பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி ! on Friday, December 06, 2024
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் அவ்வாறு பொய் கூறி வருபவர்களை நம்ப வேண்டாமெனவும் பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்று வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நாமல் ராஜபக்ஷவின் பெயரை பயன்படுத்தி காணி பிடிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்ற செயல்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வந்தனரென்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று நாங்கள் விசாரிப்பது வழமை. அப்படி ஒரு வீட்டுக்கு சென்றமை தொடர்பாகவே, எனக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை மேற்கொண்டார். அவருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதோடு, நாங்கள் சென்று கலந்துரையாடி பாதிக்கப்பட்டவர்கள் எமக்கு எவ்வாறான முறைப்பாடுகளை அல்லது குற்றச்சாட்டுகளை வழங்கினரென பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தினேன்.
எமது கட்சியின் பெயரை பயன்படுத்தி இப்படியான மோசடிகளைச் செய்பவர்கள் தொடர்பாக மக்களாகிய நீங்கள் கட்டாயம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய வேண்டும். அப்படி ஏதாவது உங்களுக்கு அச்சம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
நாங்கள் யாழ்ப்பாணத்தில் முழு நேர அரசியலில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறோம். கடந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளே, எமது கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருப்பதாக, நான் நினைக்கின்றேன். இம்மாதிரியான குற்றச்சாட்டுகளை களைய வேண்டியது எனது கடமையாக இருக்கிறது.
நாமல் ராஜபக்ச வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றார், நாமல் ராஜபக்ச தங்கம் வியாபாரம் செய்கிறார் போன்ற பொய்யான தகவல்களை சிலர் பரப்பி மோசடிகளை செய்து வருகின்றனர்.