திமுக மீதான மன்னராட்சி விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா பேச்சு வி.சி.க-வின் பலவீனத்தை காட்டுகிறதா?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவில் ‘மன்னராட்சி’ என திமுகவை விமர்சனம் செய்ததற்காக ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்கவுள்ளதாக, வி.சி.க தலைவர் திருமாவளவன் சனிக்கிழமையன்று (டிசம்பர் 7) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களாட்சியே நடப்பதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தனது தரப்பு குறித்து விரைவில் விளக்கம் அளிக்க உள்ளதாகக் கூறுகிறார், வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவை முன்வைத்து சர்ச்சைகள் தொடர்வது ஏன்? ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு வி.சி.க-வுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதா?
விகடன் பிரசுரம் மற்றும் வாய்ஸ் ஆஃப் காமன் என்ற அமைப்பு சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா, வெள்ளியன்று (டிசம்பர் 6) சென்னையில் நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அம்பேத்கரின் பேரனும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டே, முன்னாள் நீதிபதி சந்துரு, வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த விழாவில், வி.சி.க தலைவர் திருமாவளவனும் பங்கேற்பதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. விக்கிரவாண்டியில் த.வெ.க.வின் முதல் மாநாட்டுக்குப் பிறகு, ‘திருமாவளவன் பங்கேற்பாரா?’ என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்ப, நிகழ்ச்சியில் பங்கேற்பதை திருமாவளவன் தவிர்த்துவிட்டார்.
திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை
வி.சி.க-வின் இந்த முடிவு அரசியல்ரீதியாகப் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தவே, டிசம்பர் 6 அன்று எட்டு பக்க அறிக்கை ஒன்றை திருமாவளவன் வெளியிட்டிருந்தார்.
அதில், ‘யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்-பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்’ என நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதைத் தவிர்த்தது குறித்துக் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்துத் தனது அறிக்கையில் பேசியிருந்த அவர், “தி.மு.க மற்றும் வி.சி.க இடையில் உள்ள நட்புறவில் கருத்து முரண்களை எழுப்பி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும் விரிசலை உருவாக்குவதும்தான் இதன் நோக்கமாக இருக்க முடியும்” எனவும் விமர்சித்திருந்தார்.
அந்த அறிக்கையில், ‘தன்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர் அதற்கு எப்படி இடம் கொடுக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதோடு, “நமக்கு என்ன ஆதாயம் என்று கணக்குப் பார்க்காமல் நமது கொள்கை பகைவர்களின் நோக்கம் நிறைவேற இடம் கொடுத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடுதான் முடிவெடுக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.
வி.சி.க-வுக்கு பலவீனமா?
இந்த அறிக்கையைச் சாடும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி, “25 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் இருக்கும் திருமாவளவனின் வாக்கு வங்கிக்கு இந்த நிகழ்ச்சியால் எந்த பாதிப்பும் வரப் போவதில்லை” எனக் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியை முதிர்ச்சியுடன் திருமாவளவன் அணுகியிருக்கலாம். நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதன் மூலம் தன்னுடைய பலவீனத்தை திருமாவளவன் காட்டுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
அதேநேரம், திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை நூல் வெளியீட்டு விழாவிலும் எதிரொலித்தது. நிகழ்ச்சியில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், “உங்கள் கூட்டணிக் கணக்குகளை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” எனப் பெயர் குறிப்பிடாமல் தி.மு.க-வை விமர்சித்தார்.
திருமாவளவன் குறித்துப் பேசும்போது, “அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. ஆனாலும், அவர் மனம் முழுக்க நம்முடன்தான் இருக்கும்” எனப் பேசினார்.
ஆதவ் அர்ஜுனாவின் மன்னராட்சி விமர்சனம்
இதையே மேடையில் குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, “ஒரு பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் முதல்வராக வேண்டும் என ஒலித்த முதல் குரலாக, விஜயின் குரல் உள்ளது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை உரக்கச் சொல்வோம்” என்றார்.
“ஊழலையும் மதவாதத்தையும் முன்வைத்து விஜய் பேச வேண்டும்” எனக் குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, “வேங்கை வயல் பிரச்னையை இன்றளவும் தீர்க்க முடியாததற்கு யார் காரணம்?” எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டால் தவறு என்கிறார்கள். இங்கு மன்னராட்சி நடக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும். தமிழ்நாட்டில் புதிய அரசியலை உருவாக்குவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள்” என்றார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு வி.சி.க தரப்பிலும் தி.மு.க நிர்வாகிகள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவன் சொன்னது என்ன?
இதற்கு திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் விளக்கம் அளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து எனக்கு எந்தவித அழுத்தமும் வரவில்லை” எனக் கூறினார்.
“நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்பதை சுதந்திரமாக முடிவெடுத்தேன். ஒருவர் அழுத்தம் கொடுத்து இணங்கக்கூடிய அளவுக்கு நான் பலவீனன் அல்ல” எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
தி.மு.க ஆட்சியை ஆதவ் அர்ஜுனா விமர்சித்தது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த திருமாவளவன், “கடந்த முறை இதுதொடர்பாக உயர்நிலைக் குழுவில் பேசினோம். தனது தரப்பில் அவர் சில விளக்கங்களை அளித்தார்” என்றார்.
அப்போது, “கூட்டணியை யாருடன் வைக்க வேண்டும் என்பது தலைமை எடுக்கும் முடிவு. ஆனால், எளிய மக்களுக்கு அதிகாரம் வேண்டுமென நான் பேசுவதற்கு உரிமை இல்லையா?” என ஆதவ் அர்ஜுனா கேட்டதாகக் குறிப்பிட்டார் திருமாவளவன்.
மேலும், “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று வி.சி.க முன்வைக்கும் கருத்தையே தான் பிரதிபலித்ததாக ஆதவ் அர்ஜுனா கூறினார். ஆனால், தற்போதைய சூழலில் அவர் பேசியுள்ள கருத்து 100 சதவீதம் தவறானது” என்றார்.
“மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசை மன்னராட்சி என விமர்சிப்பதை ஏற்க முடியாது. கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அவருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்போம்” எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.
இதுகுறித்து, ஆதவ் அர்ஜுனாவிடம் பிபிசி தமிழ் பேசிய போது, “கட்சித் தலைமையிடம் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்தால் அதற்கு பதில் அளிப்பேன். இதுகுறித்து விரைவில் விரிவாகப் பேசுகிறேன்” என்று மட்டும் பதில் அளித்தார்.
உதயநிதி ஆவேசம்
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சனிக்கிழமை அன்று பங்கேற்ற உதயநிதி, “பிறப்பால் யாரும் இங்கே முதலமைச்சர் ஆகவில்லை. மக்களால் தேர்ந்தெடுத்துதான் பொறுப்புகளில் இருக்கிறோம். இங்கே மக்களாட்சிதான் நடக்கிறது” என்றார்.
அதோடு, இந்த அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பதாகவும் உதயநிதி கோபத்தை வெளிப்படுத்தினார்.
“தி.மு.க மீதான விமர்சனத்தை ஒரு பொருட்டாகவே நாங்கள் மதிக்கவில்லை” என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்.
“அரசியலில் தி.மு.க-வின் தகுதிக்கேற்ற கருத்து ஏதேனும் இருந்தால் அதைப் பொருட்படுத்தலாம்” எனக் கூறிய கான்ஸ்டன்டைன், “அம்பேத்கரின் புகழ், அவர் கனவு கண்ட இந்தியா ஆகிய எதுவும் நூல் வெளியீட்டு விழா மேடையில் எதிரொலிக்கவில்லை” என்றார்.
கூட்டணி அழுத்தம் என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, “இதைவிட திருமாவளவனை வேறு யாரும் இழிவுபடுத்த முடியாது” என வி.சி.க-வின் முன்னணி நிர்வாகிகளே கூறுவதாகக் குறிப்பிட்டார் கான்ஸ்டன்டைன்.
நூல் வெளியீட்டு விழா குறித்துப் பேசியவர், “நாட்டில் நடக்கும் ஆயிரம் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று” என்று கூறுகிறார் கான்ஸ்டன்டைன்.
திருமாவளவன் செய்யத் தவறியது என்ன?
“இந்த நிகழ்வுகளின் மூலம் வி.சி.க-வில் இருந்து ஆதவ் அர்ஜுனா வெளியேறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகப் பார்க்க முடிகிறது” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “வி.சி.க-வில் ஒரு சாரார், ‘புதிய கூட்டணிக்குப் போக வேண்டும்; புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என நினைக்கின்றனர். அதற்கு வடிவம் கொடுக்கும் நபராக ஆதவ் அர்ஜுனா இருக்கிறார். அவர் தலித் அல்லாதவராக இருப்பதுதான் பிரச்னை” என்கிறார்.
“அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்ட மன்னராட்சி என்ற கருத்து, தி.மு.க-வுக்கு ஏற்புடையதாக இல்லை” எனக் கூறும் ஷ்யாம், “வி.சி.க-வுக்குள் இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக” குறிப்பிட்டார்.
அதற்கான காரணத்தைப் பட்டியலிட்ட ஷ்யாம், “வி.சி.க-வில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ என்று குறிப்பிட்ட சிலர், தி.மு.க கூட்டணிதான் வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். அவர்களில் சிலர் தி.மு.க ஆதரவாளர்களாகவும் உள்ளனர். தொடக்கத்தில், ‘ஆட்சியில் பங்கு’ என ஆதவ் அர்ஜுனா பேசும்போதே, இதைத் தவிர்ப்பதற்கு திருமாவளவன் முயன்றிருக்க வேண்டும்.
ஆனால், அப்படி எந்த முயற்சிகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. அப்படியென்றால் அவர் இருவேறு மனநிலையில் இருந்திருப்பதையே இது காட்டுகிறது” எனக் கூறுகிறார்.
தி.மு.க கூட்டணியை விட்டு வெளியே போனால் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை வி.சி.க உணர்ந்துள்ளதாகக் கூறும் ஷ்யாம், “தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள், அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றனர். இதற்கு திருமாவளவன் இரையாவதற்கு வாய்ப்பில்லை” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு