‘ஒரு வட்டத்திற்குள் அடைப்பார்கள்’: ‘அம்பேத்கர்’ பெயர் கொண்டவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் – ஏன் இந்த நிலை?

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதிகளுக்கான தலைவராக மட்டுமே பார்க்கப்படுகிறாரா அம்பேத்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் அரசியலில் குறிப்பிட்ட சாதிகளுக்கான தலைவராகவே அம்பேத்கர் பார்க்கப்படுகிறார் என்ற விமர்சனம் நீண்டகாலமாகவே நிலவுகிறது
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

“எனது பெயரில் ‘அண்ணல் அம்பேத்கரின்’ பெயரும் இணைந்திருப்பது எனக்கு பெருமை தான். ஆனால், பள்ளி, கல்லூரி மற்றும் வேலை பார்த்த இடங்களில் எனது பெயரால் ஏற்பட்ட அவமானங்களையும் என்னால் மறுக்க முடியாது” என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த அறிவுமணி அம்பேத்குமார்.

இன்று (டிசம்பர் 6) டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாள். மதம், மானுடவியல், சமூக அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் பலவற்றில் ஆழ்ந்த அறிவு கொண்டவர், வழக்கறிஞர், பத்திரிகையாளர், ஒரு பொருளாதார நிபுணராக இந்தியாவின் மத்திய வங்கியை நிறுவுவதற்கு வழிகாட்டியவர் என அவருக்கு பல முகங்கள் உள்ளன.

ஆனால், தலித் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்ததில் பெரும் பங்கு வகித்தவர் என்ற இரண்டு விஷயங்கள் அவரது பிரதான அடையாளமாக இருக்கின்றன.

அம்பேத்கர் போன்ற ஒரு பொதுத் தலைவர், தமிழ்நாட்டின் அரசியலில் குறிப்பிட்ட சாதிகளுக்கான தலைவராகவே பார்க்கப்படுகிறார் என்ற விமர்சனம் நீண்டகாலமாகவே நிலவுகிறது. அப்படியிருக்க, தமிழ்நாட்டில் ‘அம்பேத்கர்’ பெயரை தங்களது பெயர்களில் இணைத்துக்கொள்பவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘எனது முழுப்பெயரை சொல்வதில்லை’

“எனது அப்பா, அம்பேத்கர் மீது தீவிர பற்றுக்கொண்டவர். அதனால் தான் அவரது பெயரை எனக்கு வைத்தார். ஆனால், எனக்கு கிடைத்த அனுபவங்களால், நான் எங்குமே எனது முழுப்பெயரை சொல்வதில்லை” என்று கூறுகிறார் திருநெல்வேலியை சேர்ந்த அறிவுமணி அம்பேத்குமார்.

தங்களது சுற்றுவட்டாரப் பகுதிகளில், அம்பேத்கரை குறிப்பிட்ட சாதிகளுக்கான அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவராக மட்டுமே பார்க்கும் போக்கு அதிகமாக இருப்பதாக அவர் வருத்தப்படுகிறார்.

“நான் படித்தது, இப்போது வேலை பார்ப்பது எல்லாமே திருநெல்வேலி மாவட்டத்தில் தான். எனது முழுப்பெயரை சொல்லும்போது, எதிரில் இருப்பவர்களின் பேச்சில், பார்வையில் அப்பட்டமாக ஒரு மாற்றம் தெரியும். எளிதாக நம்மை ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிடுவார்கள்” என்று கூறுகிறார் அறிவுமணி.

கடந்த வருடம், ஆகஸ்ட் மாதம், ராணிபேட்டை மாவட்டத்தின் சோளிங்கரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் பட்டியலின மாணவர் ஒருவர் அம்பேத்கர் படத்தை தனது செல்போனில் முகப்புப் படமாக வைத்திருந்ததாகவும், அதனை மாற்ற வேண்டுமென சில மாணவர்கள் கோரியதாகவும், அதனை மாற்ற அந்த மாணவர் மறுத்த நிலையில், அதனை விரும்பாத மாணவர்கள் வெளியிலிருந்து சிலரை அழைத்துவந்து பட்டியலின மாணவரைத் தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகின.

இரு தரப்பு மாணவர்களும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. ஐந்து பேர் கைதுசெய்யப்பட்ட இந்த வழக்கில், அது சாதி அடிப்படையிலான மோதலாக காட்டப்படாமல், இரு தரப்பு மாணவர்கள் இடையிலான மோதலாகவே அப்போது பதிவுசெய்யப்பட்டது.

இதைச் சுட்டிக்காட்டிய அறிவுமணி, “பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது ஒருதரப்பு மாணவர்கள் மட்டும் என்னை ‘அம்பேத்குமார்’ என்று தான் அழைப்பார்கள். அவர்கள் அழைக்கும் தொனியிலேயே, என்ன நோக்கத்தில் அழைக்கிறார்கள் என எனக்குப் புரிந்துவிடும். ஒரு கட்டத்திற்குப் பிறகு அதை நான் கண்டுகொள்ளாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன்” என்கிறார்.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதிகளுக்கான தலைவராக மட்டுமே பார்க்கப்படுகிறாரா அம்பேத்கர்

பட மூலாதாரம், Getty Images

இந்த அனுபவங்களால், வேலைக்குச் சேர்ந்த பிறகு தன்னை ‘அறிவுமணி’ என்று மட்டுமே அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

“சென்னை போன்ற பெரு நகரங்களில் இந்த சிக்கல் உள்ளதா என தெரியவில்லை. ஆனால், தென் மாவட்டங்களில் நிச்சயம் உள்ளது. அதே சமயம், எல்லாமே மோசமான அனுபவங்கள் என்று சொல்ல முடியாது. ஒருமுறை பள்ளியில் மிகக்குறைவான மதிப்பெண்கள் பெற்ற போது, எனது ஆசிரியர் அழைத்து, ‘அம்பேத்கர்’ என்ற மேதையின் பெயரை வைத்துக்கொண்டு இப்படி மதிப்பெண்கள் எடுக்கலாமா என்று கேட்டார். அந்த குற்றவுணர்ச்சியில் அடுத்த தேர்வுக்கு நன்றாகப் படித்தேன்” என்கிறார்.

“அம்பேத்கர் மிகப்பெரிய தலைவர் என என் அப்பாவுக்குத் தெரியும், எனக்குத் தெரியும். ஆனால், என் பெயரைக் கேட்டுவிட்டு எதிரில் இருப்பவர்கள் யாரேனும் ஒரு ஏளனப் பார்வை பார்த்தால், அது என்னை மிகவும் காயப்படுத்திவிடும். எனவே, அதுபோன்ற தருணங்களைத் தவிர்க்கவே முழுப்பெயரைச் சொல்வதில்லை” என்று கூறுகிறார் அறிவுமணி அம்பேத்குமார்.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதிகளுக்கான தலைவராக மட்டுமே பார்க்கப்படுகிறாரா அம்பேத்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அனைத்துச் சமூகத்தை சேர்ந்தவர்களும் அம்பேத்கர் பெயரை பயன்படுத்த வேண்டும் என்கிறார், வழக்கறிஞர் ரமேஷ் பெரியார்

‘அம்பேத்கர்- எல்லோருக்குமான தலைவர் தான்’

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான ரமேஷ் பெரியார், “என் மகனுக்கு ‘அம்பேத்கர்’ என பெயர் வைத்தபோது, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நமக்கு ஏன் இந்தப் பெயர், வேறு பெயர் வைக்கலாமே’ என சில உறவினர்கள் கூறினார்கள். ஆனால் அவர் எல்லோருக்குமான தலைவர் என்பதை உணர்த்தவே அந்தப் பெயரை வைத்தேன்” என்று கூறுகிறார்.

“கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த அவரை விட சிறந்த தலைவரை மேற்கோள் காட்ட முடியுமா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகவும் நுட்பமானது. அதில், அம்பேத்கரின் பங்கு அபாரமானது. அதுதான் எனக்குள் சட்டம் படிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டியது” என்று கூறும் ரமேஷ் பெரியார், தனது மகனுக்கு மட்டுமல்லாது, திண்டுக்கல் மாவட்டத்தில் அவரது பூர்வீக கிராமத்தில் வசித்துவரும் அவரது சகோதரியின் மகனுக்கும் ‘அம்பேத்கர்’ என்றே பெயர் சூட்டியுள்ளார்.

“தமிழகத்தின் கிராமங்களில் தான் ‘அம்பேத்கரை’ குறிப்பிட்ட சாதிகளுக்கான தலைவராகப் பார்க்கும் போக்கு அதிகமாக இருக்கிறது. அதை மாற்றுவதற்கான என்னால் முடிந்த சிறு முயற்சி தான் இது. ‘அம்பேத்கரின்’ பெயரை வைக்கலாம் எனச் சொன்னபோது, எனது சகோதரியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று கூறுகிறார் ரமேஷ் பெரியார்.

“பட்டியல் சாதிகள் என்ற குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் நலன்களில் மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், சிறுபான்மையினர் என அனைவரது நலனிலும் அக்கறை செலுத்திய ஒரு தலைவரை ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என முத்திரைக் குத்துவது மிகவும் மோசமான ஒன்று. இந்நிலை மாற வேண்டும். அதற்கு அனைத்துச் சமூகத்தை சேர்ந்தவர்களும் அவரது பெயரை பயன்படுத்த வேண்டும்” என்று கூறுகிறார் ரமேஷ் பெரியார்.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதிகளுக்கான தலைவராக மட்டுமே பார்க்கப்படுகிறாரா அம்பேத்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அம்பேத்கரை ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்று அடையாளப்படுத்துவது பெரும் கொடுமை என்கிறார், எழுத்தாளர் அழகிய பெரியவன் (சித்தரிப்புப் படம்)

‘அம்பேத்கர் என்ற பெயர் இயல்பாக பார்க்கப்படுவதில்லை’

அம்பேத்கர், அரசியல் சாசனத்தின் திருத்தப்பட்ட வரைவை அறிமுகம் செய்யும்போது ஆற்றிய உரையில், “இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் பெரும்பான்மை ஆட்சியை விசுவாசமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டாமல் இருக்கும் கடமையை இந்த பெரும்பான்மையினர் உணர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதைச் சுட்டிக்காட்டி பேசிய எழுத்தாளர் அழகிய பெரியவன், “அம்பேத்கரை ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்று அடையாளப்படுத்துவது பெரும் கொடுமை. பிற தலைவர்களின் பெயர்களை வைத்துக்கொள்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, ‘அம்பேத்கர்’ பெயரை வைத்துக்கொள்பவர்களுக்கு நிச்சயம் கிடைப்பதில்லை” என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “எனது நண்பர் ஒருவர், திரைப்படத்துறையில் பணிபுரிகிறார். அவரது பெயரிலும் ‘அம்பேத்கர்’ இருக்கிறார். என்னைச் சந்திக்கும்போதெல்லாம், தனது பெயரால் ஏற்படும் அவமானங்களை அந்த நண்பர் வருத்தத்தோடு பகிர்ந்து கொள்வார்”

அம்பேத்கர் பெயரை வைத்திருந்த அரசு ஊழியர் ஒருவரை அவருடைய சக ஊழியர் , குறிப்பிட்ட சாதியின் பெயரைச் சொல்லி தொடர்ந்து கிண்டல் செய்ததாக கூறுகிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.

“ஒரு கட்டத்தில், சாதிப் பெயருடன் மிகவும் மோசமான ஒரு வார்த்தையைச் சொல்லி திட்டிவிட்டார். இருவருக்கும் மிகப்பெரிய தகராறு ஏற்பட்டு, மேலதிகாரிகள் தலையிடும் அளவுக்கு சென்றுவிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்துள்ளன” என்று கூறுகிறார் அழகிய பெரியவன்.

‘அம்பேத்கர்’ எனும் பெயரை இந்தச் சமூகம் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை எனக்கூறும் எழுத்தாளர் அழகிய பெரியவன், இந்நிலை மாற வேண்டும் என்கிறார்.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதிகளுக்கான தலைவராக மட்டுமே பார்க்கப்படுகிறாரா அம்பேத்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் அம்பேத்கரை ஒரு சாதித்தலைவராக பார்க்கும் போக்கு அதிகமாக உள்ளது என்கிறார் எம்பி ரவிக்குமார்

எழுத்தாளர் அழகிய பெரியவனின் கூற்றை ஒப்புக்கொள்ளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், “இந்தியாவில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் அம்பேத்கரை ஒரு சாதித்தலைவராக பார்க்கும் போக்கு அதிகமாக உள்ளது.” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “அம்பேத்கர் உடன் நெருங்கிப் பழகியவர் தந்தை பெரியார். அவரைப் போலவே சாதி ஒழிப்பு என்னும் கருத்தியலை முன்வைத்து பணியாற்றியவர். தந்தை பெரியார் அப்படி பணியாற்றிய பிறகும் கூட ஒப்பீட்டு அளவில் சாதி உணர்வு அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.”

அம்பேத்கரை ஒரு சாதித்தலைவராக பார்க்கும் போக்கு இங்கு பெரும்பாலானவர்களிடம் உள்ளது என்றும் அதனால்தான் தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலைகள் கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் ரவிக்குமார் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதிகளுக்கான தலைவராக மட்டுமே பார்க்கப்படுகிறாரா அம்பேத்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிற மாநிலங்களில் இருக்கும் அளவுக்கு அம்பேத்கர் வெகுமக்களின் உணர்வாக மாறவில்லை என்கிறார், விசிகவின் ரவிக்குமார்

‘தலித்திய அரசியல் இயக்கங்களே காரணம்’

ஆனால் இதை மறுத்துப் பேசிய பாமக உறுப்பினரும், வழக்கறிஞருமான பாலு, “சில குறிப்பிட்ட இயக்கங்கள் ‘அம்பேத்கரை’ நாங்கள் மட்டுமே கொண்டாடுவோம் என உரிமை கோருவது இந்த நிலைக்கு முக்கியமான காரணம். அவர்களால் தான் தமிழ்நாட்டில் ‘அம்பேத்கர்’ சிலைகள் கூண்டுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றன” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “ராமதாஸ் ஒரே நாளில் ஏழு அம்பேத்கர் சிலைகளைத் திறந்து வைத்துள்ளார். எங்களது கட்சியின் உறுப்பினர் அட்டையில் அம்பேத்கர் புகைப்படம் உள்ளது. இதை மற்ற கட்சிகள் பின்பற்றினாலே ‘அம்பேத்கர்’ குறித்த பிம்பம் மாறிவிடும்” என்று கூறுகிறார்.

ஆனால், இதுபோன்ற மேம்போக்கான செயல்கள் மட்டுமல்லாது, கட்சிகளின் அடிப்படை தொண்டர்களுக்கும் அம்பேத்கர் குறித்து எடுத்துச் சொன்னால் மட்டுமே பலன் கிடைக்கும் என்கிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.

“தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படும் கட்சிகளின் பதாகைகளில் கூட ‘அம்பேத்கர்’ தவறாமல் இடம்பெறுகிறார். மேடைக்கு மேடை கட்சித் தலைவர்கள் அம்பேத்கர் குறித்து ஓரிரு வரிகள் மட்டுமே பேசுவதால் பயனில்லை. அவர் செய்த பணிகள் குறித்து அடிமட்ட தொண்டர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் அல்லவா?” என்று கேள்வி எழுப்புகிறார் அழகிய பெரியவன்.

இந்நிலையை மாற்றுவதில் தமிழக அரசியல் கட்சிகளின் பங்கு குறித்து பேசிய எம்பி ரவிக்குமார், “தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அதற்காகப் பாடுபட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருக்கும் அளவுக்கு அது வெகுமக்களின் உணர்வாக மாறவில்லை.”

“அதற்கு இன்னும் ஆக்கபூர்வமான பணிகளை அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் செய்ய வேண்டும். அம்பேத்கரின் பிறந்த நாளிலோ நினைவு நாளிலோ மரியாதை செய்வதற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடம் இப்போதும் தயக்கம் இருக்கிறது. அது மாறவேண்டும்.” என்று கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.