உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்? வயதிற்கு ஏற்றார் போல் உடலின் நாற்றம் மாறுபடுமா?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
உடல் நாற்றம் (Body odour) என்று சொன்னவுடன், பலரும் அதை உடலின் சுத்தத்துடன் மட்டுமே தொடர்புப்படுத்தி பார்ப்பார்கள். அதிகமாக வியர்த்தால் உடலில் அதிக நாற்றம் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
நமது தோலில் இருந்து ஆவியாகும் ஒவ்வொரு துளி வியர்வையும் நமது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. ஆனால், உடல் துர்நாற்றம் என்ற பிரச்னையின் காரணமாக சிலர் உடலின் இந்த அத்தியாவசிய செயலை வெறுக்கிறார்கள் அல்லது அதை குறைக்க நினைக்கிறார்கள்.
ஆனால் வியர்வை என்பதே எந்தவொரு நாற்றமோ அல்லது மணமோ இல்லாத ஒரு திரவம்தான். சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள், வியர்வையை ‘மணமுள்ள சேர்மங்களாக’ பிரிக்கும்போது உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது.
‘உடல் நாற்றம்’ என்பது சுத்தத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல, உணவுமுறை, ஹார்மோன் மாற்றங்கள், மரபியல், சில மருந்துகள், நீரிழிவு அல்லது கல்லீரல் நோய் போன்ற மருத்துவ நிலைமைகள் கூட அதற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வுகளும் நிபுணர்களும் கூறுகிறார்கள்.
இதைவிட ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒருவரின் வயதிற்கு ஏற்ப உடலின் நாற்றம் மாறும் என ஓர் ஆய்வு கூறுகிறது.
உடலின் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?
தோலில் உள்ள இரு வகைச் சுரப்பிகளால் வியர்வை உருவாகிறது. உடற்பயிற்சி செய்யும்போது உடலெங்கும் சுரக்கும் வியர்வை எக்ரின் (Eccrine) என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இந்த வியர்வை உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
முடி நிறைந்த தோல் பகுதி, அக்குளிலும், பிறப்பு உறுப்பு பகுதிகளிலும் சுரக்கும் வியர்வை அபோக்ரின் (Apocrine) என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இவ்வியர்வையில் புரதம் உள்ளிட்ட சிக்கல் நிறைந்த பல மூலக்கூறுகள் உள்ளன.
பாக்டீரியாக்கள் இவற்றை துர்நாற்றம் கொண்டதாக மாற்றுகின்றன.
மனித உடலில் இருந்து நூற்றுக்கணக்கான ஆவியாகும் கரிம சேர்மங்கள் (Volatile organic compounds- விஓசி) வெளியேற்றப்படுகின்றன என்றும், பொதுவாக அவற்றின் கூறுகள் ஒரு நபரின் வளர்சிதை மாற்ற நிலையை பிரதிபலிக்கின்றன என்றும் ‘தி ஜர்னல் ஆப் பயோகெமிஸ்ட்ரி’ எனும் அறிவியல் ஆய்வு இதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.
இந்த ஆய்விதழ், 1922ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது.
இந்த ஆவியாகும் கரிம சேர்மங்கள் தான் உடலின் நாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. சுவாசம், வியர்வை, தோல், சிறுநீர், மலம் ஆகியவை இந்த சேர்மங்களின் முக்கிய ஆதாரங்கள்.
உடல் துர்நாற்றங்களுக்கு ரத்தமும் ஒரு முக்கிய காரணமாகும், ஏனெனில் வளர்சிதை மாற்றத்தில் உற்பத்தி செய்யப்படும் சில விஓசி சேர்மங்கள் ரத்தத்தில் சுரந்து, பிறகு சுவாசம் மற்றும் அல்லது வியர்வை வழியாக வெளிப்புறச் சூழலுக்கு உமிழப்படுகின்றன.
அதே சமயம், இந்த ஆவியாகும் கரிம சேர்மங்களில் மணமற்றவையும் உள்ளன. மனித உடலின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வெளிப்படும் இந்த சேர்மங்கள் வயது, உணவு, பாலினம், உடலியல் நிலை மற்றும் மரபணு பின்னணி ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுகின்றன.
‘வயதிற்கு ஏற்றார் போல மாறும் உடல் நாற்றம்’
ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோஹன் லுண்ட்ஸ்த்ரோம், உடல் துர்நாற்றம் குறித்தும் உடல் வாசனைகள் குறித்தும் ஒரு விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
அவரது குழு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், “நமது வயதிற்கு ஏற்றார் போல, உடலின் இயற்கையான நாற்றத்திலும் பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக, இளம் வயது நபர்கள் (20–30 வயது), நடுத்தர வயது நபர்கள் (45–55), மற்றும் முதியோர்கள் (75–95) ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 41 தன்னார்வலர்களிடமிருந்து உடல் நாற்றத்தை ஆய்வு செய்வதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
அதில் இளம் மற்றும் நடுத்தர வயது நபர்களுடன் ஒப்பிடுகையில், முதியோர்களின் உடல் நாற்றம் என்பது குறைவான தீவிரம் கொண்டதாகவும், அதிக துர்நாற்றம் இல்லாததாக இருந்ததாகவும் தெரிய வந்தது.
இதற்கு காரணம், முதுமை வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. இது வேறுபட்ட ‘ஆவியாகும் கரிம சேர்மங்களின்’ (விஓசி) உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
உதாரணமாக, முதியோர்களின் உடலில் அதிக அளவு 2-நோனீனல் (2-nonenal) எனும் சேர்மம் உற்பத்தியாகிறது. இதனால் முதியோர்களிடத்தில் மட்டுமே இருக்கும் ஒரு பிரத்யேக உடல் மணம் (old person smell) உருவாகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.
முதியோர்களின் இந்த பிரத்யேக உடல் மணம் சிலருக்கு விரும்பத்தகாததாக இருந்தாலும், பெரும்பாலானோர் அந்த மணத்தை தங்களது தாத்தா, பாட்டி மற்றும் வயதான பெற்றோர்கள் குறித்த அன்பான நினைவுகளுடன் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள்.
அதேசமயம் இந்த முதுமையின் மணத்திற்கும், சுகாதாரத்துக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை. இந்த 2-நோனீனல் சேர்மம் தண்ணீரில் கரையாது. எனவே குளிப்பதன் மூலமோ அல்லது துணிகளை துவைப்பதன் மூலமோ அதை எளிதில் அகற்ற முடியாது.
உடல் துர்நாற்றத்தைக் குறைப்பது எப்படி?
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய தோல் மருத்துவர் மித்ரா வசந்த், “ஒவ்வொருவருக்கும் என தனித்துவமான, இயற்கையான உடல் வாசனை இருக்கும். அதிக வியர்வையால் அந்த வாசனை, நாற்றமாக மாறும்போது அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். அதற்கு என்று பல வழிகள் உள்ளன. சுலபமான வழி என்றால் டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம்” என்கிறார்.
ஆனால் அதுபோன்ற டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களை நேரடியாக தோல் மீது அல்லாமல், உடுத்தும் ஆடைகள் மீது பயன்படுத்துவது சிறந்தது என்று கூறுகிறார்.
“அதுமட்டுமல்லாது, இருமுறை குளிப்பது, பருத்தி ஆடைகளை அணிவது, துர்நாற்றத்துடன் வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் இருக்கும் முடிகளை அகற்றுவது, போன்றவை உடல் நாற்றத்தைக் குறைக்க உதவும். மற்றபடி வியர்வை என்பது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று.”
“வியர்வையை தவிர்த்தால் உடல் நாற்றத்தை தவிர்க்கலாம் என்ற எண்ணம் நல்லதல்ல. உங்கள் அன்றாட வாழ்க்கையை உடல் துர்நாற்றம் பாதிக்கிறது என்றால், அதற்கு மேற்கூறிய வழிகளைப் பின்பற்றலாம். இல்லையென்றால் அடுத்த கட்ட சிகிச்சைகளும் உள்ளன” என்றும் கூறுகிறார்.
அளவுக்கு அதிகமான வியர்வையால், உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது என்றால், முறையாக ஒரு தோல் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டுமென மருத்துவர் மித்ரா அறிவுறுத்துகிறார்.
“அதீத வியர்வைக்கு என பிரத்யேக மருந்துகள், சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இதையெல்லாம் தாண்டி உடல் நாற்றம் எப்போதுமே மோசமான விஷயம் அல்ல. இயற்கையான உடல் வாசனையை நாம் வெறுக்கக் கூடாது. அது மிகவும் இயல்பான ஒன்று தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.” என்று கூறுகிறார் மருத்துவர் மித்ரா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு