பும்ராவின் ‘பந்து வீச்சு ஸ்டைல்’ விமர்சிக்கப்படுவது ஏன்? ஆஸ்திரேலிய அணி கலக்கத்தில் உள்ளதா?
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கிரிக்கெட்டில் ஒரு வீரரை திறமையால் எதிர்கொள்ள முடியாத நிலையில், எதிரணியினர் மனரீதியாக தாக்கி அந்த வீரரின் மனஉறுதியுடன் மோதி வெற்றி பெறுவது தந்திர உத்தி.
இந்த தந்திர உத்தியை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியினரும், ஊடகங்களும், கடந்த காலங்களில் பல நேரங்களில் கையாண்டுள்ளனர், இதற்காக விமர்சனங்களையும் எதிர்கொண்டனர்.
அந்த வகையில், இப்போது ஆஸ்திரேலிய ஊடகங்கள், கவுன்டி வீரர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி இருப்பவர், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரி்த் பும்ராதான்.
ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்களில் அபாரமான வெற்றியைப் பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, பும்ராவின் வேகப்பந்து வீச்சுதான்.
இந்த டெஸ்டில் பும்ரா 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெர்த் டெஸ்டுக்கு இந்திய அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு, பந்துவீச்சில் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகவும் பும்ரா இருந்தார்.
அதிவேக பெர்த் ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களைவிட, பும்ராவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அந்த அணியின் பேட்டர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக பும்ரா இருந்தார் என்பதை அந்த அணி வீரர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
விமர்சனங்களில் சிக்கியவர்கள்
ஆஸ்திரேலிய ஊடகங்களின் விமர்சனங்கள், வீரர்களின் ஸ்லெட்ஜிங்கில் சிக்கியவர்களில் இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், ஹர்பஜன் சிங், ஷாஹித் அஃப்ரிடி, ஷோயப் அக்தர் என பந்து வீச்சாளர்களின் பட்டியல் நீளும். அதேசமயம், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களைப் பற்றி இந்திய நடுவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் அம்பலத்தில் ஏறவில்லை.
ஆஸ்திரேலிய அணியினருக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் பந்து வீச்சாளர்கள் மனரீதியாகத் தாக்கப்பட்டு, பந்துவீச்சு மீது அவதூறு கூறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
‘பந்து வீச்சு வித்தியாசமாக இருக்கிறது’
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிட்னி மார்னிங் ஹெரால்டு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், “பும்ராவின் பந்து வீச்சு விளையாட முடியாத அளவுக்குக் கடினமாக இருக்கிறது. பும்ரா ஓடி வரும் ஸ்டைலும், பந்து வீச்சு முறையும் வித்தியாசமாக இருக்கிறது, மற்ற பந்து வீச்சாளர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறது. வித்தியாசத்தின் ஒட்டுமொத்த உருவமாக பும்ராவின் பந்து வீச்சு இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
‘பேரன்களிடம் சொல்லி பெருமைப்படுவேன்’
ஆஸ்திரேலிய அணியின் பேட்டர் டிராவிஸ் ஹெட் ‘டான்’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ” நான் பார்த்த பந்து வீச்சாளர்களிலேயே சிறந்த பந்து வீச்சாளர்களில் பும்ராவும் ஒருவர். அவரின் பந்து வீச்சை சமாளித்து பேட் செய்வது சவாலானது. என் பேரக்குழந்தைகளிடம் பும்ராவின் பந்து வீச்சை சமாளித்து, நான் பேட் செய்தேன் என்று பெருமையாகக் கூறுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கவலை
இந்த சூழலில், அடிலெய்ட் டெஸ்ட் 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியினர் பும்ராவின் பந்து வீச்சைப் பார்த்து நடுக்கத்தில் உள்ளனர் என்பது தெளிவாகிறது. ஏனென்றால், அதிவேக பெர்த் ஆடுகளத்திலேயே பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொண்டு சிதறிய ஆஸ்திரேயாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள், அடிலெய்டில் பிங்க் பந்தில் பும்ராவின் பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியினரை தற்போது சூழ்ந்திருப்பது, “பும்ராவின் பந்து வீச்சை எவ்வாறு சமாளிப்பது” என்ற கவலைதான்.
டாப் ஆர்டர்கள் பரிதாபம்
ஆஸ்திரேலிய டாப் ஆர்டரை கடந்த 7 டெஸ்ட்களில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் சிதைத்துள்ளனர். குறிப்பாக, பாகிஸ்தானின் அமர் ஜமால், ஷாஹின் ஷா அஃப்ரிடி, மிர் ஹம்சா, அல்சாரி ஜோசப், ஷாமர் ஜோசப், மாட் ஹென்றி, பென் சீர்ஸ் ஆகியோர், கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலிய டாப் ஆர்டர் பேட்டர்களை சிதைத்து, 4 அல்லது அதற்கு அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதிலிருந்து, டாப் ஆர்டர் பேட்டர்கள் எந்த அளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
அன்று பிளின்டாப், இன்று பும்ரா
கடந்த 2005ம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்டுக்கு கடும் பிரச்னையாக பிளின்டாப் பந்து வீச்சு இருந்தது. 2005ம் ஆண்டு ஆஷஸ் தொடரின்போது இங்கிலாந்து பயணத்தில் கில்கிறிஸ்டை 6 முறை பிளின்டாப் ஆட்டமிழக்கச் செய்தார்.
பிளின்டாப் பந்து வீச்சை சமாளித்து ஆடமுடியாமல் கில்கிறிஸ்ட் விக்கெட்டை இழப்பது தொடர்ந்தது. இதை களைவதற்கு பேட்டிங் பயிற்சியாளர் பாப் மயூல்மேனிடம் பிரத்யேகமாக கில்கிறிஸ்ட் பயிற்சி எடுத்து 2007ம் ஆண்டு ஆஷஸ் தொடரை எதிர்கொண்டார். அந்த ஆஷஸ் தொடரில் பிளின்டாப் பந்து வீச்சை கில்கிறிஸ்ட் அனாசயமாக விளையாடினார்.
அதேபோல, பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் கலக்கம் கொண்டுள்ளது. பும்ராவின் பந்து வீச்சை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஸ்மித், லாபுஷேன், கவாஜா, மார்ஷ் என அனைவரும் பிரத்யேக பேட்டிங் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
பும்ரா பந்து வீச்சை கண்டு ஏன் அச்சம்?
பும்ரா பந்து வீச்சைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு இருக்கும் பிரச்னை, “பும்ரா தனது கையில் வைத்திருக்கும் பந்தை ரிலீஸ் செய்யும் புள்ளிதான். எப்போது, எப்படி பந்தை ரிலீஸ் செய்கிறார்” என்பதை ஆஸ்திரேலிய பேட்டர்களால் கணிக்க முடியவில்லை.
இதனால் பும்ராவின் பந்து வீச்சில் அனைத்துப் பந்துகளையும் எதிர்கொண்டு விளையாட வேண்டிய நிர்பந்தத்தில் ஆஸ்திரேலிய பேட்டர்கள் இருக்கிறார்கள். பும்ரா வீசும் ஓவரில் எந்த பந்து அவுட் ஸ்விங் (outswing) ஆகிறது, இன்ஸ்விங் (inswing) ஆகிறது, ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் (stump to stump) வருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் திணறுகிறார்கள்.
வாசிம் அக்ரமின் விளக்கம்
பும்ராவின் பந்து வீச்சு குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறுகையில், “பும்ரா தனது பந்து வீச்சில் பந்தை ரிலீஸ் செய்யும் புள்ளி என்பது பேட்டர்களின் கால்களை நோக்கி இருக்கிறது. எந்த பந்து வீச்சாளரிடமும் இல்லாத ஸ்டைலில் பும்ரா வீசுவதால், அவரின் பந்து வீச்சை பேட்டர்கள் கணித்து ஆடுவது படுசிரமமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அங்குள்ள ஆடுகளங்களில் ஒரு பேட்டர் பேட்டின் நுனியில் பட்டு (அவுட்சைட் எட்ஜ்) ஆட்டமிழப்பதுதான் அதிகம். அதிகமான பவுன்ஸர், அதிகமான சீமிங் இதற்குக் காரணம்.
ஆஸ்திரேலிய வீரர்களின் உடல்வாகு, அதிகமான உயரத்தால், அவர்களின் பந்துவீச்சில் இருக்கும் வேகத்தால் எதிரணி பேட்டர்களை கிளீன் போல்ட் செய்ய சரியான லைன் அன்ட் லென்த்தில் பிட்ச் செய்வது கடினம். ஆதலால், ஆஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்தை பேட்டர் ஒருவர் லீவ் செய்து பழகினாலே களத்தில் நிற்க முடியும்.
பேட்டர்களுக்கு சவால்
ஆனால், பும்ரா பந்து வீச்சைப் பொறுத்தவரை, பெர்த் டெஸ்டில் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் முறையைக் கையாண்டார். பும்ரா பந்துவீச்சில் எந்தப் பந்து இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என்பதை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. பும்ராவின் பந்து வீச்சில் இருக்கும் வேகம், பேட்டருக்கு அருகே அவரின் ரிலீஸ் பாயிண்ட் அமைந்திருப்பது, ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது.
இதனால் பும்ராவின் பந்து வீச்சை லீவ் செய்து ஆஸ்திரேலிய பேட்டர்கள் ஆடுவது சிரமம். அவ்வாறு ஆடுவதும் ஆபத்தானது. ஏனென்றால், பும்ராவின் பந்துவீச்சு ரிலீஸ் பாயிண்ட் குழப்பமாக இருப்பதால், லீவ் செய்து விளையாட ஆஸ்திரேலிய பேட்டர்கள் முயன்றால், கால்காப்பில் வாங்கி ஆட்டமிழக்க நேரிடும்.
கடந்த பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் 5 பேர் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். அதில், 4 எல்பிடபிள்யூ பும்ரா எடுத்தது. பும்ராவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், லாபுஷேன் 52 பந்துகளை வீணடித்து 2 ரன்கள் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்தப் பந்தை லீவ் செய்வது, எந்தப் பந்தில் ஷாட் அடிப்பது என்ற குழப்பத்தில் லாபுஷேன் ஆடினார். 2வது இன்னிங்ஸில் பும்ரா பந்தை லீவ் செய்ய முயன்றபோது கால்காப்பில் வாங்கி லாபுஷேன் ஆட்டமிழந்தார்.
பிரத்யேகப் பயிற்சி
ஆதலால், பும்ராவின் பந்து வீச்சை அடிலெய்டு டெஸ்டில் சமாளித்து ஆடுவதற்கு ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பிரத்யேகமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பேட்டிங் ஆலோசகர் மைக் ஹசி, லாச்சலான் ஸ்டீவன்ஸ், பயிற்சியாளர் மெக்டோனல்ட் ஆகியோர் தலைமையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன என கிரிக்இன்போ (cricinfo) தளம் தெரிவித்துள்ளது.
பும்ரா பந்து வீச்சு மீது விமர்சனம்
இதற்கிடையே, பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல், பந்தை எறிவது போன்று இருக்கிறது, அவரின் பந்து வீச்சை ஐசிசி ஆய்வு செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய கவுன்டி வீரர்கள் விமர்சித்துள்ளனர். இந்தியப் பந்து வீச்சாளர் ஒருவர் பந்தை எறிகிறார் என கூறுவதற்கு நடுவருக்கு அச்சமா என்றும் எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளனர்.
“பும்ராவின் பந்துவீச்சு ஆக்சன் சட்டவிரோதமானது, ஐசிசி விதிகளுக்கு புறம்பாக கை மணிக்கட்டை மடக்குகிறார், இதை ஆய்வு செய்ய வேண்டும்,” என எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
முதல்முறையாக குற்றச்சாட்டு
ஆனால், பந்து வீச்சு எறிவது போல் இருக்கிறது என்ற பும்ராவுக்கு எதிராக குற்றச்சாட்டு, விமர்சனம் வைக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும். பும்ராவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணி, 10 ஆண்டுகளுக்கு முன் பும்ராவின் பந்து வீச்சையும், இப்போதுள்ள பும்ராவின் பந்து வீச்சையும் வீடியாவாகப் பதிவு செய்து, “10 ஆண்டு சவால்” என எக்ஸ் தளத்தில் காணொளி வெளியிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பிபிஎல் தொடரில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்தை எறிவதாக குற்றசாட்டு வந்து அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது.
ஐசிசி விதி கூறுவது என்ன?
இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் இயான் பாண்ட், பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் விதிகளுக்கு புறம்பாக இல்லை என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தில் ” பும்ராவின் கையில் முழங்கை முதல் மணிக்கட்டுவரை நேராகவே இருக்கும் வளையாது.
ஐசிசி விதிப்படி, “பந்து வீச்சாளர் பந்து வீசும்போது அவரின் முழங்கை 15 டிகிரி அப்பால் வளையக்கூடாது” என்பதுதான். அந்த வகையில், பும்ராவின் கைகள் முன்நோக்கி வளைந்திருக்கும். ஆனால் 15 டிகிரிக்கு அதிகமாக வளையாது. இதனால்தான், பும்ராவின் பந்து வீச்சு விதிகளுக்கு உட்பட்டது என்று ஐசிசி அங்கீகரித்துள்ளது. முகமது ஹஸ்னைன் பந்து வீச்சில் ஐசிசி விதிகள் பின்பற்றப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
பும்ராவுக்கு கிரேக் சேப்பல் ஆதரவு
பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் குறித்து விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள், விமர்சகர்களை முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் கடுமையாக சாடியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வெளிவரும் “தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்” நாளேட்டில் கிரேக் சேப்பல் எழுதிய கட்டுரையில், “பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைல் குறித்து முட்டாள்தனமாக கேள்வி எழுப்புவதை முதலில் நிறுத்துங்கள். பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் தனித்துவமானது, விதிகளுக்கு உட்பட்டது. அவர் ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர்.” என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சைவிட அவர்களின் பேட்டிங்தான் கவலைக்குரியதாக இருக்கிறது என எழுதியுள்ள கிரேக், பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு, கூர்மையான தாக்குதலால் ஆஸ்திரேலிய அணி நிலைகுலைந்துள்ளது. மேலும், டாப் ஆர்டர் பேட்டிங் கவலைக்குரியதாக இருக்கிறது என்றும், அதிகமான மாற்றங்களைச் செய்யாமல் அடிலெய்ட் டெஸ்டில் விளையாட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“லாபுஷேன் ஸ்திரமான ஃபார்மில் இல்லை. கடந்த 16 இன்னிங்ஸில் அவர் 330 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். பெர்த் டெஸ்டில் 52 பந்துகளைச் சந்தித்து 2 ரன்கள் மட்டுமே லாபுஷேன் சேர்த்தபோதே, அவரின் பேட்டிங் பலவீனத்தை அறிய முடிந்தது. இதே, ஆஸ்திரேலிய அணி அடிலெய்ட் டெஸ்டிலும் விளைாயடும்போது யாரெல்லாம் மோசமாக விளையாடுகிறார்கள் என்பதை தேர்வுக்குழுவினர் அறிய முடியும்,” என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு நடுக்கம்
பும்ராவின் பந்து வீச்சு முறை சரியானதா, ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சிப்பது ஏன் என்பது குறித்து, சென்னை எம்ஆர்எப் அணியின் துணைப் பயிற்சியாளரும், டிஎன்பிஎல் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் பயிற்சியாளருமான எட்வர்ட் கென்னடி பிபிசி தமிழுக்கு அளித்தப் பேட்டியில் ” பும்ராவின் பந்து வீச்சில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத குறை இப்போதுதான் தெரிகிறதா? இது முற்றிலும் ஆஸ்திரேலிய அணியின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது. சிறப்பாகப் பந்துவீசும் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இதுபோன்ற பந்து வீச்சில் குறை சொல்வதை ஆஸ்திரேலிய வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்” என்றார்.
மேலும், இதை ஊடகங்களும் ஆதரிப்பதாக அவர் கூறுகிறார்.
“பும்ராவின் பந்து வீச்சு அடிலெய்ட் மைதானத்தில் பிங்க் பந்தில் எகிறும், விளையாட முடியாத அளவு கடுமையாக இருக்கும். அவரை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, அவர் மீது அவதூறு பரப்பப்படுகிறது. இதற்கு பிசிசிஐ தகுந்த பதில் அளிக்க வேண்டும். இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி பும்ரா பந்து வீச்சில் அஞ்சி நடுங்கி இருக்கிறது என்பதையே ரசிகர்கள் ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.