அடிலெய்ட் டெஸ்ட்: தொடரும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் – இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கிவிட்டதா?
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
அடிலெய்டில் நடந்து வரும் பகலிரவு மற்றும் 2வது டெஸ்டில் தொடர்ந்து 2வது நாளாக ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணி தனது வாய்ப்பை நழுவவிட்டு, தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது.
டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான சதம், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விரைவாக இந்திய அணியின் 5 விக்கெட்டுகளை சாய்த்தது என ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்புகிறது.
இந்திய பேட்டர்கள் தங்களுக்கு 2வது இன்னிங்ஸில் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டதால், அணி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி இருவரால் மட்டுமே ஆட்டத்தின் போக்கைத் திருப்ப முடியும். இல்லாவிட்டால், பகலிரவு டெஸ்டில் அசுரனாகத் திகழும் ஆஸ்திரேலிய அணியின் பசிக்கு இந்திய அணி இரையாகிவிடும்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 337 ரன்களுக்கும் ஆட்டமிழந்து 157 ரன்கள் எனும் வலுவான முன்னிலையை ஆஸ்திரேலியா பெற்றது.
இந்த முன்னிலையே இந்திய அணிக்குப் பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 2வது நாள் ஆட்டநேர முடிவில், 24 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்து இன்னும் 29 ரன்கள் பின்தங்கியுள்ளது.
ஆட்டம் எப்படி செல்லும்?
மூன்றாவது செஷனில் இந்திய அணி மின்னொளியில் பேட் செய்யத் தொடங்கியதும், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களின் ஸ்விங் பந்துவீச்சை பிங்க் பந்தில் எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இரண்டாவது நாள் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இந்திய அணி தாக்குப் பிடித்திருந்தால் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பும் என்று நம்பலாம். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
இதே போக்கில் ஆட்டம் தொடர்ந்தால், 4வது நாள்கூட ஆட்டம் தாங்காது. 3வது நாளிலேயே (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டம் முடிந்தாலும் வியப்பில்லை.
இந்திய அணி இன்னும் 29 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த 29 ரன்களை கடந்து அதன் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கு நிர்ணயிக்க இந்திய அணி ஸ்கோர் செய்ய வேண்டும். ஆனால் இந்திய அணியிடம் இப்போதுள்ள நிலையில் தற்போது களத்தில் நிற்கும் ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டியை தவிர அஸ்வின் மட்டுமே உள்ளார். மற்ற வகையில் வலுவான பேட்டர்கள் யாரும் இல்லை. ரிஷப் பந்த், நிதிஷ் ரெட்டியுடைய ஆட்டத்தின் போக்குதான் இந்திய அணியின் வெற்றியைத் தீர்மானிக்கும்.
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய பேட்டர்கள்
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்டர்கள் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி பேட் செய்திருக்க வேண்டும். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகி 3 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கோலி(11), சுப்மான் கில்(28), ராகுல்(7), ஜெய்ஸ்வால்(24) எனச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், நெருக்கடி ஏற்பட்டது.
கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. ஸ்டார்க் வீசிய ஓவரில் ஹெல்மெட்டில் அடி வாங்கிய ரோஹித் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். இரு இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ரோஹித் ஏமாற்றம் அளித்தார்.
விராட் கோலி பெர்த் டெஸ்டில் சதம் அடித்து ஃபார்மை மீட்டாலும் 2வது இன்னிங்ஸில் போலந்த் பந்துவீச்சில் 4வது ஸ்டெம்பில் சென்ற பந்தைத் தொட முயன்று, அவுட்சைட் எட்ஜ் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
மின்னொளியில் ஸ்டார்க்கின் ஸ்விங் பந்தை சுப்மான் கில் எதிர்பார்க்கவே இல்லை. ஓவர் பிட்சாக கால் அருகே ஸ்டார்க் பிட்ச் செய்த பந்தை சுப்மான் கில் டிபெண்ட் செய்ய முயன்றபோது, பந்து அருமையாக இன்ஸ்விங் ஆகி, கில்லை க்ளீன் போல்டாக்கியது. தான் ஆட்டமிழந்ததைச் சற்றும் எதிர்பார்க்காத சுப்மான் கில் ஏமாற்றத்துடன் 28 ரன்களில் வெளியேறினார்.
கே.எல்.ராகுலுக்கு பவுன்சராக கம்மின்ஸ் வீசிய பந்தை, தூக்கி அடிக்க முற்பட்டு, கிளெளவில் பட்டு விக்கெட் கீப்பர் கேரெயிடம் கேட்சானது. போலந்த் பந்துவீச்சில் வந்த பவுன்சரை ஃபுல் ஷாட் அடிக்க முயன்று ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பர் கேரெயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஒட்டுமொத்தமாக மின்னொளியில் பிங்க் பந்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீசத் தொடங்கியதும், இந்திய பேட்டர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.
முக்கியமான 3வது செஷன்
பிங்க் பந்து டெஸ்டில், மின்னொளியில் நடக்கும் 3வது செஷன்தான் மிக முக்கியமானது. இந்த செஷன்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருக்கும்.
இதில் பேட்டர்கள் தாக்குப் பிடித்துவிட்டால் ஆட்டத்தைத் தங்கள் பக்கம் திருப்பிவிடலாம். அதேநேரம், பந்துவீச்சாளர்களும் மின்னொளியைப் பயன்படுத்தி பிங்க் பந்தில் விக்கெட்டை எடுக்கலாம்.
இதை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சரியாகச் செய்துவிட்டனர், இந்திய பேட்டர்கள் எச்சரிக்கையாக விளையாடத் தவறிவிட்டனர்.
ஆட்டத்தை திருப்பிய டிராவிஸ் ஹெட்
ஆஸ்திரேலிய அணி வலிமையான முன்னிலையைப் பெறுவதற்கு டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான சதம் முக்கியக் காரணம். டி20, ஒருநாள் போட்டியைப் போன்று டெஸ்ட் போட்டியில் ஆடிய ஹெட், 63 பந்துகளில் அரைசதம், அடுத்த 48 பந்துகளில் அடுத்த 50 ரன்கள் எனக் குவித்து, 111 பந்துகளில் சதம் அடித்தார். 141 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்து 99 ஸ்ட்ரைக் ரேட்டில் ஹெட் ஆடியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்கு எதிராக 19 இன்னிங்ஸ்களில் 1,052 ரன்களை டிராவிஸ் ஹெட் குவித்துள்ளார்.இதில் 4 அரைசதங்கள், 3 சதங்கள் அடங்கும், இந்திய அணிக்கு எதிராக 61.90 என்ற பிரமிப்பூட்டும் சராசரியை ஹெட் வைத்துள்ளார்.
இதுவே, மற்ற அணிகளுக்கு எதிராக அனைத்து விதமான பிரிவுகளிலும் சேர்த்து ஹெட் 54 இன்னிங்ஸ்களில் ஆடி 1,875 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
இதில் அவரின் சராசரி 39.8 மட்டுமே, 10 அரைசதங்களும், 3 சதங்களும் ஹெட் விளாசியுள்ளார். ஆனால், இந்திய அணிக்கு எதிராக 61 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அதாவது இந்திய அணிக்கு எதிராக டிராவிஸ் ஹெட் களமிறங்கும் அனைத்து ஆட்டங்களிலும் குறைந்தபட்சம் அரைசதம் அடித்துள்ளார் என்பது புரிந்து கொள்ளத்தக்கது.
இன்றைய ஆட்டத்தில் ராணாவின் பந்துவீச்சை துவம்சம் செய்த ஹெட் 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டிராவிஸ் ஹெட் வெளியேறியபோது அரங்கத்தில் உள்ள ரசிகர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
அதுமட்டுமல்லாமல் லாபுஷேனுடன் சேர்ந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப், அலெக்ஸ் கேரெயுடன் சேர்ந்து 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் என ஆஸ்திரேலிய அணிக்கு நடுவரிசையில் வலுவான கட்டமைப்பை உருவாக்கினார்.
அடித்தளமிட்ட லாபுஷேன், மெக்ஸ்வீனி
ஆஸ்திரேலிய அணி வலுவான அடித்தளத்தை உருவாக்க, 3வது செஷனில் மின்னொளியில் விக்கெட்டை இழக்காமல் ஆடிய லாபுஷேன், மெக்ஸ்வீனி பேட் செய்ததுதான் முக்கியக் காரணம்.
இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய இந்திய பந்துவீச்சாளர்கள் பலவாறாக முயன்றும் இருவரும் சிறிய வாய்ப்பைக்கூட, தவறைக்கூட செய்யாமல் களமாடினர்.
முதல்நாள் முடிவில் மெக்ஸ்வீனி 38 ரன்களிலும், லாபுஷேன் 20 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மெக்ஸ்வீனி(39), ஸ்மித்(2) இருவரையும் 13 பந்துகள் இடைவெளியில் பும்ரா ஆட்டமிழக்கச் செய்தார். முதலில் மெக்ஸ்வீனி ஆட்டமிழக்கவே, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித், அடுத்த 13 பந்துகளில் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஸ்மித்தின் மோசமான ஃபார்ம் 2வது டெஸ்டிலும் தொடர்கிறது.
லாபுஷேன் கடந்த 10 இன்னிங்ஸ்களாக மோசமான ஃபார்மில் ஆடி வந்தார், 123 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். அதில், நியூசிலாந்துக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் லாபுஷேன் அடித்த 90 ரன்களும் அடக்கம். இதன்மூலம், அவர் மற்ற ஆட்டங்களில் எடுத்த ரன்கள் குறித்த விவரம் புரியும்.
மிகவும் மோசமான ஃபார்மில் இருந்த லாபுஷேன், அடிலெய்ட் டெஸ்டுக்கு முன்பாகத் தீவிரமாக எடுத்த பயிற்சிக்குப் பலன் கிடைத்துள்ளது. 114 பந்துகளைச் சந்தித்து லாபுஷேன் அரைசதத்தை நிறைவு செய்தார்.
லாபுஷேனை ஆட்டமிழக்கச் செய்ய முதல் செஷனில் பலமுறை முயன்றும் இந்திய பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. இறுதியாக நிதிஷ் ரெட்டி பந்துவீச்சில் கட்ஷாட்டில் கல்லியில் நின்றிருந்த ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து லாபுஷேன் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான கட்டமைப்பை, விக்கெட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்கியதில் லாபுஷேன் ஆட்டம் மிக முக்கியப் பங்காற்றியது.
திணறிய இந்திய பந்துவீச்சாளர்கள்
பெர்த் டெஸ்ட் போட்டியைவிட, அடிலெய்ட் டெஸ்டில் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர் என்றுதான் கூற வேண்டும்.
இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்த சிரமங்களின் மூலம், ஆஸ்திரேலிய பேட்டர்கள் நன்கு ‘ஹோம் ஒர்க்’ செய்துள்ளனர் என்பதை உணர முடிகிறது.
குறிப்பாக டிராவிஸ் ஹெட், லாபுஷேன், மெக்ஸ்வீனி, அலெக்ஸ் கேரெ ஆகிய 4 பேரின் ஆட்டம் மற்றும் நிலைத்தன்மைதான் ஆட்டத்தின் போக்கை நீட்டித்தது.
இந்திய பந்துவீச்சாளர்களில் பும்ரா, சிராஜ் இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், நிதிஷ் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர். ஆனாலும், இதில் லாபுஷேன், ஹெட் இருவரின் விக்கெட்டையும் இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவாக வீழ்த்தியிருந்தால், ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பியிருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு