- எழுதியவர், டாடி பிரகாஷ்
- பதவி, பிபிசிக்காக
சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம், நேற்று (டிசம்பர் 5) வெளியானது. சிறந்த ஒளிப்பதிவு, பாடல்கள், ஒலியமைப்பு, உணர்ச்சிமிக்க காட்சிகள் என, இந்த படம் ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது.
இந்த படத்தின் கதாநாயகனான புஷ்பராஜ் (அல்லு அர்ஜூன்) செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர், அவரது மனைவியான ஸ்ரீவள்ளியின் (ராஷ்மிகா மந்தனா) பேச்சைத் தட்டாமல் கேட்பார்.
கொடூர குற்றங்கள் புரிபவராக இருந்தாலும், தனது தாய், உறவினர்கள், தனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் என அனைவரையும் நேசிப்பவர்.
இவ்வாறே புஷ்பராஜ் கதாபாத்திரம் படம் நெடுக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புஷ்பராஜ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளாரா? இந்த படம் குறித்த திரை விமர்சனம் இங்கே…
அல்லு அர்ஜூனின் நடிப்பு எப்படி?
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை புஷ்பராஜ் கதாபாத்திரத்தை சூழ்ந்தே இருக்கிறது. அவர் ஒரு தோளை லேசாக உயர்த்தி, விறுவிறுப்பாக நடந்து வரும்போது, திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.
உணவில் அதிக உப்பு போட்டு சமைத்ததற்காக ஸ்ரீவள்ளியுடன் சண்டையிடும் காட்சியிலும், ஃபஹத் ஃபாசிலுக்கு சவால் விடும் காட்சிகளிலும், எதிரிகளுடனான சண்டைக்காட்சிகளிலும், நடனக்காட்சிகளிலும், அல்லு அர்ஜூன் அந்த பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
மூன்று மணி நேரம் இருபது நிமிடங்கள் உள்ள இந்த படத்தில், அல்லு அர்ஜூனின் புஷ்பராஜ் பாத்திரம் ரசிகர்களை சலிப்புத்தட்ட வைக்கவில்லை.
சேலை உடுத்தி, மஞ்சள் மற்றும் சந்தனம் பூசி, கழுத்தில் எலுமிச்சை மாலை அணிந்துகொண்டு, ஒரு காட்சியில் புஷ்பராஜ் நடனமாடியபோது திரையரங்குகளில் ரசிகர்களின் மத்தியில் ஆரவாரம் பெருகியது. அந்த காட்சியை பார்வையாளர்கள் மிகவும் உற்சாகமாக பார்த்து ரசித்தனர்.
விறுவிறுப்பாக நகரும் கதைக்களம்
குறிப்பாக இந்த படத்தின் வசனங்களும், பஞ்ச்-களும் மக்களை கவர்ந்துள்ளன.
ஆக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில், சில உணர்வுமிக்க காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
தனது கணவனை நேசிக்கும் அன்பான மனைவியாக ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உள்ள காதல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
மேலும், ஸ்ரீவள்ளி- புஷ்பராஜ் ஜோடியின் நடனக்காட்சிகள் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
புஷ்பா 2 முழுக்க முழுக்க ஒரு மாஸ் கமர்ஷியல் திரைப்படம். இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இந்த படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆக்ஷன், திருப்புமுனைகள் என விறுவிறுப்பான கதைக்களத்துடன் இந்த படம் நகர்கின்றது.
இதற்கு முன் வெளியான படங்களில் வருவதுபோலவே உணர்வுமிக்க காட்சிகள், ஆக்ஷன், பாடல்கள் ஆகியவை இந்த படத்தில் இருந்தாலும், இந்த படத்தில் அது கற்பனைசெய்ய முடியாத அளவில் நன்றாக பொருந்தியுள்ளன.
திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் என, இயக்குனர் சுகுமார் புஷ்பா -2 படத்தை அருமையாக கட்டமைத்துள்ளார்.
இந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைக்குமா புஷ்பா 2?
ஆனால், சில காட்சிகள், சண்டைகளில் லாஜிக் இல்லை. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலே அவை வைக்கப்பட்டுள்ளன.
கமர்ஷியல் படமாக இருந்தாலும் கலைநயத்துடன் இந்த படம் கையாளப்பட்டுள்ளது. மேலும், இது ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 இந்திய சினிமாவின் வரலாறு காணாத வெற்றியாக அமைந்துள்ளது.
இந்தியாவில் சினிமாவுக்கு என கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமா, நமது வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இந்தியாவில், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் ஒரே பொழுதுபோக்கு இதுதான். புஷ்பா 2 திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய மதிப்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தை வட இந்திய மக்களும் ஆவலுடன் காண வருகின்றனர். பல பாலிவுட் திரைப்படங்களில், கதாநாயகன் மிகவும் ஆடம்பரமான பின்னணியில் இருந்து வருபவராகவும், காதல் பாடல்கள் என அனைத்து படங்களும் ஒரே பாணியில்தான் இருக்கின்றன. ஆனால், ஒரு எளிமையான தொழிலாளியின் வாழ்க்கையின் படமாக புஷ்பா 2 இருப்பதால், வட மாநிலங்களில் ரசிகர்களுக்கு ஒரு புதிய கோணத்தை இப்படம் வழங்கியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குனர் சுகுமார் ஆகியோரின் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக புஷ்பா 2 திரைப்படம் இருக்கிறது. இதுவே இந்த படத்தின் வெற்றியாகும்.
என்னதான் இந்த படம் செம்மரக்கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டாலும், வாழ்நாள் முழுவதும் அவமானத்தின் சுமையைச் சுமக்கும் ஒரு தொழிலாளி, யார் தயவும் இல்லாமல் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறுகிறார் என்ற கதை ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
புஷ்பா 2 படத்தில் வரும் கடைசி சண்டை காட்சி மிக நீளமாக இருந்தாலும், அதில் வரும் பின்னணி இசை, அல்லு அர்ஜூனின் நடிப்பு ஆகியவை அதனை சுவாரசியமாக்கின. மேலும், ஜெகபதி பாபு, ராவ் ரமேஷ், ஸ்ரீலீலா, சுனில், ஃபஹத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு உறுதுணையாக இருந்தது.
விறுவிறுப்பான கதை, ஒளிப்பதிவு மற்றும் இசை ஆகிய மூன்றும் இப்படத்தின் மூன்று முக்கிய அம்சங்களாக உள்ளன.
(குறிப்பு: இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விமர்சகரின் தனிப்பட்ட கருத்துக்களே)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு