ஒரே இரவில் 389 கைதிகள் பிகார் சிறையிலிருந்து தப்பித்தது எப்படி

பட மூலாதாரம், SWASTIK PAL

படக்குறிப்பு, கானு தான் சிறையிலிருந்து கைதிகள் தப்பித்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக பிகார் காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்
  • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

நவம்பர் 2005இல் ஒரு அமைதியான ஞாயிறு மாலை, இந்தியாவின் பிகார் மாநிலத்தில் உள்ள ஒரு பத்திரிகையாளர் வீட்டிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் பதட்டத்தோடு பேசினார்.

“சிறை மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மக்கள் கொல்லப்படுகிறார்கள். நான் கழிப்பறையில் ஒளிந்து கொண்டிருக்கிறேன்,” என்று தொலைபேசியில் அழைத்த நபர் நடுங்கிய குரலோடு பேசினார். துப்பாக்கி குண்டுகளின் சத்தம் பின்னணியில் எதிரொலித்தது.

அவர் ஏழ்மையான ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள சிறையிலிருந்து அழைத்திருந்தார். அந்த நேரத்தில், இடதுசாரி இயக்கத்தின் தாக்கம் அங்கு அதிகமாக இருந்தது.

சிதிலமடைந்த, சிவப்பு செங்கலால் கட்டப்பட்ட, காலனித்துவ கால சிறை, கைதிகளால் நிரம்பி வழிந்தது.

ஒரு ஏக்கர் பரப்பளவில் 13 முகாம்கள் மற்றும் செல்களை கொண்ட இந்த சிறை, “இருள் நிறைந்த மற்றும் அழுக்கான பகுதி” என அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

இச்சிறை முதலில் சுமார் 230 பேருக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் அங்கு 800 கைதிகள் இருந்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘மாவோயிஸ்ட் கிளர்ச்சி’

1960களின் பிற்பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள குக்கிராமமான நக்சல்பாரியில் தொடங்கிய மாவோயிஸ்ட் கிளர்ச்சி, பிகார் உட்பட இந்தியாவின் பெரும் பகுதிகளுக்கும் பரவியது.

ஏறக்குறைய 60 ஆண்டுகளாக, இவர்கள் கொரில்லாக்கள் என்றும் நக்சலைட்டுகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள், ஒரு கம்யூனிச சமுதாயத்தை நிறுவ இந்திய அரசை எதிர்த்துப் போராடினர். இதில் குறைந்தது 40,000 பேர் கொல்லப்பட்டனர்.

ஜெகனாபாத் சிறையில் எப்போது வேண்டுமென்றாலும் மோதல் நடக்கலாம் என்ற சூழலே இருந்தது. மாவோயிஸ்டுகள் மற்றும் அவர்களின் வர்க்க எதிரிகளாக கருதப்பட்ட உயர்சாதி இந்து குழுக்களைச் சேர்ந்தவர்கள் அச்சிறையில் இருந்தனர்.

தாங்கள் செய்த வன்முறை சம்பவங்களுக்கான நீதிமன்ற விசாரணைக்காக அவர்கள் காத்திருந்தனர்.

சில கைதிகளிடம் தொலைபேசிகள் இருந்தன. அவை காவலில் இருப்பவர்களிடம் லஞ்சம் கொடுத்து வாங்கப்பட்டிருந்தன. இது பாதுகாப்புக்கு பிரச்னையாக இருந்தது. ஏனென்றால் இதன் மூலம் சிறைக்குள் இருந்தபடியே தாக்குதல்களைத் திட்டமிடவும் ஒருங்கிணைக்கவும் அவர்களால் முடிந்தது.

“இந்த இடம் கிளர்ச்சியாளர்களால் நிரம்பி வழிகிறது. பலர் வெளியேறுகிறார்கள்,” என்று அப்போது இருந்த 659 கைதிகளில் ஒருவர் சிங்கிடம் முணுமுணுத்தார்.

13 நவம்பர் 2005 அன்று இரவு, பல கிளர்ச்சியாளர்கள் உட்பட 389 கைதிகள் ஜெகனாபாத் சிறையிலிருந்து தப்பினர்.

இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவில் சிறைக் கைதிகள் தப்பித்தது இங்குதான். ஆசிய அளவில் கூட மிகப்பெரியதாக இருக்கலாம்.

அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் அங்கு நிலவிய குழப்பத்தின் மத்தியில் காவல்துறை அதிகாரிகளின் துப்பாக்கிகள் சூறையாடப்பட்டன.

மாவோயிஸ்ட் எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த 30 கைதிகளை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றுள்ளனர் என்று அமெரிக்க வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்ட 2005 உலக பயங்கரவாத அறிக்கை கூறியது.

ஒரு அதிர்ச்சியூட்டும் திருப்பமாக, சிறையிலிருந்து கைதிகள் தப்பித்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் ‘அஜய் கானு’ என்றும், அவர் கைதிகளில் ஒருவராக இருந்த துடிப்புமிக்க கிளர்ச்சித் தலைவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ஒரே இரவில் 389 கைதிகள் பிகார் சிறையிலிருந்து தப்பித்தது எப்படி

பட மூலாதாரம், PRASHANT RAVI

படக்குறிப்பு, சிறையிலிருந்து கைதிகள் தப்பித்த சம்பவத்திற்கு அடுத்த நாள் காலை எடுக்கப்பட்ட படம்

‘காவல்துறை சீருடை அணிந்த கிளர்ச்சியாளர்கள்’

அச்சிறைச்சாலையில் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருந்ததன் மூலம், கானு தனது சட்டவிரோத குழுவுடன் தொலைபேசியிலும் குறுஞ்செய்திகளிலும் தொடர்பு கொண்டு, அவர்கள் உள்ளே வர உதவினார் என்று போலீசார் குற்றம்சாட்டினர். ஆனால் இது உண்மையல்ல என்கிறார் கானு.

காவல்துறை சீருடை அணிந்த நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் சிறைச்சாலைக்குப் பின்னால் உள்ள ஒரு நீரோடையைக் கடந்து, மூங்கில் ஏணிகளைப் பயன்படுத்தி உயரமான சுவர்களில் ஏறினர். உள்ளே நுழைந்து, தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

சமையலறையில் உணவு தாமதமாக சமைக்கப்பட்டதால் செல்கள் திறந்திருந்தன. கிளர்ச்சியாளர்கள் பிரதான வாயில்களுக்குச் சென்று அதன் கதவுகளைத் திறந்தனர்.

பணியில் இருந்த காவலர்கள் செய்வதறியாது இருந்தனர். தப்பித்த கைதிகளில் 30 பேர் மட்டுமே குற்றவாளிகள். மீதமுள்ளவர்கள் விசாரணைக்காகக் காத்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் வாயில்களுக்கு வெளியே தப்பித்து, இருளில் மறைந்தனர். ஒரு மணி நேரத்திற்குள் அனைத்தும் முடிந்துவிட்டதாக, இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பிகாரின் சீர்குலைந்த சட்ட ஒழுங்கு நிலை மற்றும் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான பகுதிகளில் மாவோயிஸ்ட் கிளர்ச்சி அதிகரித்திருந்ததை வெளிச்சமாக்கியது.

கிளர்ச்சியாளர்கள் சரியான நேரத்தில் திட்டமிட்டு இதைச் செய்தனர். நடந்துகொண்டிருந்த மாநில தேர்தல்களின் காரணமாக இந்த சிறைச்சாலை பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

உள்ளூர் பத்திரிக்கையாளர் ராஜ்குமார் சிங், சம்பவம் நடந்த அந்த இரவை தெளிவாக நினைவு கூர்ந்தார்.

இச்சம்பவம் குறித்து தொலைபேசியில் தெரிந்து கொண்ட பிறகு, இருசக்கர வாகனத்தில் அவர் தனது அலுவலகத்தை அடைய முயன்றார். அந்தப்பகுதி அப்போது வெறிச்சோடி இருந்தது.

தூரத்தில் கேட்ட துப்பாக்கிச் சூடு சத்தம் அவருக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. கிளர்ச்சியாளர்கள் படையெடுத்து, அருகில் இருந்த காவல் நிலையத்தையும் தாக்க முயன்றனர்.

அவர் பிரதான சாலையில் திரும்பியதும், மங்கலாகத் தெரிந்த தெருவிளக்குகளின் வெளிச்சம் ஒரு காட்சியை வெளிப்படுத்தியது.

டஜன் கணக்கான ஆயுதமேந்திய ஆண்களும் பெண்களும் காவல் சீருடையில் அவ்வழியைத் தடுத்து, ஒலிபெருக்கியின் மூலம் உரக்கப் பேசினர் .

ஒரே இரவில் 389 கைதிகள் பிகார் சிறையிலிருந்து தப்பித்தது எப்படி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சம்பவத்தன்று இரவு ஜெகனாபாத் சிறைக்கு அருகில், தயார் நிலையில் போலீசார்

“நாங்கள் மாவோயிஸ்டுகள்” என்று அவர்கள் அறிவித்தனர்.

“நாங்கள் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல, மாறாக அரசாங்கத்திற்கு மட்டுமே எதிரானவர்கள். சிறையிலிருந்து தப்பித்தது எங்கள் போராட்டத்தின் ஒரு பகுதி” என்று அவர்கள் அறிவித்தார்கள்.

கிளர்ச்சியாளர்கள் சாலையில் வெடிகுண்டுகளை வைத்திருந்தனர். அதில் சில ஏற்கனவே வெடிக்கத்தொடங்கின. அருகிலுள்ள கடைகள் இடிந்து, நகரம் முழுவதும் அச்சம் பரவியது.

சிங் தனது நான்காவது மாடி அலுவலகத்தை அடைந்தபோது, அதே கைதியிடம் இருந்து தனக்கு இரண்டாவது முறையாக அழைப்பு வந்ததாக கூறுகிறார்.

“எல்லோரும் ஓடுகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்? “என்று கைதி கேட்டார்.

“எல்லோரும் தப்பித்தால், நீங்களும் தப்பிக்க வேண்டும்” என்று சிங் கூறினார்.

பின்னர் வெறுமையான வீதிகள் வழியாக சிறைச்சாலைக்குச் சென்றார். அவர் சென்றபோது, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டார்.

சமையல் அறை முழுவதும் சோறு சிதறிடிக்கப்பட்டிருந்தது. செல் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. சிறைக்காப்பாளரோ, காவல்துறையினரோ கண்ணில் தென்படவில்லை.

சிறைக்குள், ஒரு அறையில் இரண்டு போலீசார் காயமடைந்து தரையில் கிடந்தனர்.

வன்முறைக்கு பெயர் பெற்ற உயர்சாதி நில உடைமையாளர்கள் குழுவான ‘ரன்வீர் சேனாவின்’ தலைவரான படே சர்மாவின் உடலையும் சிங் பார்த்தார். சிறையில் இருந்து தப்பிச் செல்லும் போது சர்மாவை கிளர்ச்சியாளர்கள் கொன்றதாக போலீசார் பின்னர் தெரிவித்தனர்.

ரத்தக்கறை படிந்த கையால் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் தரையில் கிடந்தன, சுவற்றிலும் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றை கிளர்ச்சியாளர்கள் விட்டுச் சென்றிருந்தனர்.

“புரட்சியாளர்களையும், போராடும் மக்களையும் கைது செய்து சிறையில் அடைத்தால், மார்க்சியப் புரட்சி வழியில் அவர்களை எப்படி சிறையிலிருந்து விடுவிப்பது என எங்களுக்குத் தெரியும் என்று இந்த அடையாளச் செயலின் மூலம் மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்க விரும்புகிறோம்” என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் எழுதியிருந்தது.

ஒரே இரவில் 389 கைதிகள் பிகார் சிறையிலிருந்து தப்பித்தது எப்படி

பட மூலாதாரம், PRASHANT RAVI

படக்குறிப்பு, கிளர்ச்சியாளர்கள் சிறையிலிருந்து வெளியேறும் போது பல துண்டு பிரசுரங்களை விட்டுச் சென்றனர்

‘கிளர்ச்சித் தலைவர் கானு’

சில மாதங்களுக்கு முன்பு, பிகாரின் தலைநகரான பாட்னாவில், சிறையிலிருந்து கைதிகள் தப்பித்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக காவல்துறையால் குற்றம் சாட்டப்படும், 57 வயதான கிளர்ச்சித் தலைவரான கானுவை நான் சந்தித்தேன்.

சம்பவத்தின் போது, ‘பிகார் காவல்துறையால் தேடப்படும் முக்கிய நபர்’ என்று ஊடக செய்திகள் அவரைச் சித்தரித்தன. காவல்துறையின் பயம் மற்றும் மரியாதை இரண்டையும் அவர் பெற்றிருந்தார்.

ஏகே- 47 துப்பாக்கியைக் கொடுத்தவுடன், உடனடியாக கானு எப்படி சிறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்தார் என்பதை அதிகாரிகள் விவரித்தனர்.

கானு, துப்பாக்கியைக் கையாள்வதில் மிகவும் திறமையானவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சர்மாவை குறிவைத்து சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுவதற்கு முன் துப்பாக்கியை லாவகமாக சுழற்றி நேர்த்தியாக அதனைக் கையாண்டார்.

இச்சம்பவம் நடந்த பதினைந்து மாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 2007இல், கானு பிகாரில் உள்ள தன்பாத்தில் இருந்து கொல்கத்தா நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது ரயில்வே பிளாட்பாரத்தில் கைது செய்யப்பட்டார்.

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, கானுவுக்கு எதிரான 45 கிரிமினல் வழக்குகளில் ஆறு தவிர மற்ற எல்லாவற்றிலும் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். மேலும், கானு ஒரு வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

ஒரு காலத்தில் மிகவும் ஆபத்தான கிளர்ச்சியாளராக இருந்த கானு, தற்போது நன்றாக உரையாடுகிறார். கைதிகள் தப்பித்த சம்பவத்தில் தனது பங்கைக் குறித்து குறைவாகவே வெளிப்படுத்துகிறார்.

தற்போது அவர் அரசியல்வாதியாகி, ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் உரிமைகளுக்காகப் போராட விரும்புகிறார்.

சிறு வயதிலிருந்தே, ரஷ்யா, சீனா மற்றும் இந்தோனீசியாவில் ஏற்பட்ட கம்யூனிஸ்ட் எழுச்சிகளைப் பற்றியும், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயியான தனது தந்தை கூறும் கதைகளைக் கேட்பதிலும் தனது இரவையும் பகலையும் செலவிட்டார் கானு.

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே, அவரது தந்தையின் தோழர்கள் புரட்சிகர அரசியலைத் தழுவும்படி கானுவை வற்புறுத்தினார்கள்.

தனது எதிர்ப்புக்குரலானது சிறுவயதிலேயே வேரூன்றியதாக அவர் கூறுகிறார்.

ஒரே இரவில் 389 கைதிகள் பிகார் சிறையிலிருந்து தப்பித்தது எப்படி

பட மூலாதாரம், SWASTIK PAL

படக்குறிப்பு, கானு, ஒரு அரசியல்வாதியாகி, ஏழை மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் உரிமைகளுக்காகப் போராட விரும்புகிறார்

‘உயர்சாதியினரின் அட்டூழியங்களுக்கு எதிரான போராட்டம்’

ஒரு கால்பந்து போட்டியில் உள்ளூர் நில உரிமையாளரின் மகனுக்கு எதிராக ஒரு கோல் அடித்த பிறகு, ஆயுதம் ஏந்திய உயர்சாதி ஆட்கள் அவர்களது வீட்டிற்குள் நுழைந்தனர் என்கிறார் அவர்

“நான் உள்ளே சென்று ஒளிந்து கொண்டேன்” என்று அச்சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

“அவர்கள் என்னையும் என் சகோதரியையும் தேடினார்கள். வீட்டைக் கொள்ளையடித்து, எல்லாவற்றையும் அழித்தார்கள். இப்படித்தான் பயத்தின் மூலம், உயர் சாதியினர் எங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

கல்லூரி காலத்தில் அரசியல் அறிவியல் படிக்கும் போது, முரணான சம்பவமாக, இந்து- தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) மாணவர் பிரிவை கானு வழிநடத்தினார்.

பட்டம் பெற்ற பிறகு, வேறு ஒரு நபருடன் இணைந்து அவர் ஒரு பள்ளியை நிறுவினார். பின்னர் கட்டடத்தின் உரிமையாளரால் வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார்.

அவரது கிராமத்திற்குத் திரும்பியதும், உள்ளூர் நில உரிமையாளருடனான மோதல் அதிகரித்தது. ஒரு உள்ளூர் நில உரிமையாளர் கொல்லப்பட்டபோது, கானு காவல்துறையால் தேடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 23. பின்னர் அவர் தலைமறைவானார்.

“அதிலிருந்து நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதி ஓடிக்கொண்டிருந்தேன். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை அணிதிரட்டுவதற்காக நான் சீக்கிரமாக வீட்டை விட்டு வெளியேறி, மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளராக சேர்ந்து, தலைமறைவானேன்” என்று அவர் கூறினார்.

கானு, தீவிர கம்யூனிஸ்ட் குழுவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) இணைந்தார்.

“எனது தொழில் விடுதலை, குறிப்பாக ஏழைகளின் விடுதலை. அது உயர் சாதியினரின் அட்டூழியங்களுக்கு எதிராக நிற்பதாக இருந்தது. அநீதி மற்றும் அடக்குமுறையை சகித்துக் கொண்டிருப்பவர்களுக்காக நான் போராடினேன்” என்றும் கானு தெரிவித்தார்.

‘சிறை ஊழலுக்கு எதிராக கைதிகள் சங்கங்கள்’

ஆகஸ்ட் 2002 இல், கானு ஒரு பிரபலமான கிளர்ச்சித் தலைவராக இருந்தார். அவரைப் பிடிக்க உதவுபவர்களுக்கு 3 மில்லியன் ரூபாய் பரிசு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது.

மற்ற கிளர்ச்சித் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கானு திட்டமிட்டிருந்தார்.

அவர் பாட்னாவில் தான் செல்ல வேண்டிய பகுதியை அடையவிருந்தபோது, பரபரப்பான சந்திப்பில் ஒரு கார் அவரை முந்திச் சென்றது.

“சில நிமிடங்களில், சாதாரண உடையில் இருந்தவர்கள் வெளியே குதித்து, துப்பாக்கிகளை இழுத்து, என்னைச் சரணடையச் சொன்னார்கள். நான் எதிர்க்கவில்லை. அவர்களுக்கு ஒத்துழைத்தேன்,” என்று அவர் கூறினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில், கானு தப்பித்துவிடுவார் என்று காவல்துறை அஞ்சியதால், பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டார்.

“சிறையில் இருந்த அனைவரையும் விட அதிக புத்திக்கூர்மை கொண்டவர் என்ற நற்பெயரை கானு கொண்டிருந்தார்” என்று ஒரு மூத்த அதிகாரி என்னிடம் கூறினார்.

ஒவ்வொரு சிறையிலும், கைதிகளுக்கான உணவுப்பொருட்கள் திருட்டு, மோசமான சுகாதாரம், லஞ்சம் ஆகியவற்றை எதிர்த்து கைதிகள் சங்கங்களை உருவாக்கினேன் என்று கானு கூறுகிறார்.

ஒரு சிறையில் மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் கானு தலைமை தாங்கினார்.

“மோதல்கள் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் நான் சிறந்த கட்டமைப்புகளைக் கோரி போராடிக்கொண்டிருந்தேன்” என்று அவர் கூறுகிறார்.

ஒரே இரவில் 389 கைதிகள் பிகார் சிறையிலிருந்து தப்பித்தது எப்படி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 2004இல், ஜெகனாபாத்தில் துப்பாக்கியுடன் கிராமவாசிகள். அந்த மாவட்டத்தில் அப்போது மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது

சிறையிலிருந்து தப்பிக்க திட்டமிட்டாரா கானு?

இந்தியச் சிறைகளில் உள்ள இடர்பாடுகள் குறித்து கூறும் கானு, ஜெகனாபாத் சிறையில் அதன் அளவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக அங்கு கைதிகள் இருந்தனர் என்று விவரிக்கிறார்.

“தூங்குவதற்கு அங்கு இடமில்லை. எனது முதல் முகாமில், 40 பேர் மட்டுமே இருக்கக்கூடிய இடத்தில் 180 கைதிகள் அடைக்கப்பட்டனர்.

எங்களில் ஐம்பது பேர் நான்கு மணி நேரம் தூங்குவோம். அவர்கள் தூங்கும் நேரம் முடியும் வரை, மற்றவர்கள் இருட்டில் உட்கார்ந்து அரட்டை அடிப்போம். நான்கு மணி நேரம் முடிந்ததும், மற்றொரு குழு தூங்கச்செல்லும். இப்படித்தான் அந்தச் சுவர்களுக்குள் வாழ்ந்தோம்” என்கிறார் கானு.

2005ஆம் ஆண்டில், கைதிகள் தப்பித்த சம்பவத்தின் போது கானு தப்பினார்.

“நாங்கள் இரவு உணவிற்காகக் காத்துக்கொண்டிருந்தபோது, துப்பாக்கிச் சத்தம் கேட்டது. வெடிகுண்டுகள், தோட்டாக்கள் என அச்சூழ்நிலை குழப்பமாக இருந்தது,” என்று அச்சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

“மாவோயிஸ்டுகள் உள்ளே புகுந்து, எங்களைத் தப்பி ஓடுமாறு சத்தமிட்டனர். எல்லோரும் இருளில் ஓடினார்கள். நான் மட்டும் அங்கேயே நின்று கொல்லப்பட வேண்டுமா?” என்று கூறுகிறார்.

இச்சம்பவம் குறித்து எளிமையாக கானு கூறுவதை பலர் சந்தேகிக்கின்றனர்.

“அவர் கூறுவது போல் இது எளிமையானது அல்ல,” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

“வழக்கமாக விரைவாகவே சமைத்துப் பரிமாறப்படும் இரவு உணவு ஏன் அன்று மட்டும் தாமதமாகத் தயாரிக்கப்பட்டது? இரவு உணவுக்குப் பின்னர் விரைவாக கைதிகளின் அறைகள் பூட்டப்படும். அதற்கு ஏன் தாமதமானது? அதுவே உள்ளே சதி நடந்ததா என்ற சந்தேகத்தை எழுப்பியது.” என்கிறார்.

ஆச்சர்யமூட்டும் வகையில், தப்பியோடிய பல கைதிகள் டிசம்பர் நடுப்பகுதியில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் தானாகவே சரணடைய முன்வந்தனர். ஆனால் கிளர்ச்சியாளர்கள் யாரும் திரும்பவில்லை.

“தப்பிக்க சூழ்ச்சி செய்தீர்களா?” என்று நான் கானுவிடம் கேட்டபோது அவர் சிரித்தார்.

“மாவோயிஸ்டுகள் எங்களை விடுவித்தனர். விடுவிப்பது அவர்களின் வேலை,” என்றும் அவர் கூறினார். மறுபடியும் அழுத்திக் கேட்டபோது கானு அமைதியானார்.

இறுதியாக அவர் சிறையில் நடந்த ஒரு கதையைப் பகிர்ந்து கொண்டபோது முரண்பாடு இன்னும் அதிகமானது. போலீஸ் அதிகாரி ஒருவர் கானுவிடம், “தப்பிக்கத் திட்டமிடுகிறீர்களா?” என்று ஒருமுறை கேட்டுள்ளார்.

“ஐயா, ஒரு திருடன் எப்போதாவது தான் என்ன திருடப் போகிறான் என்பதைச் சொல்லுவானா?” என்று கானு பதிலளித்துள்ளார்.

“சிறையிலிருந்து கைதிகள் தப்பித்த சம்பவத்தைத் திட்டமிட்டதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை” என்பதை வலியுறுத்தும் அந்த மனிதரின் வார்த்தைகள், ஏதோ ஒருவகையில் நம்பமுடியாததாகவே இருக்கின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு