சிரியா: அசத் ஆட்சியின் வீழ்ச்சி மத்திய கிழக்கில் அதிகார சமநிலையை மாற்றியமைக்குமா?

டிசம்பர் 7, 2024 அன்று, ஹமாவின் ராணுவ விமான நிலையத்திற்குள், கிளர்ச்சியாளர்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டிசம்பர் 7, 2024 அன்று, ஹமாவின் ராணுவ விமான நிலையத்தைக் கைப்பற்றிய உற்சாகத்தில் கிளர்ச்சியாளர்கள்
  • எழுதியவர், ஹியூகோ பச்சேகா
  • பதவி, மத்திய கிழக்கு நிருபர்

ஒரு வாரத்திற்கு முன்னர், கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் வடமேற்கில் உள்ள இட்லிப் நகரின் தளத்தில் இருந்து, பஷர் அல்-அசத்தின் ஆட்சிக்கு எதிரான ஒரு அதிர்ச்சியூட்டும் முன்னெடுப்பைத் தொடங்கிய போது, அசத்தின் ஆட்சி வீழும் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.

இது சிரியாவுக்கு ஒரு திருப்புமுனை நிகழ்வாகும். 29 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த தனது தந்தை ஹஃபீஸின் மரணத்திற்குப் பிறகு 2000ஆம் ஆண்டில் அசத் ஆட்சிக்கு வந்தார். தனது தந்தை ஹஃபீஸ் அல்-அசத் போலவே, பஷர் அல்-அசத்தும் இரும்புக் கரம் கொண்டே சிரியாவின் ஆட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.

கடும் கட்டுப்பாடுகளைக் கொண்ட, சிரியாவின் அடக்குமுறை அரசியல் கட்டமைப்பு பஷர் அல்-அசத்திற்கு மரபுரிமையாக கிடைத்தது. அந்த அரசியல் கட்டமைப்பில் எதிர்ப்பு என்பது கொஞ்சமும் சகித்துக்கொள்ளப்படவில்லை.

ஆரம்பத்தில், அவர் சற்று வித்தியாசமான அதிபராக இருப்பார், அதாவது அதிக வெளிப்படைத்தன்மை, குறைவான சர்வாதிகாரத்துடன் இருப்பார் என்ற நம்பிக்கைகள் இருந்தன. ஆனால், அந்த நம்பிக்கைகள் குறுகிய காலமே நீடித்தன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘அமைதிப் போராட்டங்களை வன்முறை மூலம் அடக்கியவர்’

ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதற்கு முன்னர் ரஷ்யா மற்றும் இரானின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை நசுக்கி, ஆட்சியைத் தக்கவைத்தார் அசத்

கடந்த 2011இல், தன்னுடைய ஆட்சிக்கு எதிராக எழுந்த அமைதிப் போராட்டங்களை வன்முறை மூலம் அடக்கிய மனிதராக அசத் என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது இந்த செயல், உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், அறுபது லட்சம் பேர் அகதிகளானார்கள்.

ரஷ்யா மற்றும் இரானின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை நசுக்கி, ஆட்சியைத் தக்கவைத்தார் அசத். அப்போது, ரஷ்யா அதன் வலிமையான விமான சக்தியைப் பயன்படுத்தியது. அதேநேரத்தில், இரான், சிரியாவுக்கு ராணுவ ஆலோசகர்களை அனுப்பியது. லெபனானில் இருந்து, இரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுவான ஹெஸ்பொலா, நன்கு பயிற்சி பெற்ற தனது போராளிகளை அனுப்பியது.

ஆனால், இந்த முறை அதுபோல ஏதும் நடக்கவில்லை. அவரது கூட்டாளிகள், தங்கள் சொந்த விவகாரங்களில் மூழ்கியிருந்ததால், அசாதை அவர்கள் கைவிட்டனர்.

அவர்களுடைய உதவி இல்லாமல், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS- ஹச்டிஎஸ்) என்ற இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுவால் வழிநடத்தப்படும் கிளர்ச்சியாளர்களை அசத்தின் துருப்புக்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சில பகுதிகளில் கிளர்ச்சியாளர்களை தடுத்த நிறுத்த அவர்கள் விரும்பவில்லை.

கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கிட்டத்தட்ட எந்த எதிர்ப்பும் இல்லாமல் கைப்பற்றினர். பின்னர் ஹமா நகரம் வீழ்ந்தது. சில நாட்களுக்குப் பிறகு, ஹோம்ஸின் முக்கிய மையம் கைப்பற்றப்பட்டது. இது டமாஸ்கஸை தனிமைப்படுத்தியது. சில மணி நேரங்களில், அவர்கள் அசத்தின் அதிகார மையமாக இருந்த தலைநகருக்குள் நுழைந்தனர்.

அசாத் குடும்பத்தின் ஐம்பது ஆண்டு கால ஆட்சி

சிரியா, அசத் தின் ஆட்சியின் கீழ் இரானியர்களுக்கும் ஹெஸ்பொலாவிற்கும் இடையிலான தொடர்பின் ஒரு பகுதியாக இருந்தது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிரியா, அசத்தின் ஆட்சியின் கீழ் இரானியர்களுக்கும் ஹெஸ்பொலாவிற்கும் இடையிலான தொடர்பின் ஒரு பகுதியாக இருந்தது

அசத் குடும்பத்தின் ஐம்பது ஆண்டு கால ஆட்சியின் முடிவு பிராந்தியத்தின் அதிகார சமநிலையை மாற்றியமைக்கும். இரானின் செல்வாக்கிற்கு மீண்டும் கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிரியா, அசத்தின் ஆட்சியின் கீழ் இரானியர்களுக்கும் ஹெஸ்பொலாவிற்கும் இடையிலான தொடர்பின் ஒரு பகுதியாக இருந்தது. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போராளிகள் குழுவிற்கு அனுப்பவதிலும் முக்கிய பங்கு வகித்தது.

ஹெஸ்பொலா அமைப்பு, இஸ்ரேலுடனான அதன் ஒரு வருட கால போருக்குப் பிறகு கடுமையாக பலவீனமடைந்துள்ளது. அதன் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது.

இரானிய ஆதரவு பெற்ற மற்றொரு குழுவான, ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, மீண்டும் மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இக்குழுக்கள் மட்டுமல்லாது, இராக்கில் உள்ள ஆயுதக் குழுக்கள் மற்றும் காஸாவில் உள்ள ஹமாஸ் ஆகியவற்றின் கூட்டணி, ‘எதிர்ப்பின் அச்சு’ (Axis of Resistance- இரான் தலைமையிலான கூட்டணி) என்று இரானால் விவரிக்கப்படுகிறது. இந்த கூட்டணி இப்போது பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.

இரானின் சக்தியை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கும் இஸ்ரேல், இந்த புதிய சூழ்நிலையைக் கொண்டாடும்.

அசத்  நாட்டை விட்டு வெளியேறியதைக் கொண்டாடும் சிரிய மக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அசத் நாட்டை விட்டு வெளியேறியதைக் கொண்டாடும் சிரிய மக்கள்

அடுத்து என்ன நடக்கும்?

துருக்கியின் ஆதரவு இல்லாமல் இந்த தாக்குதல் நடந்திருக்க முடியாது என்று பலர் நம்புகிறார்கள். சிரியாவில் உள்ள சில கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கும் துருக்கி, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவை ஆதரிக்க மறுத்துள்ளது.

சமீப காலமாக, துருக்கி அதிபர் ரசீப் தய்யீப் எர்துவான், இந்த மோதலுக்கு ஒரு ராஜ்ஜீய ரீதியிலான தீர்வைக் காண பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு அசத்தை வலியுறுத்தி வந்தார். அத்தகைய தீர்வு சிரிய அகதிகள் மீண்டும் வீடு திரும்ப உதவக்கூடும்.

சிரிய அகதிகளில் குறைந்தது முப்பது லட்சம் பேர் துருக்கியில் உள்ளனர். இது துருக்கியின் உள்நாட்டு பிரச்னையாக மாறியுள்ளது. ஆனால், அசத் அதை மறுத்துவிட்டார்.

அசத் நாட்டை விட்டு வெளியேறியதைக் கண்டு சிரிய மக்கள் பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் அடுத்து என்ன நடக்கும்? ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவின் கடந்த காலம் வன்முறைகளுக்குப் பெயர் போனது மற்றும் அல் கொய்தாவுடன் தொடர்புடையது.

கடந்த பல ஆண்டுகளாக, அக்குழு தங்களை ஒரு ‘தேசியவாத சக்தி’ என்று பொதுவெளியில் கட்டிக்கொள்ள பல முயற்சிகளை எடுத்துவருகிறது. அவர்களின் சமீபத்திய செய்திகள், ஒருவித ராஜ்ஜீய மற்றும் சமரச தொனியைக் கொண்டுள்ளன.

ஆனால், பலருக்கு அக்குழு மீது நம்பிக்கை இல்லை. ஆட்சியை கவிழ்த்த பிறகு, அவர்களின் அடுத்தகட்ட திட்டங்கள் என்னவாக இருக்கும் என கவலைப்படுகிறார்கள்.

இருப்பினும், கடுமையான மாற்றங்கள் ஆபத்தான அதிகார வெற்றிடத்தையும் உருவாக்கக்கூடும், இது மேலும் வன்முறை மற்றும் குழப்ப நிலைக்கு வழிவகுக்கும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.