தெற்கு சிரியாவின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் – சிக்கலில் சிரிய ராணுவம்

தெற்கு சிரியாவின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய உள்ளூர் கிளர்ச்சியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பார்பரா ப்லெட் – உஷெர், கேத்ரின் ஆர்ம்ஸ்ட்ராங்
  • பதவி, பிபிசி செய்திகள், பெய்ரூட் & லண்டன்

தெற்கு சிரியாவின் தெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்குதான் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு கிளர்ச்சி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் படைகளுடன் நடந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பிறகு உள்ளூர் கிளர்ச்சிக் குழுவினர் பல்வேறு ராணுவ தளங்களைப் கைப்பற்றிவிட்டதாக பிரிட்டனை சேர்ந்த போர் கண்காணிப்புக்குழு கூறியுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தினர் பின்வாங்க வேண்டுமென்று அவர்களுடன் ஓர் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக கிளர்ச்சிக் குழுவினரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், கிளர்ச்சியாளர்களுக்கு 100 கி.மீ தொலைவில் இருக்கும் டமாஸ்கஸ் வரையிலும் பாதுகாப்பான பாதை வழங்கப்பட வேண்டும் என்பதும் அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதி என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இந்தச் செய்திகளை பிபிசியால் சுயதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வடக்கு சிரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமியவாதிகள் தலைமையிலான கிளர்ச்சிக் குழு ஹோம்ஸ் நகரின் புறநகர்ப் பகுதிகளை அடைந்துவிட்டதாகக் கூறியுள்ள நிலையில், இந்தச் செய்தி வந்துள்ளது.

பிரிட்டனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தி சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ் (SOHR), “டிசம்பர் 6ஆம் தேதியன்று தெரா பிராந்தியத்தில் 90% பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிவிட்டதாகவும் சனாமைன் பகுதி மட்டும் இன்னும் அரசின் பிடியில் உள்ளதாகவும்” அறிவித்துள்ளது.

தெரா பிராந்தியம் ஏன் முக்கியம்?

தெரா பிராந்தியம், செயல் உத்தி மற்றும் அடையாள ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மகாண தலைநகரான தெரா ஜோர்டானுடனான சிரிய எல்லையில் அமைந்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டங்கள் தெராவில் இருந்தே துவங்கின. அது உள்நாட்டுப் போராக மாறக் காரணமானது. போரில் 5 லட்சத்திற்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டனர்.

சிரியா உள்நாட்டுப்போர், பஷர் அல் அசாத், அமெரிக்கா, ரஷ்யா, இரான், மத்திய கிழக்கு நாடுகள்,

பட மூலாதாரம், AFP

சிரியாவின் தெற்குப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு விவகாரங்களைக் கருத்தில் கொண்டு தங்களின் எல்லையை மூடிவிட்டதாக ஜோர்டான் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, தேராவுக்கு 50 கி.மீ கிழக்கில் இருக்கும் சுவெய்டா நகரில் பாதுகாப்புப் படைகள் மற்றும் ட்ரூஸ் செக்ட் சிறுபான்மைக் குழுவின் கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்நகரத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

சுவெய்டா 24 என்ற செய்தி இணையதளத்தின் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான ரியன் மரூஃப், “சிரியாவின் இதர பகுதிகளில் நடப்பதை, சிரிய விடுதலைப் போராக, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பாக மக்கள் பார்க்கிறார்கள்” என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

மற்றொருபுறம், சிரிய அரசின் கோட்டையாகக் கருதப்பட்ட டெய்ர் எஸ்ஸோர் என்ற நகரம், குர்தீஷ் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் படைகள் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளன. பாலைவன நகரமான டெய்ர் எஸ்ஸோர், சிரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு வடக்கு சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக திடீர்த் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தும் வகையிலான, கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

தெற்கு சிரியாவின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய உள்ளூர் கிளர்ச்சியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைத் தொடர்ந்து, 3,70,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல், ஏற்கெனவே மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் வடக்கு சிரிய மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமாக்குவதாக ஐ.நா கூறியுள்ளது.

தாக்குதல் நடைபெறும் நகரங்களில் முக்கியப் பகுதிகளில் வசிக்கும் சில மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர முடியாமல் தவிக்கின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு துவங்கப்பட்ட இந்தத் தாக்குதலில் 111 பொதுமக்கள் உள்பட 820 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது பிரிட்டனை சேர்ந்த எஸ்.ஓ.ஹெச்.ஆர் போர் கண்காணிப்புக் குழு.

ஹோம்ஸ் நகரின் வடக்கில் அமைந்துள்ள ஹமா பகுதியை டிசம்பர் 5ஆம் தேதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். கடந்த வாரம் அலெப்போ நகரை இழந்த அதிபர் அசாத்திற்கு, இது இரண்டாவது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

“உங்களின் நேரம் வந்துவிட்டது” என்று ஹோம்ஸ் நகர மக்களிடம், இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுவான ஹயத் தஹ்ரிர் அல் ஷாமின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி கூறியுள்ளார்.

தெற்கில், தலைநகர் டமாஸ்கஸை நோக்கி முன்னேறிச் செல்லும் கிளர்ச்சியாளர்களின் அடுத்த இலக்கு ஹோம்ஸ் நகராக இருக்கலாம்.

திணறும் ராணுவம்?

சிரியா உள்நாட்டுப்போர், பஷர் அல் அசாத், அமெரிக்கா, ரஷ்யா, இரான், மத்திய கிழக்கு நாடுகள்,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிசம்பர் 5ஆம் தேதியன்று நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான ஹமாவில் இருந்து ராணுவம் வெளியேறிய பிறகு, அந்தப் பகுதியைக் கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதிபர் அசாத், அலாவை என்ற சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். அலாவைத் சமூகத்தினர் இந்தத் தாக்குதலால் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். ஹோம்ஸ் நகரில் இருந்து அவர்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர். வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட வீடியோக்கள் அந்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியாகி வருகின்றன.

ஹோம்ஸ் புறநகரில் அமைந்திருந்த கடைசி கிராமத்திற்கும் விடுதலை வழங்கப்பட்டுவிட்டதாக தாக்குதல் நடத்திய சிரிய கிளர்ச்சிக் குழு டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

பிபிசி சுயதீனமாக இந்த நடவடிக்கைகளை உறுதி செய்யவில்லை. ஆனால் பிரிட்டனை சேர்ந்த போர் கண்காணிப்புக் குழு முன்னதாக, கிளர்ச்சியாளர்கள் நகரத்திற்கு வெளியே சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகக் கூறியிருந்தது.

கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருவதைத் தாமதப்படுத்த ரஷ்ய போர் விமானம் ரஸ்தான் அருகே உள்ள பாலத்தை தாக்கியுள்ளதாகவும் போர் கண்காணிப்புக் குழுவான SOHR தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ஹமாவில் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்த சிரிய ராணுவம் ஹோம்ஸை பாதுகாக்க முயலுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

டமாஸ்கஸை, மத்திய தரைக்கடல் கரையில் அமைந்துள்ள அலாவத்தின் முக்கியப் பகுதியோடு இணைக்கும் நகரத்தில், துருப்புகளை அரசு நீக்கிவிட்டது என்ற கூற்றை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.

தெற்கு சிரியாவின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய உள்ளூர் கிளர்ச்சியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

அசாத்தின் குடும்பம், அலாவைத் சிறுபான்மை குழுவைச் சேர்ந்தது. ஷியா இஸ்லாமியர்களின் ஓர் அங்கமாக அவர்கள் இருக்கின்றனர்.

அலாவைத் சிறுபான்மையினர் அசாத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கினார்கள். அசாத் அதிகாரத்தை தக்க வைப்பதற்கு முக்கிய அங்கமாக அவர்கள் செயல்படுகின்றனர்.

கிளர்ச்சிகள் ஒடுக்கப்படும் என்று கூறிய அசாத், மேற்கத்திய நாடுகள் இந்தப் பிராந்தியத்தின் வரைபடத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஆனால் ஆய்வாளர்கள், அசாதின் படையினர் நம்பிக்கையற்றவர்களாக மாறிவிட்டதாகவும், குறைவான வருவாய் மற்றும் உயர்மட்டங்களில் நிலவும் ஊழலை எதிர்கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

அரசு செய்தியான சனா சமீபத்தில் வெளியிட்ட செய்தி, அசாத் ராணுவத்தினருக்கு 50% சம்பள உயர்வு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இரானும் ரஷ்யாவும் இந்த ஆட்சிக்கு ஆதரவு வழங்கும் முக்கிய நட்பு நாடுகள். இந்தச் சூழலிலும் அசாத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஆனால் இதுவரை அவரது ஆட்சிக்கு வழி வகுத்து வரும் ராணுவத்திற்குத் தேவையான உதவிகளை இந்த நாடுகள் வழங்கவில்லை. மேலும் மாஸ்கோ, ரஷ்ய குடிமக்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.

டிசம்பர் 6ஆம் தேதியன்று, டமாஸ்கஸில் இருந்து வெளியேற பயணிகள் விமான போக்குவரத்து வசதிகள் இருக்கும்போதே சிரியாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா தன்னுடைய குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பொது சேவைகள்

தெற்கு சிரியாவின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய உள்ளூர் கிளர்ச்சியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யா யுக்ரேனுடனான போரில் ஈடுபட்டுள்ளது. லெபனானின் ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக இரான் பலவீனம் அடைந்துள்ளது.

சிரிய அரசாங்கம் இப்பிராந்தியத்தை தக்கவைத்துக் கொள்ள தேவையான முக்கியமான உதவிகளை ஹெஸ்பொலா செய்து வந்தது. ஆனால் தற்போது களத்தில் ஹெஸ்பொலா அமைப்பினரின் இருப்பு குறைவாகவே உள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் ஊடகங்கள், சில உறுப்பினர்கள் ஹோம்ஸ் நகரைத் தக்கவைக்க எல்லை கடந்து சிரியாவுக்குள் சென்றுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

சிரிய உள்நாட்டுப் போரில் ஏற்பட்டுள்ள இந்த கிளர்ச்சிக்கு எவ்வாறு பதிலடி தருவது என்பது குறித்து ஆலோசனை செய்ய ரஷ்ய, இரானிய அதிகாரிகள் துருக்கி அதிகாரிகளைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கி சில கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவளித்து வருகிறது. எதிர்க்கட்சியினருடன் இணைந்து அரசியல் ரீதியாக ஒரு முடிவை எட்டுங்கள் என்று துருக்கி அதிபர் ரிசெப் தய்யிப் எர்துவான் பல மாதங்களாக அசாத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தார்.

தன்னுடைய கருத்துகளுக்கு அசாத் செவிமெடுத்திருந்தால் இத்தகைய தாக்குதல் நடைபெற்றிருக்காது என்று, கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தருவதாக தய்யிப் அறிவித்திருந்தார்.

இந்தத் தாக்குதல், அன்கராவின் அனுமதி இல்லாமல் நடைபெற்று இருக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டுப் போரை நிறுத்துங்கள் – ஐ.நா

சிரியா உள்நாட்டுப்போர், பஷர் அல் அசாத், அமெரிக்கா, ரஷ்யா, இரான், மத்திய கிழக்கு நாடுகள்,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானும் ரஷ்யாவும் இந்த ஆட்சிக்கு ஆதரவு வழங்கும் முக்கிய நட்பு நாடுகள். இந்தச் சூழலிலும் அசாத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஹயத் தஹ்ரிர் அல் ஷாமின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி தன்னுடைய பிம்பத்தை மென்மையாக்கவும், சிரிய மற்றும் வெளிநாட்டு தலைவர்களுக்கு நம்பிக்கையளிக்கவும் பொதுவெளியில் அறிக்கைகளை வெளியிடுகிறார்.

ஐ.எஸ் மற்றும் அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டதாக அவர் கூறினார். சிரியாவுக்கு வெளியே நடைபெறும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேசியவாதியாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். மேலும் சிறுபான்மை குழுவினருக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சி.என்.என் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அல்-ஜல்வானி, கிளர்ச்சியாளர்களின் இலக்கு அசாத்தை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அனைத்து சிரிய மக்களுக்குமான அரசை நிறுவ வேண்டும் என்பதுதான் என்று கூறினார்.

இதற்கு முன்னதாக ஜல்வானியின் குழுவினரும் கூட்டு அமைப்புகளும் ஹமாவை முற்றுகையிட்டனர். சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த குழுவினரை விடுதலை செய்தனர். ஆனால் நகரத்திற்கு வெளியே துருப்புகள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட அலெப்போவிற்கு தெற்கே 110 கி.மீ தொலைவில் ஹமா அமைந்துள்ளது. இங்கே 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

அலெப்போவில் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சில பொதுச் சேவைகள், மருத்துவமனைகள், அடுமனைகள், மின் நிலையங்கள், குடிநீர், இணைய வசதி, தொலைத்தொடர்பு வசதி போன்ற முக்கிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர செல்வாக்கு மிக்க மனிதர்கள் தங்களின் பணியைச் செய்யுங்கள் என்று ஐ.நாவின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு