இறக்குமதி அரிசி அடுத்த வாரம் நாட்டை வந்தடையும்?

by 9vbzz1

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசியை இறக்குமதி செய்யுமாறு அரசாங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய, பல இறக்குமதியாளர்கள் ஏற்கனவே அரிசி இறக்குமதிக்கு முன்பதிவு செய்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து குறித்த அரிசி தொகை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் அது நாட்டிற்கு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இறக்குமதியாளர்களுக்கு நேரடியாக அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க அமைச்சரவை அண்மையில் தீர்மானித்திருந்தது.

அதன்படி அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி திருத்தம் செய்யப்பட்டு, டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அரிசி இறக்குமதி செய்வதற்காக அனுமதியளிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவுக்கமைய, கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசி தொகைகள் கடைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று காலை முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் நிலவும் அரிசி நெருக்கடி தொடர்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில், அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி இன்று முதல் அரிசி கட்டுப்பாட்டு விலைக்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்