- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பகலிரவாக நடக்கும் டெஸ்டில், பிங்க் பந்தில் தான் ஒரு இரக்கமில்லா அசுரன் என்பதை மீண்டும் ஆஸ்திரேலிய அணி நிரூபித்துள்ளது.
அடிலெய்டில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 2வது டெஸ்ட் போட்டில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
தோல்விக்கு காரணம் என்ன?
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட இரு இன்னிங்ஸிலும் தங்களின் முழு திறனையும் வெளிப்படுத்தாமல் இருந்ததே தோல்விக்கான மிகப்பெரிய காரணமாகும்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்கள் சேர்த்தநிலையில் 2வது இன்னிங்ஸில் அதைவிட 5 ரன்கள் குறைவாக 175 ரன்களே சேர்த்தது.
நம்பிக்கை நட்சத்திரம் என கருதப்பட்ட ரோஹித் சர்மா, கோலி இருவருமே பேட்டிங்கில் ஏமாற்றினர்.
குறிப்பாக ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் அணியில் அவரது பங்களிப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
பெர்த் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்திய பொறுமை, கிரிக்கெட் திறன், பொறுப்புணர்வு ஆகியவை இந்த டெஸ்டில் காணப்படவில்லை.
இந்திய அணி, மின்னொளியில் பிங்க் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக பேட் செய்யவில்லை, பந்துகளை தேர்ந்தெடுத்து ஷாட்களை ஆடவில்லை.
குறிப்பாக ராகுல், கோலி ஆகியோர் பிங்க் பந்தின் வேகத்தை கணிக்காமலே இரு இன்னிங்ஸிலும் ஆடி தங்களது விக்கெட்களை இழந்தனர்.
ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சும் இந்த டெஸ்டில் பெரிதாக பேசப்படவில்லை.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட், ராணாவின் பந்துவீச்சில் மட்டும் 40 ரன்களுக்கு மேல் குவித்தார். இதனால் அடுத்த டெஸ்டில் பெஞ்சில் இருக்கும் பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப்பை களமிறக்க இந்திய அணி ஆலோசிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், ரோஹித் சர்மாவுக்கு 6-வது இடம் சரியானதா என்றும் பிரிஸ்பேன் டெஸ்டில் தொடக்க வீரராக வருவாரா என்பதும் ஆலோசிக்கப்படும்.
இந்திய அணியில் வலுவான பந்துவீச்சு இருந்தும், மின்னொளியில் பிங்க் பந்தில் பந்துவீசக் கிடைத்த வாய்ப்பை பந்துவீச்சாளர்கள் தவறவிட்டனர்.
மின்னொளியில் பந்துவீச இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்புக் கிடைத்தது.
ஒருவேளை 2வது இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றிருந்தால், பந்துவீச்சாளர்கள் திறமையை பரிசோதிக்கும் களமாக மின்னொளி இருந்திருக்கும். அதற்கு இடமில்லாமல் பேட்ஸ்மேன்கள் குறைவான ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.
அடிலெய்ட் டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கு பெருமளவு பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே காரணமாகும். இரண்டாவதாக ட்ராவிஸ் ஹெட், லாபுஷேன், மெக்ஸ்வீனி ஆகியோரின் விக்கெட்களை விரைவாக எடுக்காத பந்துவீச்சாளர்களின் பணியும் காரணமாக அமைந்துவிட்டது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி ஒரு தரப்பாக 3வது நாள் தொடக்கத்திலேயே முடிந்தது. 3வது நாளின் முதல் செஷனிலேயே ஆட்டம் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெர்த் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்த ஆஸ்திரேலிய அணி மிகவிரைவாக தங்களை மீட்டு, இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இதுவரை பிங்க் பந்தில் ஆஸ்திரேலியா மோதிய 13 டெஸ்ட் போட்டியில் 12 போட்டிகளில் வென்று அதிக வெற்றிகளைக் குவித்துள்ளது.
டெஸ்ட் தொடர் சமநிலை
இதன் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன.
இன்னும் 3 ஆட்டங்கள் மீதமுள்ளநிலையில் எந்த அணி தொடரைக் கைப்பற்றும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடிலெய்டில் பிங்க் பந்தில் நடந்த பகலிரவு போட்டிகள் பெரும்பாலும் 5 நாட்கள்வரை நடந்ததில்லை, 4 நாட்களுக்குள் முடிவு கிடைத்துள்ளது. அதேபோல இந்த டெஸ்ட் போட்டி 3வது நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களிலும், ஆஸ்திரேலிய அணி 337 ரன்களிலும் ஆட்டமிழந்து 157 ரன்கள் முன்னிலை பெற்றது.
157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணி, 175 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதையடுத்து 19 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 3.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முதல் இன்னிங்ஸில் 140 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலிய வெற்றிக்கு அடித்தளமிட்ட ட்ராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருது வென்றார்.
இங்கு 5 அங்கு 3
இந்திய அணித் தரப்பில் 5 பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். இருப்பினும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்கச் செய்யத் திணறினர்.
அனுபவம் வாய்ந்த அஸ்வினை களமிறக்கியும் இந்திய அணியால் எந்த அதிர்ச்சியையும் ஆஸ்திரேலிய அணிக்கு அளிக்க முடியவில்லை. பிங்க் பந்து மின்னொளியில் சிறப்பாக ஸ்விங் ஆகும் எனத் தெரிந்தும் இந்திய பந்துவீச்சாளர்கள் மின்னொளியில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு ஒரு விக்கெட்டுக்கு மேல் எடுக்க முடியாமல் தடுமாறினர்.
ஆனால், ஆஸ்திரேலியத் தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன் இருந்தபோதும் அவரை கடைசிவரை பந்துவீசப் பயன்படுத்தவில்லை.
ஸ்டார்க், போலந்த், கம்மின்ஸ் ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்தே இந்திய அணியை தோல்வியடைய செய்தனர். இதில் ஹேசல்வுட் காயத்தால் அணியில் இல்லாத நிலையில் போலந்தை வைத்தே ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.
பைனலுக்கு தகுதி பெறுமா இந்தியா
இந்திய அணி 3வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட இந்த டெஸ்ட் தொடரை 4-0 என கைப்பற்றுவது மிகவும் முக்கியமாகும்.
அதேபோல ஆஸ்திரேலிய அணிக்கும் இந்த தொடரை வென்று, அடுத்ததாக இலங்கைக்கு எதிராக விளையாட இருக்கும் டெஸ்ட் தொடரும் முக்கியமாகும்.
ஆனால், பெர்த் டெஸ்ட் வெற்றிக்குப்பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி, இந்த தோல்வியால் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்திய அணி தற்போது 16 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி, 6 தோல்விகளுடன் ஒரு போட்டியில் டிரா செய்து 110 புள்ளிகளுடன், 57.29 வெற்றி சதவீதத்துடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அடிலெய்ட் டெஸ்ட் வெற்றியால் 2வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, 102 புள்ளிகளுடன், 60.71 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 64 புள்ளிகளுடன் 59.26 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்தில் இருக்கிறது.
இதனால் அடுத்துவரும் 3 டெஸ்ட் போட்டிகளையும் இந்திய அணி வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறது. அடுத்த ஒரு டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், இறுதிப்போட்டிக்கு 3வது முறையாக தகுதி பெறுவது கேள்விக்குறியாகிவிடும்.
வாய்ப்பை தக்கவைக்க தவறினோம்
தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில். ” எங்களுக்கு இந்தவாரம் மோசமானதாக அமைந்துள்ளது. இந்த போட்டியை வெல்லும் அளவுக்கு நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் எங்களைவிட ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடினர்.
வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் சூழல் எங்களுக்குக் கிடைத்தது, ஆனால், அதை நாங்கள் தவறவிட்டோம் அதன்விளைவுதான் இந்த தோல்வி. பெர்த்தில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். ஆனால், ஒவ்வொரு போட்டியும் புதிய சவால்தான். அடுத்த டெஸ்ட் போட்டியை எதி்ர்நோக்கி நகர்வோம். பிரிஸ்பேன், பெர்த் நகரில் கடந்தமுறைகூட நாங்கள் சிறப்பாக விளையாடினோம்” எனத் தெரிவித்தார்
ஒரு மணிநேரத்தில் முடிந்த ஆட்டம்
இந்திய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்திருந்தது. ரிஷப் பந்த் 28, நிதிஷ் குமார் ரெட்டி 15 ரன்களுடன் இன்றைய 3வது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.
ஆட்டம் தொடங்கி ஒருமணிநேரத்துக்குள், இந்திய அணி 47 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்து 2வது இன்னிங்ஸில் 175 ரன்களில் ஆட்டமிழந்தது.
ஆட்டம் தொடங்கி ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் கடைசிப்பந்தில் 2வது ஸ்லிப்பில் இருந்த ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ரிஷப் பந்த் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டார்க் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கை, தவறாகக் கணித்து ரிஷப் பந்த் காலை முன்வைத்து ஆடியதால், பேட்டில் எட்ஜ் எடுத்து கேட்சானது.
அடுத்து களமிறங்கிய அஸ்வினும் சிறிதுநேரமே களத்தில் இருந்து போராடினார். கம்மின்ஸ் வீசிய பவுன்ஸரை தூக்கி அடிக்க முற்பட்டு கையுறையில் பட்டு விக்கெட் கீப்பர் கேரெயிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்னில் வெளியேறினார்.
அதன்பின் வந்த ஹர்சித் ராணா (0), சிராஜ்(7) இருவரும் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தனர். நிதிஷ் குமார் ரெட்டி கடைசிவரை போராடி 42 ரன்கள் சேர்த்தநிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 36.5 ஓவர்களில் 175 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்கள் முன்னிலை பெற்றது.
அதிகபட்ச ஸ்கோர்
இந்த டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் நிதிஷ் குமார் ரெட்டி சேர்த்த 42 ரன்கள்தான் இந்திய அணியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் என யாரும் இந்த அளவு ரன்களை குவிக்கவில்லை.
ஆஸ்திரேலியத் தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், போலந்த் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
19 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3.2 ஓவர்களில் 19 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது. மெக்ஸ்வீனி 10 ரன்களிலும், கவாஜா 9 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
ஹெட்டை கட்டித் தழுவிய சிராஜ்
ட்ராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் 140 ரன்கள் சேர்த்து இந்தியப் பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ய பும்ரா, சிராஜ், ராணா, நிதிஷ் முயன்றும் முடியவில்லை. இறுதியாக சிராஜ் பந்துவீச்சில் ஹெட் க்ளீன்போல்டாகினார். ஹெட் ஆட்டமிழந்து வெளியேறியபோது சிராஜ் அவரை ஸ்லெட்ஜிங் செய்து “சென்ட்ஆஃப்” செய்தார். இருவருக்கும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.
ஆனால், இன்று 2வது இன்னிங்ஸில் போலந்த் பந்துவீச்சில் சிராஜ் அடித்த ஷாட்டை ஹெட் கேட்ச் பிடித்தார். அப்போது சிராஜை எந்தவிதமான சென்ட்ஆஃபும் ஹெட் செய்யவில்லை. ஆட்டம் முடிந்தபின் ஹெட், சிராஜ் இருவரும் மைதானத்தில் கட்டி அணைத்து தங்களின் பரஸ்பர நட்பை வெளிப்படுத்தியது ஆட்டத்தின் ஹைலைட்டாக இருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.