லஞ்சப் பணத்துடன் பிடிபட்ட உதவி ஆணையர் சர்ச்சைகளுக்கு பிறகு சஸ்பெண்ட் – என்ன நடந்தது?
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
உதகை நகராட்சி ஆணையராக இருந்த ஜஹாங்கீர் பாஷா, ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட பின்னும் அவரை திருநெல்வேலி உதவி ஆணையராக நியமித்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவரை ஒரு வாரத்துக்கு முன்பே பணியிடை நீக்கம் செய்து விட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார் நகராட்சி நிர்வாகங்களின் ஆணையர்.
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?
‘விதிகளை மீறி கட்டடங்களுக்கு அனுமதி’
சுற்றுலா நகரமான உதகையில் அளவுக்கு அதிகமாக அதிகரித்து வரும் கட்டுமானங்களைத் தடுக்க வேண்டுமென்று பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் போராடி வருகின்றன.
உதகை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட ஜஹாங்கீர் பாஷா மீது, விதிகளை மீறி கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதாகவும், அதற்காக பெருமளவில் லஞ்சம் வாங்குவதாகவும் நீலகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்குத் தொடர்ந்து புகார்கள் சென்றிருக்கின்றன.
அதன் அடிப்படையில் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தொடர்ந்து கண்காணிக்கத் துவங்கியுள்ளனர். அப்படிக் கண்காணித்தபோது, அவர் அலுவலகத்தில் யாரிடமும் லஞ்சம் வாங்காமல், வெவ்வேறு இடங்களில் உள்ள கடைகள், உணவகங்களில் லஞ்சப்பணத்தைக் கொடுக்கச் சொல்லி, பின்பு ஊருக்குச் செல்லும்போது மொத்தமாக அவற்றைச் சேகரித்துச் சென்றதைக் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 9-ஆம் தேதியன்று அவர் இந்த முறையில் பணத்தை சேகரித்துக் கொண்டு, தனியார் வாகனத்தில் செல்லும்போது காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, உதகை நகராட்சி கமிஷனராக ஜஹாங்கீர் பாஷா கடந்த ஆகஸ்ட்டில் பொறுப்பேற்ற பின், 36 வார்டுகளிலும் குடியிருப்புகளை வணிகக் கட்டடமாக மாற்ற அனுமதி வழங்கவும், பிரபல ஜவுளிக்கடை கட்டடத்திற்கு புதிதாக சொத்து வரி நிர்ணயிக்கவும், சேரிங்கிராஸ் பகுதியில் பார்க்கிங் ஒதுக்கீடு செய்யவும் என பல்வேறு கட்டடங்களுக்காக பெரும் தொகையை லஞ்சமாக வாங்கியுள்ளார்.
’41 கட்டடங்களில் வசூல் செய்யப்பட்ட தொகை’
கடந்த நவம்பர் 9-ஆம் தேதியன்று, அவருக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தை அலுவலகத்தில் நிறுத்திவிட்டு, தனியார் வாடகை வாகனத்தில் ஏறிக் கிளம்பியுள்ளார்.
அப்போது அவரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் பரிமளா தேவி, போலீசார் சிலருடன் வேறு ஒரு வாகனத்தில் சென்று கண்காணித்துள்ளார்.
அப்போது நகரில் வெவ்வேறு இடங்களில், சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி உணவகங்கள், கடைகளுக்குச் சென்று சிலரிடமிருந்து பைகள் மற்றும் கவர்களை அவர் வாங்கியதைப் பார்த்துள்ளனர்.
அதன்பின் கோத்தகிரி சாலையில் சென்றபோது, இரவு 7 மணிக்கு மேல் அந்த காரை பின்னால் தொடர்ந்து சென்று, தொட்டபெட்டா சந்திப்பு அருகில் காரை மடக்கிச் சோதனையிட்டுள்ளனர்.
பின்பு அந்தப் பணத்துடன் அவரை நகராட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பணத்தை எண்ணிப் பார்த்தபோது, அதில் ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் இருந்துள்ளது என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜஹாங்கீர் பாஷாவிடமிருந்த பைகளை போலீசார் சோதனையிட்டபோது, 20 ஆயிரம் ரூபாய், ஒரு லட்ச ரூபாய், ரூ.1,29,000, ரூ.2 லட்சம், ரூ.2 லட்சத்து 49 ஆயிரம் என வெவ்வேறு பைகள் மற்றும் கவர்களில் வெவ்வேறு தொகை இருந்துள்ளது.
அந்தத் தொகை ஒவ்வொன்றையும் யார் யாரிடம் எதற்காக வாங்கினேன் என்பதையும் போலீசாரிடம் ஜஹாங்கீர் பாஷா தெரிவித்துள்ளார்.
கட்டடங்களின் பரப்பளவை குறைத்து வரி விதித்தது, குடியிருப்பை கடையாக மாற்றியது என பல விதமான காரணங்களுக்காகவும் லஞ்சம் வாங்கியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
மொத்தம் 41 கட்டடங்களில் இந்த தொகையை வசூல் செய்ததை அறிந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், அந்த கட்டடங்களின் மொத்த விபரங்களையும் நகராட்சி அலுவலகத்திலிருந்து பதிவிறக்கம் செய்துள்ளனர் என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டும் அவர் கைது செய்யப்படவில்லை.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி ஊழல் தடுப்பு டிஎஸ்பி ஜெயக்குமார், ”வழக்கமாக ஒரு தனிப்பட்ட அரசு அலுவலர் தன்னிடம் லஞ்சம் கேட்பதாக யாராவது புகார் கொடுத்தால் அவரிடம் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து, அவரிடம் கொடுக்கச் சொல்லி, கொடுக்கும்போது, அவரை லஞ்சப்பணத்துடன் பிடிப்போம். அப்படிப் பிடிக்கும்போது, அவரை உடனே கைது செய்ய முடியும்.”
“ஆனால் பொதுவாக ஒரு தகவல் கிடைத்து, லஞ்சப்பணத்தை கைப்பற்றச் செல்லும்பட்சத்தில், வருவாய்த் துறையிலுள்ள மாவட்ட சிறப்பு ஆய்வுக்குழு அலுவலரிடம் தெரிவித்து அவரையும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்படித்தான் அன்றைக்கும் நீலகிரி மாவட்ட சிறப்பு ஆய்வுக்குழு அலுவலர் சீனிவாசனிடம் தெரிவித்து அவரையும் அழைத்துக் கொண்டு சென்றோம்.” என்றார்.
அதன்பின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டதாகத் தெரிவித்த டிஎஸ்பி ஜெயக்குமார், ”அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்களாகும். எந்தவொரு அரசு அலுவலர் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதுபற்றி எங்களுடைய இயக்குநர் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் அனுப்பப்படும்.” என்றார்.
‘திருநெல்வேலி உதவி ஆணையாளராக நியமனம்’
ஜஹாங்கீர் பாஷா காத்திருப்புக்குப் பின், திருநெல்வேலி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்திலும் குறிப்பாக சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதுபற்றி பாமக தலைவர் அன்புமணி மிகக்கடுமையான அறிக்கையை வெளியிட்டார்.
கோவையில் இயங்கி வரும் ஊழல் தடுப்பு இயக்கமும் இதைக் கண்டித்தும், ஜஹாங்கீர் பாஷா மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக முதல்வர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் என பலருக்கும் மனுக்களை அனுப்பியது.
ஊழல் தடுப்பு இயக்கத்தின் செயலாளரும், ஓய்வு பெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பியுமான வேலு பிபிசி தமிழிடம், ”இது மிகமிக மோசமான நடைமுறை. லஞ்சம் வாங்குவது குற்றம். அவரை கைது செய்வதற்கே சட்டத்தில் முகாந்திரங்கள் உள்ளன. அவரை கைது செய்யாமல் விட்டது தவறு. அதை விட, அவரை திருநெல்வேலி உதவி ஆணையாளராக நியமித்தது,மோசமான விஷயம்.” என்றார்.
சஸ்பெண்ட் நடவடிக்கை
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக அரசின் நகராட்சி நிர்வாகங்களின் ஆணையர் சிவராசு, ”ஜஹாங்கீர் பாஷா மீது ஏற்கெனவே சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது.” என்று தெரிவித்தார்.
உதகையில் லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட பின்பு, அவரை திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, ”வழக்கமாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் ஒரு குறிப்பு அனுப்புவார்கள். அதன்படி தொலைதுாரமாகவுள்ள வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். அதன்படி அவரை 13 நாட்கள் காத்திருப்பில் வைத்தபின் அங்கு மாற்றினோம்.” என்றார்.
துறைரீதியான சில நடைமுறைகளுக்குப் பின் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்த சிவராசு, அதற்கான உத்தரவையும் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.
கடந்த நவம்பர் 29 ஆம் தேதியன்று அந்த பணியிடை நீக்க உத்தரவை சிவராசு வழங்கியுள்ளார். ஆனால் இந்த நடவடிக்கை குறித்த தகவல் அதிகம் வெளியே தெரியாததால், அவரை திருநெல்வேலி உதவி ஆணையாளராக நியமித்தது பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையிலும் சமூக ஊடகங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.