கதிரை சின்னத்தில் களமிறங்கும் சுதந்திர கட்சி

by 9vbzz1

வடக்கு, கிழக்கு உட்பட சகல தொகுதிகளிலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணி கதிரை சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. 

அதற்கமைய 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுதந்திர கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்று சபை கூட்டமும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டமும் இடம்பெற்றது. 

இதன் போது உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 341 தொகுதிகளிலும்  போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவொன்றும், மறுசீரமைப்பு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பமாகும்.

அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தலைமையாகக் கொண்ட கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. 

கூட்டணி தொடர்பில் சில தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் என்ற ரீதியில் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

கதிரை சின்னத்திலேயே இம்முறை தேர்தலில் களமிறங்குவோம். எமது கூட்டணி சார்பில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கப்படும். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் ஆசனமொன்று வழங்கப்பட வேண்டும் என்பதை புதிய ஜனநாயக முன்னணியிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகின்றோம் என்றார். 

தொடர்புடைய செய்திகள்