அசாம்: பொது இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிட தடை – வகுப்புவாத அரசியலா? பாஜக கூறுவது என்ன?

அசாம்: மாட்டுக் கறியை மாநில அரசு தடை செய்தது ஏன்? அதன் எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், ANI

  • எழுதியவர், டோரா அகர்வால்
  • பதவி, மூத்த செய்தியாளர், அசாமில் இருந்து பிபிசி ஹிந்திக்காக

உணவகங்கள் மற்றும் சமூகக் கூட்டங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு, இந்த வாரத் தொடக்கத்தில் அசாம் அரசு தடை விதித்தது.

இந்த நடவடிக்கை “சிறுபான்மையினருக்கு எதிரானது” என்றும், அசாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசின் நோக்கம் சமூகங்களைப் பிளவுபடுத்துவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக வடகிழக்கு மாநிலங்களில்தான் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர்.

இந்த அறிவிப்பை அம்மாநிலத்தின் அடுத்த சட்டமன்றத் தேர்தலுடன் எதிர்க்கட்சிகள் தொடர்புபடுத்துகின்றன.

மேலும் இந்த நடவடிக்கை அசாமின் கிராமப்புற பொருளாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஜார்கண்ட் தேர்தல் தோல்வியை மறைக்க முயற்சி

தனது வகுப்புவாத அரசியல் செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்ற முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, டிசம்பர் 4ஆம் தேதியன்று குவஹாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “அசாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவதை முற்றிலும் தடை செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக” கூறினார். மேலும், இனிமேல் எந்த உணவகத்திலும், ஹோட்டலிலும் மாட்டிறைச்சி வழங்கப்படாது என்றார்.

அசாமில் கால்நடை வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, 2021ஆம் ஆண்டில் தனது அரசாங்கம் கொண்டு வந்த சட்டத்தை வலுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்மா கூறினார்.

அசாமில் 2021ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பசு தடுப்புச் சட்டம் மாடுகளுக்கான வர்த்தகப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குகிறது. மேலும் இந்தச் சட்டம் இந்து மத வழிபாட்டுத் தளங்களில் இருந்து ஐந்து கிலோமீட்டர் பரப்பளவுக்குள் மாட்டிறைச்சியை விற்பனை செய்யவும் வாங்கவும் தடை செய்கிறது.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தோம், அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இப்போது அந்தச் சட்டத்தை இன்னும் கடுமையாக்குகிறோம். அசாமில் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் இனி மாட்டிறைச்சியை வழங்கவும் கூடாது, சாப்பிடவும் கூடாது” என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.

இஸ்லாமியர் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளும், அசாமில் உள்ள எதிர்க்கட்சிகளும் முதலமைச்சரின் அறிவிப்பை விமர்சித்துள்ளன.

இது 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என அவர்கள் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு வெளியான உடனே, அசாம் எம்பியும் காங்கிரஸ் தலைவருமான கௌரவ் கோகோய், “ஜார்கண்ட் தேர்தலில் பாஜக அடைந்த தோல்விக்குப் பிறகு முதல்வர் தனது தோல்வியை மறைக்க முயல்வதாக” கூறினார்.

“நிதி நெருக்கடி, பணவீக்கம், வேலையின்மை போன்ற உண்மையான பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கை இது” என்று அசாம் காங்கிரஸ் தலைவர் பூபன் போரா பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

‘ஆனால், இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்’ என்று ஹிமந்த பிஸ்வா சர்மா தனது செய்தியாளர் சந்திப்பின்போது கூறியிருந்தார்.

காங்கிரஸ் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதை விரும்புகிறதோ, அதை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் மோதல்

அசாம்: மாட்டுக் கறியை மாநில அரசு தடை செய்தது ஏன்? அதன் எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Reuters

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே வார்த்தைப் போர் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சில நாட்களுக்குப் பிறகு மாநில அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.

பிரபல காங்கிரஸ் தலைவர் ரகிபுல் ஹுசைனின் மகன் தன்ஜீல் ஹுசைன், சமகுரி சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்தார். இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் திப்லு ரஞ்சன் சர்மா வெற்றி பெற்றார்.

ஹிமந்த பிஸ்வா சர்மாவும் பாஜகவும் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதியில் மாட்டிறைச்சியைப் பரிமாறி, இந்துத்துவா சார்ந்த பிரச்னையில் அவர்களை ஏமாற்றி, வாக்காளர்களைக் கவர்ந்ததாக ரகிபுல் ஹுசைன் அப்போது குற்றம் சாட்டினார்.

ஹுசைனின் கருத்துகளை மறுத்து, காங்கிரஸ் விரும்பினால், மாநிலத்தில் மாட்டிறைச்சியைத் தடை செய்வது குறித்து தனது அரசாங்கம் பரிசீலிக்கும், என்று முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

“காங்கிரஸ் தலைவர்களின் சமீபத்திய அறிக்கைகள், தற்போதுள்ள பசு சட்டத்தை விரிவாக விவாதிக்க வேண்டும் எனத் தன்னையும் தனது குழுவையும் தூண்டியதாகவும், சட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்ததாகவும்,” மாட்டிறைச்சி குறித்தான தடையை அறிவித்தபோது சர்மா கூறினார்.

ஆனால், சர்மா கூறியதை காங்கிரஸ் தரப்பு நிராகரித்துள்ளது.

“சமீபத்திய தேர்தல்களில் வெற்றிபெற, நியாயமற்ற தந்திரமான உத்திகளை, பாஜக பயன்படுத்தியதாக எங்கள் (காங்கிரஸ்) தலைவர்கள் கூறினர். அதிகாரிகளின் மோசடியும் செயலற்ற தன்மையும் வெளிப்பட்டுள்ளதாக” அசாம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அமன் வதூத் தெரிவித்தார்.

“அமைச்சரவையின் முடிவை நிறைவேற்றுவதற்கு மாட்டிறைச்சியை ஒரு சாக்காகக் கூறி முதலமைச்சர் பின்வாங்குகிறார்” என்றும் அவர் கூறினார்.

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்

அசாம்: மாட்டுக் கறியை மாநில அரசு தடை செய்தது ஏன்? அதன் எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Getty Images

அரசியல் சொல்லாடல்கள் ஒருபுறம் இருக்க, சுமார் 34 சதவீத முஸ்லிம்களை கொண்ட (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி) அசாமில் மாட்டிறைச்சி உண்பதற்கான முழுமையான தடை தொடர்பாகப் பல முக்கிய அம்சங்கள் உள்ளன.

அசாமில் உள்ள முஸ்லிம் மக்கள்தொகையில் கணிசமான எண்ணிக்கை கொண்ட பெங்காலி முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக உணரப்படுகிறது.

அவர்கள் பெரும்பாலும் வங்கதேசத்தில் இருந்து வந்த “வெளியாட்கள்” அல்லது “சட்டவிரோதமாக குடியேறியவர்கள்” என்று விவரிக்கப்படுகிறார்கள்.

அவர்களைக் குறி வைத்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளை இந்தச் சமூக மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மக்கள் வெளியேற்ற நடவடிக்கைகள் மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

பெருமளவில், முஸ்லிம் ஆண்களைக் கைது செய்ய இது வழிவகுத்தது. இதுதவிர, அசாமில் நடத்தப்படும் மதரஸாக்களை (இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள்) இடிப்பது, பலதார மணத்திற்கு முன்மொழியப்பட்ட தடை மற்றும் “லவ் ஜிஹாதை” சமாளிக்கவும் சட்டம் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

அசாம்: மாட்டுக் கறியை மாநில அரசு தடை செய்தது ஏன்? அதன் எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், @GauravGogoiAsm

இந்தத் தடை “சிறுபான்மை சமூகத்தைத் தனிமைப்படுத்தி குறிவைக்கும் மற்றொரு சம்பவம்” என்று பெங்காலி முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர் அமைப்பான அனைத்து அசாம் சிறுபான்மை மாணவர் சங்கத்தின் தலைவர் ரெசவுல் கரீம் கூறினார்.

மாட்டிறைச்சி உண்பது தொடர்பான இந்தச் சட்டம் சமீபத்தில் அரசால் அறிவிக்கப்பட்டிருந்தாலும், 2021ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்டம் ஏற்கெனவே மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்துள்ளது.

ஆகவே, உண்மையில் புதிய சட்டம் அவசியமில்லை என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

அசாமில், பெங்காலி முஸ்லிம்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் அமினுல் இஸ்லாம், “கோவிலைச் சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடு ஏற்கெனவே இங்கு மிகவும் கடுமையாக உள்ளது” என்று வாதிட்டார்.

“கோவிலின் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு வெளியே உள்ள பகுதிகள் மிகக் குறைவு. எனவே, இந்தப் புதிய கட்டுப்பாடு முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்றும் அவர் விமர்சித்தார்.

பாஜகவின் பதில்

அசாம்: மாட்டுக் கறியை மாநில அரசு தடை செய்தது ஏன்? அதன் எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஆனால், குவஹாத்தியை சேர்ந்தவரும் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞருமான கே.வதூத் இந்தச் சட்டத்தின் “உண்மை விளைவுகள்” குறித்து எச்சரித்தார்.

“இத்தகைய சட்டங்கள் சிறுபான்மைச் சமூகங்களை மேலும் குறிவைக்கும் ஆயுதங்களாகின்றன,” மேலும் “மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன” என்று அவர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

“சமூகக் கூட்டங்கள்” மற்றும் “பொது விழாக்கள்” ஆகிய சொற்களில் உள்ள தெளிவின்மையைச் சுட்டிக்காட்டினார்.

“முஸ்லிம்கள் தங்கள் தனிப்பட்ட விழாக்களில்கூட மாட்டிறைச்சி பரிமாறுவதை இந்தப் புதிய சட்டங்கள் தடுக்கிறது” என்று அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் அமினுல் இஸ்லாம் கூறினார்.

இந்த சமீபத்திய உத்தரவு மாநிலத்தில் உள்ள அசாமிய மொழி பேசும் முஸ்லிம்களை கோபப்படுத்தியுள்ளது.

அசாம் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் வங்கியில் வேலை பார்ப்பவருமான அபித் ஆசாத், “அசாமிய மொழி பேசும் முஸ்லிம்களின் நலன்களில் பாஜக கடுமையாக நடந்துகொள்ளா விட்டாலும், அத்தகைய முடிவுகள் அவர்களையும் பாதிக்கின்றன” என்றார்.

அசாம்: மாட்டுக் கறியை மாநில அரசு தடை செய்தது ஏன்? அதன் எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Getty Images

“இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள், மாட்டிறைச்சி உண்பது தொடர்பான இந்து சமூகத்தினரின் மத உணர்வுகளைக் கவனத்தில் கொண்டுள்ளனர். இருப்பினும், தற்போதைய ஆளும் கட்சி தேவையில்லாமல் இதைப் பிரச்னையாக்குகிறது,” என்கிறார் அசாத்.

இத்தகைய செயல்கள் முஸ்லிம்களை காயப்படுத்துவதாகக் கூறும் அவர், “அவர்களைப் பாதுகாப்பு அற்றவர்களாக உணர வைத்து, குடிமக்களாக வாழ்வது பற்றிய கவலையை இது ஏற்படுத்தும்” என்று கூறுகிறார்.

அதோடு, இந்த முடிவு அசாமில் வாழும் பல உள்ளூர்ப் பழங்குடியினரில் உள்ள கிறிஸ்தவ மக்களில் ஒரு பகுதியையும் பாதிக்கும்.

பழங்குடியினர் அதிகமுள்ள டிமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள ஐக்கிய கிறிஸ்தவ மன்றத்தின் ஹயா தர்னாய், இந்த நடவடிக்கை மக்களின் தனிப்பட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறினார்.

மேலும் அவர் “பெரும்பான்மை சமூகத்தினரின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். ஆனால் எங்கள் கிராமங்களில் நாங்கள் விரும்பும் உணவை உண்ணும் உரிமை எங்களுக்கு இருக்க வேண்டும்” என்றார்.

இருப்பினும், இந்தக் கவலைகளை பாஜக புறக்கணித்துள்ளது. பாஜக அமைச்சர் அசோக் சிங்கால் பிபிசி ஹிந்தியிடம், “கோவில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி சாப்பிடுவது பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது. சரியாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, நாட்டின் மதச்சார்பற்றத் தன்மையைப் பராமரிக்கும்” என்று தெரிவித்தார்.

அதோடு, “மத அடையாளத்தின் அடிப்படையில் அரசாங்கம் முடிவுகளை எடுப்பதில்லை” என்றும் அவர் கூறினார்.

கிராமப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு

அசாம்: மாட்டுக் கறியை மாநில அரசு தடை செய்தது ஏன்? அதன் எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2021ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் ஏற்கெனவே மாநிலத்தின் கிராமப் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவித்துள்ளதாகப் பலர் கூறுகின்றனர்.

இங்கு சராசரியாகவே, விவசாயம் குறைவாக நடப்பதால் கால்நடை வர்த்தகத்தை இப்பகுதி பெரிதும் நம்பியுள்ளது.

பொருளாதார நிபுணரான ராஜீப் சுத்ரதாரின் கூற்றுப்படி, மாநிலத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் குறைந்தளவு பால் உற்பத்தியாகும் கால்நடை இனங்களை வளர்க்கிறார்கள். ஆகவே, அவர்கள் “பால் கறக்கப் பயன்படாத கால்நடைகளை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெரிதும் நம்பியுள்ளனர்” என்று ராஜீப் சுத்ரதார் விவரித்தார்.

விவசாயிகள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் எதிர்க்கட்சி எம்எல்ஏவுமான அகில் கோகோயின் கூற்றுப்படி, “அரசாங்கத்தின் இந்தப் புதிய நடவடிக்கை பொருளாதாரத்தை மோசமாக்கும்.”

“ஆற்றின் கரையோரங்களில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத பல சமூக மக்களுக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இருப்பினும், கால்நடைப் போக்குவரத்து தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகள் இந்தச் சமூகங்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கோகோய் தெரிவித்தார்.

இந்தச் சூழல், விவசாயிகள் தங்கள் கால்நடைகளைக் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளுகிறது. இதனால் கள்ளச் சந்தை உருவாகிறது. ஏழை விவசாயிகளின் செலவில் இடைத்தரகர்கள் லாபம் சம்பாதிக்கிறார்கள்.

உதாரணமாக, முன்பு ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட மாடு, தற்போது ரூ.60 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. மறுபுறம், மலிவு விலையில் இருந்த மாட்டிறைச்சியின் விலை தற்போது அதிகரித்துள்ளது.

“விலை 100 ரூபாய் முதல் 400-500 வரை உயர்ந்துள்ளது. இது ஏழை முஸ்லிம்களை மிகவும் பாதிக்கிறது” என்கிறார் கோகோய்.

காங்கிரஸ் தலைவரின் கூற்றுப்படி, “புதிய முடிவால் அனைவரும் இழப்பை சந்திப்பார்கள். இது வகுப்புவாத அரசியல் செய்யும் பாஜகவை தவிர, வேறு யாருக்கும் பயனளிக்காது.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு