இந்தியா – சிரியா உறவு எப்படிப்பட்டது? நேரு பயணத்தின் போது நடந்தது என்ன?
இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் தெராவில் தொடங்கின. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரை சமீபத்தில் கைப்பற்றியது கிளர்ச்சியாளர்கள் குழு.
கடந்த சில நாட்களில் கிளர்ச்சியாளர்கள் ஹோம்ஸ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினார்கள். டிசம்பர் 8ம் தேதி காலை டமாஸ்கஸையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின.
மற்றொரு புறம் குர்திஷ் போராட்டக்காரர்கள் சிரியாவின் கிழக்கு பாலைவன பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சூழலில் சிரியாவின் நிலையை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்தியர்களுக்கு பயண ஆலோசனையை வழங்கியுள்ளது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளும் சிரியாவின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளன. சிரியாவில் நடைபெறும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய நிலை என்ன?
டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் சிரியாவின் பெரும்பான்மையான பகுதிகள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டிருப்பதாகவும், அந்த நாட்டின் அதிபர் அசாத் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது.
தெராவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பிறகு, தலைநகரை நோக்கி செல்ல ராணுவம் உதவ வேண்டும் என்ற உடன்படிக்கையை கிளர்ச்சியாளர்கள் ஏற்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால், பிபிசியால் இதனை சுயதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.
ஜோர்டான் எல்லையில் தெரா அமைந்துள்ளது. மேலும், சிரியாவில் தற்போது இருக்கும் சூழலை கவனத்தில் கொண்டு ஜோர்டான் தன்னுடைய எல்லைகளை மூடியதாக அறிவித்தது.
கடந்த வாரம் ஏற்பட்ட இந்த உள்நாட்டு வன்முறையைத் தொடர்ந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்று கூறியுள்ளது ஐக்கிய நாடுகள் சபை.
இந்தியா வெளியிட்ட அறிக்கை
சிரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பயண ஆலோசனை அறிக்கையை வெள்ளிக்கிழமை இரவு (டிசம்பர் 6) வெளியிட்டது. சிரியாவில் வாழும் இந்தியர்கள் சிரியாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியது.
இதுமட்டுமின்றி சிரியாவுக்கு செல்ல இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்துடன், சிரியாவில் வாழும் இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதுமட்டுமின்றி, +963 993385973 என்ற அவசர உதவி எண்ணையும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையும் அமைச்சகம் வெளியிட்டிருந்தது. ‘சரியா’ எனும் நகரில் 90 இந்தியர்கள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சிரியாவுடனான இந்தியாவின் உறவு
இரு நாடுகளும் வரலாற்று ரீதியான உறவைக் கொண்டுள்ளன. மேலும், தற்போது சில திட்டங்களில் இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன.
கடந்த 2022ம் ஆண்டு சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் மக்தத் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அந்த வருகைக்கு பிறகு, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “சிரியாவில் மின் உற்பத்தி ஆலை மற்றும் எஃகு ஆலையை கட்ட 280 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதி உதவியை இந்தியா வழங்கும்,” என்று குறிப்பிட்டிருந்தது.
அணிசேரா இயக்கத்தையும் தாண்டி அரபு நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தினார் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
கடந்த 1957 மற்றும் 1960 ஆகிய ஆண்டுகளில் நேரு சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். சிரியாவில் செயல்பட்டு வந்த பாத் கட்சி மற்றும் அதன் தலைவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்தியிருந்தார் நேரு.
இஸ்ரேலின் பார் இலான் பல்கலைக்கழகத்தில், அரசியல் அறிவியல் பிரிவின் பேராசிரியராக பணியாற்றி வரும் முனைவர் ராமி கினாட் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், நேருவின் வருகை குறித்து உள்ளூர் பத்திரிகைகளில் நிறைய செய்திகள் வெளியானதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
நேருவின் வருகையின் போது மக்கள் உற்சாகமாக இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
“10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேருவை வரவேற்க விமான நிலையத்திற்கு வருகை புரிந்தனர். நேருவை பார்த்ததும் மக்கள் அனைவரும் ஒரே குரலாய், உலக அமைதியின் தலைவர் நேருவை வரவேற்கிறோம் என்றும், ஆசிய தலைவர் நீடூழி வாழ்க என்றும் முழக்கமிட்டதாக,” ஆராய்ச்சிக் கட்டுரையில் ராமி கினாட் குறிப்பிடுகிறார்.
கடந்த 1978 மற்றும் 1983 ஆண்டுகளில் சிரிய அதிபர் ஹஃபெஸ் அல்-அசாத் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார். 2003ம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
வாய்பாயின் அந்த பயணத்தின் போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் நவ்தேஜ் ஷர்னா. சிரியா டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் அவர், இந்தியா அரபு நாடுகளுடன், குறிப்பாக சிரியாவுடன் வலுவான உறவில் உள்ளது என்று கூறினார்.
இந்தியாவுக்கு சிரியா எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துகிறது வாஜ்பாயின் பயணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலுடன் அதிகரித்து வரும் பாதுகாப்பு தொடர்பான உறவுகள் காரணமாக, சிரியா மீதான இந்தியாவின் நிலைப்பாடு தெளிவற்று இருக்கிறதா என்ற கேள்வியை ஷர்னாவிடம் எழுப்பிய போது, இது போன்ற கூற்றுகள் ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றன, ஆனால் உண்மையில் சிரியா குறித்து எந்த குழப்பமும் இல்லை என்று அவர் கூறினார்.
அதற்கு பிறகு, 2008ம் ஆண்டு சிரிய அதிபரான பஷர் அல் அசாத் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். பிறகு, இரண்டு நாட்டிலும் உயர் மட்ட அதிகாரிகளின் ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கடந்த 2010ம் ஆண்டு அன்றைய இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா தேவி சிங் பாட்டீல் சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
அசாத் குடும்பத்தினரோடு இந்தியா நல்லுறவை பேணி வந்ததாக கூறப்படுகிறது.
பஷர் அல் அசாத்தின் தந்தையான ஹஃபெஸ் அல்-அசாத் சிரியாவை 1971ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அதன் பிறகு, இந்த கிளர்ச்சிக்கு முன்பு வரை பஷர் அல்-அசாத் சிரியாவை ஆட்சி செய்து வந்தார்.
மதச்சார்பற்ற சிரியா
கடந்த 2011ம் ஆண்டு அரபு எழுச்சி தொடங்கிய பிறகு பஷருக்கு பல்வேறு சவால்கள் எழுந்தன. ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேறுமாறு அவருக்கு அழுத்தம் ஏற்பட்டது. அமெரிக்கா இதற்கு நேரடியாக ஆதரவு வழங்கியது. ஆனால், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.
இந்த காலகட்டத்தில், இந்தியா தன்னுடைய தூதரகத்தை டமாஸ்கஸில் தொடர்ந்து நடத்தியது. மேலும், அங்கே நிலவும் பிரச்னைகளுக்கு ராணுவத்தை ஈடுபடுத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.
சிரியாவில் நடைபெற்று வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக 2013ம் ஆண்டு ஜெனீவா – II மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் , இந்த விவகாரத்தில் இந்தியாவின் பங்கு குறித்து ரஷ்யா பேசியது.
அந்த மாநாட்டில் பங்கேற்ற அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பேசினார்.
மாநாட்டில் பேசிய அவர், “சிரியாவில் நடைபெற்று வரும் பிரச்னைகளால் இந்தியாவின் நலன்கள் கேள்விக்குறியாகியுள்ளது. மேற்காசியா மற்றும் வளைகுடா பிராந்தியங்களோடு இந்தியா வரலாற்று ரீதியான உறவைக் கொண்டுள்ளது.
சிரியா மற்றும் இந்த பிராந்தியத்தில் எங்களின் இணைப்பானது வர்த்தகம் மற்றும் இந்தியர்களின் வருமானம், பாதுகாப்பு மற்றும் மின் உற்பத்தியோடு தொடர்புடையது. இந்த பிராந்தியத்தில் எழும் எத்தகைய பிரச்னைகளும் எங்களின் நலன்களை பெரியளவில் பாதிக்கும்,” என்று அவர் கூறினார்.
கடந்த 2022ம் ஆண்டு சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். “டமாஸ்கஸில் இருந்து டெல்லிக்கு வர வெறும் நான்கு மணி நேரங்களே ஆகும். இவ்விரு நாடுகளும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். சிரியாவுக்கு எது ஆபத்தாக உள்ளதோ, அது இந்தியாவுக்கும் ஆபத்தானது தான். இரு நாடுகளும் மதச்சார்பற்ற நாடுகள். இரு நாடுகளும் ஜனநாயக கொள்கைகளை நம்பும் நாடுகள்,” என்று அவர் கூறினார்.
சிரியா இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட நாடாக இருக்கலாம் ஆனால், அதன் அரசியலமைப்பில் எந்த மததத்தின் பெயரும் இடம் பெறவில்லை. சிரியா ஒரு குடியரசு நாடு. மேலும், அரசியலமைப்பு ரீதியாக சிரியா ஒரு மதச்சார்பற்ற நாடு.
கவலையை ஏற்படுத்தும் தற்போதைய நிலை
சிரிய கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாக, டிசம்பர் 8ம் தேதி காலை அறிவிக்கப்பட்டது.
25 ஆண்டுகளாக சிரியாவை ஆட்சி செய்து வந்த அசாத் தற்போது எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
ஞாயிறு காலை அசாத் டமாஸ்கஸை விட்டு வெளியேறிவிட்டதாக இரண்டு மூத்த ராணுவ அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளனர்.
துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சரும் அசாத் நாட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என்று கூறினார். ஆனால், அவர் எங்கே சென்றிருக்கக் கூடும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. அபு தாபியில் அசாத் புகலிடம் கோரியதாக வெளியாகும் செய்திகளை அமீரகம் மறுக்கவோ, ஒப்புக் கொள்ளவோ இல்லை.
ரஷ்யாவும் இத்தகைய செய்திகளையே வெளியிட்டுள்ளது. கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயுதம் தாங்கிய குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகார மாற்றம் அமைதியாக நடைபெற உத்தரவுகளை வழங்கிவிட்டு நாட்டைவிட்டு அசாத் வெளியேறியதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா அசாத்திற்கு பாரிய ஆதரவை வழங்கி வந்தது. முன்னதாக ஆயுதங்களை வழங்கிய ரஷ்யா, அசாத் பதவியில் நீடிக்கத் தேவையான உதவிகளையும் வழங்கியது.
சிரியாவில் நிலவும் பதட்டமான சூழல் அண்டை நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டானின் எல்லை மூடப்பட்ட நிலையில், தெற்கு சிரியாவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லை மூடப்பட்டதாக ஜோர்டானின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
சிரிய ராணுவ அதிகாரிகள், ஆயுதம் தாங்கிய குழுக்கள் எல்லையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
சிரிய ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் குன்றுகளில் இஸ்ரேல் அதிக துருப்புகளை அனுப்பியுள்ளது.
மேற்கத்திய நாடுகள் மீது குற்றம் சுமத்தும் சிரியா
கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதாக, பஷர் அல்-அசாத் மேற்கத்திய நாடுகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் இந்த வாரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தற்போது சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலைக்கு மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
கிளர்ச்சியாளர்களை பயங்கரவாதிகள் என்று அறிவித்த அசாத், அவர்களை அழிப்பது குறித்தும் பேசியுள்ளார்.
மேலும், இந்த பிராந்தியத்திற்கு புதிய வடிவத்தை வழங்க அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் முயற்சி செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
சிரியாவில் நிலைத்தன்மை, இறையாண்மையை பாதுகாக்க அசாத் அரசுக்குத் தேவையான உதவிகளை வழங்குவேன் என்று இரான் அதிபர் கூறியது குறிப்பிடத்தக்கது.
அசாத்தின் அரசாங்கம் அதன் கூட்டாளிகளை அதிகமாக நம்பியிருந்தது. லெபனானின் ஆயுதமேந்திய குழுவான ஹெஸ்பொலா, இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் சண்டையிட்டனர். மேலும், அசாத்தின் ஆட்சிக்கு தேவையான உதவிகளையும் வழங்கினார்கள்.
ஹெஸ்பொலாவின் புதிய தலைவர் நைம் காசிம், இஸ்ரேலும் அமெரிக்காவும் தான் சிரியாவில் தற்போது நடக்கும் நிகழ்வுகளுக்கு காரணம் என்று, இந்த வார தொடக்கத்தில் கூறினார்.
பயங்கரவாத குழுக்களுக்கு உதவுவதற்காக அசாத்தை பதவியில் இருந்து நீக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு