ஸ்டார்க் பந்துவீச்சில் கவிழ்ந்த இந்திய அணி – எச்சரிக்கையுடன் களமாடும் ஆஸ்திரேலிய பேட்டர்கள்

பகலிரவு மற்றும் 2வது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

அடியெல்டில் இன்றைய நாள் ஆஸ்திரேலியா அணிக்கானது. பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள், பேட்டிங்கிலும் இந்திய வீரர்களுக்கு சவாலாக களத்தில் நிற்கிறார்கள்.

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 2வது போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 2வது செஷனிலேயே 44.1 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பெர்த் டெஸ்ட் போட்டியில் சேர்த்த ரன்களைவிட கூடுதலாக 30 ரன்களை இந்திய அணி சேர்த்துள்ளது என ஆறுதல் அடைந்தாலும், டிபெண்ட் செய்து பந்துவீசுவதற்கு இது போதுமானதாக இருக்காது. இதுபோன்ற குறைந்த ஸ்கோர் பந்துவீச்சாளர்களுக்கே சுமையைக் கூட்டும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மூன்றாவது செஷனில் இருந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல்நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ஓவர்களில் 86 ரன்கள் சேர்த்துள்ளது. விக்கெட்டை இழந்துவிடக் கூடாது என்ற தீவிரமான எச்சரிக்கையுடன் ஆஸ்திரேலிய பேட்டர்கள் களமாடி வருகிறார்கள்.

இந்திய பந்துவீச்சை குறிப்பாக பும்ரா பந்துவீச்சைச் சமாளிக்க பிரத்யேக பயிற்சி(ஹோம் ஓர்க்) செய்துள்ளார்கள் என்பது பேட்டிங்கில் தெரிய வந்தது.

மின்னொளியில் பிங்க் பந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். ஆனால், மின்னொளியில் நடந்த 3வது செஷனில் இந்திய பந்துவீச்சாளர்களால் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது.

அடுத்ததாக எந்த விக்கெட்டும் வீழ்த்த முடியாத அளவுக்கு இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலான பேட்டிங்கை ஆஸ்திரேலிய பேட்டர்கள் வெளிப்படுத்தினர்.

ரசிக்கக்கூடிய ஆரோக்கியமான போட்டி

நாதன் மெக்ஸ்வீனி மற்றும் மார்னஸ் லாபுசேன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியாவின் நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷேன் ஆகியோர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கொண்டாடினர்.

ஆனாலும், பும்ராவின் பந்துவீச்சு மின்னொளியில், பிங்க் பந்தில் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாக இருந்தது. குறிப்பாக லாபுஷேனுக்கு பாடிலைனில் பும்ரா பந்து வீசுவதும், அவரைச் சீண்டுவதும், லாபுஷேன் பந்தை லீவ் செய்து ஆடுவதும், பந்தை கவனமாகக் கையாண்டு டிபெண்ட் செய்வதும் பார்ப்பதற்கு மிக அழகாக, ரசிக்கும்படியாக இருந்தது.

இரு அணிகளின் வீரர்களும் ஒருவொருக்கொருவர் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடாமல், ஆரோக்கியமான, ஆவேசமான, துல்லியமான பந்துவீச்சில் புன்னகையை வெளிக்காட்டும் பும்ரா, அதற்கு லாபுஷேனின் வார்த்தைகள், ஸ்லிப்பில் நின்றிருக்கும் இந்திய வீரர்களின் உற்சாகக் குரல் என டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆரோக்கியமாக நடைபெற்றது.

பும்ராவின் கணிக்க முடியாத ஸ்விங் பந்துவீச்சை மின்னொளியில் சமாளிக்க முடியாமல் லாபுஷேன், மெக்ஸீவினி இருவரும் கடும் அழுத்தத்தில் திணறுவதும், போராடியதும் பார்க்க அழகாக இருந்தது.

இந்திய பந்துவீச்சாளர்களிடம் போராட்ட குணத்தை வெளிப்படுத்திய லாபுஷேன், மெக்ஸ்வீனி இருவரும் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். லாபுஷேன் 20 ரன்களிலும், மெக்ஸ்வீனி 38 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

பிங்க் பந்தில் எப்போதும் அசுரர்கள் என்பதை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இந்த டெஸ்டிலும் நிரூபித்துள்ளனர். மிட்செல் ஸ்டார்க் 48 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். கம்மின்ஸ், போலந்த் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டெஸ்ட் போட்டி தொடங்கி முதல் ஓவர் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலுக்கு கால்காப்பில் வாங்க வைத்து கோல்டன் டக்-அவுட்டில் ஸ்டார்க் வெளியேற்றினார். கடந்த டெஸ்டில் சீண்டியதற்கு ஜெய்ஸ்வாலுக்கு ஸ்டார்க் பதிலடி கொடுத்தார். பிங்க் பந்தில் வீசிய அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டார்க் 72 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

பும்ரா பந்துவீச்சில் கைநழுவிய கேட்சுகள்

 பும்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா பந்துவீச்சில் இந்திய விக்கெட் கீப்பர்கள் இதுவரை 9 கேட்சுகளை பிடிக்காமல் கோட்டைவிட்டுள்ளனர்

ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே பும்ரா பந்துவீச்சில் மெக்ஸ்வீனிக்கு அவுட்சைட் எட்ஜ் எடுத்து விக்கெட்டை இழக்க வேண்டியிருந்தது.

ஆனால், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பிடிக்க வேண்டிய கேட்சை பிடிக்காமல் கோட்டைவிட, அதை முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மாவும் பிடிக்காமல் தவறவிட்டு பந்து கையில் பட்டுச் சென்றது.

சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா பந்துவீச்சில் இந்திய விக்கெட் கீப்பர்கள் இதுவரை 9 கேட்சுகளை பிடிக்காமல் கோட்டைவிட்டுள்ளனர், அதில் 8 கேட்சுகளை ரிஷப் பந்த் மட்டுமே நழுவவிட்டுள்ளார் என்று கிரிக்இன்ஃபோ தரவுகள் கூறுகின்றன.

வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை ரிலீஸ் செய்யும்போது அதைக் கவனித்து ரிஷப் பந்த் நகராமல் தொடர்ந்து அதே இடத்தில் நிற்பதால்தான் கேட்சை அவரால் தாவிச் சென்று பிடிக்க முடியவில்லை.

பும்ராவின் 50வது விக்கெட்

 பும்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உஸ்மான் கவாஜாவை ஆட்டமிழக்கச் செய்த பும்ராவின் பந்துவீச்சு

ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா(13) விக்கெட்டை பும்ரா வீழ்த்தியபோது, இந்த காலண்டர் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஏற்கெனவே கடந்த 2018ஆம் ஆண்டில் பும்ரா 48 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பும்ராவுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் 46 விக்கெட்டுகளுடன் இந்த காலண்டர் ஆண்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவாஜாவுக்கு தொடர்ந்து இரு பந்துகளை உள்நோக்கி இன்ஸ்விங் செய்து, திடீரென கடைசிப் பந்தை இன்ஸ்விங் போல வீசி அதை அவுட்-ஸ்விங்காக பும்ரா மாற்றியது எந்த பேட்டரும் எதிர்பார்த்திராதது.

இந்தப் பந்தை சற்றும் எதிர்பாராத கவாஜா பேட்டை வைத்து பந்தை தடுத்தவுடனே முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மாவிடம் அது கேட்சானது.

பயம் அறியா நிதிஷ்

இந்திய பேட்ஸ்மேன் நிதிஷ் குமார் ரெட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பேட்ஸ்மேன் நிதிஷ் குமார்

கடந்த பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 50 ரன்கள் முன்னிலை பெறுவதற்கு நிதிஷ் குமார் ரெட்டியின் ஆட்டம் முக்கியக் காரணமாக இருந்தது. அந்தப் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை நிதிஷ் பதிவு செய்தார், இந்த டெஸ்டிலும் அதிகபட்ச ஸ்கோரை அவர் எடுத்துள்ளார்.

இந்த டெஸ்டிலும் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் நிதிஷ் குமாரின் பேட்டிங்கும் அவரின் 42 ரன்களும் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

போலந்த் ஓவரில் 6,4,6 என நிதிஷ்குமார் அடிலெய்ட் மைதானத்தில் அடித்தது சிறப்பான ஆட்டமாக இருந்தது. அதிலும் போலந்த் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப்பில் நிதிஷ் அடித்த சிக்ஸரை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர். நிதிஷ் குமார் ரெட்டி 54 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 42 ரன்கள் சேர்த்து அச்சமில்லாத பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

டாஸ் வென்றது மட்டுமே சாதகம்

ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித் சர்மா

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்ற நிகழ்வு மட்டுமே சாதகமாக அமைந்தது. முதல் ஓவர், முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் கோல்டன் டக்-அவுட்டில் ஸ்டார்க் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு சுப்மான் கில், ராகுல் சேர்ந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆறுதல் அளித்தனர்.

அதன் பிறகு வந்த விராட் கோலி(7), ரோஹித் சர்மா(3), ரிஷப் பந்த்(21) என விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் இந்த டெஸ்டிலும் தொடர்ந்து வருகிறது.

கோலி, ராகுல் விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க்

விராட் கோலிக்கும், கே.எல்.ராகுலுக்கும் ஒரே மாதிரியான பந்தை வீசி ஸ்டார்க் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஸ்டார்க்கின் அதிவேகப் பந்து அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்பில் செல்லும்போது அந்தப் பந்தை தொடலாமா அல்லது வேண்டாமா என்று யோசிக்கும் கனநேரத்தில் “எக்ஸ்ட்ரா பவுன்ஸில்” பந்து பேட்டில் பட்டு கேட்சானது.

ராகுல், கோலி இருவரையும் யோசிக்க நேரம் அளிக்காமலே ஸ்டார்க் விக்கெட்டை வீழ்த்தினார். அதாவது பந்தை லீவ் செய்வதற்கு இருவரும் பேட்டை உயர்த்துவதற்கு முன்பே பந்து இருவரின் பேட்டிலும் பட்டு ஸ்லிப்பில் கேட்சானது.

ராகுல், சுப்மான் கில் களத்தில் இருந்தவரை ஓரளவுக்கு ரன்கள் இந்திய ஸ்கோர்போர்டில் வந்தது. இருவரும் பெவிலியன் சென்ற பிறகு மூத்த வீரர்கள் ரோஹித், கோலி இருவரும் வந்த வேகத்தில் சென்றனர்.

தொடரும் ரோஹித்தின் தோல்வி

ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித்தின் விக்கெட்டை கொண்டாடும் ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலந்த்

ரோஹித் சர்மாவுக்கு டிபெண்ட்ஸ் ஆடுவதில் இன்னும் திணறுகிறார் என்பது இந்த ஆட்டத்திலும் தெளிவானது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக டிபெண்ட்ஸ் சதவீதம் 83 ஆக வைத்திருக்கும் ரோஹித் சர்மா, அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 79 ஆகக் குறைந்துவிட்டதாக கிரிக்இன்ஃபோ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிகமாக பேட் செய்து அதிரடி(அட்டாக்கிங் பேட்டிங்) பேட்டிங் செய்து பழகிவிட்டதால், டெஸ்ட் போட்டியில் கால்களை நகர்த்தி டிபெண்ட்ஸ் ஆடுவது பெரிய சிரமமாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் நடுவரிசையில் ரோஹித் சர்மா களமிறங்கியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

நண்பகல் உணவு இடைவேளைக்குச் செல்லும்போதே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. 30வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

மிட்செல் ஸ்டார்க் வீசிய 39வது ஓவரில் அஸ்வின்(22), நிதிஷ் ராணா(0) இருவரும் ஓரே ஓவரில் ஆட்டமிழந்தது இந்திய அணியை பலவீனப்படுத்தியது. அதன் பிறகு நிதிஷ் ரெட்டிக்கு ஈடுகொடுத்து பும்ரா பேட் செய்து, ஸ்ட்ரைக்கை மாற்றினார். ஆனாலும் பும்ரா நிலைக்கவில்லை. நிதிஷ் கடைசிவரை போராடி 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.