மாஞ்சோலை வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் – மக்களின் அடுத்த திட்டம் என்ன?
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசின் டான்டீ நிர்வாகம் (தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம்) ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தொடர்ந்த இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதோடு, அந்த வழக்கில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பண பலன்களை வழங்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தங்கள் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாஞ்சோலை மக்கள் கூறுவது என்ன? வழக்கு விசாரணையில் என்ன நடந்தது?
மாஞ்சோலை வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியை தமிழக அரசிடம் இருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை வாங்கி, பி.பி.டி.சி., எனும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் நிர்வகித்து வந்தது.
கடந்த 2018இல், 8,374 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியாக அரசு அறிவித்தது.
இதையடுத்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை, பி.பி.டி.சி. நிறுவனம் அறிவித்தது.
இதை எதிர்த்து தொழிலாளர்கள் சார்பில், “மறுவாழ்வுக்காக உதவிகள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசின் ‘டான் டீ’ தேயிலைத் தோட்டக் கழக நிர்வாகம் ஏற்று நடத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு நிலம் உள்ளிட்ட பணபலன்களை வழங்க வேண்டும், தோட்டத்தை வணிக நோக்கில் பொது அல்லது தனியார் துறையிடம் ஒப்படைக்கத் தடை விதிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளைக் கொண்டு புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணையில் இருந்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதம் என்ன?
வழக்கு விசாரணையின்போது, அரசுத் தரப்பில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ‘பாரம்பரிய வனவாசி’ என்ற வரையறையின் கீழ் இடம்பெற மாட்டார்கள் என்றும் புலம்பெயர் தோட்டத் தொழிலாளர்கள், தொடர்ந்து காட்டுப் பகுதியில் வசிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி தரப்பு முன்வைத்த வாதத்தில் தேயிலைத் தோட்ட நிர்வாகம் தொடர்ந்து நடத்த முடியாது என்பதால் தேயிலைத் தோட்டத்தை அரசு டான்டீ நிர்வாகத்துடன் இணைத்து மாஞ்சோலை மக்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அரசு தரப்பில் டான் டீ நஷ்டத்தில் இயங்குவதால் இந்த தேயிலை தோட்டத்தை சேர்க்க முடியாது என அரசு தரப்பில் வாதத்தை முன் வைத்தனர்.
பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டதை, வணிக நோக்கில் பயன்படுத்த முடியாது என்பதாலும், மனிதாபிமான அடிப்படையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, வணிகக் கடன் வழங்குவதுடன், வீட்டு மனை, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் வீடுகள் உள்ளிட்ட சலுகைகளை அரசு அறிவித்திருப்பதாகவும், தொழிலாளர்களுக்கு மணிமுத்தாறில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடியேறத் தயார் நிலையில் இருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் தரப்பில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதி காப்புக்காடு மற்றும் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பாடுகளைத் தொடர இயலாது என்று தெரிவித்துள்ளது.
அதோடு, இது அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும், அவர்கள் விருப்ப ஓய்வு பெற்றதால், விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு நிறுவனம் இரண்டு மடங்கு இழப்பீடு வழங்கியுள்ளதாகவும் தேயிலைத் தோட்ட நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தரப்பில், ஊழியர்களை விருப்ப ஓய்வு விண்ணப்பங்களில் வற்புறுத்திக் கையெழுத்திட வைத்ததாகவும், கையெழுத்திடவில்லை என்றால் இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என மிரட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
தேயிலையைத் தவிர ஏலக்காய் உள்ளிட்ட பிற விவசாயப் பொருட்களைப் பயிரிடுவதால், ‘பாரம்பரிய வனவாசி’ என்ற வரையறையின் கீழ், தோட்டத் தொழிலாளர்கள் வருவார்கள் என்றும், 4 தலைமுறைகளாக மாஞ்சோலையில் வாழ்ந்த தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தொழிலாளர்களின் விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், அரசு தெரிவித்துள்ள அனைத்து சலுகைகளையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
நீதிமன்ற தீர்ப்பால் சோர்வில் மாஞ்சோலை மக்கள்
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மாஞ்சோலை மக்களைச் சோர்வடையச் செய்துள்ளதாகக் கூறுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த சீலன். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், தற்போதைய தீர்ப்பும் ஒரே மாதிரி உள்ளதாக,” தெரிவித்தார்.
தற்போதைய தீர்ப்பில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் நகர்ப்புறத்தில் அரசு வீடுகள் கட்டித்தர வேண்டும் எனக் கூடுதலாக குறிப்பிடப்பட்டு இருப்பதைத் தவிர்த்து வேறு எந்த வித்தியாசமும் இல்லை என்று மாஞ்சோலை மக்கள் தெரிவிக்கின்றனர்.
“சமீபத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் ஆறு வாரக் காலத்திற்குள் மாஞ்சோலை மக்களுக்கு அடிப்படை வசதிகள் வருவாய்த்துறை மூலம் செய்து தர வேண்டும் என அறிவித்திருந்தது. ஆனால் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை,” என்று சீலன் கூறினார்.
இதுப்பற்றி சீலன் மேலும் கூறுகையில், “மாஞ்சோலை மக்கள் தேயிலைத் தோட்ட நிர்வாகம் கொடுத்த 25 சதவீத பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறோம். உயர் நீதிமன்ற தீர்ப்பில் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை தேயிலைத் தோட்ட நிர்வாகம் அல்லது அரசு தரப்பில் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், இது போன்ற எந்த அறிவிப்பும் வராதது மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. எனவே மாஞ்சோலையில் வாழும் மக்கள் மலையை விட்டு கீழே இறங்கும் மனநிலைக்கு வந்துவிட்டோம்,” என்றார்.
“ஆனாலும், 17 மாணவர்கள் மாஞ்சோலையில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மலையை விட்டுக் கீழே இறங்கலாம் என ஒரு திட்டத்தில் இருக்கிறார்கள். இருப்பினும் நீதிமன்ற தீர்ப்பில் மாணவர்களை அவர்கள் விருப்பப்படும் பள்ளியில் சேர்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதை ஊர் மக்கள் வரவேற்கத்தக்கது என்று கூறினர்.” என்றார்.
ஆனால், “அதே நேரத்தில் மூன்று தலைமுறையாக ஒரு முகவரியில் வாழ்ந்த மக்கள் திடீரென முகவரியை மாற்றிக் கொண்டு வாழ வேண்டும் என்பது சுலபமான காரியம் அல்ல என்பதால், முகவரியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று சீலன் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
கடந்த முறை அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் மாஞ்சோலையில் வசித்து வரும் மக்களுக்கு முந்தைய கலைஞர் ஆட்சியில் கட்டி கொடுத்த சமத்துவபுரம் போன்று, ஒரே இடத்தில் 500 குடும்பம் வசிக்க வீடு கட்டிக் கொடுத்தால் மாஞ்சோலையைப் போல், அனைவரும் ஒரே இடத்தில் வசிக்க வசதியாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
சீலன் இதைப் பற்றி பேசும் போது, “இந்த கோரிக்கையை அப்போதைய கிராம நிர்வாக அலுவலர். அம்பாசமுத்திரம் அடுத்த ஆம்பூர் என்ற பகுதியில் காலி நிலம் உள்ளது. அங்கு நீங்கள் கேட்பது போன்று செய்து கொடுக்கலாம் என தெரிவித்தார். ஆனால் அவர் பணி மாறுதல் பெற்றுச் சென்ற பின்னர் அதனை மாவட்ட நிர்வாகம் கைவிட்டு விட்டது,” எனக் கூறினார்.
விரைவில் மேல்முறையீடு
மாஞ்சோலை வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாஞ்சோலை மக்களுக்கு புதிய திட்டம் எதுவும் இல்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை அப்படியே இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது என்கிறார் மாஞ்சோலையைப் பூர்விகமாகக் கொண்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மாஞ்சோலை வழக்கின் நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்த அளவு அதில் காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசு சில நலத்திட்டங்களை ஏற்கனவே அறிவித்திருந்ததைச் செய்து கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவை அறிவிக்காதது ஏமாற்றத்தைத் தந்துள்ளது,” என்றார்.
மேலும், “அரசு தரப்பில் மாஞ்சோலையில் வசிக்கும் மக்களுக்கு மணிமுத்தாறு மற்றும் ரெட்டியார்பட்டி பகுதிகளில் வீடுகள் கட்டி தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் தற்போது, மணிமுத்தாறில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. ”
” ரெட்டியார்பட்டியில் 4 மாதத்திற்குள் வீடுகள் கட்டப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போது வீடுகள் மக்களுக்கு வழங்கப்படும் என்ற காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே நீதிமன்ற தீர்ப்பு அரசுக்கு சாதகமான தீர்ப்பாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
தெங்குமரஹடா என்ற வனப்பகுதியில் வசித்த 450 மக்களை வனத்தை விட்டு வெளியே செல்வதற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு தெரிவித்தது. ஆனால் காலக்கெடு அறிவிக்காததால் தீர்ப்பு வெளிவந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே அந்த மக்கள் இதுவரை வனத்தைவிட்டு வெளியே வராமல் உள்ளதாக மாஞ்சோலை மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
“காட்டைவிட்டு மக்களை வெளியே அனுப்பும்போது அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி வழங்கப்படுவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. எனவே நீதிமன்றத்தில் தெங்குமரஹடா தீர்ப்பை மேற்கோள் காட்டி மாஞ்சோலையில் வசிக்கும் மக்கள் வனத்தை விட்டு வெளியே செல்லும்போது மலை அல்லது மலை அடிவாரத்தில் தலா 5 ஏக்கர் நிலம் மற்றும் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தோம். ஆனால் நீதிமன்றம் அதை பரிசீலனை செய்யவில்லை” என்று தெரிவித்தார் வழக்கறிஞர் ராபர்ட்.
பல தலைமுறையாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3.62 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். ஆனால் தேயிலை தோட்ட நிர்வாகம் அதிகபட்சமாக ரூ. 2.75 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகத் தொழிலாளர் நலத்துறை, அரசு நிர்வாகம் மற்றும் தேயிலைத் தோட்ட நிறுவனம் இணைந்து ஆலோசனை செய்து, நிறுவனத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்றும் இந்த வழக்கில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால், மாஞ்சோலையில் உள்ள கல்லறை மற்றும் வழிபாட்டுத் தளங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட பத்து அல்லது பதினைந்து நாட்கள் சென்று வருவதற்கு அனுமதி உறுதிப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
விருப்ப ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென 411 தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்று நெல்லை தொழிலாளர் துணை ஆணையரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாஞ்சோலை மக்கள் கூறினர்.
“மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிர்வாகம் 2018ஆம் ஆண்டு வரை அரசுக்கு ரூ.1,141 கோடி வரி பாக்கி வைத்திருந்தது. இந்த தொகை இன்று வரை செலுத்தப்படவில்லை. வரி பாக்கியை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டாத அரசு மக்களை மாஞ்சோலை மலையில் இருந்து அப்புறப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது,” என ராபர்ட் தெரிவித்தார்.
மேலும் பேசிய ராபர்ட் சந்திரகுமார், “மாஞ்சோலை தோட்ட வழக்கைத் தொழிலாளர்களுக்கும், தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையிலான பிரச்னையாகப் பார்க்காமல் மூன்று தலைமுறை மக்களின் அடையாளமாகப் பார்க்க வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர மிகவும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் வழக்கு தொடரப்படும்,” என்றார்.