மின் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு !

by 9vbzz1

மின் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு ! on Saturday, December 07, 2024

எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளமைக்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நீர் மின் உற்பத்தி உயர்மட்டத்தில் இருக்கும் பின்னணியில் ஏன் மக்களுக்கு அதன் பலனை பெற்றுத் தர முடியாது என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்தும் கொள்கையின்படி, இந்த ஆண்டு இரண்டு முறை மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ​​கடந்த ஒக்டோபரில் மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட இருந்த போதிலும், அது டிசம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இறுதியில், இலங்கை மின்சார சபையின் மின் கட்டணத்தை 6% முதல் 11% வரை குறைக்கும் முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்தது.

தற்போதுள்ள நிலவரத்தை பொருத்து மின்கட்டணத்தை அதிக சதவீதத்தில் குறைக்கலாம் என்று குறிப்பிட்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறித்த முன்மொழிவை நிராகரித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தாமல் தொடர்ந்தும் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று மீண்டும் முன்மொழிவு ஒன்றை முன்வைத்தது.

இது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வினவிய போது, மின்சாரக் கட்டணத்தை திருத்தினால் 1.02% என்ற குறைந்த சதவீதத்தில் செய்யலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மின் கட்டணத்தை திருத்தாமல் இருப்பதற்கு மேற்கொண்ட யோசனைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த காலத்தில் பெய்த கனமழையால் நீர்மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்திருந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி நீர்மின் உற்பத்தி 56% ஆக காணப்பட்டது.

எவ்வாறாயினும், மின்சார சபையின் முன்மொழிவு தொடர்பான தனது நிலைப்பாட்டை எதிர்வரும் வருடம் ஜனவரி 3ஆம் வாரத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்