- எழுதியவர், ராபின் லெவின்சன் கிங்
- பதவி, பிபிசி நியூஸ்
-
புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘தி விசார்ட் ஆஃப் ஓஸ்’-இல் (The Wizard of Oz) நடிகை ஜூடி கார்லேண்ட் அணிந்திருந்த ஒரு ஜோடி ரூபி சிவப்பு காலணிகள், கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 7) அமெரிக்காவில் நடந்த ஒரு ஏலத்தில் 28 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 237 கோடி ரூபாய்) விற்கப்பட்டுள்ளன.
கடந்த 1939இல் வெளியான இந்தத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டதில், நான்கு ஜோடி காலணிகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அதில், ஒரு ஜோடி புகழ்பெற்ற ஹீல்ஸ் காலணிகள் தான் சமீபத்தில் ஏலமிடப்பட்டன. இதே காலணிகள் தான் முன்பொருமுறை மினசோட்டா அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்டன.
இதற்கான ஆன்லைன் ஏலம் ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. இந்த காலணிகளை ஏலம் விட்ட ஹெரிட்டேஜ் ஏல நிறுவனம், காலணிகளுக்கு சுமார் 25 கோடி ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் சுமார் 237 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
ஏலத்தில் இதுவரை விற்கப்பட்ட திரைப்படங்கள் தொடர்பான பழங்கால பொருட்களில், அதிக விலைக்கு ஏலம் போனது இந்த காலணிகள் தான் என்று ஹெரிட்டேஜ் ஏல நிறுவனம் கூறுகிறது.
பிரபல பாப் பாடகி அரியானா கிராண்டே நடித்த ‘விக்ட்’ (Wicked) திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இத்திரைப்படம், ‘தி விசார்ட் ஆஃப் ஓஸ்’ கதையின் முந்தைய பாகம். எனவே, இத்திரைப்படம் வெளியான பிறகு, ‘தி விசார்ட் ஆஃப் ஓஸ்’ திரைப்படம் குறித்து மீண்டும் பேசப்பட்டது.
இந்தப் பின்னணியில்தான் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காலணிகள் ஏலம் விடப்பட்டன.
‘தி விசார்ட் ஆஃப் ஓஸ்’ திரைப்படம்
‘தி விசார்ட் ஆஃப் ஓஸ்’ திரைப்படம் 1939ஆம் ஆண்டில் வெளியானபோது, அதில் நடித்த நடிகை ஜூடி கார்லேண்டுக்கு அப்போது பதினாறு வயது தான்.
பிரபல ஊடகமான ‘வெரைட்டி’ வெளியிட்ட ‘உலகின் 100 சிறந்த திரைப்படங்கள்’ பட்டியலில், இந்த திரைப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த திரைப்படம், 1900ஆம் ஆண்டில் எல்.பிராங்க் பாம் எழுதிய ‘தி வொண்டர்ஃபுல் விசார்ட் ஆஃப் ஓஸ்’ என்ற குழந்தைகள் கதை புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
புத்தகத்தின் கதைப்படி இந்த காலணிகள் வெள்ளியால் உருவானவை என்றாலும், திரைப்படக்குழுவினர் ‘டெக்னிகலர்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நினைத்ததால், படத்தில் சிவப்பு காலணிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
திரைப்படம் மற்றும் புத்தகம் இரண்டிலும், இந்த காலணிகளை வைத்து ஒரு முக்கிய காட்சி உள்ளது. அதில் கதையின் நாயகி டோரத்தி, ‘ஓஸ்’ (Oz) எனப்படும் மந்திர உலகத்தை விட்டு வெளியேறி, தனது வீட்டிற்கு திரும்புவதற்காக, தனது காலணிகளை மூன்று முறை அழுத்தி, “வீட்டைப் போல வேறு இடம் ஏதும் இல்லை” என்று மீண்டும் மீண்டும் கூறுவது போல ஒரு காட்சி உள்ளது.
படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பல ஜோடி காலணிகளில், 4 மட்டுமே இன்னும் அப்படியே உள்ளன.
அதில் ஒன்று ‘ஸ்மித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகத்தில்’ காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட காலணிகள்
ஆனால், ஏலமிடப்பட்ட இந்த காலணிகளுக்கு என தனித்துவமான வரலாறு உள்ளது. இவற்றை வைத்திருந்த, பழமையான பொருட்களை சேகரிப்பவரான மைக்கேல் ஷா 2005ஆம் ஆண்டில் மினசோட்டாவின் கிராண்ட் ராபிட்ஸில் உள்ள ‘ஜூடி கார்லேண்ட் அருங்காட்சியகத்திற்கு’ இக்காலணிகளை கடனாக வழங்கியிருந்தார்.
டெர்ரி ஜான் மார்ட்டின் என்பவர், ஒரு சுத்தியலைப் பயன்படுத்தி கண்ணாடி பெட்டியை உடைத்து காலணிகளை திருடியுள்ளார். அவற்றின் காப்பீடு மதிப்பு 1 மில்லியன் டாலர்கள் என்பதால், அந்த காலணிகளில் உண்மையான மாணிக்கக் கற்கள் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவை திருடப்பட்டன.
ஆனால் அவர் அவற்றை, திருடப்பட்ட பொருட்களை வாங்கி, விற்கும் ஒரு இடைத்தரகரின் கடைக்குக் கொண்டு சென்றபோது, அந்த மாணிக்கக் கற்கள் வெறும் கண்ணாடியால் செய்யப்பட்டவை என்பது தெரியவந்தது.
எனவே, அவர் காலணிகளை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டார். பிறகு, 2018ஆம் ஆண்டில் எஃப்.பி.ஐ முகமை காலணிகளை மீட்டது. இடைப்பட்ட 13 ஆண்டுகளில் அக்காலணிகள் எங்கு இருந்தன என்பது தெரியவில்லை.
கடந்த 2023ஆம் ஆண்டில், டெர்ரி ஜான் மார்ட்டின் தன்னுடைய 70வது வயதில், தான் காலணிகளை திருடியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
“கதை இன்னும் முடியவில்லை, டெர்ரி ஜான் மார்ட்டின் எங்கள் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து, திருடினார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் அதை வேண்டாம் என வேறு ஒருவருக்கு கொடுத்த பிறகு, அந்த காலணிகள் எங்கே இருந்தன, என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறேன்,” என்று ஜூடி கார்லேண்ட் அருங்காட்சியகத்தின் காப்பாளர் ஜான் கெல்ஷ் 2023இல் சிபிஎஸ் செய்தி முகமையிடம் கூறினார்.
“அவை நிஜ மாணிக்கங்கள் என்று நினைத்து தான் மார்ட்டின் அவற்றை விற்க கொண்டு சென்றுள்ளார். விஷயம் என்னவென்றால், இந்த விவகாரத்தில் அந்த மாணிக்கத்தை பெரும் மதிப்புடையதாக பார்க்கக்கூடாது. அந்த காலணிகள் அமெரிக்காவின் பொக்கிஷம், ஒரு தேசிய பொக்கிஷம் என்பது தான் அதன் மதிப்பே. அது தெரியாமல் அவற்றைத் திருடியது நகைப்புக்குரியதாகத் தோன்றுகிறது.” என்கிறார் ஜான் கெல்ஷ்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு