- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
கோவை நகரின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய கோவை மாஸ்டர் பிளான், 1999 ஆம் ஆண்டில் புதுப்பித்திருக்கப்பட வேண்டும். ஆனால், 25 ஆண்டுகள் கடந்த பின்னும் இதுவரை திருத்தப்படவில்லை.
இந்த தாமதம் நகர வளர்ச்சிக்கும், தொழில் துறை முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டை போடுவதாக கோவை தொழில் அமைப்பினரும், கட்டுமானத் துறையினரும் வருந்துகின்றனர்.
‘‘முழுமைத் திட்டம் (Master Plan) என்பது நகரங்களின் வளர்ச்சிக்காகத் தயாரிக்கப்படும் ஒரு தொலை நோக்குத் திட்டமாகும்.
ஒரு நகரத்தில், தேவையான கட்டமைப்பு, போக்குவரத்து போன்ற வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்துவதன் மூலம், மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுமே முழுமைத் திட்டத்தின் நோக்கம்.’’ என மாஸ்டர் பிளான் குறித்து விளக்கம் தருகிறார், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் நகரப் பொறியியல் துறை பேராசிரியரும், தமிழ்நாடு நகர ஊரமைப்புத்துறை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் ஆலோசகருமான கே.பி.சுப்ரமணியம்.
நகர ஊரமைப்பு அலுவலர்களின் கருத்துப்படி, ஒரு பகுதியில், எந்த நில அளவை எண்ணில் என்ன நிலப் பயன்பாடு (குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலைகள்) இருக்க வேண்டும், எத்தகைய கட்டடங்கள் (தாழ்தள கட்டடம் அல்லது உயர் அடுக்குமாடி கட்டடம்) கட்டப்பட வேண்டும் என்பதை 20 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து வரையறுப்பதே மாஸ்டர் பிளான்.
‘‘ஒரு நகரின் எதிர்கால பொருளாதார, சமூக, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளின் தேவைகளை ஆராய்ந்து, அவை எங்கெங்கு, எந்த அளவுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வரைபடங்கள், விளக்கப் படங்கள் மற்றும் அட்டவணைகளில் விவரமாக விளக்கும் அறிக்கைதான் முழுமைத் திட்டமாகும். இதை அமல்படுத்துவதற்கான கால வரையறை 20 ஆண்டுகளாகும்.’’ என்கிறார் கே.பி.சுப்ரமணியம்.
ஆனால், வளர்ச்சியின் வேகம் மிக விரைவாக இருக்கும் நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பே நிலப்பயன்பாடு மற்றும் கட்டடங்களின் தன்மையைக் கணிப்பது கடினமான ஒன்று என்றும் அவர் கூறுகிறார்.
30 ஆண்டுகளுக்கு முந்தைய முழுமைத்திட்டம்
தமிழகத்தில் சென்னை தவிர்த்து, மற்ற நகரங்களுக்கு மாஸ்டர் பிளான் (முழுமைத் திட்டம்) தயார் செய்வதே, நகர ஊரமைப்புத் துறையின் பிரதானப் பணியாகும்.
தமிழகத்தில் தமிழ்நாடு நகர ஊரமைப்புச்சட்டம் 1971ன் அடிப்படையில்தான் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாஸ்டர் பிளானும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்பட வேண்டும்.
கோவை நகரில் தற்போது நடைமுறையில் உள்ள மாஸ்டர் பிளான், கடந்த 1994 ஆம் ஆண்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
இது கடந்த 1999 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், 25 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை திருத்தப்படவில்லை. இதில், 15 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சியும், 10 ஆண்டுகள் தி.மு.க., ஆட்சியும் நடந்துள்ளன.
அப்போது 154 சதுர கி.மீ., பரப்பில் இருந்த கோவை நகரம், இப்போது 257 சதுர கி.மீ., பரப்பிலான நகரமாக வளர்ந்துள்ளது. புறநகரங்களும் நகருடன் பின்னிப் பிணையும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளன.
30 ஆண்டுகளில் மக்கள்தொகை, மூன்று மடங்கு அதிகரித்து, தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாக இருந்த கோவை, தற்போது இரண்டாவது பெரிய நகரமாக வளர்ந்துள்ளது.அப்போது விளைநிலங்களாக இருந்த பெரும்பாலான பகுதிகள் தற்போது குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் பல்வகை பயன்பாட்டுப் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஒற்றைச்சாளர முறையில் திட்ட அனுமதி
மாஸ்டர் பிளான் வகைப்பாட்டின்படி, பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்களாக இருப்பதால், ஒவ்வொரு லே அவுட் அல்லது கட்டடங்களின் திட்ட அனுமதி பெறுவதற்கும் நில உபயோக மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.
அதற்கு தாமதம் ஏற்படுவதால், ஒற்றைச் சாளர முறையில் அனுமதி தர வேண்டுமென்று இந்திய தொழிற்கூட்டமைப்பு, கொடிசியா, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை, கிரடாய், கொசினா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக அரசின் நகர ஊரமைப்பு இயக்குநர் கணேசன்,‘‘கடந்த 25 ஆண்டுகளில் நடந்துள்ள வளர்ச்சியையும், அடுத்த 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சியையும் கணித்து, இந்த மாஸ்டர் பிளானை வடிவமைக்க வேண்டியுள்ளது. வந்துள்ள ஆட்சேபங்கள், ஆலோசனைகளைப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம். எப்படியும் இன்னும் 2 மாதங்களில் வெளியிட்டு விடுவோம்.’’ என்றார்.
கடந்த 2006–2011 இடையிலான தி.மு.க., ஆட்சியின் இறுதிக்காலத்தில், கோவை மாஸ்டர் பிளான் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கான வரைவு தயாரிக்கப்பட்டு, 2011-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகளும் பெறப்பட்டன.
ஆனால், வரைவு திருத்தப்பட்டு, இறுதி அறிக்கை வெளியாவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில், பத்தாண்டுகளாக கோவை மாஸ்டர் பிளான் புதுப்பிக்கப்படவில்லை.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும் என்று தி.மு.க., சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
பின்னர் கற்பகம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தனியார் ஆலோசனை நிறுவனத்தின் உதவியுடன் ஜிபிஎஸ் மற்றும் கள ஆய்வு நடத்தி, நிலப்பயன்பாடு, மக்கள்தொகை, வாகனப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, மாஸ்டர் பிளான் வரைவு தயாரிக்கப்பட்டது.
அதன்படி, தற்போதுள்ள கோவை உள்ளூர் திட்டக்குழுமப் பகுதியின் பரப்பு, 1,287 சதுர கி.மீ. அளவில் இருந்து 1,531 சதுர கி.மீ. ஆக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாஸ்டர் பிளான் பகுதியில் கோவை மாநகராட்சியுடன் 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள் மற்றும் 66 கிராம ஊராட்சிகளும் இணையவுள்ளன.
3,500க்கும் அதிகமான ஆட்சேபங்கள்
புதிய மாஸ்டர் பிளான் குறித்த அரசாணை, 2024 ஜனவரி 13 ஆம் தேதியன்று தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையால் வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 11ல் கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் வரைவு, இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டது.
வரும் 2041 வரையிலான கோவையின் வளர்ச்சியைக் கணக்கிட்டு, இந்த வரைவு தயாரிக்கப்பட்டு, ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகள் அனுப்ப, ஏப்ரல் 11 வரை 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இடையில் தேர்தல் வந்து விட்ட நிலையில், மே 15 வரையிலும் கால அவகாசம் நீட்டித்தும் தரப்பட்டது.
கோவையிலுள்ள தொழில், சமூக அமைப்புகள் மற்றும் கட்டுமானத் துறையினர் என பல்வேறு தரப்பினரும், ஏராளமான ஆட்சேபம் மற்றும் ஆலோசனைகளைக் குவித்து விட்டனர்.
அதே காலகட்டத்தில்தான், கோவைக்கு மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 8 நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் வரைவு வெளியிடப்பட்டு, மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
இந்த ஆட்சேபங்கள் மீதான கள ஆய்வு நடந்து வருவதாக பிபிசி தமிழிடம், கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நகர ஊரமைப்புக் குழு தலைவருமான கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘மொத்தம் 3,500க்கும் அதிகமான ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகள் வந்துள்ளதால், அவற்றின் மீது கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அந்தப் பணி முடிக்கப்பட்டு, நகர ஊரமைப்பு இயக்குநரகத்துக்கு அனுப்பப்பட்டு விடும். அதன்பின், அவர்கள் எப்போது இறுதி செய்தபின், கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் வெளியிடப்படும்.’’ என்றார்.
கட்டுமானத் தொழிலுக்கு கடும் பாதிப்பு!
மேற்கு மண்டலத்திலுள்ள பல்வேறு தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பின் இயக்குநர் நந்தகுமார் பிபிசி தமிழிடம், ‘‘மாஸ்டர் பிளான் புதுப்பிக்கப்படாத காரணத்தால், சிறிய திட்டங்களுக்கும் நில உபயோக மாற்றத்துக்கு விண்ணப்பித்து, 6 மாதங்களிலிருந்து ஓராண்டு வரை காத்திருக்க வேண்டியுள்ளது.” என்றார்.
‘‘வெளியிலிருந்து முதலீட்டாளர்கள் வர மறுப்பதோடு, இங்குள்ள தொழில் முனைவோரும் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு அவதிப்படுகின்றனர் ” என்கிறார் நந்தகுமார்.
‘‘தொழிற்சாலைக்கு அருகில் உள்ள இடத்தை விரிவாக்கம் செய்ய நினைத்தால் அது விவசாய நிலமாக ஆவணத்தில் உள்ளது. அதை மாற்றுவதற்குள் திட்டச் செலவு, இயந்திரங்களின் விலை எல்லாமே அதிகமாகி விடுகிறது. 30 ஆண்டுகளில் கோவை அபரிமிதமாக வளர்ந்துள்ள நிலையில், இனியாவது ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாஸ்டர் பிளானைப் புதுப்பிக்க வேண்டும்.’’ என்றார் அவர்
மாஸ்டர் பிளான் தாமதமாவதால், அதிகமாக பாதிக்கப்படுவது ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைதான் என்கிறார், ‘கிரடாய்’ கோவை தலைவர் குகன் இளங்கோ.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘நிலப்பயன்பாடு மாற்றம் செய்யாததால், ஒவ்வொரு திட்ட அனுமதிக்கும் மிகவும் தாமதமாகிறது. இதில் எல்லா மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்து, இறுதியில் வீடு வாங்குபவருக்கு கூடுதல் சுமையாகிறது.’’ என்கிறார்.
‘‘கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் வெளியானால்தான் நகரின் வளர்ச்சி குறித்து ஒரு தெளிவு கிடைக்கும்.’’ என்கிறார் அவர்
மாஸ்டர் பிளானில் பரிந்துரைக்கப்பட்டுள்ள திட்டங்கள்!
- கோவையில் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய மாஸ்டர் பிளானில், உக்கடம்–கணியூர், உக்கடம்–சாய்பாபா காலனி–பிளிச்சி, தண்ணீர்ப்பந்தல்–சிங்காநல்லுார்–காரணம்பேட்டை, கணேசபுரம்–காந்திபுரம்–காருண்யா நகர், உக்கடம்–வெள்ளலுார் பஸ் முனையம் என ஐந்து வழித்தடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
- வெள்ளலுார், நீலம்பூர், வெள்ளமடை ஆகிய இடங்களில், பெரிய பஸ் முனையங்கள்
- துடியலுார், நீலம்பூர்–சின்னியம்பாளையம் இடையே, பெரியநாயக்கன்பாளையம் வீட்டு வசதி வாரிய இடம், பேரூர் செட்டிபாளையம், வடவள்ளி, மதுக்கரை, குரும்பபாளையம் ஆகிய இடங்களில் இன்டர்சிட்டி பேருந்து நிலையங்ககள்.
- சங்கம்பாளையத்தில் பஸ் முனையம், கருமத்தம்பட்டி, போளுவாம்பட்டி, மதுக்கரை, சூலுார், மலுமிச்சம்பட்டி, நரசிம்மநாயக்கன் பாளையம், கோவில் பாளையம் ஆகிய இடங்களில் சரக்கு முனையங்கள்
- ராசிபாளையம், செட்டிபாளையம் மற்றும் இருகூரில் ‘மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்’ திட்டங்கள்.
- கோவையுடன் இணையும் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகளை (என்.எச்.:181, 948, 544, 81 மற்றும் 83) ஒருங்கிணைத்து, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில், 200 அடி அகலத்தில் பை–பாஸ் ரோடு.
- கோவை மாநகராட்சிப் பகுதியிலுள்ள எட்டு குளங்களையும் இணைக்கும் பசுமை வழிச்சாலை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.