திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து உடலுறவு கொண்ட பின் அதை மீறுவது சட்டப்படி குற்றமா?
- எழுதியவர், அனகா பதக்
- பதவி, பிபிசி மராத்தி
திருமணம் செய்து கொள்வதாக உறுதிமொழி அளித்து, ஒரு பெண்ணின் சம்மதத்தோடு உடலுறவு கொண்ட பின்னர், காரணங்கள் ஏதுமின்றி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது சட்டப்படி குற்றமாகுமா?
அவ்வாறெனில், பாலியல் வன்புணர்வு நடந்திருப்பதாக வழக்குப் பதிவு செய்ய முடியுமா?
இந்தக் கேள்வி எழுவதற்குக் காரணம், உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த ஒரு வழக்கு.
மும்பையில் பெண் ஒருவர் காவல்துறையில் ஒரு புகார் அளித்துள்ளார்.
“தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய ஆண் ஒருவருடன் உடலுறவு கொண்டிருந்ததாகவும், ஆனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை” என்றும் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ரத்து செய்யக்கோரி அந்த குறிப்பிட்ட ஆண், மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
புகாரில் குறிப்பிடப்பட்ட அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெண், குற்றம் சாட்டப்பட்ட ஆண் மற்றும் அந்த ஆணின் மனைவிக்கு இடையேயான உறவு விவரங்கள் மிகவும் சிக்கலானவை. இதுபோன்ற வழக்குப் பதியப்படுவது இது முதல் முறை அல்ல.
திருமணம் செய்வதாக உறுதியளித்து அல்லது அவரைக் கவர்ந்து ஒரு பெண்ணிடம் உடலுறவுக்கு சம்மதம் பெற்ற பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த குறிப்பிட்ட வழக்கின் விவரங்களுக்குள் செல்லாமல், ஒரு பெண்ணின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி, உடலுறவு கொள்வது சட்டப்படி குற்றமா என்பதை நிபுணர்களின் உதவியுடன் தெரிந்துகொள்ள முயற்சிப்போம்.
வழக்கின் முழு பின்னணி
குறிப்பிட்ட அந்த ஆணுக்கும் புகார் அளித்த பெண்ணுக்கும் இடையே, 2008 மற்றும் 2017க்கு இடைப்பட்ட காலத்தில் உறவு இருந்துள்ளது. அதன் பிறகு அந்த உறவு முறிந்தது.
அந்த ஆண் தன்னைத் திருமணம் செய்வதாக உறுதியளித்து, உடலுறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் கூறி, அந்த நபர் மீது பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது பாலியல் வன்புணர்வு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர், அவர் மீது பதியப்பட்ட ‘முதல் விசாரணை அறிக்கையை’ (எஃப்.ஐ.ஆர்) ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
ஆனால் அந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
அந்த ஆண் அளித்த திருமண வாக்குறுதியின் அடிப்படையில் தான், உடலுறவுக்கு சம்மதம் தெரிவித்ததாக அந்த பெண் புகாரில் கூறியுள்ளார்.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின்படி, உடலுறவுக்காக ஒரு பெண்ணின் சம்மதத்தைப் பெற, ஒரு ஆண் பொய்யாக வாக்குறுதி அளித்திருந்தால், அது சட்டத்தின்படி குற்றமாகக் கருதப்படும்.
மேலும், அவர் மீது பாலியல் வன்புணர்வு வழக்குப் பதிவு செய்யப்படும்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2008 முதல் 2017 வரை ஒன்பது ஆண்டுகளாக அந்த ஆணும் பெண்ணும் உறவில் இருந்ததாகவும், அப்போது பலமுறை உடலுறவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறியது.
ஆரம்பத்தில் பொய்யாக வாக்குறுதி அளித்து உடலுறவுக்காக ஒப்புதல் பெறப்பட்டிருந்தாலும், இத்தனை வருட உறவு முழுவதும் அவர் ஏமாற்றிக்கொண்டிருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
அந்த ஒன்பது ஆண்டுகளில், அந்தப் பெண் அவரைக் குறித்து ஒருபோதும் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தவில்லை அல்லது அந்த உறவை எதிர்க்கவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அவர்களுக்கிடையில் இருந்த ஒன்பது ஆண்டு கால உறவு இவ்வழக்கின் தீவிரத்தைக் குறைக்கின்றது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பெண்களுக்கு அநீதி இழைக்கவில்லை” என்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆணின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மிருணாள் புவா கூறினார்.
இந்த குறிப்பிட்ட வழக்கின் உண்மைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார்.
மேலும் வழக்கறிஞர் மிருணாள் புவா, அந்தப் பெண் தன் புகாரில் குறிப்பிட்டுள்ளவைதான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முக்கியக் காரணம் என்று விளக்கமளித்தார்.
அப்பெண் தனது சொந்த விருப்பத்தோடு, அந்த ஆணுடன் 9 முதல் 10 ஆண்டுகள் உறவில் இருந்ததை ஆரம்பத்தில் இருந்தே ஒப்புக்கொண்டார் என்றும் கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்ட நபர், அப்பெண்ணுக்கு நிதியுதவி செய்து வந்துள்ளார் என்றும் வழக்கறிஞர் மிருணாள் புவா கூறினார்.
“அந்த நபர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டார் என்ற கூற்றை ஆதரிக்க, எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் கிடைக்கவில்லை. மாறாக, அந்த உறவு இருவரின் சம்மதத்துடன் இருந்தது தெரியவந்தது” என அவர் தெரிவித்தார்.
இந்த உண்மைகளின் அடிப்படையில், ஆண் பெண் இருவரின் சம்மதத்தோடு இருந்த நீண்ட கால உறவு முடிவுக்கு வந்த பிறகு, அந்த ஆண் மீது பாலியல் வன்புணர்வு வழக்குப் பதிவு செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது என்றும் வழக்கறிஞர் மிருணாள் புவா குறிப்பிட்டார்.
“குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆணுடன், அந்தப் பெண் 9லிருந்து 10 ஆண்டுகள் தனது சொந்த விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு திருமணமாகி விட்டது என்பதும் அந்தப் பெண்ணுக்கும் தெரியும்.
மேலும் சட்டப்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும் வரை, அவரை அப்பெண் திருமணம் செய்ய முடியாது. அத்தனை உண்மைகளையும் அந்தப் பெண் அறிந்திருப்பதால், இச்சூழ்நிலையில் அந்த ஆண் ஏமாற்றியிருப்பதாகக் கருத முடியாது,” என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக வழக்கறிஞர் மிருணாள் புவா தெரிவித்தார்.
இந்த வழக்கு எவ்வளவு தீவிரமானது?
அப்படியானால், இந்த வழக்கு எவ்வளவு தீவிரமானது?
மேலும், எந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது?
நாக்பூரைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், “அப்படிப்பட்ட ஒரு வழக்கு எங்களிடம் வரும்போது, (இந்திய தண்டனைச் சட்டத்தின் பாலியல் வன்புணர்வு) பிரிவு 376ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பிரிவு 420ஐயும் (மோசடி பிரிவு) பயன்படுத்த வேண்டும்” என்றார்.
முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டால், இந்த விதிகள் பொருந்தும். அதன்படி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்போது, ஒவ்வொரு வழக்கின் உண்மை, வழக்கு குறித்த விவரங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின்படி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
வழக்கறிஞர் ரஞ்சனா கவண்டே மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் பணிபுரிகிறார்.
“இதுபோன்ற வழக்குகளில் அப்பெண்ணின் சம்மதம் செல்லாது என்று நீதிமன்றங்கள் முன்பு தீர்ப்பளித்தன. மேலும், அது பாலியல் வன்புணர்வாகக் கருதப்படுகின்றது” என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால், திருமணம் செய்து கொள்ளாமல், நீண்ட காலம் ஒரு தம்பதி ஒன்றாக வாழ்ந்து, திருமணம் செய்துகொள்வதாக அளிக்கும் வாக்குறுதியை அந்த ஆண் நிறைவேற்றவில்லை என்றால், “அக்குற்றம் பாலியல் வன்புணர்வாகக் கருதப்படாது,” என சமீபத்திய 2-3 வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது என அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வழக்கின் தன்மையும் வெவ்வேறாக இருக்கும் என்றும் ஒரே மாதிரியான விதிகள் எல்லா வழக்குகளுக்கும் பொருந்தாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
“ஆனால், திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழும்போது, அந்த பெண் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டால் குடும்ப வன்முறைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உரிமை உண்டு” என்றும் ரஞ்சனா கவண்டே கூறினார்.
“நீண்ட கால உறவு என்று காலத்தின் அடிப்படையில் ஒரு உறவை வரையறை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவது,
அந்த குறிப்பிட்ட வழக்கின் விவரங்கள் மற்றும் அதன் சூழ்நிலைகளைப் பொறுத்தது” என்று கவண்டே வலியுறுத்தினார்.
“எல்லா சூழ்நிலைகளுக்கும் ஒரே மாதிரியான விதியைப் பயன்படுத்த முடியாது” என்றும் புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமா சரோட் சுட்டிக்காட்டினார்.
அத்தகைய வழக்குகளில் எவ்வாறு தீர்ப்பு வழங்கப்படுகின்றது என்பதில், குறிப்பிட்ட உறவு மற்றும் சூழல் குறித்த காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
திருமணம் தோல்வியுறும் நிலையும் காரணமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சில சமயங்களில் திருமணப் பந்தம், ஆரம்பத்தில் வெற்றிகரமாகத் தோன்றினாலும் கூட, பல்வேறு காரணங்களால் தோல்வியடைகின்றன.
“குடும்ப அழுத்தங்கள், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், நிதிப் பிரச்னைகள் அல்லது பிற காரணங்களால் திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. அதேபோல், தோல்வியுறும் ஒவ்வொரு உறவிலும் ஏன் ஏமாற்றினார்கள் என காரணம் கூற முடியாது.
ஆனால், அந்த ஆண் ஆரம்பத்தில் இருந்தே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லாமல், தெரிந்தே அந்தப் பெண்ணை தவறாக வழிநடத்தி, உடலுறவுக்கு சம்மதிக்க வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டால், அத்தகைய வழக்குகளில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்,”என்கிறார் வழக்கறிஞர் ரமா சரோட்.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் ஆதாரங்கள், வாதங்கள் போன்ற உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, அத்தகைய வழக்குகளின் முடிவு அமையும்.
மேலும் “எந்தவொரு கிரிமினல் வழக்கிலும் உள்நோக்கம் முக்கியமானது” என்று ரமா சரோட் கூறுகிறார்.
“அந்த ஆண் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தால், அது கிரிமினல் வழக்காக கருதப்படாது.
ஆனால், ஆரம்பத்திலிருந்தே அவருக்குத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றால், நீதிமன்றம் அவ்வழக்கை வேறு விதமாக பரிசீலிக்கலாம்” என்கிறார் அவர்.
உடலுறவு குறித்த அந்த பெண்ணின் நிலைப்பாடு, அது பாலியல் வன்புணர்வா, இல்லையா என்பதை வரையறுப்பதில் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படுகிறது.
இந்திய தண்டனைச் சட்டம் கூறுவது என்ன?
பின்வரும் சூழ்நிலைகளில் உடலுறவு கொள்ள வற்புறுத்துதல் அல்லது பாலியல் வன்புணர்வு செய்தல், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்றமாகும்.
- பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக நடப்பது
- பெண்ணின் சம்மதம் இல்லாமல் உடலுறவில் ஈடுபடுவது
- தான் அல்லது தனக்கு நெருக்கமானவர்கள் பாதிக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என்ற பயத்தில், அந்தப் பெண் சம்மதம் தெரிவித்திருந்தால்,
- மனநலம் குன்றிய நிலையில் அல்லது போதையில் இருக்கும் போது பெண் சம்மதம் தெரிவித்திருந்தால்,
- ஆண் போதை மருந்து கொடுத்து சம்மதம் பெற்றிருந்தால்
- ஒரு பெண் தான் எதற்கு சம்மதிக்கிறோம், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று தெரியாத சூழ்நிலைகளில் சம்மதம் தெரிவித்திருந்தால்,
- அப்பெண் பதினெட்டு வயதுக்குக் குறைவானவராக இருந்தால்,
- அவரது சம்மதம் இல்லாமல் அல்லது அவரால் தனது சம்மதத்தை வெளிப்படுத்தவோ முடியாவிட்டால், அது பாலியல் வன்புணர்வாகக் கருதப்படும்.
இது மட்டுமின்றி, திரித்து கூறப்பட்ட உண்மைகளை நம்பி அல்லது பயத்தின் காரணமாக ஒப்புதல் அளித்திருந்தாலும் அது பாலியல் வன்புணர்வாகக் கருதப்படும் என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 90 கூறுகிறது.
பயத்தினாலோ அல்லது திருமணம் செய்து கொள்வதாக கூறி நம்பவைத்ததால், அப்பெண் சம்மதம் அளித்தது தெரிந்தும், அந்த ஆண், உடலுறவு கொண்டால் அது குற்றமாகக் கருதப்படும் என்பதும் முக்கிய அம்சம்.
“ஆரம்பத்திலிருந்தே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லாமல், உடலுறவு கொள்வதற்காக மட்டுமே திருமண வாக்குறுதியை பயன்படுத்தியிருந்தால் அது தவறு” என்று உச்ச நீதிமன்றம் விளக்கியது.
ஆனால், ஆரம்பத்தில் இருந்தே ஏமாற்றும் எண்ணம் இல்லாமல், சூழ்நிலைகள் காரணமாக திருமணம் செய்துகொள்ள முடியாவிட்டால், உண்மைகளை மறைத்து ஏமாற்றியுள்ளார் என்று கூற முடியாது.
அப்படியென்றால் இது போன்ற சூழ்நிலையில் பெண்களுக்கு சட்டத்தில் ஆதரவு இல்லையா?
அரசாங்கத்தால் புதிதாக அமல்படுத்தப்பட்ட புதிய இந்திய தண்டனைச் சட்டம் இதற்கு விளக்கம் கூறுகின்றது. திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டால், அதனை குற்றமாகக் கருதலாம் என்று புதிய விதி கூறுகின்றது.
புதிய சட்டம் என்ன கூறுகின்றது?
1 ஜூலை 2024 முதல் இந்திய தண்டனைச் சட்டம் மாற்றப்பட்டது.
வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, திருமணம் போன்றவற்றை அளிப்பதாகக்கூறி, எதிர்காலத்தில் அவருடனான உறவைத் தொடர்வதில் எந்தவித நோக்கமும் இன்றி ஒரு பெண்ணை ஏமாற்றி, அவருடன் உடலுறவில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“இது ஒரு தொழில்நுட்ப மாற்றம். முன்பு இதுபோன்ற குற்றங்கள் பாலியல் வன்புணர்வின் பிரிவின் கீழ் மட்டுமே பதிவு செய்யப்பட்டன.
ஆனால், இப்போது அதற்கு ஒரு புதிய பிரிவு உள்ளது,” என்கிறார் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா.
“இதுபோன்ற சம்பவங்களில் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். திருமணத்திற்கு முன்பு இணைந்து வாழும் ஆண் – பெண் உறவில், அந்த ஆண் திருமண உறுதிமொழி அளித்திருந்தால், அவர்கள் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை இணைந்து இருப்பர்.”
“திருமண வாக்குறுதியின் அடிப்படையில் அந்தப் பெண் தொடர்ந்து உறவில் இருந்து, பின்னர் திடீரென்று அந்த ஆண் திருமணத்தை வேண்டாம் என்று சொன்னால், அந்தப் பெண் எங்கே செல்ல முடியும்? அவருக்கு வேறு என்ன தேர்வு இருக்கும்? எனவே, இந்த சட்டம் முக்கியமானது,” என்கிறார் சீமா குஷ்வாஹா.
இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ஆனால், இதுபோன்ற உடலுறவுகளை பாலியல் வன்புணர்வு என்று சொல்ல முடியாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது.
‘சட்ட அமைப்புக்கும், காவல்துறைக்கும் அதிக அதிகாரம்’
இந்தச் சட்டம் தொடர்பாக சர்ச்சைகளும் உள்ளன.
“தவறான திருமண வாக்குறுதியுடன் உடலுறவில் ஈடுபடுவது சிக்கலான விஷயம்,” என்று மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் வீணா கூறுகின்றார்.
“ஒருவரது எண்ணம் தவறானது என்று எப்படி நிரூபிக்க முடியும்? ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து, சில காலத்திற்கு பின்னர் அவ்வுறவில் கசப்பு ஏற்பட்டு திருமணம் வேண்டாம் என்று முடிவெடுத்தால், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த ஆணை கட்டாயப்படுத்த முடியுமா?”
“சட்டத்தில் உள்ள இந்த பிரிவு குறித்து பலருக்கும் கவலை உள்ளது. ஏனென்றால், உடலுறவு குறித்து இந்தப் பிரிவு பேசுகின்றது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை குற்றமாக அறிவிப்பதற்கு முன் மிகக் கவனமாக இருத்தல் அவசியம். இந்தப் பிரிவின் மூலம் அரசாங்கத்திற்கும், சட்ட அமைப்புக்கும், காவல்துறைக்கும் அதிக அதிகாரம் கிடைக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்” என்றும் அவர் கூறுகின்றார்.
“பெண்ணிய விவாதங்களில் இது ஒரு சிக்கலான தலைப்பு. ஒருபுறம், பெண்ணியவாதிகள் பாலியல் சுதந்திரத்துக்காக வாதிடுகின்றனர்.
பெண்களின் மதிப்பு, திருமணம் அல்லது பாலியல் தூய்மையுடன் பிணைக்கப்பட்டுள்ளது போன்ற பாரம்பரிய கருத்துகளையும், திருமணம் என்ற கட்டமைப்புக்குள் மட்டுமே ஒரு பெண் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்ற ஆணாதிக்க அமைப்பும் இங்கு உள்ளது. இவ்வகைச் சிந்தனைகள் பெண்களின் பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது” என்கிறார் அவர்.
மறுபுறம் கிராமப்புறங்களில் பெண்கள் ஏமாற்றப்படுவதும் இங்கு உள்ளது. அவர்கள் திருமணம் என்ற வாக்குறுதியை மட்டும் நம்பி உடலுறவில் ஈடுபடுகின்றனர்.
இங்குள்ள தார்மீக நடைமுறை மற்றும் பெண்களின் உரிமைகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு தெளிவாக இல்லாததால், சட்டத்தைச் சுற்றியுள்ள பிரச்னை சிக்கலானது என்று வீணா கூறுகின்றார்.
பெண்களைப் பாதுகாக்கச் சட்டம் அவசியம் என்று சிலர் நினைக்கிறார்கள். மற்றவர்கள் அதை எதிர்க்கிறார்கள்.
அதிகாரம், சாதி, வர்க்கம் மற்றும் செல்வாக்கு போன்ற காரணிகளும், ஆண் – பெண் உறவு நிலையும் இப்பிரச்னையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
எனவே, அவ்வழக்கில் சட்ட அமைப்பு, நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு தீர்ப்பை விட்டுவிட வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர்.
மேலும், திருமணம் செய்து கொள்வதாக அளிக்கப்படும் வாக்குறுதியை மீறுவது பொதுவாக குற்றமாக கருதப்படுவதில்லை என்றும் வீணா சுட்டிக்காட்டுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.