by 9vbzz1


இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து, வடக்கு-கிழக்கு மாகாண சபைகளை இணைப்பதை சட்டப்படி ரத்தாக்கி அட்டகாச அரசியல் செய்த ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மாகாண சபைகள் புத்துயிர் பெறுமென எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? அமைதியான அடக்கமே இறுதியில் இடம்பெறும். 

இலங்கை அரசியலில் கடந்த இரண்டு மாதங்களாக பெருமளவில் பேசப்படும் மூன்றெழுத்து ஏகேடி என்பது. புதிய ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸநாயக்கவின் பெயரின் முதல் ஆங்கில எழுத்துகளிலானது இது.  

ஆனால், கடந்த ஒரு வாரத்துக்குள் இன்னொரு பெயர் ஆட்சித்தரப்பில் திடீரென பிரபல்யமாகியுள்ளது. அநுரவின் தேசிய மக்கள் சக்தியின் தாய் அமைப்பான ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளராக விளங்கும் ரில்வின் சில்வாவின் பெயரே அது. 

மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற அறிவிப்பின் ஊடாக ஊடகங்கள் இவரை பிரபல்யமாக்கியுள்ளன. 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ராஜிவ் காந்தியும் செய்து கொண்ட இணக்கத்தில் பிரபலமாகி, 37 வருடங்கள் ஆகியும் குறைமாத குழந்தையாகவிருக்கும் மாகாண சபைக்கு முடிவு கட்டப்படுமென பகிரங்கமாக அறிவித்ததால் இப்போது இவர் பக்கம் பலரது பார்வையும் திரும்பியுள்ளது. 

ஜே.வி.பி.யில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த உறுப்பினர்கள் இருவரில் ரில்வின் சில்வா முக்கியமானவர். ஜே.வி.பி. தோழர்கள் தம்மை லொக்கு ஐயா (பெரிய அண்ணை) என்று அழைப்பார்கள் என்று அண்மைய செவ்வி ஒன்றில் இவரே குறிப்பிட்டிருந்தார். மற்றைய மூத்த உறுப்பினர் ஜினதாச கிட்டுலேகொட. இவர்கள் இருவரும் எழுபதுகளிலிருந்தே ஜே.வி.பி.யில் இயங்கி வருபவர்கள். இவர்கள் தேர்தல்களில் போட்டியிடாதவர்களும்கூட. 

ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தாம் விலகப் போவதாக சில வாரங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா அறிவித்திருந்தார். தற்போது அமைச்சராகவிருக்கும் பிமல் ரத்நாயக்க என்ற மூத்த தோழர் இப்பதவிக்கு நியமனமாகப் போவதாகவும் செய்திகள் வந்த நிலையில், மாகாண சபைகளுக்கு மூடுவிழா என்ற அறிவிப்பை ரில்வின் சில்வா வெளியிட காரணம் என்ன? 

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு அநுர குமார திஸ்ஸநாயக்க என்னும் ஒற்றை மனிதரே முதன்மைக் காரணமென பிரபல்யமாகியுள்ள வேளையில், தேர்தல் வெற்றிக்கு தனிப்பட்ட உரிமை கோர எவரும் முடியாது என்று ரில்வின் சில்வா அண்மையில் அளித்த செவ்வி ஒன்றில் தெரிவித்த கருத்தின் சலசலப்பு ஓய்வதற்குள், மாகாண சபைகள் ஒழிக்கப்படுமென்ற கருத்தை இவர் வெளியிட்டதன் பின்னணி பற்றி பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. 

மாகாண சபை முறைமை முடிவுக்குக் கொண்டு வரப்படுமென்று தாம் குறிப்பிடவில்லையென்றும், தமது சொல்லாடலை வேறு அர்த்தத்தில் ஊடகங்கள் கையாண்டிருப்பதாகவும் அறிக்கை வாயிலாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளாராயினும், மாகாண சபை முறைமை அகற்றப்படுமென்பது ஓரளவுக்கு வெளிச்சமாகிவிட்டது என்பது மறைக்க முடியாத உண்மை. 

இவ்விவகாரம் பற்றி இப்பத்தியின் பிற்பகுதியில் மேலும் விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்னர், அநுர குமார தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசமைப்பு பற்றி ரில்வின் சில்வா கூறிய இன்னொரு கருத்தும் பரவலாக முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. தற்போதைய ஆட்சியை இலங்கையின் முதலாவது மாக்சிஸ அரசு என்றே உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் அழைத்து வருகின்றனர். அதாவது, இதனை இடதுசாரி அரசு என்று தெரிவிக்கின்றனர். இதனை ஒருபோதும் அநுர குமார மறுக்கவில்லை. ஆனால், கொழும்பு டெய்லி மிரருக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், தற்போதைய அரசாங்கம் இடதுசாரி அரசாங்கம் அல்ல என்றும், இது இடதுசாரி – ஜனநாயக – முற்போக்கு சக்திகளின் அரசாங்கம் (ழுரசள ளை ழெவ ய டநகவளைவ புழஎநசnஅநவெஇ டிரவ ழநெ ழக டநகவளைவ னநஅழஉசயவiஉ யனெ pசழபசநளளiஎந கழசஉநள) என்று புதிய நாமம் சூட்டியுள்ளார் ரில்வின் சில்வா. 

பிரித்தானிய சாம்ராஜ்யத்திலிருந்து இலங்கை 1948ல் விடுவிக்கப்பட்டபோது டொமினியன் ஆஃப் சிலோன் என்ற பெயரைப் பெற்றது. 24 வருடங்களின் பின்னர் 1972 மே மாதம் 22ம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பின் ஊடாக சிறிலங்கா குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. 

1977ல் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன தம்மை தர்மி~;டர் என அழைத்துக் கொண்டு தமது பங்குக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் தமது விருப்புக்கு ஏற்ற பகுதிகளை உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பை உருவாக்கினார். 1978 செப்டம்பரில் ஜனநாயக சோசலிஸ குடியரசு என்ற பெயரோடு இவரது புதிய அரசியலமைப்பு பிரகடனமானது. 

ஆக, 1948 முதல் 1978 வரையான முப்பது ஆண்டுகளில் இலங்கை என்பது அரசியல் யாப்பு ரீதியாக மூன்று வெவ்வேறு பெயர்களுக்கு மாற்றம் கண்டது. இப்போது, அநுர குமார அரசு புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வருமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் எவ்வாறு அமையுமென்பதை முற்கூட்டியே ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார் என்று சொல்வதற்கு ஏதுவாக அவர் ஒரு பெயரை முன்வைத்துள்ளார். 

அநுர குமார என்ன சொன்னாலும், எதனைச் செய்தாலும் அவர் ஜே.வி.பி.யின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டுமென ரில்வின் சில்வா கருதுகிறார் அல்லது எதிர்பார்க்கின்றார் என்பதை இதனூடாக பார்க்க முடிகிறது. 

ரோகண விஜேவீர தலைமையில் உருவாகி தொடர்ந்து மறைந்தும் பகிரங்கமாகவும் இயங்கிய ஜே.வி.பி. அமைப்பின் நான்காவது தலைவராக இருந்தவர் சோமவன்ச அமரசிங்க. பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலையில் அவரால் ஐந்தாவது தலைவராக நியமிக்கப்பட்டவர் அநுர குமார திஸ்ஸநாயக்க. பேச்சாலும் செயலாலும் அநுர குமார உயர்ந்தவராக சோமவன்சவின் பார்வைக்கு தெரிந்ததால் இந்த நியமனம் வழங்கப்பட்டது. 

2014ம் ஆண்டில் தலைமைப் பதவியைப் பெற்ற அநுர குமார திஸ்ஸநாயக்க ஒரு தசாப்தத்துக்குள்ளேயே அனைவரும் வியக்கத்தக்க வகையில் தேர்தல் வெற்றிகளை குவித்தார். எனினும், இவரை தாய் அமைப்பான ஜே.வி.பி.யின் பிடிக்குள் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி அனைத்து விடயங்களிலும் மட்டுப்படுத்தும் எண்ணம் ரில்வின் சில்வாவிடம் இருப்பதை மற்றைய தோழர்கள் கண்டு கொண்டனர். 

இந்தப் பின்னணியில் மாகாண சபை விவகாரம் பற்றி ரில்வின் சில்வா தெரிவித்த கருத்து பலரதும் அவதானத்துக்குள்ளானது. அநுர குமாரவின் பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாண சபைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமென்று மேலோட்டமாக மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மாகாண சபை முறைமை தொடருமா இல்லையா என்று அநுர குமாரவோ அவரின் அமைச்சர்கள் அல்லது எம்.பிக்களோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. அடுத்த வருட முற்பகுதியில் இடம்பெறவிருக்கும் உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களைத் தொடர்ந்து மாகாண சபை தேர்தல்கள் இடம்பெறுமென்றும், இப்போது அச்சபைகளுக்கு என்ன அதிகாரங்கள் உள்ளனவோ அவை இருக்குமெனவும் எந்தப் பக்கமும் முட்டுப்படாமல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தது. 

காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் இல்லாமலே மாகாண சபைகள் தொடர்ந்து இயங்குமென இதனை ஊகித்துக் கொள்ள முடிந்தது. இந்த இழுபறி நிலையில் ஒரேயடியாகப் போட்டுடைத்தவர் ரில்வின் சில்வாதான். இதனை எதற்காக மூடி மறைக்க வேண்டுமென்று அவர் எண்ணியிருக்கலாம். அல்லது ஜனாதிபதி அநுர குமாரவால் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது தத்தளிக்கும் மாகாண சபை விவகாரத்தை தாமே அறிவித்து விடுவோம் எனவும் அவர் நினைத்திருக்கக் கூடும். 

எதுவோ, பூனை சாக்குக்குள்ளிருந்து வெளியே வந்துவிட்டது. மாகாண சபையால் எதுவும் ஆகாது என்று தேர்தல் காலத்தில் சம~;டி உரிமை கேட்ட கட்சிகள் இப்போது மாகாண சபைகள் தொடர வேண்டுமென்று கேட்கிறார்கள். பதின்மூன்றாம் திருத்தத்தில் மாகாண சபை உருவாக்கத்தில் முக்கிய பங்கெடுத்து இரு நாட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இந்தியா மௌனம் காக்கிறது. 

இலங்கை இந்திய ஒப்பந்தம் எனப்படுவது ராஜிவ் காந்தியும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஒப்பம் இட்டவை என்ற நோக்கிலும், அவர்கள் இருவரும் இன்று உயிரோடு இல்லை என்ற பார்வையிலும் மோடி அரசு பதின்மூன்றாம் திருத்தத்திலும் மாகாண சபை முறைமையைத் தொடருவதிலும் அக்கறை காட்டுவதாக இல்லை. தமிழர் தரப்பு பிரதிநிதிகளுடன் இந்தியத் தரப்பு பிரமுகர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரியப்படுத்தியுள்ளனர். 

புதிய அரசியலமைப்பு உருவாக மூன்று வருடங்கள் ஆகலாமென்றும், அதுவரை மாகாண சபைகள் இயங்குமெனவும் அநுர அரசு தரப்பினர் தமிழரசாருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். பன்முகப்படுத்தப்பட்ட அரசாட்சி முறையில், மாவட்ட ரீதியாக தெரிவான எம்.பிக்களை உள்வாங்கி அந்தந்த மாவட்ட  அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் திட்டம் அநுர அரசிடம் இருப்பது தெரியவந்துள்ளது.   

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாகாண சபைகளுக்கு லைவ் சப்போர்ட் எனப்படும் இயங்குநிலை வழங்கப்படும். அதுவரை உயிராபத்து இருக்காது. அதன் பின்னர், இறுதிச் சடங்குகளோ கிரியைகளோ இடம்பெறாது ஆரவாரமின்றி அது அடக்கம் செய்யப்படும். அதற்கான முன்னறிவித்தலாகவே ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் அறிவிப்பை பார்க்க வேண்டியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்