on Friday, December 06, 2024
திருகோணமலை வழங்கல் பாடசாலையில் நடைபெற்ற ஓராண்டு வழங்கல் பணிநிலை பாடநெறி எண். 10 இன் பட்டமளிப்பு விழா நேற்று (05) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் நடைபெற்றது.
இந்த வழங்கல் பணிநிலை பாடநெறியில் நிர்வாகம் மற்றும் வழங்கலில் முதன்மையான தொழில்முறையில் மிக உயர்ந்த அறிவு வழங்கப்படுகின்றது. இராணுவ அதிகாரிகளின் தொழில் மற்றும் பொது நடைமுறைகள் தொடர்பான வழங்கல் மற்றும் நிர்வாக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அறிவை இது வழங்கும் ஒரு வருட முழுநேர பாடநெறியாக நடாத்தப்படுகிறது.
இந்தப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த பின்னர் இந்த அதிகாரிகள் ‘எல்எஸ்சீ’ பட்டத்தைப் பெறத் தகுதியுடையவர்களாவர். வழங்கல் பணிநிலை பாடநெறி இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை மற்றும் வெளிநாட்டு இராணுவ அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதோடு, முக்கியமாக வழங்கல் பணிநிலை பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் அந்த அதிகாரிகளின் திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை மேம்படுத்துவதாக காணப்படுகிறது. மேலும் இராணுவ வழங்கல் பாடசாலையானது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கல் முகாமைத்துவத்தில் முதுகலை வணிக நிர்வாகத்தை (எம்பிஏ இல் எல்எம்) வழங்குகின்றது.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 27 பட்டதாரிகளுக்கு இராணுவத் தளபதி அடையாளமாக சான்றிதழ்களை வழங்கினார். இதில் இராணுவத்தின் இருபத்தி நான்கு அதிகாரிகள், விமானப்படையின் இரண்டு அதிகாரிகள் மற்றும் ஜாம்பியன் இராணுவத்தின் ஒரு அதிகாரி உட்பட 27 மாணவ அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்தப் பாடநெறியில் திறமையானவர்களை அங்கீகரிப்பதற்காக, இராணுவ வழங்கல் பாடசாலையினால் ‘சிறந்த வழங்கல் திட்டமிடுபவர்’ விருது மற்றும் வழங்கல் பணிநிலை பாடநெறி – எண் 10 இல் அனைத்திலும் சிறந்து விளங்கியவர், ஆகிய இரண்டு விருதுகளையும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் மேஜர் வி.எஸ்.கே. சமரவிக்ரம அவர்கள் பெற்றுக் கொண்டார்.
பட்டமளிப்பு விழாவின் பின்னர் உரையாற்றிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தொழில்சார் கற்கைநெறிகளை கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் அதனை நடைமுறையில் நடைமுறைப்படுத்துவது குறித்து விளக்கமளித்ததுடன், பங்குபற்றிய வெளிநாட்டு அதிகாரிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.