காட்ஸிலா படத்தின் வரலாறு; ஜப்பான் அணு குண்டு தாக்குதல்

பட மூலாதாரம், Alamy

இஷிரோ ஹோண்டாவின் மிக முக்கியமான திரைப்படம், காட்ஸிலா.

கடந்த 1954ஆம் ஆண்டில் வெளியான அந்தத் திரைப்படம், ஜப்பானில் நிகழ்ந்த ஒரு பெரிய துயரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவானது.

சினிமா என்பதைத் தாண்டி, இந்தப் படம் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறது.

இந்த ஆண்டின் ‘Godzilla x Kong: The New Empire’ திரைப்படத்தில் கிங் காங்குடன் இணையும் பிங்க் வால் கொண்ட சூப்பர் ஹீரோவாக, இன்று பலருக்கும் காட்ஸிலா நினைவில் இருக்கலாம்.

ஆனால், 1970களில் ஹன்னா-பார்பெரா கார்ட்டூன் தொடரில், ஒளி பொருந்திய கண்களுடனும், காட்ஸூக்கி எனும் அழகிய குழந்தையுடனும் வந்த தேவதை போன்ற கதாபாத்திரமாக, சிலருக்கு காட்ஸிலா நினைவில் இருக்கலாம். ஆனால் இவை இரண்டையும்விட காட்ஸிலாவின் ஆதி மிகவும் சுவாரஸ்யமானது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த 1954இல் முதன்முதலில் காட்ஸிலா திரைப்படம் எடுக்கப்பட்டபோது, அது ஜப்பானில் நடந்த அணு விபத்தின் அடையாளமாகவே உருவானது.

ஜப்பானில் உருவான இந்தப் படம், 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுவரை உருவாக்கப்பட்ட ‘மான்ஸ்டர்’ (ராட்சத உயிர்களை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாக்கப்படும்) படங்களில் மிகவும் சீரியஸான, பயங்கரமான மான்ஸ்டர் கதாபாத்திரமாக இன்னமும் நினைவில் நிற்கிறது.

திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவானதைக் குறிக்கும் விதமாக அலெக்ஸ் டேவிட்சன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் லண்டனில் உள்ள பார்பிகன் சென்டரில் ‘கைஜு’ (மாபெரும் ஜப்பானிய மான்ஸ்டர்) திரைப்படங்களைத் தொகுத்தார்.

“நான் முதலில் பார்த்தது எபிரா, ஹாரர் ஆஃப் தி டீப் ஆகிய படங்கள் தான். 1966இல் வெளியான படத்தில், காட்ஸிலா ஒரு மாபெரும் இறாலை எதிர்த்துப் போராடும் காட்சிகள் இருக்கும். நான் அதை மிகவும் ரசித்து பார்த்தேன்,” என்று பிபிசியிடம் கூறினார் டேவிட்சன்.

“ஆனால் 1990களில் சேனல் 4இல் நான் பார்த்த காட்ஸிலா படம் வேறு விதமாக இருந்தது. அடுத்த ஆண்டு சேனல் 4, காட்ஸிலா திரைப்படத்தை ஜப்பான் மொழியில் வெளியிட்டது. அந்தப் படத்தின் அழகியலும் இருண்மையும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது,” என்று டேவிட்சன் கூறுகிறார்.

கைஜு கதையின்படி, காட்ஸிலா வரலாற்றுக்கு முந்தைய அசுரன். ஆனால், ஆகஸ்ட் 1945இல் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்க அணுகுண்டுகள் வீசப்பட்டு 150,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதை அடிப்டையாகக் கொண்டு காட்ஸிலா கதை பிறந்தது என்பது பெரும்பாலான ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் கருத்து.

“பூமியில் நேரடியாக அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஒரே நாடு ஜப்பான் மட்டுமே என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்” என்று முன்னணி கைஜு அறிஞரான ஸ்டீவன் ஸ்லோஸ் பிபிசியிடம் கூறுகிறார்.

“அதனால்தான், காட்ஸிலாவின் திரைக்கதையை ஆராய்ந்து பார்த்தால், ஜப்பானால் மட்டுமே அந்தப் படத்தை தயாரித்திருக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.

காட்ஸிலா படத்தின் வரலாறு; ஜப்பான் அணு குண்டு தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

“ஜப்பான் மக்களின் உளவியலில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதே” அதன் காரணம் என்று ஸ்லோஸ் கூறுகிறார்.

ஆனால் ஹிரோஷிமா -நாகசாகி மக்கள் அணுகுண்டு வெடிப்பால் கொல்லப்பட்ட கடைசி ஜப்பானிய குடிமக்கள் அல்ல.

இந்தச் சம்பவத்தின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு ஜப்பானில் இருந்தது. மார்ச் 1954இல், டெய்கோ ஃபுகுரியு மாரு அல்லது லக்கி டிராகன் ஃபைவ் என்ற பெயருடைய ஒரு மீன்பிடிப் படகு, பசிபிக் பெருங்கடலில் உள்ள பிகினி அட்டோலில் அமெரிக்க வெப்ப அணுக்கரு சோதனையின் விளைவாக மாசுபட்டது.

அந்தக் குழுவின் ரேடியோ ஆபரேட்டர் கதிர்வீச்சு நோயால் இறந்தார். அணுக்கரு சோதனையின் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட சூரை மீன்கள் நாடு முழுவதும் விற்கப்படுவதை, ஜப்பானிய அரசாங்கம் கண்டுபிடித்தது.

மேற்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டாக்டர் ஜெஃப்ரி ஆங்கிள்ஸ், பார்பிகன் மற்றும் ஜப்பானிய அறக்கட்டளை நடத்திய கருத்தரங்கில் இந்தச் சிக்கலைப் பற்றி விவாதித்தார்.

எத்தனை காலம் ஆனாலும், ஜப்பானுக்கு வெளியே இருந்து உருவான கதிர்வீச்சு மீண்டும் வீட்டிற்கு உள்ளே வந்து நம்மை பாதிக்கப் போகிறது என்பது ஜப்பானிய மக்களுக்குத் தெளிவாகிவிட்டது என்று அவர்கள் விவரித்தனர்.

காட்ஸிலா படத்தின் வரலாறு; ஜப்பான் அணு குண்டு தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

அந்த உளவியல் திரைத்துறையிலும் வெளிப்பட்டது. டோஹோ ஸ்டூடியோவின் தயாரிப்பாளரான டோமோயுகி தனகா, இந்த நிஜ வாழ்க்கையின் திகிலான சம்பவத்துடன் ஒரு பெரிய அசுரர் கதாபாத்திரத்தை இணைத்துக் கதையாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்.

அதற்கு முன்பு வெளியாகியிருந்த இரண்டு திரைப்படங்களால் இந்தச் சிந்தனை அவருக்கு ஏற்பட்டது. 1933இல் வெளியான கிங் காங் 1952இல் மீண்டும் வெளியிடப்பட்டது. நவீன கால நியூயார்க்கில் பரவி வரும் டைனோசர் பற்றிய புதிய திரைப்படமும், தி பீஸ்ட் ஃப்ரம் 20,000 பாத்தம்ஸ் (The Beast From 20,000 Fathoms) திரைப்படமும், 1953இல் வெளிவந்தன.

இந்தச் சிந்தனைக்கு செயல் வடிவம் தரும் வகையில், தனகா ஒரு சிறந்த அறிவியல் புனைகதை நாவலாசிரியரான ஷிகெரு கயாமாவை வேலைக்கு அமர்த்தினார்.

“Project G” என்று அழைக்கப்படும் திட்டத்தைக் குறித்து ஒரு கதையை எழுதுங்கள் என்று ஷிகெரு கயாமாவிடம் தனகா கூறினார். “தனகா அணுசக்திக்கு எதிரான திட்டமாக அதைக் கருதியதாக” கயாமா எழுதிய கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஆங்கிள்ஸ் கூறுகிறார்.

காட்ஸிலாவின் இயக்குநர் மற்றும் இணை எழுத்தாளரான இஷிரோ ஹோண்டா, காட்சி வடிவமைப்புப் பணிகளின் மேற்பார்வையாளர் எய்ஜி சுபுராயா உள்பட ஒட்டுமொத்த படத் தயாரிப்புக் குழுவினரும் தனகாவின் முயற்சியைத் தீவிரமாக எடுத்துக் கொண்டனர்.

அந்தக் கூட்டு உழைப்பின் பயனாக, லக்கி டிராகன் ஃபைவ் சம்பவத்திற்கு எட்டு மாதங்களுக்குப் பிறகு காட்ஸிலா படம் திரையரங்குகளில் வெளியானது.

படத்தின் தொடக்கத்திலேயே, மோசமான துயரச் சம்பவத்தைக் காட்சிப்படுத்திய விதம் சராசரி மான்ஸ்டர் திரைப்படத்தைவிட, காட்ஸிலாவை வலிமையுடன் எடுத்துக் காட்டியது.

காட்ஸிலா உருவான விதம்

காட்ஸிலா படத்தின் வரலாறு; ஜப்பான் அணு குண்டு தாக்குதல்

பட மூலாதாரம், Alamy

கதைப்படி, காட்ஸிலா (அல்லது கோஜிரா) ஒரு டினாரோசரஸ் போன்ற டைனோசர். இந்த உயிரினம் கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக கடலில் மறைந்திருக்கும் இனத்தைச் சேர்ந்தது.

“கடலில் மீன் கிடைக்காதபோது, அது மனிதர்களை வேட்டையாட நிலத்திற்கு வருகிறது” என்று காட்ஸிலா நடமாட்டம் உள்ள தீவில் வாழும் ஒரு கிராம பெரியவர் கூறுகிறார். ஆனால் அந்த உயிரினத்தின் வாழ்வு அணுகுண்டு சோதனைகளால் தொந்தரவு செய்யப்பட்டது.

அணுகுண்டு சோதனைகளால், கதிரியக்க சுவாசம் பெற்று, காட்ஸிலா அழிவில்லாத லெவியேதனாக (பயங்கரமான மூர்க்கமும், பெரும் சக்தியும் கொண்ட பிரமாண்ட நீர்வாழ் உயிரினமாக) மாறியது. அது, அதிக கோபத்துடன், தனது வாலை அசைத்து டோக்கியோ நகரக் கட்டடங்களை இடித்து நகரத்தை தீக்கிரையாக்கத் தொடங்கியது.

அணுகுண்டு தாக்குதலின் தாக்கம்

கிங் காங்கிற்காக வில்லிஸ் எச்.ஓ பிரையன் உருவாக்கிய நேர்த்தியான ஸ்டாப்-மோஷன் அனிமேஷனை பின்பற்ற மற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் விரும்பினர். ஆனால் சுபுராயாவுக்கு தேவையான நேரமோ பட்ஜெட்டோ இல்லை. எனவே ரப்பர் உடையில், பருத்த கால்கள் மற்றும் தள்ளாடும் முதுகுத் துடுப்புகளுடன் ஹருவோ நகாஜிமா, காட்ஸிலா கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஹருவோ ஒரு மினியேச்சர் மாடல் நகரத்தின் வழியாகச் செல்கிறார். அதோடு சில அனிமேஷன் காட்சிகளும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் காட்ஸிலா ஜப்பானிய தலைநகரை அழிக்கும் காட்சிகள் திகிலூட்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. கிங் காங்கில் உள்ள நியூயார்க் நகரக் காட்சிகளை விடவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இது படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் இயக்குநரான ஹோண்டா, 1945ஆம் ஆண்டு சீனாவில் போர்க் கைதியாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் சொந்த நாட்டிற்குத் திரும்பும்போது, அணுகுண்டு தாக்குத்தலுக்கு உள்ளான ஹிரோஷிமாவின் இடர்பாடுகளை நேரடியாகப் பார்த்தார்.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் மட்டுமல்லாமல், டோக்கியோவிலும் அமெரிக்க வெடிகுண்டுத் தாக்குதல் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது.

கடந்த 1945இல் இருந்து ஜப்பானியர்கள் நினைவில் வைத்திருக்கும் பேரழிவையும், தொடர் விளைவுகளையும் அதன் உண்மைச் சாயலோடு படமாக்க அவர் விரும்பினார்.

“காட்ஸிலா பார்க்க தியேட்டருக்கு சென்ற நிறைய பேர் அதைப் பார்த்து கண்ணீர் விட்டார்கள்” என்கிறார் டாக்டர் ஆங்கிள்ஸ்.

அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய துயரை ஏற்படுத்தியுள்ள இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தை மக்கள் மீண்டும் நினைவுகூறும் வகையில் இந்தப் படம் அமைந்தது.

நெகிழ வைக்கும் காட்சிகள்

காட்ஸிலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டோக்கியோவில் உள்ள அசல் உயரத்திற்கு அமைக்கப்பட்ட காட்ஸிலா சிலை

இந்தப் படம் மான்ஸ்டரால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் மீது கவனம் செலுத்துகிறது. ஒரு தாய் தெருவில் பயந்து நடுங்கும் தன்னுடைய குழந்தைகளை அள்ளி அணைத்துக் கொள்கிறார். “கவலைப்படாதீர்கள், உங்களது தந்தையைப் பார்க்கலாம், நாம் அவருடன் விரைவில் சொர்க்கத்தில் சேர்வோம்” என்று அவர் சொல்லும் காட்சி மிகவும் உணர்வுப்பூர்வமானது.

நெரிசலான பாதையில் உள்ள ஒரு மருத்துவமனை, குறுகலான நடைபாதைகளில் ஸ்ட்ரெச்சர் தள்ளுபவர்கள், ரத்தக்கறை படிந்த சடலங்கள், அழுது கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தைகள் போன்ற அவலமான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதம், இப்படத்துக்கு ஆவணப்படம் போன்ற இயல்பான தன்மையை அளிக்கிறது.

கதிரியக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கீகர் (Geiger) கருவியைக் கொண்டு ஒரு குழந்தையை மருத்துவர் பரிசோதிக்கிறார். அசைவின்றி இருக்கும் அக்குழந்தையின் உடலைப் பார்த்து, அது உயிருடன் இல்லை என்று மருத்துவர் சோகமாகத் தலையை ஆட்டுகிறார். கதிரியக்க பாதிப்புகளை விளக்கும் உருக்கமான காட்சி அது.

“முதன்முதலாக வெளியான காட்ஸிலா திரைப்படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது,” என்கிறார் ஸ்லோஸ்.

“நீங்கள் அதை பீஸ்ட் ஃபிரம் தி 20,000 பாத்தோம்ஸ் (The Beast From 20,000 Fathoms) படத்துடன் ஒப்பிடலாம். ஏனெனில் அவ்விரண்டு படங்களும் 4:3 விகிதத்தில், கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டவை. கதிரியக்கத்தின் வீரியத்தையும் , வரலாற்றுக்கு முந்தைய காலகட்ட உயிரினங்களை மான்ஸ்டராக சித்தகரித்தும் எடுக்கப்பட்ட படங்கள் அவை.”

ஆனால் அவ்விரண்டு படங்களும் மேலோட்டமாக மட்டுமே ஒற்றுமையைக் கொண்டுள்ளது. சனிக்கிழமை வெளியிடப்படும் பகல் காட்சிக்கு, இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட படம் தி பீஸ்ட் ஃப்ரம் த 20,000 பாத்தோம்ஸ்.

காட்ஸில்லா போன்று நிஜ வாழ்வில் நடந்த துயரைச் சம்பவத்தையோ, பெரும் சோகத்தையோ அடிப்டையாகக் கொண்டு அது உருவாக்கப்பட்டதல்ல.

சாதாரண மான்ஸ்டர் படங்களைப் போலன்றி அதற்கு அப்பாற்பட்ட மற்ற ஆழமான சம்பவங்கள் இந்தப் படத்தில் உள்ளன.

அதன் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர் டாக்டர் யமனே, ஒரு புதைபடிம ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார். (தகாஷி ஷிமுரா, ரஷோமோன், செவன் சாமுராய் போன்ற குரோசாவாவின் க்ளாஸிக் படங்களில் நடித்தவர்).

இருளில் அமர்ந்திருக்கும் யமனே, இறந்து கிடக்கும் ஓர் உயிரியற்பியல் (biophysical specimen) மாதிரியைக் கண்டு திகைக்கிறார்.

மற்றோர் அதிசயமான பாத்திரமாக,’விஞ்ஞானி டாக்டர் செரிசவா’ (அகிஹிகோ ஹிராட்டா) உள்ளார். “ஆக்ஸிஜன் அழிப்பான்” என்று அழைக்கப்படும் ஒரு பொருளை அவர் கண்டறிந்துள்ளார்.

இது கடல்வாழ் உயிரினங்களை நொடிகளில் எலும்புக்கூடுகளாக மாற்றும் திறன் கொண்டவை. அது காட்ஸிலாவின் உடலிலும் வேலை செய்யக்கூடும் என்று செரிசாவாவுக்கு தெரியும். ஆனால் அரசுக்கு இந்த விஷயம் தெரிய வந்தால், ஆக்ஜிசன் அழிப்பான் மிகப்பெரும் ஆயுதமாகி இன்னும் பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் என்று அவர் அஞ்சுகிறார்.

வெற்றியின் முக்கியக் காரணம்

காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?

பட மூலாதாரம், Legendary Entertainment

காட்ஸிலா வெறும் பிளாக்பஸ்டர் படம் மட்டும் அல்ல. பிளாக்பஸ்டர் படங்களுக்கான பொது வரைமுறைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான படமாக மட்டும் இல்லாமல் வரலாற்றின் மிக முக்கியமான சூழ்நிலையை மான்ஸ்டரோடு இணைத்து உவமையாகப் படைக்கப்பட்டிருந்தது, அதன் தனிச்சிறப்பு.

அதன் ஒரு பகுதியாக, படத்தின் இறுதியில் செரிசாவா ஆக்ஸிஜன் அழிப்பான் கருவியைப் பயன்படுத்த வற்புறுத்தப்படுகிறார். ஆனால் அச்சூழல் ஏற்படும் முன்பே, அவர் தனது தனிப்பட்ட ஆய்வுக் குறிப்புகளை எரித்துவிட்டு, தற்கொலை செய்து கொள்கிறார்.

“இது எங்களைக் காப்பாற்றும் என்று சொல்வதற்காக நாங்கள் அழைக்கப்படவில்லை,” என்கிறார் டேவிட்சன்.

“ஆக்சிஜன் அழிப்பான் காட்ஸிலாவைவிட குறைவான அளவு தீமை விளைவிக்கும். ஆனாலும் கடைசி முயற்சியாகத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“டாக்டர் செரிசாவாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது” என்று ஒரு நிருபர் கூச்சலிடுகையில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலர் அவரது கருத்தில் முரண்பட்டுள்ளனர். ஆனால் காட்ஸிலாவின் அழிவு மற்ற மான்ஸ்டர் படங்களைப் போலன்றி ஒரு தியாகத்தை மையமாகக் கொண்டது.

அந்த அடிப்படையில் ஹாலிவுட்டில் மற்ற மான்ஸ்டர் படங்களின் வெற்றியைவிட காட்ஸிலாவின் வெற்றி தனித்துவமானது.

“இது ஒரு வெற்றியே அல்ல, ஏனென்றால் பேண்டோரா பெட்டியைத் திறந்தது போல புதுப்புது பிரச்னைகளை உருவாக வாய்ப்புள்ளதாக” ஸ்லோஸ் கூறுகிறார்.

சில வழிகளில், காட்ஸிலாவின் முடிவு கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹைமரின் முடிவைப் போன்றது.

“ஒரு சங்கிலித் தொடரைப் போன்ற தொடர்ச்சியான எதிர்வினையை உருவாக்கப் போகிறோம் என்று நாங்கள் கவலைப்பட்டோம். அது உலகம் முழுவதையும் அழித்துவிடும் என்றும் கலங்கினோம். அப்படித்தான் நடந்துள்ளது என்று தான் நம்புவதாக” ஐன்ஸ்டீனிடம் ஓபன்ஹைமர் கூறுகிறார்.

காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?

பட மூலாதாரம், Legendary Entertainment

ஏனென்றால், ஆயுதப் போட்டி ஒருபோதும் முடிவடையாது, முடிந்து விட்டதாக நினைத்தாலும் ஒரு பெரிய அச்சுறுத்தலுடன் எப்போதும் காத்திருக்கும்.

“அந்த ஒரு காட்ஸிலா மட்டுமே இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கொடிய ஆயுதங்களை, அவர்கள் தொடர்ந்து பரிசோதித்தால், உலகில் எங்காவது ஒரு பகுதியில் மற்றொரு காட்ஸிலா தோன்றக்கூடும்” என்று படத்தின் இறுதிக் காட்சியில் டாக்டர் யமனே கூறுகிறார்.

அதன் தொடர்ச்சியாக ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அப்படத்தின் அடுத்த பாகம் வெளியிடப்பட்டது, அதன் பிறகு காட்ஸிலா படங்கள் தொடர்ந்து வெளி வருகின்றன.

இதுவரை, 33 ஜப்பானிய காட்ஸிலா படங்கள் வந்துள்ளன. ஆனால் அவை எதுவும் 1954ஆம் ஆண்டின் அசல் காட்ஸிலா படத்தைப் போல முக்கியமானவை அல்ல என்றும், சொந்த ஆர்வத்தில் அவற்றைப் பார்க்கலாம் என்றும் ஸ்லோஸ் மற்றும் டேவிட்சன் டேவிட்சன் கூறுகின்றனர்.

பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு இந்தத் தொடர்ச்சி மிகவும் பயன்படும். பலவீனமான திரைக்கதை கொண்ட காட்ஸிலா படங்கள்கூட புதுமையான முறையில் கவனம் பெற்றுவிடும்.

ஒரு பெரிய கரப்பான் பூச்சி அலைந்து திரிந்து, ஆர்வமூட்டும் வகையில் எதையாவது செய்வது போன்று ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அதை வித்தியாசமான காட்ஸிலா படமாக அளித்துவிடுவர்.

“மிகப் பிரபலமான ஜப்பானிய காட்ஸிலா தொடர், சினிமா வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடத்தைக் கொண்டுள்ளது,” என்று ஸ்லோஸ் நம்புகிறார்.

காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?

பட மூலாதாரம், Legendary Entertainment

முதன்முதலில் அணு ஆயுதங்களைப் பற்றிக் கருத்து தெரிவிக்க உருவாக்கப்பட்டது காட்ஸிலா. ஆனால் அதன் அடுத்தடுத்த பரிமாணங்கள் பல முக்கியமான பிரச்னைகளைப் பேசின.

“மாசுபாடு, காலநிலை மாற்றம், நுகர்வுக் கலாசாரம், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம்” மற்றும் பல உலகளாவிய பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்தது.

சமீப காலங்களில் ஹாலிவுட்டில் பிளாக்பாஸ்டரான காட்ஸிலா படங்கள் எதைப் பிரதிபலித்திருக்க வேண்டும் என்று சொல்வது சற்று சிக்கலானது. ஆனால் 2023இல் வெளியான காட்ஸிலா மைனஸ் ஒன் அதன் சிறந்த காட்சி விளைவுகளுக்காக ஆஸ்கார் விருதை வென்றது.

சமீப காலங்களில் வெளியான ஷின் காட்ஸிலா(2006) மற்றும் காட்ஸிலா மைனஸ் ஒன்(2023) போன்ற சில காட்ஸில்லா படங்கள், 1954இல் வெளியான அதன் பழைய அசல் காட்ஸிலா அமைப்பில் உள்ளன.

மேலும், ஸ்லோஸ் குறிப்பிடுவது போல, ஓப்பன்ஹெய்மருக்கும் காட்ஸிலாவுக்கும் தொடர்பு இருக்கலாம்.

“நான் இப்போது, உலகங்களை அழிக்கும் ‘மரணம்’ ஆகி விட்டேன்” என்று பகவத் கீதையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு மேற்கோள் ஓப்பன்ஹெய்மரில் காட்டப்படும்.

காட்ஸிலா டோக்கியோவில் அழிவை ஏற்படுத்தும்போது, பார்வையாளர்கள் ஓபன்ஹைமரில் காட்டப்படும் இந்தக் காட்சியை நினைவு கூறலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு