந்தபோது, திப்பு சுல்தான் மராத்தா பேஷ்வா மற்றும் ஹைதராபாத் நிஜாம் ஆகியோருடன் போரில் ஈடுபட்டிருந்தார்.
அவர்கள் இருவரும் ஒரு காலத்தில் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் நண்பர்கள்.
ஹைதர் அலி அவர்கள் இருவரையும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சண்டையிட ஒன்றிணைத்தார். ஆனால் திப்புவின் நடவடிக்கைகளால் அவர்களுக்கு கார்ன்வாலிஸை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
‘குத்பா’ வாசிப்பு
இது மட்டுமின்றி, முகலாய பேரரசர் ஷா ஆலமின் இறையாண்மையை ஏற்க மறுத்து, அவருடனான அனைத்து உறவுகளையும் திப்பு சுல்தான் முறித்துக்கொண்டார்.
தனது புத்தகமான ‘The British Conquest’-இல் சர் பெண்டார்ட் மூன், “ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகைக்குப் பிறகு வாசிக்கப்படும் ‘குத்பா’வை முகலாயப் பேரரசரின் பெயரில் படிக்காமல் தன் பெயரில் படிக்க வேண்டும் என்று திப்பு உத்தரவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மாற்றாக முகலாய அரசரே சிந்தியாவின் அடிமையாகிவிட்டார் என்பது திப்புவின் கருத்தாக இருந்தது.”
1789 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், வடக்கு மலபார் மற்றும் தஞ்சையைக் கைப்பற்றிய பிறகு, திப்புவும் திருவிதாங்கூர் மீதும் தாக்குதலைத் தொடங்கினார்.
இதன் விளைவாக மராட்டியர்கள், நிஜாம் மற்றும் திருவிதாங்கூர் மக்கள் மட்டும் அவருக்கு எதிரிகளாக மாறவில்லை, அவரது மூத்த எதிரியான கிழக்கிந்திய கம்பெனியும் அவருக்கு எதிராக போர் தொடுத்தது.
1792 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அன்று, மூன்று படைகள் ஸ்ரீரங்கப்பட்டினத்தை நோக்கி அணிவகுத்தன.
அப்போது திப்புவின் படையில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். திப்பு சுல்தான் கோட்டைக்குள் இருந்தே ஆங்கிலேயர்களுடன் போரிட முடிவு செய்தார்.
மகன்களை ஆங்கிலேயர்களிடம் பிணைக் கைதிகளாக வைத்திருந்தார்
பிப்ரவரி மாதத்திற்குள், மூன்று படைகளும் கோட்டைக்கு முன்னால் வந்து சேர்ந்தன. இருண்ட இரவைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கார்ன்வாலிஸ், திப்புவுக்குத் தாக்குதல் நடத்த வாய்ப்பளிக்காமல் கோட்டையைத் தாக்கினார்.
திப்புவின் இராணுவம் இரண்டு மணி நேரம் கடுமையாகப் போராடியது, ஆனால் அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கோட்டைக்குள் சென்றனர்.
கார்ன்வாலிஸ் மீண்டும் தாக்கினார், காலையில் லால் பாக் அவரது கட்டுப்பாட்டில் வந்தது.
“அடுத்த நாள் திப்பு பல எதிர்த்தாக்குதல்களைத் தொடங்கினார், ஆனால் அவற்றால் எந்தப் பலனும் இல்லை. அவரது படைகள் தோல்வியடைய தொடங்கின, சமாதானத் தீர்வுக்காக கார்ன்வாலிஸுக்குச் செய்தி அனுப்பும்படி திப்புவுக்கு கட்டாயம் ஏற்பட்டது”, என்று வில்லியம் டால்ரிம்பிள் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
“கார்ன்வாலிஸ் இந்த சமாதானத்தை ஏற்றுக்கொண்டார், ஆனால் அதற்கு கடுமையான நிபந்தனைகளை விதித்தார்.”
திப்பு தனது ராஜ்ஜியத்தில் பாதியை ஆங்கிலேயர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் அதில் முதல் நிபந்தனை.
இரண்டாவது நிபந்தனை என்னவென்றால், ஆங்கிலேயர்களுக்கு மூன்று கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பணத்தை முழுமையாகச் செலுத்தும் வரை, திப்பு தனது இரு மகன்களையும் ஆங்கிலேயர்களிடம் பணயக்கைதிகளாக வைத்திருக்க வேண்டும்.
இது மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் போர்க் கைதிகள் அனைவரையும் விடுவித்து, மராட்டியர்களிடமிருந்தும், நிஜாமிடமிருந்தும் பறிக்கப்பட்ட நிலத்தை அவர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
மீண்டும் திப்பு சுல்தானை தாக்கிய ஆங்கிலேயர்கள்
இரு தரப்பினருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, திப்புவின் இரண்டு இளவரசர்களான அப்துல் காலிக் மற்றும் ஐந்து வயதான மியாஜுதீன் ஆகியோர் 1972 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி அன்று காரன்வாலிஸிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த இளவரசர்கள் யானைகள் மீது அமர்த்தப்பட்டு சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திப்பு முழு அபராதத்தையும் செலுத்திய பிறகு, அவர்கள் திப்புவிடம் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்தப் பின்னடைவிலிருந்து திப்புவால் மீளவே முடியவில்லை. இப்போரில் அவரது ஆயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், இந்தத் தோல்விக்குப் பிறகும் திப்பு தலைவணங்கவில்லை.
1799 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று, ஜெனரல் ஹாரிஸ் தலைமையில் ஆங்கிலேயர்கள் மீண்டும் திப்பு சுல்தானைத் தாக்கினர்.
1792 ஆம் ஆண்டு தனது அரசில் பாதியை இழந்திருந்த திப்புவிடம், முன்பை விட மிகக் குறைவான வளங்களே இருந்தன.
இருந்தபோதிலும், திப்புவின் படையினர் வீரமாக போரிட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தால் முன்னேற முடியவில்லை.
ஜாக் வெல்லர் தனது ‘Wellington in India’ என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார், “ஆங்கிலேயர்களிடம் கனரக பீரங்கிகள் இருந்தன. கோட்டைச் சுவர்களைத் தகர்க்க நாற்பது 18-பவுண்டர் (18-pounder) பீரங்கிகளை நிறுவியிருந்தனர்.”
“ஏப்ரல் மாத இறுதியில், திப்புவின் பெரும்பாலான பீரங்கிகள் செயலிழந்தன. மே 3ஆம் தேதி ஹைதராபாத்தின் பீரங்கிகள் கோட்டையைச் சுற்றி 350 மீட்டர் தொலைவுக்குள் கொண்டுவரப்பட்டன. மாலைக்குள் கோட்டைச் சுவர்களில் பெரிய ஓட்டை போடப்பட்டிருந்தது. மறுநாள் கோட்டைக்குள் தன் படைகளை அனுப்ப ஹாரிஸ் தீர்மானித்தார்.”
காலையில், கோட்டைக்கு ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்த பிறகு, திப்பு தனது ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டார்.
அவர்கள் ‘இன்று நல்ல நாள் அல்ல’ என்று எச்சரித்தனர். ஒரு மணியளவில், திப்புவின் வீரர்கள் ஓய்வெடுக்கச் சென்றவுடன், நான்காயிரம் பிரிட்டிஷ் வீரர்கள் கோட்டையைத் தாக்கினர்.
திப்புவின் மரணம்
அப்போது திப்பு சுல்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தாக்குதல் தொடங்கியதைக் கேள்விப்பட்டவுடன், சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, தனது மெய்க்காப்பாளர்களுடன் இணைந்து, கோட்டைச் சுவரில் சேதம் ஏற்பட்டிருந்த இடத்திற்கு குதிரையில் விரைந்தார்.
ஆனால், அவர்கள் அங்கு சென்றடைவதற்குள் பிரிட்டிஷ் வீரர்கள் கோட்டைக்குள் நுழைந்துவிட்டனர். திப்பு, இரண்டு முறை குத்துவாளால் (துப்பாக்கியோடு இணைந்த கத்தி) தாக்கப்பட்டார். அவரது இடது தோளை ஒரு தோட்டா துளைத்தது.
அவருடன் இருந்தவர்கள், ஆயுதங்களைக் கீழே போடுமாறு அறிவுறுத்தினர், ஆனால் திப்பு, “உங்களுக்கு என்ன பைத்தியமா? வாயை மூடுங்கள்” என்று கத்தினார்.
டென்னிஸ் பாரஸ்ட் தனது ‘டைகர் ஆஃப் மைசூர்’ புத்தகத்தில், “கோட்டையின் வெளிப்புற மற்றும் உட்புற சுவர்களுக்கு இடையே நடந்த சண்டையில், திப்பு தனது கடைசி மூச்சு வரை துணிச்சலோடு சண்டையிட்டார்” என்று எழுதியுள்ளார்.
மேலும், “காயமடைந்த திப்புவின் இடுப்பில் தங்க வார்ப்பூட்டு (Buckle) இருப்பதைப் பார்த்த ஆங்கிலேய சிப்பாய் ஒருவர், அதை எடுக்க, அவரை நோக்கி நகர முயன்றார். ஆனால் திப்பு தனது வாளால் அவரைத் வீழ்த்தினார்.”
“சில வினாடிகளுக்குப் பிறகு, ஒரு சிப்பாய், திப்புவுக்கு மிக அருகில் நின்றவாறு துப்பாக்கியால் அவரது நெற்றியில் சுட்டார். திப்பு தரையில் விழுந்தார், ஆனாலும் வாள் அவர் கையை விட்டு செல்லவில்லை.” என்று டென்னிஸ் பாரஸ்ட் தனது புத்தகத்தில் கூறுகிறார்.
திப்புவின் இறுதி ஊர்வலம்
திப்பு சுல்தானை அடக்கம் செய்யும் பணி மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. சாலையின் இருபுறமும் நின்றிருந்தவர்கள் கதறி அழுதனர். பலர் தரையில் படுத்து திப்புவுக்கு தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினர்.
பின்னர் திப்பு சுல்தான், அவரது தந்தை ஹைதர் அலியின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். திப்புவின் மகன்கள் வேலூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர். மைசூர் நிலம் கம்பெனிக்கும் ஹைதராபாத் நிஜாமுக்கும் இடையே பிரிக்கப்பட்டது.
திப்புவின் தலைப்பாகை மற்றும் வாள், கார்ன்வாலிஸுக்கு பரிசாக அனுப்பப்பட்டது. இன்று திப்புவின் தலைநகரின் பெரும்பகுதி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டது.
இப்போது இந்த இடத்தில் அக்கால மகிமையின் அடையாளமாக மிகச்சில சின்னங்களே எஞ்சியுள்ளன.
திப்புவின் மரணச் செய்தி வெல்லஸ்லி பிரபுவுக்கு எட்டியதும், அவர் தனது மதுக் கோப்பையை உயர்த்தி, “இந்தியாவின் பிணத்திற்காக”, என்று கூறி மதுவை அருந்தினார். (அப்துஸ் சுப்ஹான், Tipu Sultan: India’s Freedom Fighter Par Excellence)
ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவில் இருந்த மிகப்பெரிய எதிரி திப்பு. அவரது மறைவுக்குப் பிறகு ஆங்கிலேயர்களுக்கு சவால் விட யாரும் இல்லை.
சி.எச்.பிலிப்ஸ் தனது ‘The Correspondence of David Scott’ என்ற புத்தகத்தில், “ஸ்ரீரங்கப்பட்டினத்தின் வீழ்ச்சியும், திப்பு சுல்தானின் மரணமும் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு நடந்த மிகப்பெரிய நிகழ்வுகள்” என்று எழுதியுள்ளார்.
திப்புவின் பொம்மை
திப்பு சுல்தானைக் கொன்றுவிட்டு ஸ்ரீரங்கப்பட்டினக் கோட்டைக்குள் ஆங்கிலேயர்கள் நுழைந்தபோது, அந்த அறையில் ஒரு விசித்திரமான பொம்மையைக் கண்டார்கள்.
ஒரு கர்ஜிக்கும் சிங்கம், ஒரு பிரிட்டிஷ் சிப்பாயைத் தாக்குவது போல அந்த பொம்மை வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதுகுறித்து விக்ரம் சம்பத் பின்வருமாறு எழுதுகிறார், “அது மரத்தால் செய்யப்பட்ட ஒரு பொம்மை. அதன் கைப்பிடியை சுழற்றினால் சிங்கம் கர்ஜிப்பது போன்ற ஒலியை எழுப்பும், பிறகு பிரிட்டிஷ் சிப்பாயின் அலறல் சத்தம் கேட்கும்.”
“காலை எழுந்தவுடன், திப்பு அந்த பொம்மையுடன் விளையாடுவதில் மும்முரமாக இருப்பார். அந்த பொம்மை ஆங்கிலேயர்கள் மீதான அவரது வெறுப்பை மேலும் தூண்டியது.”
போர் முடிந்ததும், இந்த பொம்மை பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டது. இது முன்பு கிழக்கிந்திய கம்பெனியின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இன்றும் லண்டனில் உள்ள ‘விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில்’ இதைக் காணலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.