சென்னை ஐஐடி: பள்ளி மாணவர்கள் மீது எதற்காக சோதனை நடத்தப்பட்டது – என்ன சர்ச்சை?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
-
சென்னை ஐஐடி நிர்வாகம் பள்ளி மாணவர்கள் மீது நடத்திய சோதனை ஒன்று சர்ச்சையாகியுள்ளது.
ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய காலணி உட்செருகல் (காலணிகளுக்கு உள்ளே, பாதம் வைக்கப்படும் இடத்தில், உட்செருகப்பட்டிருக்கும் பொருள் -ஆங்கிலத்தில் சோல் எனப்படும்) அணியவைத்து, அதன் பயன்பாடு குறித்து ஐஐடி சார்பில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை தங்கள் அனுமதியின்றி நடைபெற்றதாக பெற்றோர்கள் புகார் எழுப்பியிருந்தனர்.
இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை நேற்று (டிச.6) இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தியது.
ஆய்வில் ஈடுபட்ட ஐஐடி ஆசிரியருக்கு (faculty) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. வனவாணி பள்ளியின் தலைமையாசிரியர் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சோதனையில் பங்கேற்ற மாணவரின் பெற்றோர் ஒருவர் பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு பிபிசி தமிழிடம் பேசினார்.
“எங்களது புகார்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் தெரிவித்துள்ளோம். இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.” என்றார்
மேலும் பேசிய அவர், இந்த ஆய்வின் போது, மனித உடலுடன் தொடர்பு ஏற்படவில்லை என்று ஐஐடி கூறியிருப்பது தவறு என்கிறார்.
“எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என 80 நாட்களுக்கும் மேலாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த ஆய்வை சிலர் வீடியோ பதிவு செய்திருந்தனர். அதனை காண்பிக்க சொல்லி பல வாரங்களாக கேட்டு வருகிறோம்” என்றார்.
என்ன நடந்தது?
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்துக்குள்ளே வனவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி (ஐஐடி மெட்ராஸ் கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் பள்ளி) உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி, இந்தப் பள்ளியின் மாணவர்களிடம் புதிய காலணி உட்செருகலின் பயன்பாடு குறித்து சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையை சென்னை ஐஐடியின் ஆசிரியர் ஒருவர் (faculty) மற்றும் அவரது மாணவர்கள் நடத்தியுள்ளனர்.
மாணவர்கள் புதிய காலணி உட்செருகலை தங்கள் காலணிகளுக்குள்ளே அணிந்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பின்னர் அதன் பயன்பாடு குறித்து ஸ்மார்ட் வாட்ச் மூலம் கண்காணிக்கப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
ஐஐடி நடத்திய சோதனையில் பங்கேற்றதைக் குறித்து, ஒரு மாணவி பேசுவதை அவரின் பெற்றோர் காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
அதில் “வகுப்பறையில் இருந்து மைதானத்திற்கு அழைத்து வந்தார்கள். ஒருத்தர் என் காலணியில் உட்செருகலை அணிந்துவிட்டார். இன்னொருவர் கையில் ஸ்மார்ட் கடிகாரத்தை அணிந்துவிட்டார். இந்த கருவிகள் பொருந்தாத இரண்டு மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பிவிட்டார்கள். இடுப்பில் கையை வைத்துக்கொண்டு குதிக்க சொல்லி கேட்டார்கள். இவை நடக்கும் சமயத்தில் உடற்கல்வி ஆசிரியர் உடன் இல்லை. எப்படி குதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஒரு நபர் இதை கேமராவில் பதிவு செய்தார். பிறகு மைதானத்தைச் சுற்றி நடக்க சொன்னார்கள். மூச்சிரைத்ததால் தண்ணீர் கேட்டோம். விரைவில் முடிந்துவிடும், பின்னர் குடிக்கலாம் என்றனர். திரும்பவும் ஓடச் செய்தார்கள். இதனால் எங்களுக்கு மிகவும் களைத்துப்போனது” என கூறியுள்ளார்
இந்த சோதனை பெற்றோர்களின் அனுமதியுடன் நடைபெறவில்லை என்று பெற்றோர்கள் தரப்பிலிருந்து பள்ளி நிர்வாகத்திடமும், பின்னர் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடமும் புகார் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உண்மை அறியும் குழுவை சென்னை ஐஐடி அமைத்திருந்தது.
‘இப்போது பாதிப்பில்லை, இனிமேல் பெற்றோர் அனுமதி பெறப்படும்’
சென்னை ஐஐடி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆகஸ்ட் 19-ம் தேதி வனவாணி பள்ளியில் குறைந்த செலவிலான ஸ்மார்ட் காலணி உட்செருகலின் பயன்பாடு குறித்து புரிந்து கொள்வதற்காக ஒரு சோதனை நடத்தப்பட்டது. கிளினிகல் ட்ரையல் (புதிய மருந்துகள், மருத்துவ சிகிச்சைகளை மனிதர்கள் மீது சோதித்து பார்க்கும் சோதனை) அல்லது மருத்துவ உபகரணம் குறித்து சோதனைகள் நடத்தப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடலின் உள்ளே உட்புகும்படியான நடைமுறைகள் எதுவும் செய்யப்படவில்லை. சோதனையின் போதும், சோதனைக்கு முன்பும் மாணவர்களுக்கு திடமாகவும், திரவமாகவும் உணவு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் காலணிகளுக்குள், ஸ்மார்ட் காலணி உட்செருகல் வைக்கப்பட்டு, நடப்பது எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பது சோதனை செய்யப்பட்டதாகவும், பத்து நிமிடங்களுக்கும் குறைவாகவே நடைபெற்ற இந்த ஆய்வின் போது மனித உடலில் எங்கும் தொடர்பு ஏற்படவில்லை எனவும், சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் தரவுகளை சேகரிக்க ஸ்மார்ட் கைகடிகாரம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
“இந்த ஆய்வை நடத்திய ஆசிரியரின் கூற்றுப்படி, இது சாத்தியக்கூறுக்கான சோதனை மட்டுமே. மருத்துவ சோதனை அல்ல, எனவே பெற்றோர்களின் முன் அனுமதி தேவைப்படாது” என்று சென்னை ஐஐடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த விவகாரத்தை பள்ளி நிர்வாகம் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதால் பள்ளியின் தலைமையாசிரியர் மாற்றப்பட்டுள்ளார் என்று சென்னை ஐஐடி தெரிவிக்கிறது.
”இந்த ஆய்வை நடத்திய சென்னை ஐஐடியின் ஆசிரியர் எச்சரிக்கப்பட்டுள்ளார். சாத்தியக்கூறுக்கான சோதனை நடத்தும் முன்பு பெற்றோர்களிடமிருந்து முன் அனுமதி பெறுவதை உறுதிப்படுத்தாதற்காக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஆகஸ்ட் 19-ஆம் தேதியன்றே உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது” என்றும் சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
உண்மை அறியும் குழு கண்டுப்பிடித்தது என்ன?
அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி பள்ளி நிர்வாகக் குழு செயலாளர் ராமன் குமார் பெற்றோருக்கு அனுப்பிய கடிதத்தில், ”சென்னை ஐஐடி அமைத்த உண்மை அறியும் குழுவின் கண்டுபிடிப்புகளின்படி, ஆய்வின் போது மாணவர்களுக்கு ஸ்டிமுலண்ட் (உடலை ஊக்கப்படுத்தும் திரவம்) எதுவும் வழங்கப்படவில்லை, உடலுக்குள் உட்புகும் சிகிச்சை முறைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை” என்று பதிலளித்திருந்தார்.
எனவே மாணவர்களின் உடல் நலன் மீது எந்த தாக்கமும் இல்லை என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநருக்கு அனுப்பப்பட்ட புகார் கடிதத்தில், தங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாகவும், அதை சமர்ப்பிக்க விருப்பப்படுவதாகவும் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புகாரை ஏற்ற மனித உரிமைகள் ஆணையம்
மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் பெற்றோர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் விதிகள் 2019, மருந்து மற்றும் அழகுசாதனப்பொருட்கள் சட்ட 1940 ஆகியவற்றை மீறி பள்ளி மாணவர்கள் மீது சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி கண்ணதாசன், “பெற்றோர் அளித்த புகாரை விசாரிக்க ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இது குறித்து நடத்தியுள்ள விசாரணையின் அறிக்கைகளும் பெறப்படும்” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்
‘குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை வேண்டும்’
குழந்தை உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன், பள்ளிகளில் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு கொள்கை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
கும்பகோணம் தீ விபத்து முதல் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்கள் முகாமில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் வரை கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடைபெற்ற மாணவர்களை பாதித்த சம்பவங்களை பட்டியலிட்ட அவர், குறிப்பிட்ட சம்பவங்களுக்கான எதிர்வினையை மட்டுமே பள்ளிக்கல்வித்துறை வழங்குகிறது என்று குற்றம் சாட்டுகிறார்.
“சென்னை அரசு பள்ளியில் ஒருவர் ஆற்றிய உரை சர்ச்சையான பிறகே, பள்ளிகளுக்குள் யார் வரலாம் வரக்கூடாது என்று யோசிக்கப்படுகிறது” என்றார்.
மேலும், ”ஐஐடியில் நடைபெற்ற சோதனை எந்த நிறுவனத்துக்காக நடத்தப்பட்டது. அதிலிருந்து எந்த கருவியை உருவாக்கப் போகிறார்கள்? யாருக்காக மாணவர்கள் பயன்படுத்தப்பட்டனர்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
கல்வி நிலையங்களில் குழந்தைகள் நலன் குறித்த கொள்கை உருவாக்கினால் பள்ளியின் தலைமை ஆசிரியரே அந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுத்துவிட முடியும் என்கிறார் தேவநேயன்.
“எது சரி, எது தவறு என்று உடனடியாக கூறும் வகையில் அந்த கொள்கை ஆவணம் இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு